சுண்டி இழுத்த சொற்பொழிவு!
தமிழ் மொழி, அதன் கவிதை, இலக்கியம் மற்றும் வரலாற்றினைப் போற்றும் ஒரு குழுவால் மிச்சிகனில் (குறிப்பாக டெட்ராய்ட் பகுதியில்) தமிழ் மறுமலர்ச்சி இயக்கம் சில ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கப்பட்டது. Blookfield Hills, Michiganனைச் சேர்ந்த Dr. R. ராஜாராம் தற்போது இதன் ஒருங்கிணைப்பாளாராக உள்ளார்.

அருணாசல கவிராயரைப் பற்றியும் அவரது படைப்பான "ராம நாடக கீர்த்தனை"யைப் பற்றியும் மார்ச் மாதம் 10-ஆம் தேதி Dr. அலர்மேலு ரிஷி அவர்கள் சுண்டி இழுக்கக்கூடிய சொற்பொழிவு நிகழ்த்தினார். சமீபத்தில் தமிழில் Ph.D பெற்ற இவர் ஓர் ஓய்வு பெற்ற பேராசிரியராவர். இந்த சொற்பொழிவின் தலைப்பினையே அவர் தனது ஆராய்ச்சியிலும் மேற்கொண்டார். தமிழ் மொழியை உளப்பூர்வமாகக் காதலிக்கும் தமிழ்ப் புலமை மிக்க இவர் ஒரு சிறந்த பாடகியும் கூட.

Dr. அலர்மேலு ரிஷி தனது சொற்பொழிவின் தொடக்கத்தில் ஆசிரியரைப் பற்றியும், அவரது படைப்புகளைப் பற்றியும், அவர் வாழ்ந்த காலத்தைப் பற்றியும், அக்கால சமூகத்தைப் பற்றியும் கூறி, குழுமியிருந்தோரை அந்தக் காலக் கட்டத்திற்கே அழைத்துச் சென்றுவிட்டார். கம்பனின் நடையோடு அருணாசல கவிராயரின் நடையின் ஒற்றுமை வேற்றுமைகளைக் குறிப்பிட்டார். காலப்போக்கில் எவ்வாறு கவிராயரின் கவிதைகள் கர்நாடக இசை உலகத்தினரால் அங்கீரிக்கப்பட்டது எனவும், M.C. வசந்த கோகிலம். ஜி.என்.பி போன்ற ஜாம்பவான்களால் எப்படி கச்சேரிகளுக்கும் திரு விழாக்களுக்கும் இட்டுச் செல்லப்பட்டது எனவும் விளக்கினார். கம்பர் எப்படி இராமனை ஒரு அரசனா கவும், உணர்ச்சி மிக்க மனிதனாகவும் பிரதிபலித் தார் எனவும், அதே சமயம் கவிராயர் இராமனை நிறைகளின் சின்னமாகவும் அவனது சிறப்புகளை மட்டுமே பாடியுள்ளார் என்பதை மிகச் சிறப்பாகப் புகழ்ந்தார்.

ஆராய்ச்சிக்கு பல பொருட்கள் கிடைக்கத் தான் மேற்கொண்ட முயற்சிகள் பற்றியும், புலவர்களைப் பற்றியும் மக்களைப் பற்றியும் சுவாரசியமான கதைகள் போன்றவற்றை தனது சொற்பொழிவினூடே பார்வையாளர்களுக்கு எடுத்துரைத்தார். தமிழின் இனிமையை இன்றும் நினைவுகூர்பவர்களுக்கும், இனிமையான அந்தக் காலங்களை மீண்டும் வாழ்ந்து பார்க்கத் துடிக்கும் வெகு சிலருக்கு மிகச் சிறந்த விருந்தாக அமைந்தது அந்த மறக்கமுடியாத மாலைப்பொழுது.

இந்த இயக்கத்துடன் தொடர்பு கொள்ள: Dr. R. ராஜாராம் - 248.851.5362

© TamilOnline.com