நம்பிக்கையளிக்கிற மாற்றங்கள்...
இரண்டு வாரங்களை இலங்கையில் (கொழும்பு) ஒரு வேலை நிமித்தமாகக் கழிக்க நேர்ந்தது. (கவலைப்படாதீர்கள், பயணக் கட்டுரை எழுதப் போவதில்லை!) கொஞ்சும் தமிழ், பல புதிய பதப் பிரயோகங்கள், புதிய வார்த்தைகள் என்று பலவாறான புதிய அனுபவங்கள். உதாரணம்: Lane = ஒழுங்கை.

நான் சென்றிருந்தது ஒரு மென்பொருள் நிறுவனத்திற்குப் (இலங்கையிலேயே பெரியதென்று சொன்னார்கள்) பயிற்சி நடத்தும் பொருட்டு. எனவே பலதரப்பட்ட மனிதர்களைச் சந்தித்தேன் என்று கூற முடியாது. உணவுச் சாலைகளிலும், கடைகளிலும் சிலரைச் சந்தித்தேன். அதுபோக வாடகை ஊர்தி ஓட்டுனர்களோடும் பேசினேன்.

புதிய அரசாங்கத்தின் முயற்சிகள் பெரும்பாலும் வரவேற்கப்படுகின்றன. எதிர்ப்புகளும் இல்லாமலில்லை. ஆனால் எல்லோரும் இந்த உள்நாட்டுப் போர் இலங்கையைப் பலவாறாகப் பாதித்து விட்டது; இனிமேலாவது அமைதியும், அதனுடன் பொருளாதார மேம்பாடும் வரவேண்டும் என்கிறார்கள்.

தமிழர்கள் மீது இருந்த பல தடைகளையும் கெடுபிடி விதிகளையும் ஏறத்தாழ முற்றிலும் நீக்கியாகிவிட்டது. சிங்கப்பூர் பயணம் போன்ற பிற நடவடிக்கைகளும் நம்பிக்கை தரும் பதில்களைத் தந்துள்ளன. இலங்கை அமைதியின்மையிலிருந்து சமுதாய மற்றும் பொருளாதார சீரமைப்புகளை நோக்கி முன்னேற அனைது சாராரும் முயல்கிறார்கள் என்று தெரிகிறது. நமது வாழ்த்துக்கள்.

சென்ற மாதத்துத் தலையங்கத்தின் கருத்து இலங்கையில் காதலர் தினக் கொண்டாட்டங்களின் போது எதிரொலித்தது. பத்திரிகைகள் யாவும் 'இந்தப் புதிய பழக்கம் சரியில்லை', 'இளைஞர்களை மேற்கத்திய நாகரீகம் கெடுக்கிறது' என்றன. மதத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மொத்தத்தில் என் மனதில் 'action replay'! இது போதாதென்று கீதா பென்னட் அவர்களது பக்கம் வந்து சேர்ந்தது - காலம் மாறிப்போச்சு என்ற தலைப்பில்!

கொழும்பிலும் தமிழ்நாட்டு மற்றும் சென்னை மாநகரின் பிரச்சனைகள்தான். செய்தித் தாள்களில் ஆசிரியருக்கு வந்த கடிதங்களின் கவலைகள் சில:

1. எங்கு பார்த்தாலும் புத்தருக்குச் சிலைகளும் கோவில்களும் கட்டி விடுகிறார்கள். இது புத்தமத ஆகம விதிகளுக்குப் புறம்பானது.

2. பேருந்துகள் தலைதெறிக்க ஓட்டப்படுகின்றன. இதனால் விபத்துகள் அதிகமாகின்றன.

3. புகைவண்டித் தடங்கள் மற்றும் ஊர்திகள் மிகவும் பழுதாகி விட்டன. வருடா வருடம் செலவு மிக அதிகமாகி விட்டது. விபத்துகள் அதிகரித்து விட்டன. தனியார்மயமாக்க வேண்டும். ஆனால் அதனால் பயன் விளையுமா? தெரியவில்லை.

கொழும்பிலிருந்து திரும்பும் போது குறைந்த பட்சம் விமான நேரத்திற்கு குறைந்தது 3 மணி நேரமாவது முன்னதாகக் கிளம்புங்கள். விமானத் தளத்தில் நிறையச் சோதனைகள். ஆனால் இச் சோதனையைச் செய்த அனைவரும் மிக நல்ல முறையில் பேசி, பழகுகிறார்கள். நான் எனக்குத் தேவையான பலவற்றை ஒரு Hard disk-இல் போட்டு எடுத்துச் சென்றிருந்தேன். அதைப் பார்த்துப் பொறுமையாக என்னவென்று கேட்டு, நான் எதற்கு வந்திருந்தேன் என்றறிந்த பின்னரே அனுப்பினார்கள். எத்தனை பிரச்சினைகள் இருந்தாலும், இனிய பழகுமுறையை விட்டுக் கொடுக்காத அவர்களது மனப்பாங்கிற்கு ஜே! மீண்டும் இலங்கை மக்களுக்கு நல்வாழ்த்துக்களுடன்...

மீண்டும் சந்திப்போம்,
பி.அசோகன்
மார்ச் - 2002

© TamilOnline.com