'பிலிம் நியூஸ்' ஆனந்தன் தமிழ்ச் சினிமாவில் பரவலாக எல்லோராலும் அறியப்பட்டு மதிப்புடன் அணுகப்படும் நபர். 78 வயதான ஆனந்தன் 'திரைப்படத் தகவல் மையம்' ஒன்றை கடந்த அறுபது வருடங்களாக நடத்தி வருகிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்கள் பற்றிய அனைத்துத் தகவல்களையும் சேகரித்து வைத்திருக்கிறார். பூஜை போட்ட படங்களி லிருந்து வெற்றி விழா படங்கள் வரை அத்தனை படங்களைப் பற்றிய தகவல்களும் இவரிடம் கொட்டிக் கிடக்கின்றன. திரைப்படப் புகைப் படக் கலைஞராக, பத்திரிகையாளராக இருந்த ஆனந்தன் பிலிம்நியூஸ் ஆனந்தனாக மாறியது எப்படி? இந்தத் துறையில் தான் சந்தித்த இன்னல்கள், திரைப்படத் துறையின் தற்போ தைய பிரச்சனைகள், அவரது எதிர்கால இலட்சியம் இவைகள் குறித்தெல்லாம் மனந் திறக்கிறார்...
ஆனந்தன் எப்படி 'பிலிம்நியூஸ்' ஆனந்தனாக மாறினார்?
அது ஒரு பெரிய கதை. எனக்கு வீட்டில் முதலில் மணி என்றுதான் பெயர் சூட்டியிருந்தார்கள். என் அப்பா பி.கே.ஞான சாகரம் அரசாங்க வேலையில் இருந்தார். என்னைப் பள்ளியில் சேர்க்கச் சென்ற போது 'உன்னுடைய பெயர் என்ன?' என்று டீச்சர் கேட்டார்கள். அப்போது நான் டக்கென்று ஆனந்த கிருஷ்ணன் என்று சொன்னேன். அதிலிருந்து மணி என்ற நான் ஆனந்த கிருஷ்ணனாக மாறிப் போனேன். என் அப்பா அவருடைய அலுவலக நண்பர்களுடன் இணைந்து ஒரு நாடகக் குழுவை நிர்வகித்து வந்தார். அவர்களெல்லாம் அமெச்சூர் நாடக நடிகர்கள். மாதா மாதம் ஒன்றுகூடி நாடகம் போடுவார்கள். அப்போது எனக்கு அப்பாவுடன் அங்கு சென்று நாடகங்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போதுதான் என்னையறியாமல் நாடகங்கள் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது.
பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது நானே டிராமா எழுதி நடிக்கவும் செய்தேன். பாட்டும் நன்றாகப் பாடுவேன். அப்போது திருவல்லிக் கேணி இந்து மேனிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். பள்ளிப் படிப்பை அடுத்து காயிதே மில்லத் கலைக் கல்லூரியில் படித்தேன். முன்பு இதை அரசுக் கலைக் கல்லூரி என்றே அழைப்பார்கள். கல்லூரியில் படிக்கின்ற காலத்தில் எம்.ஜி.ஆர், ஒய்.ஜி. பார்த்தசாரதி இவர்கள் நாடகக் குழுவினர் களோடெல்லாம் தொடர்பு ஏற்பட்டது. டயலாக் எழுதுவது, ஸ்டேஜ் மேனேஜ்மென்ட் என்று சிறு சிறு பணிகளைச் செய்து கொடுத்து வந்தேன். அப்போது அந்தக் குழுவில் 'சோ' அறிமுக நடிகராகப் பணிபுரிந்த போது நான்தான் அவருக்கு வசனம் பேசச் சொல்லித் தருவேன். என்னிடம்தான் வசனம் ஒப்பிப்பார்.
ஒருமுறை என்னுடைய புத்தகத்திற்கு 'சோ' முன்னுரை எழுதிய போது கூட, "ஆனந்தனிடம் நான் வசனம் ஒப்பித்திருக்கிறேன். இன்று நான் நல்ல நிலையில் வசதியாக இருக்கிறேன். அவர் இந்த நிலையில் இருக்கிறார். இதுதான் காலத்தின் கோலம்" என்று எழுதியிருந்தார்.
நாடகக் குழுக்களுடனான தொடர்பினால் எனக்குச் சினிமா ஆசை வந்தது. எனக்கு கேமரா மேன் ஆகவேண்டும் என்ற விருப்பம் தான் முதலில் இருந்தது. கலைவாணரின் கேமராமேனான சி.ஜே.மோகனிடம் அஸிஸ் டெண்டாகச் சேர்ந்தேன். அவர் எனக்கு முதலில் போட்டோகிராபி பற்றி வகுப்பு எடுத்தார். அப்போது 'பாக்ஸ்' கேமரா ஒன்று வைத்திருந் தேன். பாக்ஸ் கேமராவில் நான் எடுத்த படங்களைப் பார்த்து விட்டு, நன்றாகயிருக்கிறது என்று பாராட்டிய மோகன் சார் என்னை 'ரோலி பிளாக்ஸ்' என்கிற புதுக் கேமராவை வாங்கச் சொன்னார்.
என் அப்பாவிடம் மன்றாடி ஒரு வழியாய் அந்தக் கேமராவை வாங்கி விட்டேன். கேமராவை வாங்கியவுடன் இஷ்டத்துக்குப் படமெடுக்க ஆரம்பித்தேன். நான் முதலில் படமாக எடுத்த நபர் சிவாஜி சார்தான். அப்போது 'ராஜா ராணி' படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். நான் போய் சார் உங்களைப் படம் எடுத்துக்கலாமா? என்று கேட்டேன். அதற்கு சிவாஜி சார் 'Ofcourse you can take it' என்றார். படிக்காதவர் என்றெல்லாம் அறியப்பட்ட சிவாஜி அத்தனை சுத்தமாய் ஆங்கிலத்தில் பேசியதைப் பார்த்த எனக்கு ஆச்சரியத்திலும் ஆச்சர்யம்! அவரிடம் முதன் முதலில் பேசியது அப்போதுதான். அதிலிருந்து நடிகர்கள் படப்பிடிப்புக் குழுவினர்களுடன் அமர்ந்திருக்கும்படியான வித்தியாசமான படங்களை எடுக்க ஆரம்பித்தேன். வெறும் திரைப்படப் புகைப்படங்கள் மட்டுமே வந்து கொண்டிருந்த அந்தச் சூழலில், என்னுடைய படங்கள் அமோக வரவேற்பைப் பெற்றது.
அப்போது பிலிம் சேம்பரில் ஒரு பத்திரிகை யைக் கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். அந்தப் பத்திரிகைக்காக நியூஸ் சேகரிக்கப் போனேன். யார் யார் நடிக்கிறார்கள்? தயாரிப் பாளர் யார்? டைரக்டர் யார்? போன்ற விபரங்களையெல்லாம் சேகரித்து மாதாமாதம் வெளியிடுவார்கள். அப்படி திரைப்படப் புள்ளி விவரங்களைச் சேகரிக்கத் தொடங்கிய நான் அதிலிருந்து இன்று வரை சேகரித்து வருகிறேன்.
'பிலிம் நியூஸ்' பத்திரிகையின் தேவராஜன் ஒரு முறை என்னுடைய புகைப் படங்களையெல்லாம் பார்த்து விட்டு பிலிம் நியூஸ¤க்காகப் படம் எடுத்துத்தரச் சொன்னார். என்னுடைய புகைப் படங்கள் பிரசுரமாகின. என்னுடைய படத்தின் கீழே 'பிலிம்நியூஸ் ஆனந்தன்' என்று தேவராஜன் என் பெயரை இடம் பெறச் செய்தார். அதிலிருந்துதான் பிலிம்நியூஸ் ஆனந்தனாக மாறிப் போனேன். தொடர்ந்து இந்தப் பெயரிலேயே எழுதவும் ஆரம்பித்தேன்.
உங்களுக்குக் கிடைத்த விருதுகள் பற்றிச் சொல்லுங்களேன்?
ஒரு முறை சினிமா கலைஞர்கள் எல்லாம் ஒன்று கூடி எனக்கு விழா எடுத்து உதவித் தொகை அளித்தார்கள். அந்த விழாவுக்குக் கலைஞர் தலைமை தாங்கினார். அப்போது அவருடைய கையால் எனக்கு ஒரு இலட்சம் பணமுடிப்பு அளித்தார்கள். அந்த விழா முடிந்து அடுத்த சில மாதங்களில் கலைஞர் தலைமையிலான அரசு எனக்கு கலைமாமணி விருது கொடுத்துக் கௌரவித்தது. நடிகர் சங்கம் 'கலைச் செல்வம்' விருது கொடுத்தது. கண்ணதாசன் மையம் 'திரைத் துறை அகராதி' விருது கொடுத்தது. 'நடமாடும் சர்வ கலா சாலை', 'சிவாஜி விருது' தெலுங்கர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் 'கலா பீடம்' போன்ற விருதுகளெல்லாம் பெற்றுள்ளேன். ஆனால் எல்லா விருதுகளையும் விட அமெரிக்கா அளித்த விருதுதான் என்னால் மறக்க முடியாதது.
ஒரு முறை எனக்கு வந்த கடிதங்களை யெல்லாம் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது வெளிநாட்டு உறை போட்ட ஒரு கடிதம் இருந்தது. நான் முதலில் அதை சட்டை செய்யவில்லை. கடைசியாய் அதைப் படிக்க எடுத்துப் பிரித்தவுடன் நான் அதிர்ந்து போய் விட்டேன். இன்ப அதிர்ச்சி அது. அமெரிக்க வாழ்க்கை வரலாற்றியல் கழகம் என்னை 'Man of the year-1997'ஆகத் தேர்வு செய்திருந்தது. 5000 பேரில் என்னை ஒருவனாகத் தேர்தெடுத் திருந்தார்கள். என்னைப் பற்றிய புத்தகம் ஒன்றையும் வெளியிட்டிருந்தார்கள்.
கலைத் துறையினருடனான உங்களின் நெருக்கம் பற்றி...?
சிவாஜியிடம் ஒரு முறை 'நவரசம்' என்ற தலைப்பில் கட்டுரையொன்று எழுதுவதற்காகச் சென்றிருந்தேன். அப்போது அவர் தன்னுடைய மகள் கமலாவை பள்ளிக்கு லீவு போடச் சொல்லிவிட்டு குழந்தையிடம் ஒன்பது முக பாவங்களையும் காட்டுகிற மாதிரி நடித்துக் கொடுத்தார். அந்தக் கட்டுரை பேசும்படம் இதழில் வெளியானது. அதிலிருந்து அவர் எனக்கு நெருங்கிய நண்பரானார். அவர் நூறாவது படமான நவராத்திரி படம் வெளியான போது அவருடைய நூறு படங்களையும் நினைவு கூரும் வகையில் ஒரு போட்டோ ஆல்பம் தயாரித்து மலராக வெளியிட்டதை அவர் மிகவும் ரசித்துப் பாராட்டினார்.
அதே மாதிரி கே.ஆர்.விஜயா, தற்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, சிவக்குமார், கமலஹாசன் போன்றோருக்கெல்லாம் நூறாவது படம் முடிவில் மலர் வெளியிட்டுத் தந்துள்ளேன். கமலஹாசனின் இருநூறாவது படத்துக்கு மலர் வெளியிட்டு என்னுடைய கைகளைச் சுட்டுக் கொண்டேன். இப்போது சரத்குமார்கூட அவருக்காக ஒரு மலர் தயாரித்துத் தரச் சொல்லியிருக்கிறார்.
மூத்த சினிமாத் துறை பத்திரிகையாளரான உங்களது பார்வையில் இன்றைய சினிமா உலகப் பிரச்சினை பற்றி விமர்சிக்க முடியுமா?
சின்னத்திரை மற்றும் பெரியதிரை இடையி லான பிரச்சனை இன்றைக்கு உக்கிரமான அளவில் நடந்து கொண்டிருக்கிறது. டிவியில் விளம்பரம் கிடைக்கிறது என்பதற்காகத் தயாரிப்பாளர்கள் முழு படத்தையும் டிவிக்குக் கொடுத்து நஷ்டப்பட்டதை இப்போதுதான் உணர்ந்திருக்கிறார்கள். டிவியில் விமர்சனம் என்கிற பெயரில் முழுப் படத்தையும் பிய்த்துப் பிய்த்துப் போட்டு விடுகிறார்கள். அப்புறம் எப்படி தியேட்டருக்குக் கூட்டம் வரும். இப்போது திரைப்படச் சமூகத்தினர் எடுத்திருக்கிற முடிவு நல்ல முடிவுதான். டாப் டென் என்கிற பெயரில் இவர்கள் விமர்சனம் செய்யும் போது கடைசி பத்தாவது இடத்தில் வரும் படத்திற்கு கூட்டமே இருப்பதில்லை. இவர்கள் யார் டாப் டென்னெல்லாம் போடுவதற்கு.
சின்னத்திரையை விட்டு மக்கள் திரைப்படத்தை நோக்கி வருவதென்றால், அதற்கு நல்ல தரமான படங்கள் அவசியம்தானே?
எல்லோரும் கெட்ட படம் எடுக்க வேண்டு மென்றா பூஜை போடுகிறார்கள்? எல்லோ ருக்கும் நல்ல படம் எடுக்க வேண்டுமென்றுதான் ஆசை. நடிகர்களைத் தான் இந்த விசயத்தில் குறை கூற வேண்டும். ஒரே நேரத்தில் ஏகப்பட்ட படங்களுக்கு கமிட் ஆகி விடுகிறார்கள். பத்துநாள் ஷ¥ட்டிங் இருந்தால் ஆறுநாள் கள்தான் தருகிறார்கள். தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் ஆறுநாள்களுக்குள் படத்தை முடிக்க வேண்டுமென்ற அவசரத்தில் செயல்படும் போது குவாலிட்டி கிடைப்பதில்லை.
நடிகர்களை இப்படி ஊக்குவித்ததே தயாரிப்பாளர்கள்தானே?
ஆமாம். நடிகர்களுக்குச் சம்பளத்தை ஏற்றி விட்டதும் இந்தத் தயாரிப்பாளர்கள்தான். இரண்டு இலட்சம் அதிகமாகத் தருகிறோம். பத்து இலட்சம் அதிகமாகத் தருகிறோம். என்று டிமாண்டை உருவாக்குகிறார்கள். நடிகர்களும் பணம் கொடுத்தால் வேண்டாமென்றா சொல் வார்கள்? இப்போது தயாரிப்பாளர்கள் புலம்பி என்ன பயன்? வெற்றிகரமான பத்தாவது நாள் என்றெல்லாம் போஸ்டர் ஒட்டி விளம்பரப் படுத்த வேண்டிய சூழலை உருவாக்கியது இவர்கள் தான். நல்ல படம் எடுக்க இந்த இரண்டு தரப்பினர்களும் பேசி முயற்சி செய்ய வேண்டும்.
உங்களிடமிருக்கும் ஏராளமான தகவல்களைக் கொண்டு தமிழ்ச் சினிமா உலகிற்குப் பயன்படும்படியாக கண்காட்சி ஏதும் நடத்துகிற திட்டமுள்ளதா?
சினிமா சம்பந்தப்பட்டு ஆறாயிரம் படங்கள் குறித்த தகவல்கள் என்னிடம் இருக்கின்றன. இவற்றைத் தொகுத்து முழுப் புத்தகமாக்க வேண்டுமென்கிற எண்ணம் எனக்கிருக்கிறது. இதைத் தொகுக்கும் போது எனக்கு இப்போது கிடைத்து வரும் வருமானம் பாதிக்கப்படும். ஆனாலும் இதைச் செய்தாக வேண்டும் என்கிற வைராக்கியம் எனக்குள் இருக்கிறது.
நிறையப் பேரிடம் இது குறித்துப் பேசினேன். உதவி புரிய யாரும் முன்வரவில்லை. ஏற்கனவே என்னிடமிருந்த படங்களை எடுத்துப் போய் திரைப்பட நகரில் கண்காட்சி வைத்தார்கள். ஆனால் மரியாதைக்குக்கூட ஒரு நன்றி சொல்லவில்லை. ஏன் அழைப்பிதழ்கூட அனுப்பவில்லை. இப்படி இருக்கிற நிலையில் உதவி புரிவார்களா? என்றும் தெரியவில்லை.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் வெளியான 16,000 படங்களைப் பற்றிய முழுத் தகவல்களும் என்னிடமிருக் கின்றன. இந்தத் தகவல்களை வைத்து ஒரு நிரந்தரக் கண்காட்சியை நிறுவவும் திட்ட மிட்டுள்ளேன். இது குறித்து அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன். அரசின் சாதகமான பதிலுக்காகக் காத்திருக்கிறேன்.
சந்திப்பு :சரவணன் |