கல்கருட பகவான்
சென்ற மாத இதழில் நாச்சியார் கோயில் பற்றிய அரிய செய்திகள் சில எடுத்துக் கூறப்பட்டன. அதே கோயில் பற்றிய வியக்கத்தக்க வேறு சில செய்திகளை இந்த இதழில் பார்க்கலாம்.

நாச்சியார் கோயில் என்ற இவ்வைணவத் தலத்திற்கு 'திருநறையூர்' என்ற மற்றொரு பெயரும் உண்டு. நறை என்றால் தேன். தேன் நிரம்பி வழிகின்ற மலர்கள் நிறைந்த ஊர் என்று பொருள்படும். கோயிலிலுள்ள ஸ்ரீனிவாசப் பெருமாளுக்கு 'நறையூர் நம்பி' என்றும் பெயர்.

திருமாலின் வாகனமாகிய 'பெரியதிருவடி' என்றழைக்கப்படும் கருடனுக்கென்று பிரத்யேக மாக ஒரு பெரிய மண்டபம் இங்கு கட்டப் பட்டுள்ளது. பத்தரைஅடி சதுரத்தில் அமைந்துள்ள இம்மண்டபத்தில் கல்லால் செதுக்கப் பட்டுள்ள கருடபகவான் 'கல்கருட பகவான்' என்னும் பெயருடன் கம்பீரமாய் வீற்றிருக் கின்றார். இத்தலமும் 'கல்கருட பகவான் தலம்' என்று சிறப்பித்துப் பேசப்படுகிறது.

சாளக்கிராம வடிவத்தில் (லிங்கம்) நீண்ட சிறகும், நீண்ட முடியும், நீண்ட திருமேனியும், பெருந்தோளும் கொண்டு மிடுக்கான தோற்றத் துடன் காட்சி தரும் இத்தனை பெரிய கருட உருவத்தை இந்தக் கோயிலில் மட்டுமே காணலாம்.

''கருடா கருடா செளக்யமா என்று கேட்டதாம் பாம்பு; அதற்கு கருடன் அவரவர் இருக்குமிடத்தில் இருந்தால் செளக்யம்'' என்றதாம்.

இது பழமையான ஒரு வழக்கு. கருடனுக்கும் பாம்புக்கும் உள்ள பகை பற்றிய வழக்காகும். ஆனால் இந்தக் கல் கருடனின் தலையில், காதுகளில், வலது இடது கைகளில்,கழுத்தில் மாலை, இடையில் அரைஞான், மார்பில் பூணூல் என்று எல்லாமே பாம்புகளாக அணி செய்து கொண்டிருக்கும் தோற்றத்தில் சிலை செதுக்கப்பட்டிருப்பது விந்தையே!

ஸ்ரீனிவாசப் பெருமாளுக்குத் தினமும் ஆறுகாலப் பூஜையும், அமுது நிவேதனனும் செய்யும்போது, பெருமாளுக்கு ஆராதனம் செய்த அதே அமுதினைக் கருடனுக்கும் நிவேதனம் செய்கின்றனர். அந்த அளவிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஸ்ரீனிவாசப் பெருமாள் இந்தக் கல்கருடன் மீதும், தாயார் வஞ்சுளவல்லி வெள்ளி அம்ச வாகனத்தில் மீதும் அமர்ந்து வீதி உலா வரும் 'நாச்சியார் கோயில்' கருடசேவை உலகப் புகழ் வாய்ந்த ஒரு திருவிழாவாகும்.

கருடசேவையன்று கருடனைப் புறப்பாடு செய்யும் போது முதலில் மூலைக்கொருவராக நான்குபேரும், பின்னர் மூலைக்கு நான்கு பேராக தாங்கிவர அடுத்து மூலைக்கு எட்டு பேராக முப்பத்திரண்டு பேரும், வெளியே வருகையில் மூலைக்கு பத்து வீதம் நாற்பது பேர் சுமக்கும் அளவிற்கு கருடனின் கனம் அதிகரித்துக் கொண்டே போய் வீதியில் வலம் வரும்போது எண்ணற்ற பக்தர்கள் தோள் கொடுத்து, சுமந்து வரும் அதிசயத்தை அன்பர்கள் நேரில் கண்டு வியப்புற வேண்டிய ஒன்றாகும்.

கருடன் மீதமர்ந்த கோலத்தில் பெருமாளும் தாயாரும் திருமங்கை ஆழ்வாருக்குக் காட்சி அளித்த பெருமையுடையது இத்தலம். கருடனுக்கு அமைந்த மண்டபத்தில் 108 வைணவ திவ்ய தேசத்துப் பெருமாள்களையும் விக்ரகவடிவில் எழுந்தருளச் செய்திருப்பதால் இன்றைக்கு பக்தர்கள், ஒரே சமயத்தில் ஒரே இடத்தில் 108 தலத்துப் பெருமாள்களையும் தரிசிக்கும் பேறு கிடைக்கப் பெறுவதும் ஒரு சிறப்பம்சமாகும்.

இறைவனிடம் பக்தி செலுத்துபவர்கள் மனிதர்களாகத்தான் இருக்க வேண்டுமென் பதில்லை. இவ்வூர் நந்தவனத்தில் வாழ்ந்து கொண்டிருந்த இரண்டு கருடபட்சிகள் தினந்தோறும் பெருமாளுக்கு பூஜை நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் கோயில் பிரகாரத்தில் வந்து அமர்ந்து கொண்டிருந்து விட்டுப் பூஜை முடியும் நேரத்தில் நந்தவனத் திற்குப் பறந்து போய்விடுமாம். தொடர்ந்து பல ஆண்டு இவ்வாறு பூஜையில் கலந்து கொண்டு வந்த கருட பட்சிகள் இரண்டு 1999ம் ஆண்டு ஜனவரி 18ம் நாளில் பூஜைக்கு வரவில்லையாம். கோவில் நிர்வாகிகள் தேடிப் பார்த்தபோது கோயிலின் தலவிருட்சமாகிய மகிழ மரத்தின டியில் இப்பறவைகள் ஒன்றையொன்று அணைத்தபடியே உயிர்பிரிந்திருக்கக் கண்ட னர். இச்சிறப்புப் பற்றியே இத்தலத்துப் பெருமாளை வழிபடுவோர்க்கு மறுபிறவி இல்லை என்றும் கூறப்படுகின்றது.

இத்துணைச் சிறப்புக்கள் மிக்க நாச்சியார் கோயில் தமிழ்நாட்டு திருத்தளங்களில் அற்புத மான ஒன்றாகும்.

அடுத்த இதழில் வேறொரு ஆலயம் பற்றி அறியலாம்.

வழிபாடு தொடரும்...

டாக்டர் அலர்மேலு ரிஷி

© TamilOnline.com