பெயரைச் சொல்லலாமா?
தன்னிகரற்ற தமிழகத்தை உருவாக்கும் லட்சியப் பயணத்தை ஆண்டிபட்டியில் தொடங்கினார் முதல்வர் ஜெயலலிதா. அரசியல் சூழ்ச்சிகளுக்கு முடிவு கட்டி ஆக்கப்பணிகளில் முழுகவனம் செலுத்தப்படுமென்பதை அங்கு பகிரங்கமாகவே தெரிவித்தார். இந்தப் பேச்சு தமிழகத்தில் புதிய பாதையை அமைக்கப் போகிறது என்றுதான் பலரும் நம்பினர்.

ஆனால் சட்டப்பேரவையில் நடக்கும் விவாதங்கள் திமுக x அதிமுக இடையிலான பழிவாங்கும் அரசியலாக மையம் கொள்ளத் தொடங்கியது. 'வாடா போடா' என இருதரப்பும் ஏகவசனத்தில் சொற்போரில் ஈடுபடும் நிலைதான் அங்கு நிலவுகிறது.

கூச்சலும் கும்மாளமும் அமளிதுமளிதான் சட்டப்பேரவையில் மிஞ்சுகிறது. உருப்படியான சமூகத்திட்டங்கள், மக்கள் நலப் பிரச்சனைகள் மீதான விவாதங்கள் நடைபெறுவதாகத் தெரியவில்லை.

எம்.ஜி.ஆரை பெயர் சொல்லி அழைக்கலாமா? புரட்சித் தலைவர் என்று சொல்லலாமல் மொட்டையாக எம்ஜிஆர் என்று மட்டும் எப்படி அழைக்கலாம், கருணாநிதியை முன்னாள் முதலமைச்சர் என்று அழைக்காமல் மொட்டை யாக கருணாநிதி என அழைக்கலாமா போன்ற விவாதங்கள்தான் நடைபெறுகின்றன. எப் போதும் சபையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்வதை முழுப்பணியாகக் கொண்டுள்ளது. பொன்முடி, பரிதிஇளம்வழுதி ஆகியோரை குறி வைத்து சபை நடவடிக்கைகளில் இருந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் கூட்டத் தொடர்வரை டிஸ்மிஸ் செய்வது என்றெல்லாம் முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் எதிர்க் கட்சிகளின் கண்டனத்தாலும் வற்புறுத்தலாலும் பின்னர் தண்டனை ஒருநாளாகக் குறைக் கப்பட்டது. ஆனால் மீளவும் பரிதி, கூட்டநடவடிக்கையில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனைக் கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வருவது தொடர்பான தீர்மானம் சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நடைபெற்றுள்ளது.

இத்தீர்மானத்தை அதிமுக காங்கிரஸ், தமாகா, காங்கிரஸ் ஜனநாயகக் பேரவை, பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகள் ஆதரித்தன. பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்புச் செய்தன.

தீர்மானத்தின் பெரும் பகுதியை ஆதரிப்பதாகவும் இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்ற பகுதியை எதிர்ப்பதாகவும் பாஜக தெரிவித்தது. இத்தீர்மானத்தை திமுக ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவுமில்லை . நடுநிலை வகித்தது.

தீர்மானத்துக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் பாமக எம்எல்ஏக்கள் அனைவரும் கறுப்புச் சட்டை அணிந்து அவைக்கு வந்தனர். தீர்மானம் நிறைவேறியவுடன் கெடுக்காதே கெடுக்காதே அமைதிப் பேச்சைக் கெடுக் காதே; வஞ்சிக்காதே வஞ்சிக்காதே ஈழத் தமிழரை வஞ்சிக்காதே என்று கோஷம் எழுப்பிக் கொண்டே பாமக உறுப்பினர்கள் அனைவரும் சபையிலிருந்து வெளியேறினார்.

தமிழகத்தில் சைதாப்பேட்டை, வாணியம் பாடி, அச்சிறுப்பாக்கம் ஆகிய பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 31ந் தேதி நடைபெறுகிறது. தேர்தலை இலக்காகக் கொண்டு அதிமுக குளறுபடிகள் செய்யத் தொடங்கிவிட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப் பட்ட பின்னர் சைதாப்பேட்டை, வாணியம்பாடி உள்ளிட்ட தொகுதிகளில் அதிகாரிகளை இடமாற்றம் செய்தது.

தேர்தல் ஆணையத்திடம் இது புகாராக தெரிவிக்கப்பட்டது. ஆணையம் விசாரணை மேற்கொண்டு அதிகாரிகளின் இடமாற்ற உத்தரவுக்கு தடை விதித்துள்ளது.

ஒருவர் ஒரே சமயம் இரண்டு பதவிகள் வகிப்பதைத் தடை செய்யும் சட்டமசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா அறிமுக நிலையில் இருக்கும் போதே திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒட்டுமொத்தமாக எதிர்த்தன.

சென்னை மாநகர மேயர் ஸ்டாலின் தற்போது சட்டப்பேரவை உறுப்பினராகவும் உள்ளார். இதனால் அவரது பதவிகளில் ஒன்றுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஸ்டாலினை பழிவாங்கும் நோக்கத்துடன் இந்த சட்ட மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு எதிராக அதிமுகவைத் தவிர அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

தமிழகத்தில் நடைபெறவிருக்கும் மூன்று தொகுதிகளிலும் அதிமுக போட்டியிடுமென அறிவித்துள்ளது. ஏனைய கட்சிகள் தமது நிலையை இன்னும் தெளிவுபடுத்தவில்லை. ஆனால் தேர்தல் பிரச்சாரத்துக்கு தயாராகும் மனநிலைக்கு கட்சிகள் வந்துவிட்டன.

சட்டப்பேரவைத் தலைவர் காளிமுத்து மீது நம்பிக்கை இல்லாத்தீர்மானம் கொண்டு வருவது பற்றி திமுக ஆலோசித்து வருகிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்கூட சபாநாயகரின் பேச்சுத் தொனி கவலையளிப்பதாக உள்ளதென கூறுகிறார்.

ஆக தமிழக அரசியல் நிலவரம் திமுக அதிமுக இடையே நடக்கும் பழிவாங்கும் அரசியல் நிகழ்வுகளின் தொடர்ச்சியில்தான் உள்ளது.

துரைமடன்

© TamilOnline.com