ஜெயகாந்தன்
நவீன தமிழ்இலக்கியத்தின் மடைமாற்றத் திருப்பத்துக்கு காரணமானவர்கள் பாரதி, புதுமைப்பித்தன். இவர்கள் வருகைக்கு பின்னர் தான் தமிழ் புதுத் தமிழ் ஆயிற்று.

இந்த புதுத் தமிழ் படைப்பு வீச்சுடன் சமூக நோக்குடன் ஒருங்கிணைந்து புரட்சிகர வேகத்துடன் புதிய நோக்குடன் வெளிப்பட்டது. இந்த வேகமாற்றம் அடுத்த கட்டத்தை வேண்டி நின்றது. இந்தக் கட்டத்தின் மேற்கிளம்பு அலையாக புதிய தோற்றுவிப்பாளராக நவீன இலக்கிய உலகினுள் நுழைகின்றார் ஜெயகாந்தன்.

ஜெயகாந்தன் 1934ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி கடலூர் மஞ்சக்குப்பத்தில் பிறந்தவர். சிறந்த மனிதாபிமானியாக வெளிப்பட்டவர். இவரது நூல்கள் பாரதியார், குருதேவ் தாகூர், சரத்சந்திரர் போன்ற இந்தியாவின் மாபெரும் எழுத்தாளர்களின் படைப்புக்களின் வரிசையில் வைத்து எண்ணத் தக்கவை.

தமிழ் நவீன இலக்கியப் பரப்பில் ஜெய காந்தன் காலம் என்று தனித்து குறிப்பிட வேண்டிய அளவுக்கு ஜெயகாந்தனின் பாய்ச்சல் இருந்தது. 1950களுக்குப் பின்னர் படிப்படியாக தமிழ்ப்பரப்பில் ஜெயகாந்தன் ஆழக் காலூன் றினார். இவரொன்றும் மெத்தப் படித்த மேதாவி அல்ல. திட்டமிட்டு இலக்கிய உலகில் புகுந்து சாதனைகள் நிகழ்த்த எண்ணியவரும் அல்ல. பாரம்பரிய எழுத்தாளர் பரம்பரையில் இந்து வந்தவரும் அல்ல.

தனது அன்றாட வயிற்றுப் பிழைப்புக்காக வாழ்க்கையில் கடைக்கோடியில் போராடியவர். மளிகைக்கடைப் பையன், ஒரு டாக்டரிடம் பை தூக்கும் உத்தியோகம், மாவு மிஷன் வேலை, கம்பாஸிடர், டிரெடில்மேன், புத்தகம் விற்பது, சோப்பு பாக்டரி, இங்க்பாக்டரி, கைவண்டி இழுத்தது, ஜட்கா வண்டிக்காரனிடம் உதவியாளனாக இருந்தது, புரூப் ரீடர், பத்திரிகை உதவி ஆசிரியர்... என பல்வேறு மனிதர்களுடன் வாழ்ந்து பலதரப்பட்ட அனுபவத் தேட்டத்துள் வாழ்ந்து பெற்ற அனுபவ விரிவிலிருந்துதான் ஜெயகாந்தனின் இலக்கியப் பயணம் தொடர்ந்தது. அவர் சித்தரிக்கும் உலகம், மனிதர்கள், மனிநேயம் பாற்ப்பட்டது.

வாழ்க்கையில் கற்று, அதன் பலத்தில் ஊன்றி நின்று வாழ்வை ஆற்றுப்படுத்தும் எழுத்தாளராக பரிணமிக்கும் ''காலச்சூழல்'' ஜெயகாந்தனுக்கு இருந்தது என்பதை அவரது வாழ்க்கை தடம் காட்டுகிறது. அதுவே அவரது இலக்கியத் தடமாகவும் நீட்சி பெற்றது. இது சிறுகதை, நாவல், நாடகம், உரைநடை, கட்டுரை, பத்தி எழுத்து, சினிமா என விசாலித்த களன்களாக வளர்ந்தது. புதுமைப்பித்தன் வளர்த்தெடுத்த கதையாடல் மரபின் செழுமையை உள்வாங்கி அம்மரபை இன்னொரு தளத்திற்கு நகர்த்தி ஒரு பாய்ச்சலை ஏற்படுத்தினார். இந்த வீரியமே ஜெயகாந்தன் சிறுகதை மன்னனாக வலம்வர காரணமாயிர்று.

ஒரு அடிநிலை வாழ்க்கையிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்த ஜெயகாந்தன் நவீன தமிழ் இலக்கியத்தின் சாதனைச் சிற்பியாக பரிணமித்தார். அந்தளவிற்கு 'ஆளுமையும் புலமையும்' ஜெயகாந்தனிடம் வளர்ந்தது. தமிழை முறையாய் கல்வி நிறுவனம் சார்ந்து கற்காமல் புறப்பட்ட ஜெயகாந்தன் தனது தீவிர முயற்சியால் தமிழை ஆழ அகல கற்றுத் தேறி, தமிழுக்கும் தன்னால் வளம் கொடுக்க முடியுமென நிரூபித்துள்ளார்.

''நான் மகிழ்ந்திருக்கிறேன். பிறரை மகிழ்வித்தி ருக்கிறேன். நான் துன்புற்றிருக்கிறேன். பிறரை துன்புறுத்தியிருக்கிறேன். நான் மகிழ்ந்து பிறரை துன்புறுத்தியிருக்கிறேன். பிறரை மகிழ்வித்து நான் துன்புறுத்தியிருக்கிறேன். இதெல்லாம் எதற்காக?

நான் இந்த வாழ்க்கையோடு என்னைச் சம்பந்தப்படுத்திக் கொண்டுள்ளேன். இந்த வாழ்க்கை என்னைப் பாதிக்கிறது. நானும் இந்த வாழ்க்கையைப் பாதிக்கிறேன். வாழ்க்கை எனக்கு முடிவும் தொடக்கமுமற்ற நெடுங் கதையாக காட்சி தருகிறது. அவ்வவ்போது சிதறித் சிதறி அலைகளாய் என் மீது மோதும் சிறுகதைகளாகவும் பொருள் கொள்கிறது.''

இவ்வாறு தனது வாழ்க்கையில் இருப்பு அர்த்தம் அடையாளம் பற்றிய தெளிந்த தெரிவும் தேடலுடன் தனக்கான இயக்கத்தை எழுத்தின் வழிநிலை நிறுத்தினார்.

1960-1980களில் ஜெயகாந்தன் காலம் மிகச் செழிப்புடன் இருந்தது. முற்போக்கு இடதுசாரி இலக்கிய மரபுக்கு ஜெயகாந்தனின் வளம் பெரிது. கதை சொல்லலில் ஒரு வேகமும், புதுமையும், புதியநடையும், சாதாரண மனிதர் களின் உலகம் முதல் அறிவுஜீவித்தன வாழ்வின் அழுத்தங்கள் வரை, சமுதாய முரண்பாடுகள், சிக்கல்கள் போராட்டங்கள், நகர்ப்புற தொழிலாளர் வர்க்கம், விழிப்புற்ற பெண்கள், தனிமனித பலம், பலவீனம், ஆன்மீக விசார ணைகள் என வாழ்க்கையின் பன்முக விரிதளங் களில் ஜெயகாந்தனின் உலகம் இயங்கியது.

ஜெயகாந்தனின் படைப்புலகம் வாழ்க்கை மீதான நேசிப்¨யும் மனித நேயத்தையும் கலாபூர்வமாக எடுத்துப் பேசுபவையாகவே உள்ளன.

இவர் மக்கள்பால் எல்லையற்ற அன்பும் சர்வதேசக் கண்ணோட்டமும் கொண்டவர். இவரது படைப்புக்கள் ருஷ்ய, பிரெஞ்சு, செக் ஆங்கில, ஜெர்மனி, உக்ரேனிய மொழிகளிலும், இந்தியாவில் உள்ள பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.

சீரிய இலக்கிய வாசிப்புக்குகுரியவராக அடையாளப் படுத்தப்பட்டாலும் வெகுஜன இதழ்களிலும் இவரது எழுத்துக்கள் பிரசுரிக்கப் பட்டன, அந்த அளவிற்கு இவரது எழுத்துக் களால் அந்த இதழ்கள் தமது தகுதியை கூட்டிக்கொண்டது.

ஜெயகாந்தன் தான் வாழ்ந்துவரும் காலத்தி லேயே தனக்கான விருதுகளையும், பட்டங் களையும் தகுதிகளையும் பெற்றுவரக் கூடிய வராக இருந்துள்ளார். இது அவருக்கு கிடைத்த தனிச்சிறப்பு.

சாகித்திய அகாதமி விருது, சோவியத் நாட்டின் நேரு விருது, தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் ராஜராஜன் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் கிடைக்கப் பெற்று கெளரவிக்கப்பட்டவர்.

ஜெயகாந்தன் எழுத்துப்பணியிலிருந்து தற்போது ஒதுங்கியிருந்தாலும், அவரது படைப்பாளுமை மீதான தொடர்ந்த உரை யாடல்கள் இக்கணம் வரை நடந்து கொண்டு தான் இருக்கிறது...

மதுசூதனன்

© TamilOnline.com