அமெரிக்க வாழ் தமிழர்களுக்காக இலவசமாகவே வெளிவரும் தென்றல் இதழைப் படித்தபோது பெரிதும் ஆச்சரியப்பட்டேன். நல்ல பல தகவல்களுடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு ஒரு தொகுப்பிற்கான அத்தனை அம்சங்களுடன் உள்ளது. நமது நாட்டிற்கப்பால் உள்ள இசை மற்றும் கலை ரசிகர்களுடன் தென்றல் மூலம் தொடர்பு கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
இசை மேதைகள் பண்டிட் ரவிசங்கர், வியத்தகு இசைக் கலைஞர் ஜார்ஜ் ஹாரிசன் மற்றும் அமெரிக்க வாழ் புகழ் பெற்ற பல இந்திய இசைக் கலைஞர்களுடன் நான் முதன்முதலான 1974ல் U.S வந்தேன். இந்த நீண்ட நெடும் இசைப்பயணத்தில் 60 நாட்களுக்குள் எழுபது கச்சேரிகள் செய்தோம்.
நான் கர்னாடக இசை மற்றும் இந்துஸ்தானி இசைப் பாடல்களைப் பாடினேன். தபேலா வித்வான் உஸ்தாத் கான் சாஹிப் அல்லா ரக்காவுடன் ஜுகல்பந்தி நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டேன். முதன் முதலாக அமெரிக்க இளைஞர்கள் மிருதங்கத்தைக் கண்ணுற்றார்கள். இருபுறமும் அடிக்கக்கூடிய காங்கோ வடிவக் கருவி என "ரோலிங் ஸ்டோன்ஸ்" இதனை வர்ணித்தார்கள். எனக்கு பெரிதும் நன்மை பயத்த ஒரு பயணம் அது.
ஒரு பத்து வருட இடைவெளிக்குப் பிறகு பேராசிரியர் T.N. கிருஷ்ணனுடன் நான் மீண்டும் பயணித்தேன். 1985ல் நடந்த ஏர் இந்திய விமான விபத்தால் அந்த நிகழ்ச்சி இடையிலேயே நிறுத்தப்பட்டது. பிறகு எனது குருவான தந்தையை இழந்தேன். மில்லேனிய மாயையைத் தவிர்ப்பதற்காக 1999ல் ·பெர்மாண்டில் உள்ள பாரதி கலாலயாவிற் காக ஒரு சிறிய வேலை நிமித்தம் வந்தேன். இதனைத் தொடர்ந்து போர்ட்லாந்தைச் சேர்ந்த Dr. ஜெயந்தி மற்றும் ராமன் குஜராத் பூகம்ப நிவாரண நிதிக்காக நிகழ்த்திய "குளோபல் ·ப்யூஷன்" (Global Fusion) நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்.
கிளீவ்லாண்டில் 25வது தியாகராஜ ஆராதனை விழாவில் இம்முறை கலந்துகொண்டது எனக்கு ஒரு புதிய அனுபவம். பல இசை ரசிகர்களின் குறிப்பாக தங்கள் பணிகளிலிருந்து கடினமான காலக்கட்டத் திலும் விடுப்பு எடுத்துக்கொண்டு வந்திருந்த பல இளம் தம்பதிகளின் ஈடுபாடு, இடைவிடாத உற்சாகம் மற்றும் நேர்மையைக் கண்டு ஆச்சரியத்தில் ஆழ்ந்து விட்டேன். அதுவும் இந்தப்பகுதியில் நான் மேற் கொள்ளும் முதல் பயணத்திலேயே இதைக்கண்டு நான் பிரமித்துவிட்டேன்.
சுற்றுச்சூழலில் நிலவிய சாந்தம், அவர்களது ஒழுக்கம் மற்றும் ஒவ்வொரு கச்சேரிக்கும் மிகுந்த ஞானத்துடன் அவர்களின் ரசிப்பு... அப்பப்பா...
பல சமயங்களில் சபாக்களைவிட களைகட்டும் சுவையான தென்னிந்திய உணவுகளை வழங்கும் கேன்டீன்கள் தான் இல்லை. கேலிகள் ஒருபுறம் விட்டுவிட்டுப் பார்த்தால், உணவுப் பொருட்களை ஒரு தவிர்க்க முடியாத உப பொருளாகக் கருதி கலைஞர்கள் உட்பட அனைவரும் கிடைத்ததைக் கொண்டு சமாளித்தது சுவாரசியமாக இருந்தது.
கலைஞர்கள் மற்றும் நிர்வாகிகளும் தங்குமிட வசதி, உணவு மற்றும் போக்குவரத்தில் ஏற்பட்ட சிறு இடையூறுகள் என அனைத்திலும் பகிர்ந்து கொண்டது அவர்களிடையே நிலவிய ஒற்றுமையைக் காட்டியது. விழாவைச் சிறப்பாக நடத்திக்காட்டிட வேண்டும் என்ற உத்வேகமே எங்கும் நிலவியது. சென்னை உட்பட இந்தியா முழுவதிலும் ஐம்பதிற்கும் மேல் இவ்வாறான நிகழ்ச்சிகளை நடத்தியவன் என்ற முறையில் கூறுகிறேன் இது ஒன்றும் சாமானிய விஷயமல்ல. திரு சுந்தரம், திரு வெங்கட் ராமன், திரு ரமணி ஆகியோருக்கும் மற்ற விழாக்குழுவினருக்கும், தனித்தன்னைவாய்ந்த இசைக்கலைஞரும் எனது இடுக்கண் களையும் நண்பருமான ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ் அவர்களுக்கும் எனது பாராட்டுக்கள்.
நமது பண்பாட்டையும் பாரம்பரிய இந்திய இசையையும் வெளிநாடுகளில் பரவச்செய்ய நினைப்பவர்களுக்கு இந்த கிளீவ்லாண்ட் விழா ஒரு முன்னோடியாக இருக்கும் என நம்புகிறேன். மேலும் பல இசையார்வம் மிக்க இளைஞர்கள், இது போன்ற பல இசை நிகழ்ச்சிகளை பிற ஊர்களிலும் நடத்திட முன்வருவார்கள் என நினைக்கிறேன். அமெரிக்கா ஒரு மாபெரும் கண்டமாதலால் நமது கலாச்சாரத் தைப் பரப்பும் நிகழ்ச்சிகளுடன் தங்களை இணைத் துக்கொள்ள ஏராளமானோர் இருக்கின்றனர். அவ்வாறு நிகழ்ந்தால் பல தரப்பட்ட இசையும் பல நிலைகளிலுள்ள இசைக்கலைஞர்களின் போக்கு வரத்தும் இவ்விடங்களில் அதிகரிக்கும்.
நமது உந்துதலின் பேரில் அமெரிக்கர்களுக்கு நமது மரபினைப் பரப்புவதை நம் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். மத சம்பந்தமான இயக்கங்கள், ஹிந்துஸ் தானி இசை மற்றும் திரித்துக்கூறப்படும் சில அரசியல் செய்திகளைத் தவிர அவர்களுக்கு வேறெதுவும் தெரிவதில்லை. இசை, நடனம் மற்றும் இவை சார்ந்த பல கலைகளே நமது சக்திவாய்ந்த நிலைப் பாடு ஆகும். இசை மூலம் வெளிப்படுத்தப்பட்ட ஆன்மீக சக்தியின் மூலமாகத்தான் நமது வாழ்க்கைச் சூழலில் ஏற்படும் சுக துக்கங்களை எதிர்கொண்டு வெற்றிபெற்றுள்ளோம். இது ஏனய மதங்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.
இறுதியாக, நான் கடந்த அறுபது வருடங்களாக ஒப்பற்ற கலைஞர்கள் அடங்கிய மூன்று தலைமுறை யினருடன் வாழ்ந்துவருகின்றேன். எனது அனுபவத் தையும் எண்ணங்களையும் தென்றல் வாசகர்களாகிய உங்களிடையே பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். தூய இசைப் பற்றிய எதுவாக இருந்தாலும் அதனைப் பற்றிய எனது எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதில் எனக்குள்ள ஆர்வமும் மகிழ்ச்சியும் நீங்கள் அறிந்தது தான். உங்கள் கருத்திற்காக காத்திருக்கிறேன்.
ஆசிகளும் நல்வாழ்த்துக்களும்,
பேராசிரியர் T.V. கோபாலகிருஷ்ணன் |