முதலில் தென்றல் வாசகர்களுக்கு எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.
சில விளக்கங்கள்:
தென்றல் அச்சிடப்படும் காகிதம், மற்றும் முறை ஆகியவற்றில் சில சோதனைகள் நடத்தவுள்ளோம். எனவே அடுத்த சில மாதங்களில் உங்கள் கரங்களில் தென்றல் ஒவ்வொரு விதத்தில் மாறு பட்டிருக்கக் கூடும். வாசகர்கள் தங்களது எண்ணங்களையும், எதிர்பார்ப்புக்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.
சிலர், சற்றுக் காரசாரமான விவாதங்களுக்காக அடிபோடும் வகையில் ஏதானும் இருக்க வேண்டும் என்ற தொனியில் கருத்து வெளியுட்டுள்ளனர். வலிந்து போய் ஒரு சர்ச்சைக்கு உரிய செய்தி, அல்லது அபிப்பிராயத்தைப் போட்டு 'பரபரப்பு' ஊட்ட எனக்கு நிச்சயம் எண்ணம் இல்லை. ஆனால், சர்ச்சையை முற்றிலும் தவிர்த்து 'வெண்டைக்காய் மோர்க் குழம்பு' செய்யும் உத்தேசமும் இல்லை. தென்றலை வெளிநாட்டில், குறிப்பாக வடஅமெரிக்காவ்¢ல் உள்ள தமிழர்களுக்குத் தேவையான, தொடர்புள்ள இதழாகக் கொண்டு வருகிறோம். இந்த வாசகர்களுக்கு உள்ள ஈடுபாடுகள், பிரச்சினைகள் ஆகியவை பற்றி எழுதி வந்துள்ளோம்; எழுதுவோம் - அது விவாதத்துக்குரியதாக இருப்பின் விவாத மேடையில் இறங்குவோம்!
புலம் பெயர்ந்தோர் தங்களது பழங்கால நண்பர்களுடனும் பழகிய இடங்களும் மீண்டும் தொடர்பு கொள்ள உதவுவதை ஒரு முக்கியக் கடமையாக நினைக்கிறோம். இதனாலேயே ஊர்வலம் பகுதியைத் தொடங்கினோம். இதற்கு வரவேற்பு மிகவும் இருக்கிறது; உங்கள் ஊர் பள்ளி, கல்லூரி பற்றி எழுத ஆவலாக இருக்கிறோம். தொடர்பு கொள்ளுங்கள்.
இதே போல் நேர்காணல் பகுதிக்கு நீங்கள் அறிந்த யாரையேனும் தொடர்பு கொள்ள வேண்டுமானால் சொல்லுங்கள், மகிழ்வுடன் செய்கிறோம்.
மதுரைத் திட்டம், மற்றும் எழுத்துருப் பணிகளால் கணினி மற்றும் வலைத்தளத் தமிழ் வளர்ச்சிக்கு உழைத்து வரும் மதிப்பிற்குரிய மணி மு. மணிவண்ணன் அவர்கள் 2002ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் இணையத்தமிழ் மாநாட்டின் (சான்·ப்ரான்சிஸ்கோவில்) அமைப்பாளர் பொறுப்பேற்றுள்ளார். அம்மாநாடு வெற்றிபெற நமது வாழ்த்துக்கள். ஊர்கூடித் தேர் இழுக்கவேண்டும். அனைவரும் manivannan@earhlink.net என்ற மின்முகவரியில் அவரைத் தொடர்பு கொள்ளலாம்.
என்னைப் பற்றி அறிந்தவர்கள் தென்றல் (ஆறாம்திணை/chennaionline) ஆகியவற்றில் வரும் சோதிடப் பகுதியைப் பற்றிக் கிண்டல் செய்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் ஜெயகாந்தன் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' திரைப்படத்தில் நாகேஷ் மூலம் சொன்னதை சற்று மாற்றிச் சொல்வதே எனது வழக்கம். "பத்திரிக்கை/வலைத்தளம் என்பது நமக்குப் பிடித்ததை பட்டியல் போட்டுப் பார்ப்பது அல்ல".
ஒரு மாத இதழில் சோதிடப் பகுதி அவ்வளவு உபயோகமில்லை, அதற்குப் பதிலாக வேறு ஏதாவது (பயனுள்ளதாக) போடலாம் என்று சிலர் சொல்கிறார்கள் - உதாரணமாக இந்த மாதம் மீரா சிவகுமார்- உங்கள் கருத்து என்ன?
மதம் கொண்ட யானைகள் தறிகெட்டு ஓடுவதற்கு ஒப்ப குஜராத்திலும், கோவையிலும் இன்னும் சில இடங்களிலும் கடவுளின் பெயரால் கொலைகள் நடந்துள்ளன. முதலில் எந்தக் குழுவினர் என்ன செய்தார்கள் என்பது போன்ற செய்திகள், மாறுபட்ட செய்தி அறிக்கைகளிலும், உணர்ச்சி வேகத்திலும் அடிபட்டுப் போய் விட்டன.
இதைவிடப் பெரிய கொடுமை அரசு தனது கடமையைச் செய்யாமல் அழிவை வெறுமனே பட்டியலிடுவதும், ஈட்டுத் தொகை வழங்குவதும்தான் தனது பெரிய பணிபோலச் செயல்படுவதுதான். 'We get the leaders, we deserve' - தவறுகளையும், மத/மொழி வேறுபாடுகளை விசிறிக் குளிர்காயும் அயோக்கிய அரசியல்வாதிகளையும் நாம் முன்னின்று ஒதுக்காவிட்டால் அவர்கள் நாட்டைப் பாழடிக்கும் பணியை செய்து முடித்து விடுவார்கள். அரசின் மெத்தனத்திற்கு எதிராகவும் உரத்துக் குரல் கொடுப்போம்.
'Remember we not only inherited this world from our previous generation, we are also holding it in trust for the next'.மீண்டும் சந்திப்போம், பி.அசோகன் ஏப்ரல் - 2002 |