தென்றல் வாசக நண்பர்களுக்கு... அடிக்கடி நான் கர்நாடக இசை உலகத்தைப் பற்றி எழுதுகிறேனே என்று உங்களில் சிலர் கருத லாம். கோபித்துக் கொள்ளலாம். ''ஏன் கர்நாடக இசையை வைத்து கதைகள் எழுதுவதில்லை?'' என்று என்னைப் பலரும் கேட்கிறார்கள். க்ளோஸ் டூ ஹோம்' என்று சொல்வார்களே, அது காரணமாக இருக்கலாம். ஒரு நாட்டியப் பெண்ணைப் பற்றி ''ஏற்றம் புரிய வந்தாய்'' என்ற தொடர் கதையாகவும், சின்ன வயதிலேயே இசை மேதையாக இருக்கிற ஒரு கலைஞரின் வயதான காலத்தைப் பற்றி ஒரு சிறு கதையையும் மட்டும்தான் எழுதியிருக்கிறேன். ஆனால் கட்டுரைகள் எழுதும்போது தவிர்க்க இயல வில்லை.
போனமாதம் பத்து நாட்களுக்கு க்ளீவ்லான்ட் தியாகராஜர் உத்சவத்தில் கலந்துக் கொண்டு தினம் குறைந்தது நான்கு கச்சேரிகளாவது கேட்டதில் சில விஷயங்கள் எனக்குப் புலப் பட்டன. சங்கீதம் அல்லது இசைப்பவர்கள் மட்டும் அல்ல, அதை ரசிப்பவர்களும் என்னை ரசிக்க வைக்கிறார்கள்.
கணவன் அல்லது மனைவி இருவரில் யாராவது ஒருவருக்கு மட்டுமே ஆர்வம் இருக்கும். ஆனால் இரண்டு பேரும் வந்து உட்கார்ந்திருப் பார்கள். அதில் பாட்டைப் பற்றி ருசியில்லாதவர் சுற்றுமுற்றும் அடிக்கடி பார்த்துக் கொண்டு இருப்பார். அப்படி பார்க்காத சமயத்தில் வீடு அல்லது ஆபிஸ் வேலைகளை அப்படியே போட்டு விட்டு வந்ததை நினைத்துக் கொண்டு செய்ய வேண்டியதை மனதில் வரிசைப்படுத்திக் கொண்டு இருப்பார். நோக்கில்லாத தூரப்பார் வையைக் கொண்டு இவரைத் தெரிந்துக் கொண்டுவிடலாம். மற்றவர்கள் கைத்தட்டும் போது மட்டும் கவனம் கலந்து இவரும் கலந்துக் கொள்ளுவார்.
ஒரு சிலருக்கு அந்த நாளைய பாடகர்களைத் தான் பிடிக்கும். ''ம்.. என்னத்தான் சொன்னாலும் ஒரு எம்டிஆர் மாதிரி ஆகுமா?'' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டு எதிரே உயிரைக் கொடுத்துப் பாடிக் கொண்டிருப் பவரை மிஸ் பண்ணிவிடுவர்.
பாட்டுக்களை ராகம், தாளம், இயற்றியவர் என்றெல்லாம் வரிசைப்படுத்தி எழுதிக் கொண்டே வருவார்கள் சிலர். இதில் சிறு வயதினர் மட்டுமல்ல. வயதானவர்களும் உண்டு. பாடகர் தம்புரா சுருதி சேர்க்கும் போதே இவருடைய நோட்டும் பேனாவும் வெளியே வந்துவிடும். இந்த லிஸ்ட் எழுதுபவர்களில் சிலருக்குப் பாட்டு ஆரம்பித்தவுடன் இருக்கும் ஆர்வம் நோட்டில் அதைக் குறித்துக் கொண்ட பின் இருக்காது என்பதை கவனிக்கவும்.
இவர் சங்கீதத்தில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். கச்சேரிகள் செய்ய ஆசைதான். ஆனால் சந்தர்ப்பங்கள்தான் கிடைப்பதில்லை. ''ம்... இதே பாட்டை நான் எவ்வளவு நன்றாக பாடுவேன்? இவனுக்கு அல்லது இவளுக்கு என்ன தெரியும்'' என்று அவர்கள் முகத்திலேயே ஒரு அலட்சியம் தெரியும். தப்பித் தவறிகூட தலைமைய ஆட்டிவிட மாட்டார்கள். கச்சேரி முடிந்து ரசிகர்கள் எழுந்து நின்று கைத் தட்டினால் கடைசியாக எழுந்திருப்பவர் இவராகத் தான் இருக்கும். அதைகூட சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டு வேறுவழியில்லை என்பதால்தான் செய்வார்.
கச்சேரி பாட்டுக்கு நடக்கட்டும். நான் என் பாட்டுக்குப் புத்தகம் படிக்கப் போகிறேன் என்று புத்தகத்திலிருந்து மனமும் கண்ணும் கொஞ்சம் கூட ஆசையாமல் படிக்கிறவர்களின நூறு சதவீத கவனம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.
சரியோ தப்போ, தாளம் போட்டுக் கொண்டு மிக உற்சாகமாக எதிரே உட்கார்ந்து தலையை ஆட்டிக்கொண்டு ரசிக்கிறவர்கள் கச்சேரி செய்பவர்களுக்குப் பெரிய டானிக் என்றால் இவர்கள் சொல்கிற ஆஹா, ஓஹோ, பேஷ் பேஷ்... பால் பாயசம்.
பல வருடங்களுக்கு முன் ஏதோ ஒரு அமெரிக்கப் பெண்கள் பத்திரிகையில் படித்த விஷயம். ''நடத்தையில் நாகரீகம் (சொ·பிஸ்டி கேஷன்) இருக்கும் பெண் கூட்டங்களில் உட்கார்ந்திருக்கும் போது திரும்பி யார் இருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்க மாட்டாள்.'' ஏனோ தெரியவில்லை. இது என் மனதில் ஆழ பதிந்துவிட, இன்றும் தப்பித் தவறிகூட பின் பக்கம் திரும்பி பார்ப்பதில்லை. இது என்ன நாகரீகமோ! கழுத்து வலி தான் மிச்சம் !!! |