ஏரிக்கரையில் இசைவிழா
ஈஸ்டர் வார இறுதியில் திருவையாறு தியாக பிரம்மம் காவேரித் தீர்த்ததை விட்டு நீங்கித் தற்காலிகமாய் வட அமெரிக்காவின் ஏரிதீர்த்த திற்குக் குடி பெயர்ந்து விடுகிறாராம்.

இப்படி ஒரு செய்தி பரவினால் ஆச்சரியப் படுவதற்கில்லை. இந்த ஆண்டு கிளீவ்லாண்டில் கோலாகலமாக நடந்த பத்து நாள் இசைத் திருவிழாவைப் பார்த்தபிறகு அப்படித்தான் தோன்றியது. காலை முதல் இரவு வரை தொடர்ந்து நடைபெற்ற கச்சேரிகள், இசை பற்றிய செய்முறை விளக்கங்கள் என்று வந்தோர் அனைவரும் இசையில் மூழ்கித் திளைத்த ஆழ்வார்களானார்கள்.

சென்னை டிசம்பர் சீசனுக்கு இணையாக இங்கு ஈஸ்டர் சீசன் இசை சீசனாக நிலைத்துவிட்டது. மார்ச் 29 முதல் ஏப்ரல் 7 வரை பத்து நாட்களில் முப்பத்திரெண்டு இசைக் கச்சேரிகள், ஐந்து செய்முறை விளக்கங்கள், ஒரு நாட்டியக் கச்சேரி, பாட்டுப் போட்டிகள், பஞ்சரத்னம் பாடுதல் என்று இடைவிடாமல் செவிக்குணவு. உணவு என்று சொல்வது தவறு. அமுதம் என்று சொல்வதுதான் சரி. இடைவேளையில் அமுதம் வயிற்றுக்கும் சிறிது அல்ல, வேண்டிய அளவு ஈயப்பட்டது கேட்பானேன்? ஆண்டு முழுவதும் வீட்டு வேலை, அலுவலக வேலை, வார இறுதியில் லாண்டரி, தோட்ட வேலை, மார்க்கெட் செல்வது என்ற ஓயாத சூழலில் சிக்கி அலுத்துப் போனவர் களுக்காக இந்த ஒரு வாரமும் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே. அடுத்த ஈஸ்டர் எப்போது வரும் என்று ஏங்க வைத்த அனுபவம்.

வழக்கமாக மூன்று அல்லது நான்கு நாட்களே நடைபெறும் இசை விழா இந்த ஆண்டு வெள்ளி விழாவாக அமைந்ததனால் பத்து நாள் உற்சவமாக நீடித்தது. இருபத்தைந்து ஆண்டுகள்! கால் நூற்றாண்டு காலமாகத் தொடர்ந்து இந்நிகழ்ச்சி நடைப்பெற்று வருகிறதென்பது பிரமிப்பூட்டுகிறது. அதுவும் கிளீவ்லாண்ட் போன்ற சிற்றூரில். ஏனெனில் கிளீவ்லாண்டின் இந்திய மக்கள் தொகை வெறும் 1145 தான் என்று புள்ளிவிவரம் கூறுகிறது. இதில் கர்நாடக இசைப் பிரியர்கள் பாதி அளவு தேரினால் அதிகம். இந்தச் சின்னஞ்சிறு குழு வட அமெரிகாவிலேயே பெரிய இசைவிழாவை இடைவிடாமல் இருபத்தைந்து ஆண்டுகளாக நடத்தி வருகிறது என்பது சாமான்ய விஷயமில்லை. ஆயிரக்கணக்கான தென்னிந்தியர்கள் வாழும் நியூயார்க், சிக்காகோ, சான் பிரான்ஸிஸ்கோ போன்ற நகரங்களுக்கு கிடைக்காத பெருமையை ஒரு சிறிய நகரம் தட்டிக்கொண்டு போகிறது.

பார்க்கப்போனால் மூன்று குடும்பங்களும் ஒரு இசைக்கலைஞசரும் தான் இந்த விழாவுக்கு மூலகாரணம். எந்தப் பிரச்சனை வந்தாலும் தளராமல், தொடங்கிய உற்சாகத்துடன் இன்றளவும் வெற்றிகரமாக நடத்தி வருபவர் களான கோமதி - பாலு, கோமதி - சுந்தரம், டொரண்டோ வெங்கடராமன், ராமநாதபுரம் ராகவன் ஆகிய இசை உலகம் என்றும் நன்றி சொல்லும்.

எழுபதுகளில் கிளீவ்லாண்டில் வாராவாரம் நடந்த பஜனைக் குழுவினரை தியாகராஜ ஆராதனை செய்யத்தூண்டி விழாவுக்கு வித்திட்ட பெரியவர் மிருதங்கக் கலைஞர் ராமநாதபுரம் ராகவன். ஆண்கள், பெண்கள் அடங்கிய அந்தக்குழுவினருக்கு பஞ்சரத்ன கீர்த்தனங்களைப் பயிற்றுவித்துப் பாட வைத்தவரும் அவரே. ஒரு சர்ச்சில் முதன் முதலில் சுமார் எழுபதுபேர் கலந்து கொண்டு நடைப்பெற்ற ஆராதனை இந்த ஆண்டு கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநூறு பேர் கலந்து கொள்ளும் அளவுக்கு வளர்ந்து இருக்கிறது.

தொடங்கிய சில ஆண்டுகளுக்குப்பிறகு கிளீவ்லாண்ட் பல்கலைக்கழக பேராசிரியர் டெம்பிள் டட்டல் துணையுடன் பல்கலைக் கழகத்தின் ஆதரவைப் பெற்றது. அதன் பின் நிகழ்ச்சிகள் பல்கலைக் கழகத்தின் அரங்கு களில் நடைப்பெற்றன.

இளைய தலைமுறைக்கு இசையில் ஆர்வம் உண்டாக வேண்டும் என்ற நோக்கத்தோடு தொடங்கிய இசைப்போட்டிகள் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த ஆண்டு விழாவும் முதல் நாள் இசைப்போட்டிகளில் கிட்டத்தட்ட நூற்றியிருபது குழந்தைகளும், இளைஞர்களும் கலந்து கொண்டார்கள். இந்தியாவிலிருந்து வந்த இசைக்கலைஞர்கள் போட்டிகளுக்கு நடுவர்களாக இருந்தனர். அமெரிக்காவின் ஒவ்வொரு மூலை முடுக்களிலிருந்தும் போட்டிக்குச் சிறுவர்களும் சிறுமிகளும் ஆயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்து வந்திருந்தது அவர்களுக்கு இருக்கும் இசை ஆர்வத்தைக் காட்டியது. முன்னணி இசைக் கலைஞர்கள் மூக்கில் விரல் வைத்து அதிசயப்படும் அளவுக்கு அவர்கள் பாடியதும் வாத்தியங்கள் வாசித்ததும் தனிக் கதை.

பார்க்கப் போனால் கிளீவ்லாண்ட் இசை விழாவின் மகத்தான சாதனை இளம் தலை முறையை இசையில் முழு மூச்சுடன் ஈடுபட வைத்ததுதான் என்று அடித்துச் சொல்லலாம். போட்டிகளில் பங்கேற்கவென்று பல மாதங்கள் பயிற்சி செய்கிறார்களாம். இரண்டாம் நாளும் மூன்றாம் நாளும் தனித்தனியாகப் பாடிய குழந்தைகளின் திறமை அசாத்தியம். பெரியவர் களுக்கு சரிசமமாகப் பஞ்சரத்ன கீர்த்தனை களை, வராளி ராக கீர்த்தி உட்பட, வரி பிசகாமல், லயம் தவறாமல், ஸ்பஷ்டமான உச்சரிப்புடன், கமக சுத்தமாகப் பாடிய சிறுமி மதுரா ஸ்ரீதரனுக்கு வயது பதினொன்று. உச்சஸ்தாயில் கணீரென்று "சாமஜ வரகமனா" வைப் கனகச்சிதமாப் பாடிய வைபவ் மெளலிக்கு வயது ஏழு. போட்டிகளில் பங்கேற்கவும், தனியாகப் பாடவும் பால்டிமோரிலிருந்து வந்தப் பிஞ்சுப் பாடகன்.

மதுராவின் ஆசிரியை ஞானம் சுப்ரமணியம் இந்த ஆண்டில் சிறந்த ஆசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தம்புரா பரிசுடன் விருது பெற்றது ஆச்சரியமில்லை. மதுரா வயதையொத்த அவரது பல மாணவியர் இந்த ஆண்டு தியாகராஜரின் ஆராதனை அன்று பஞ்சரத்னம் பாடி அஞ்சலி செய்தனராம்.

சிறுவர்களும் இளைஞர்களும் பெறும் அளவில் வந்து கச்சேரிகளை ரசித்தது காணக் கிடைக்காதக் காட்சி. சுதா ரகுநாதன் கச்சேரியில் அரங்கில் இடம் போதாமல் மேடை மீது அமர்ந்தவர்களில் பட்டுப்பாவாடைச் சிறுமியர் கூட்டம் ஐம்பது பேர் இருக்கும். சும்மா அமரவில்லை. ஜம்பை தாளம் உட்பட எல்லாப் பாட்டுகளுக்கும் கச்சிதமாகத் தாளம் போட்டபடி ரசித்தனர். நெய்வேலி சந்தான கோபாலன் கச்சேரியில் பிரபல முன்னணி வித்வான் திருச்சி சங்கரன் தனி ஆவர்தனத்தைக் கேட்ட ஜீன்ஸ¤ம் காதில் கடுக்கனும் அணிந்த டீனேஜ் குழு ஒன்று செவிகளையும் விரல் களையும் தீட்டிக் கொண்டே இரண்டாம் வரிசையில் அமர்ந்தது. "ஆஹா ஆஹா" என்று பரவசத்தோடு ஒவ்வொரு நுணுக்கத்தையும் ரசித்து மகிழ்ந்தது. யார் சொன்னார்கள் இளையத் தலைமுறைக்குக் கர்நாடக இசையில் ஆர்வமில்லையென்று? வட அமெரிக்காவில் ஒரு புதிய அலை உருவாகி வருவதைக் கிளீவ் லாண்டில் வந்து பார்க்கட்டும்.

இரண்டாம் நாள் காலை முதலில் உள்ளூர் சாய் பஜன், சின்மயா மிஷன் போன்ற குழுக்களின் சிறுவர் சிறுமியர் பஜன் பாடினர். ஓரிரு குழுக்களில் ரகரமெல்லாம் ழகரமாகக் குழறும் அமெரிக்க உச்சரிப்பு வேடிக்கையாக ஒலித்தது. பஜனையைத் தொடர்ந்து தியாக பிரம்மத்துக்கு ஆராதனையாக பஞ்சரத்ன கீர்த்தனைகளை வெளியூர் வித்வான்களும் உள்ளூர் பெண் மணிகளும் இணைந்து பாடினர். அதன் பின் தனித்தனியே ஆளுக்கொரு பாட்டு பாடுவோ ருக்காக மேடை அளிக்கப்பட்டது. இந்த விழாவில் விருது பெற்று கவுரவிக்கப் பட்ட பிரபல நாதமணி வைஜெயந்திமாலா பாலி "நன்னு விடச்சி" உட்பட இரண்டு கீர்த்தனை களைச் சிறப்பாகப் பாடித் தான் D.K. பட்டம்மாளின் மாணவி என்பதை நிரூபித்தார்.

அன்று மாலை முதுபெரும் கலைஞர் முக்தாவின் கச்சேரி மறக்க முடியாத இசை அனுபவம். எண்பத்தியேழு வயதில் நிமிர்ந்து உட்கார்ந்து இரண்டரை மணி நேரம் அவர் வழங்கிய இசை விருந்து தனம்மாள் குலதனத்தின் மேன்மைக்கு எடுத்துக்காட்டு. "கமலாக்ஷி" என்று யதுகுல காம்போதி வர்ணத்தில் தொடங்கிய விறுவிறுப்பும், மிடுக்கும் "மாமவ பட்டாபிராமா" வரை நீடித்தது. ஆங்காங்கே கல்யாணி, தோடி, அடாணா என்று அளவான ஆலாபனைகள் ராகங்களின் சாரத்தை வழங்க, முன் வரிசையில் அமர்ந்திருந்த வித்வான்களிடையே பரவசம் மிகுந்த ரசிப்பு. ரவிகிரண் சித்ர வீணையிலும், அவரது சகோதரி கிரணாவளி வாய்ப்பாட்டிலும், மனோஜ் சிவா மிருதங்கத்திலும் முக்தாவை நிழலாய் பின்பற்றினர்.

இந்தியத் தூதர் லலித் மான்சிங் சிறப்பு விருந்தினராக வருகை தந்து உரையாற்ற, மாலையில் விருதுகள் வழங்கப்பட்டன. திருமதி முக்தாவிற்கு சங்கீத ரத்னாகரா என்ற பட்டமும், நாட்டியக் கலைஞர் திருமதி வைஜெயந்தி மாலா பாலிக்கு நிருத்ய ரத்னாகரா என்ற பட்டமும் வழங்கப்பட்டன. ரமணிக்கு அவரது மாணவர்கள் பொன்னாலான புல்லாங்குழல் ஒன்றைப் பரிசளித்தனர்.

தில்லையைச் சேர்ந்த M.V. ராமனுக்கு சேவா ரத்னா என்ற பட்டமும், சென்னையைச் சேர்ந்த சுஜாதா விஜயராகவனுக்கு நிருத்ய சேவாமணி என்ற பட்டமும் வழங்கப்பட்டன. ஞானம் சுப்ரமணியம் வட அமெரிகாவில் சிறந்த இசை ஆசிரியைக்கான தம்புரா பரிசு பெற்றார். பொன்னாடைப் போர்த்தலும், விருது வழங்கலும், விருது பெற்றோரின் ஏற்புரையும் மடமடவென்று அரைமணி நேரத்தில் நிறைவு பெற்றது வியப்பாக இருந்தது. வளவளவென்ற பேச்சுக்கள் இல்லை. மேடையில் நாற்காலி வரிசை இல்லை. சென்னை இசை விழாக் களைப் பார்த்துப் பழகியவர்களுக்கு இது புதுமை. வரவேற்கத்தக்க புதுமை.

ரமணியும் அவரது 24 மாணவர்களும் இணைந்து வழங்கிய புல்லாங்குழல் கச்சேரி யுடன் அன்றைய நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன. மறுநாள் மாலை வைஜெயந்திமாலா வழங்கிய பரதநாட்டியம் விழாவின் சிகரங்களில் ஒன்று. அறுபது பிராயம் கடந்தவர் என்றால் நம்ப முடியவில்லை. மேடையில் வயது பாதியாகக் குறைந்துவிட்டது. அழகிய சிற்பம் ஒன்று உயிர் பெற்று வந்தது போல் தோன்றியது. மேலப்ராப்தி, வர்ணம், திருப்பாவை, நொண்டிச் சிந்து, தில்லானா என்று ஒவ்வொன் றும் ஒவ்வொரு அழகு. நிருத்தத்தில் சம்பிராயத்திற்குரிய சுத்தம், நளினம், அபினயத்தில் நெஞ்சைத்தொடும் ரசோத்பத்தி, எல்லாவற்றிற்கும் ஆதிநாதமாக பக்தி, இவற்றை ரசிகர்களால் பரிபூரணமாக உணர முடிந்தது என்றால் அதற்குக் காரணம் வைஜெயந்தி மாலாவின் முழு ஈடுபாடு, முதிர்ந்த அனுபவம், அயராத உழைப்பு.

விழாவின் இசைக் கச்சேரிகளில் மூத்த தலைமுறை, இளைய தலைமுறை, நடுவாந்தி ரமான தலைமுறை என்று எல்லா வயதினரும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் சிகரங்களைத் தொடுவதில் போட்டியிட்டனர். ரசிகர்கள் காட்டில் மழை. இசை மழை.

R.K. ஸ்ரீகாந்தன், திருவெண்காடு ஜெயராமன், குருவாயூர் துரை, திருச்சூர் ராமசந்திரன், T.N. சேஷகோபாலன், சுகுணா வரதாச்சாரி, ராஜி கோபாலகிருஷ்ணன், ஒமனாக்குட்டி நாயர், சுதா ரகுநாதன், நெய்வேலி சந்தானகோபாலன், சஞ்சய் சுப்ரமண்யம், உன்னி கிருஷ்ணன், T.M. கிருஷ்ணா, பத்மா சாண்டில்யன், பால சுப்ரமணியன், வசுந்தரா ராஜகோபால் என்று சென்னைக் கலைஞர்களின் பட்டியல் பெரியது என்றாலும் கூடிய சீக்கிரம் அமெரிக்க வாழ் கலைஞர்களின் பட்டியலும் அதற்கு இணையாகி விடலாம் என்பதன் அறிகுறி புலப்பட்டது. திருச்சி சங்கரன், மதுரை சுந்தர், பூவலூர் ஸ்ரீனிவாசன், கல்பனா வெங்கட், ஆஷா ரமேஷ், சந்தியா ஸ்ரீநாத் என்று தொடங்கி இளம் கலைஞர் பிரசாந்த் ராதாகிருஷ்ணன், சைலேஷ் பாலசுப்ரமணியம் வரை அமெரிக்காவில் குடியேரியவர்கள் கடல் கடந்தாலும் கர்நாடக சங்கீதத்தின் தரமோ, நிறமோ, குணமோ மாறாது என்பதை நிலைநாட்டினார்கள்.

வாய்ப்பாட்டுக்கும் வாத்திய இசைக்கும் சரிசமான போட்டா போட்டியில் ஒவ்வொரு சமயம் ஒவ்வொன்று ஓங்கி வந்துள்ளது. இன்றைய பொழுதில் வாய்ப்பாட்டின் கை ஓங்கி இருக்கிறது. இல்லாவிட்டால் சொல்லி வைத்தார்போல் இத்தனை வாத்தியக் கலைஞர் கள் இந்த இசை விழாவில் இறங்கக் காரணம்? மிருதங்கம் T.V. கோபாலகிருஷ்ணன், மிருதங்கம் ஸ்ரீமுஷ்ணம் ராஜா ராவ், சித்ர வீணா ரவிகிரண், வயலின் ரஞ்சனி - காயத்ரி சகோதரிகள் போன்றவர்கள் வாத்தியத்தில் நாட்டிய ஜெயக்கொடியை வாய்ப்பாட்டிலும் நாட்டினார்கள். வயலின் பக்க வாத்தியம் வாசிக்க வந்த R.K. ஸ்ரீராம்குமார், திடீரென்று சங்கர் ஸ்ரீனிவாஸ் வர இயலாது போகவே அவருக்கு பதிலாக வாய்ப்பாட்டுக் கச்சேரி செய்து வெளுத்துக் கட்டினார்.

இங்கொன்றும் அங்கொன்றுமாக இடம் பெற்ற வாத்தியக் கச்சேரிகளில் ஜெயந்தியின் வீணை விஸ்வரூபமெடுத்தது. பக்க வாத்தியக் கலைஞர் களும் சளைக்கவில்லை. தில்லி சுந்தரராஜன், வரதராஜன், மனோஜ் சிவா, நெய்வேலி ஸ்கந்த சுப்ரமணியம், அருண் பிரகாஷ், H.N. பாஸ்கர், பங்களூர் சுதித்ரா, திருச்சி முரளி போன்றவர்கள் குஷியாகக் களத்திலிறங்கி அப்ளாஸ்களை அள்ளிக்கொண்டு போனார்கள்.

விழா நிர்வாகிகளில் ஒருவரான கிளீவ்லாண்ட் பாலுவும், மற்றொரு நிர்வாகி டொரண்டொ வெங்கடராமனின் மகன் கார்த்திக்கும் அவரவர் பணிகளுக்கு நடுவே கச்சேரிகளுக்கு அருமை யாகவும் திறமையாகவும் கஞ்சிரா வாசித்து அசத்தினார்கள்.

இந்த ஆண்டில் காலை நேரம் செய்முறை விளக்கங்கள் முதல் முறையாக அறிமுகப் படுத்தப் பட்டன. இதற்கு அமோகமான வரவேற்பு. வார நடு என்பதும் காலை ஒன்பது மணி என்பதும் ரசிகர்கள் ஆர்வத்தைப் பாதிக்கவில்லை. திருச்சி சங்கரன், ரவி கிரன், சஞ்சய் சுப்ரமணியம், வசுந்தரா ராஜகோபால் ஆகியோர் மிருதங்கம், வாய்ப் பாட்டு, ஆலாபனை, நிரவல், பல்லவி, ராகங்கள் பற்றி எளிய முறையில் எடுத்துச் சொன்னார்கள். கீதா பென்னட் தியாகராஜரின் இசை நாடகமான பிரகலாத பக்தி விஜயம் பாடல்களைப் பாடி விளக்கம் அளித்தார். கீதாவும் வாய்ப்பாட்டு வழங்கிய இசைக் கலைஞர் என்பது குறிப்பிடத் தக்கது. வந்திருந்தவர்களில் சிறுவர்களும் இளைஞர்களும் ஆர்வமாகக் கேட்டு குறிப்புகள் எடுத்துக் கொண்டதோடு கேள்விகளும் கேட்டனர்.

விழா தொடங்கிய மூன்றாம் நாள் வித்வான் K.V. நாரயணசாமி மறைவுச் செய்தி அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியது. அவர் கிளீவ்லாண்ட் இசை விழாவில் பல முறை கலந்து கொண்டு அதன் இன்றி அமையாத அங்கமாகவே திகழ்ந்தார் என்பதால் துயரம் இரு மடங்காகியது. உன்னதமான அந்தக் கலைஞருக்கு அஞ்சலி போலவே பலரும் அவர் பாடும் பாடல்கள், ராகங்களைப் பாடி அவரை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தினர்.

செவிக்கு இனிமையாக வேளாவேளைக்கு கல்யாணி, தோடி, காம்போதி, கீரவாணி, சஹானா என்று கிடைத்ததுபோல வகை வகையாக இட்லி, உப்புமா, சேவை, சப்பாத்தி, பிசிபேளாஹ¥ளி என்று விருந்து படைத்த இரு அன்னபூரணிகள் கோமதி பாலுவையும் கோமதி சுந்தரத்தையும் வாழ்த்தாத வயிறோ வாயோ கிடையாது. மெய்க்கும் கைக்குமாய் இரவு பகல் கடமையே கண்ணாக நின்ற கார்த்திக்கைப் போல் எந்த வேலையானாலும் கை கொடுக்க இளைஞர்கள், இளம் பெண்கள் பட்டாளம் ஒன்று அங்கு தயார் நிலையில் நின்று துடிப்பாகச் செயலாற்றியது கூட வியப்பில்லை. உணவு பரிமாறும்போது அவர்களில் சிலர் "புவினிதாசுதனி" என்று முனகிக்கொண்டு இருந்ததுதான் விசேஷம்.

ஓடியாடும் இரண்டு வயதுக் குழந்தை ஒன்றையும் கைக்குழந்தை ஒன்றையும் சமாளித்துக்கொண்டே கச்சேரி கேட்ட லோகன் தம்பதியர் சொன்னது நினைவில் நிற்கிறது. "குழந்தைகளைக் கச்சேரிக்குக் கூட்டிக்கொண்டு வருவது கஷ்டமா? அவர்களுக்குள் சங்கீதம் புகுந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே கொண்டு வருகிறோம். கொஞ்சம் கொஞ்சமாக ஊரிவிடும் என்று நம்புகிறோம்."

"ராகசுதாரச பானமு சேசி
ரஞ்சில்லவே ஓ மனசா"

என்று தியாக பிரம்மம் பாடியதன் கருத்தும் இதுதானே.

சுஜாதா விஜயராகவன்

© TamilOnline.com