செப்டம்பர் 27 முதலி 29 வரை, சான் ·பிரான்சிஸ் கோவின் ·பாஸ்டர் சிட்டியில் நடக்கவிருக்கும் தமிழ் இணையம் 2002 மாநாட்டில் மின்னரசு(E-Governance), பல்லூடகக் கருப்பொருள் (Multimedia Content), எண்ணியப் பிளவு (Digital Divide), தொழில் முனைப்பு (Entrepreneurship), தொழில்நுட்பத் தரப் பாடுகள்(technology standards) என்ற தலைப்புகள் ஆராயப்படும்.
சென்னை- இந்தியா மே 1, 2002 - உலகின் தலைசிறந்த தமிழ் இணைய மாநாடும் கண்காட்சியும் (த இ 2002) இவ்வாண்டு செப்டம்பர் 27 முதல் 29 வரை அமெரிக்காவில் கலி·போர்னியா மாநிலத்தில் சான் ·பிரான்சிஸ்கோ குடாப் பகுதியில் உள்ள ·பாஸ்டர் நகர கிரௌன் பிளாசா மாநாட்டு அரங்கில் நடைபெற உள்ளது என உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) சார்பில் அதன் தலைவர் பேரா. மு.ஆனந்தகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
இந்த 2002 ஏற்பாட்டு முயற்சிகளில், பர்க்கெலியில் உள்ள கலி·போர்னியா பல்கலைக் கழகத்தின் தெற்காசியக் கல்வி மையமும், தமிழ்த் துறைத் தலைவரும் இணைந்து செயல்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இணையம் 2002, சிங்கப்பூரில் 1997ல் துவங்கித் தொடர்ந்து வரும் மாநாட்டு வரிசையில் ஐந்தாவது ஆகும். இரண்டாவது மாநாடு 1999ல் சென்னையிலும், 2000ல் மீண்டும் சிங்கப்பூரிலும், கடைசியாக சென்ற ஆண்டு மலேசியாவில் உள்ள கோலாலம்பூரிலும் நடைபெற்றது.
‘எண்ணியப் பிளவின்மேல் பாலம் அமைப்போம்’ (Bridging the digital divide) என்பதை மையக் கருத்தாகக் கொண்ட இந்த மாநாடு, தொழில்நுட்ப, வல்லுநர், வணிகத் தொடர்புள்ள தமிழ் இணைய மற்றும் தமிழ்க் கணினிச் சிக்கல்களுக்குத் தீர்வுகாண முயலும், மாநாட்டின் கருத்தரங்கில் 40க்கும் மேற் பட்ட பன்னாட்டு அறிஞர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த தொண்ணூறுகளின் இறுதியில் இந்த மாநாட்டை முதன்முதலாகக் கூட்டியபோது இவ்வளவு விரைவில் இத்தனை பெரிதாக வளரும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை என்கிறார் பேரா. ஆனந்தகிருஷ்ணன். அவர் மேலும் "மாநாட்டின் வளர்ச்சி தமிழ்க் கணினியின் தொழில் நுட்ப முன்னேற்றத்தையும் உலகெங்கும் பரவியுள்ள தமிழ் மக்களின் தொழில்நுட்பத் தேவைகளையும் பிரதிபலிக்கிறது" என்கிறார்.
தமிழ் இணைய மாநாட்டின் அனைத்துலக அமைப்புக் குழுவையும் இன்று பேரா. ஆனந்த கிருஷ்ணன் அறிவித்தார். குழுவின் உறுப்பினர்கள் பின்வருமாறு:
தலைவர்: திரு. மணி மு. மணிவண்ணன், அமெரிக்கா(செயற்குழு உறுப்பினர்,உத்தமம் )
துணைத் தலைவர்: முனைவர் ஸ்டீவன் பௌலொஸ், அமெரிக்கா (துணைத்தலைவர், தெற்காசியக் கல்வி மையம், கலி·போர்னியா பல்கலைக் கழகம், பர்க்கெலி)
உறுப்பினர்கள்:
முனைவர் மு. ஆனந்தகிருஷ்ணன், இந்தியா (தலைவர், உத்தமம்) திரு. அருண் மகிழ்நன், சிங்கப்பூர் (நிர்வாக இயக்குனர், உத்தமம்) திரு. முத்து நெடுமாறன், மலேசியா (செயற்குழு உறுப்பினர், உத்தமம்) முனைவர் கு. கலியாணசுந்தரம், சுவிட்சர்லாந்து (செயற்குழு உறுப்பினர், உத்தமம் ) பேரா. மு. பொன்னவைக்கோ, இந்தியா (இயக்குனர், தமிழ் இணையப் பல்கலைக் கழகம்)
ஓர் அமெரிக்கக் குடிமகனும், உத்தமத்தின் நிறுவன உறுப்பினரும், அனைத்துலக அமைப்புக் குழுவின் தலைவருமான திரு. மணி மு. மணிவண்ணன் இந்த மாநாட்டை அமெரிக்காவில் நடத்தவிருக்கும் வாய்ப்பு கிடைத்தது பற்றிப் பெருமகிழ்வு கொள்கிறார். "கணினிப் புரட்சியின் கருவறையான சிலிக்கன் பள்ளத்தாக்குக்கே தமிழ் இணைய மாநாட்டைக் கொண்டுவர முடிந்ததில் பெருமையும், மகிழ்ச்சியும் கொள்கிறோம். செப்டம்பர் 11 விளைவுகளின் அதிர்ச்சியையும் தாங்கி உலகோடு கை கோத்து முன்னேற்றப் பாதையில் நடைபோட அமெரிக்கா ஆயத்தமாயிருக்கிறது என்பதை உலகுக்குக் காட்ட முடியும் என நம்புகிறோம்" என்கிறார் அவர்.
"அமெரிக்க மாநாட்டுக்கு வரும் ஏனைய தமிழர்கள் புலம்பெயர்ந்த அமெரிக்கத் தமிழர்களின் சிலிக்கன் பள்ளத்தாக்குச் சாதனைகளைக் கண்கூடாகப் பார்க்கும்போது பெருமிதம் கொள்வதோடல்லாமல், தமது முன்னேற்றத்தின் முட்டுக்கட்டைகளைத் தகர்க்கும் கண்ணோட்டத்தையும் கொள்வார்கள்" என்கிறார் ஆனந்தகிருஷ்ணன்
தமிழ் இணைய மாநாட்டை ஒட்டி நடக்கும் கண்காட்சியில் உலகின் பல்வேறு நிறுவனங்கள் தமிழ் மற்றும் இந்திய மொழிகளில் மென்கலன்களையும் (software), வன்கலன்களையும் (hardware) காட்டவிருக்கிறார்கள்.
அறிஞர்களுக்கும் தொழில்நுட்ப வல்லுநர் களுக்கும் மற்றுமல்லாமல், சான் ·பிரான் சிஸ்கோ குடாப்பகுதி வாழ் தமிழ் மக்களுக்கும் மாநாட்டில் சிறப்பான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன. கணினிமூலம் தம் தமிழ் வளத்தை மேம்படுத்திக் கொள்ளச் சிறுவர் களுக்குப் பயிற்சியும் போட்டிகளும் நடைபெற உள்ளன. பெற்றோர் தம் குழந்தை களுக்குத் தமிழ் கற்பிக்க உதவும் வலைவழிப் பாடங்கள், பள்ளிகள் பற்றி அறியலாம்.
இளைஞர்கள் தமிழ் மரபு பற்றிய செய்திகளை வலைவழியாக அறியக் கற்றுக் கொள்வது மட்டுமல்லாமல், தம் திறனால், அமெரிக்க ரல்லாத தமிழர்களின் எண்ணியப் பிளவின் மேல் பாலம் அமைக்க உதவலாம். முதியோர்களுக்குக் கணினிப் பயிற்சியோடு, ஏனைய தமிழர்களோடு தமிழில் அளவளாவும் தொழில்நுட்பப் பயிற்சியும் அளிக்கப் படும். கணினித் துறை வல்லுநர்கள் தம் திறமையால் கணினித் தமிழ் வளர்ச்சிக்கு, குறிப்பாகச் சிற்றூரில் உள்ள தமிழர்களுக்குத் தம் தாய்மொழியில் தொழில்நுட்பப் பயன்களை அடையும் வாய்ப்பை ஏற்படுத்தும் முயற்சி களுக்குத் தோள் கொடுக்கலாம்.
மாநாட்டு நிகழ்ச்சிகள், மாநாட்டுப் பதிவு, பயண, தங்கல் விவரங்கள் போன்ற தமிழ் இணைய மாநாட்டுத் தொடர்பான கூடுதல் செய்திகளை அடுத்த சிலநாட்களில் உத்தமச் செயலகம் அறிவிக்கும் என ஆனந்தகிருஷ்ணன் தெரிவித்தார்.
மாநாடு பற்றிய விவரங்களுக்கு மணி மு. மணிவண்ணன் (ti2002@infitt.org), நாராயணன் (secretariat@infitt.org) ஆகியோரை அணுகலாம். மாநாட்டுச் செய்திகளை http://www.tamilinternet.org என்ற வலைத்தளத்தில் காணலாம். |