இரண்டாம்கட்ட பொருளாதார சீர்திருத்தம்: முன்னும் பின்னும்
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் ப. சிதம்பரம் ''இந்தியப் பொருளாதாரத்தில் உலகமயமாக்கல் தாக்கம்'' என்ற தலைப்பில் பேசினார்.

நகர்மயமாக்கலைப் போல உலகமயமாக்கலையும் தவிர்க்கவோ தடுக்கவோ முடியாது; இதை ஏற்று அரசு புத்திசாலிதனமாக செயல்படுத்தினால்தான் முழுப்பயன் கிடைக்கும். உலகமயமாக்கலின் அடிப்படை கொள்கையை அனத்து நாடுகளும் ஏற்றுள்ளன. அதில் முக்கிய அம்சங்கள் போட்டிப் பொருளாதாரம், தாராள ஏற்றுமதி, இறக்குமதியை தடை செய்யக்கூடாது ஆகியவை ஆகும்.

போட்டி மனப்பான்மைதான் மனிதனை மேம் படுத்தும். பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங் களிடம் போட்டி அவசியம். அதேபோல் நம் பொருட்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வது போல் வெளிநாட்டினருக்கும் தங்களுடைய பொருட் களை இந்தியாவில் இறக்குமதி செய்யவே விரும்புவர்.

உலகத்தோடு இணைந்து செயற்படுவதுதான் உலகமயமாக்கம். உலக வங்கியிடம் அடகு வைப்பது என்று அர்த்தமல்ல. பொருளாதார வளர்ச்சியை 8 சதவீதமக உயர்ததுவதை விட வேறு வழியில்லை.

இவ்வாறு ப. சிதம்பரம் உலகமயமாக்கல் என்ற கொள்கை நடைமுறை இந்தியாவுக்கு அவசிய மானது. இது தவிர்க்க முடியாது என்ற ரீதியில் தனது கருத்தை முன்வைத்தார்.

ஆக இந்தியாவில் உலகமயமாக்கல் கொள்கை தடையின்றி அமல்படுத்த ஆட்சியாளர்கள் யாவரும் உறுதிபூண்டே உள்ளனர். ஆனால் இந்த உலக மயமாக்கல் கொள்கைக்கு எதிரான குரல்களும் பரவலாக உள்ளன. மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி அமைந்தது முதற்கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார நடவடிக்கைகள் நாட்டின் பொரு ளாதர வளர்ச்சியை மிக மோசமாக பாதித்துள்ளதென எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆனால் பாஜக தரப்போ அக்கருத்தில் துளியளவு உண்மையில்லையென மறுக்கிறது. ஏற்கெனவே காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பின்பற்றிய பொருளா தார நடவடிக்கையைத்தான் தாம் பின்பற்றுகிறோம் எனக் கூறுகின்றனர். இந்தக் கூற்றில் உண்மை இல்லாமலும் இல்லை.

ஆக மொத்தத்தில் இந்தியப் பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு காரணம் உலகளவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் வழியாக இயங்கத் தொடங்கியதுதான். உலக மயமாக்கல் புதிய தாராளவாதம் ஆகிய கருத்தாக்கங் களில் வழிகாட்டுதலின் கீழ் இந்திய அரசாங்கம் 1991ம் ஆண்டில் வகுத்த பொருளதாரக்கொள்கை, 1948 இல் வரையறுப்பட்ட பொருளாதாரக் கொள்கையிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகும்.

புதிய பொருளாதாரக் கொள்கையை அறிவித்த வுடன் இந்திய அரசாங்கம் பொருளதாரத்தை பன்னாட்டு மூலதன நிறுவனங்களுக்கு திறந்து விட்டுள்ளது. இதனால் பெருமளவில் தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை அனுமதித்துள்ளது.

1991ம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட பொருளாதாரத் சீர்திருத்தங்களே தாராளமயமாக்கம், கட்டமைப்புச் சீரமைப்பு, தனியார் மயமாக்க்ல, உலகமயமாக்கல் என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றன.

இந்தியா இவ்வாறு பின்பற்றத் தொடங்கியுள்ள பொருளாதாரச் சீர்திருத்தங்களின் அடிப்படையில் தான் சிதம்பரம் போன்றோர் உலகமயமாக்கலால் இந்தியப் பொருளாதாரம் கூடுதல் வளர்ச்சியடையும் என கூறுகின்றனர்.

இந்தப் பின்னணியில்தான் மத்திய தொழில் வர்த்தகத்துறை அமைச்சர் முரசொலிமாறன் கடந்த மாதம் புதிய ஏற்றுமதி - இறக்குமதி கொள்கையை அறிவித்துள்ளார். இதன்படி வேளாண்சார் ஏற்று மதிக்கு போக்குவரத்து மானியம்; குடிசைத்தொழில் கைவினைத் தொழிலுக்கு தனிக்கவனம்; சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இந்திய வங்கிகளின் அயல்நாட்டுக் கிளைகளைத் திறக்க அனுமதி; ஹார்டுவேர் தொழிலுக்கும் சலுகைகள், ஏற்றுமதி மூலம் கிடைத்த அன்னிய செலாவணி வருவாயை 360 நாள்கள் வரை வைத்துக் கொள்ள அனுமதி.

ஆக இறக்குமதியை ஊக்குவிக்க முன்னர் அறிவிக்கப்பட்ட சலுகைகளைப் போல ஏற்றுமதிக்கு இப்போது அனைத்து விதச் சலுகைகளையும் வழங்குகிறது இப்புதிய கொள்கை.

எந்தப் புதிய கொள்கையிலும் 1991க்கு பின்னரான பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேலும் மேலும் தங்குதடையின்றி அமல்படுத்துவதற்கான பாதைக ளாகவே உள்ளன.

காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எந்தக் கட்சியும் புதிய பொருளாதாரக் கொள்கையை அமல்படுத்தக் கூடியவர்களாகவே உள்ளனர். இதனால்தான் உலகமயமாக்கல் 'தவிர்க்கமுடியாததுதான்' என்ற கருத்தில் மன்மோகன்சிங், சிதம்பரம், மாறன், யஷ்வந் சின்கா போன்றோர் உள்ளனர்.

இவர்கள் எதிரும் புதிருமான கட்சிகளில் அங்கம் வகித்தாலும் 'புதிய பொருளாதாரச் கொள்கை' யின் கருத்துநிலையையும் அதன் அரசியலையும் ஏற்கக் கூடியவர்கள். அதனையே நடைமுறைப்படுத்த விரும்புபவர்கள்.

1992-93 ஆம் ஆண்டிற்குப் பிறகு பொருளாதார வளர்ச்சி விகிதம் ஆண்டொன்றுக்குச் சராசரியாக 7% ஆக இருந்தது. இந்த வளர்ச்சியும்கூட பொருள் தயாரிப்பு (manufacturing) துறையிலும், சேவை துறையிலும் (service sector) வங்கிகள் காப்பீட்டுத் துறை, தகவல் தொடர்பு, தொலைக்காட்சி, சுற்றுலா, விளம்பரம்) தான் இருந்தது.

1990-91 இல் 12% ஆக இருந்த பணவீக்க விகிதம் பின்னர் ஒற்றைப்படை இலக்கமாக குறைந்தது. நிதிப்பற்றாக்குறை (Fiscal Deficit) நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மதிப்பில் 8.3% ஆக இருந்தது. அது பின்னர் 5% ஆகக் குறைந்தது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (current account deficit) 1990-91 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 3.2% ஆக இருந்தது. 1997-98இல் அது 1.7% ஆகக் குறைந்தது.

புதிய பொருளாதாரக் கொள்கையின் ஆதரவாளர் கள் இவற்றைத் தமது பெரும் சாதனைகள் எனக்கூறி வருகின்றனர். ஆனால் இவற்றுக்கு பெரும் விலைகள் கொடுத்தே இவை சாதிக்கப்பட்டன என்பதை அவர்கள் சொல்வதில்லை. உள்நாட்டு மூலதன உருவாக்கம் வெகுவாகக் குறைக்கப்பட்டது. வெளிநாட்டுக் கடன்கள் பொருளாதாரச் சீர்த்திருத்தங்களுக்கு முன்பு இருந்த அதே அளவிலேயே இருந்தன. (அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 29%).

இலாபகரமாக இயங்கிய சில பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியார் துறைக்கு விற்பனை செய்தது. கல்வி, சுகாதாரம், உடல்நலம் போன்ற நலத்திட்டங்களுக்கான அரசாங்கநிதி ஒதுக்கீடுகளைக் குறைத்தது. வேலைவாய்ப்புகளை உருவாக்கும் சில திட்டங்களை (அவை உற்பத்தி சாரதவை என) அரசாங்கம் கைவிட்டது. ஆக அரசாங்கம் இவற்றினாலேயே நிதிப்பற்றாக் குறையை பெருமளவு ஈடுசெய்ய முடிந்தது.

இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தங்கள் இப்போது பத்தாண்டு நிறைதலைக் கண்டுள்ளது. 2000-2001ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி விகிதம் 6% ஆகவும், வேளாண் உற்பத்தி 3.5% ஆகவும் தொழில் உற்பத்தி 5.7% ஆகவும் குறையும் என்றும் ஒப்புக் கொள்ளப் பட்டது.

உலகிலேயே மிக அதிகக் கடன்கள் வாங்கியுள்ள நாடுகளில் இந்தியா 9வது இடம். அதாவது 2000-2001 ஆம் ஆண்டில் இந்தியாவின் குறுகிய கால நீண்டகாலக் கடன்களில் அளவு 97.86 பில்லியன் அமெரிக்க டாலராகும் (அதாவது சுமார் 4,40,400 கோடி இந்திய ரூபாயாகும்)

தாரளமயமாக்கலால் உலக வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு அதிகரிக்கும் என்றுதான் சொல்லப்பட்டு வந்தது. ஆனால் இந்தியாவின் ஏற்றுமதி 1997-98 இருந்ததுடன் ஒப்பிடுகையில் 2000-2001 இல் குறையும் என்றுதான் 2000-2001 பொருளாதார ஆய்வு சுட்டிக் காட்டுகிறது. 23.3.2001 அன்று நாடாளுமன்றத்தில் இந்த ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

கடந்த 10 ஆண்டு காலமாக இந்திய அரசாங்கமும் மாநில அரசாங்கங்களும் கடைப்பிடித்து வந்த பொருளாதாரக் கொள்கைகள் வரும் நாட்களில் மக்களுக்கு பாதகமாக மென்மேலும் ஈவிரக்க மற்றவையாக இருக்கும் என்பதை இந்த அறிக்கை யின் ஆலோசனைகள் கொண்டிருந்தது.

புதிய பொருளாதாரக் கொள்கையை முனைப்பாகக் கடைப்பிடிக்கும் மாநிலங்களாக ஆந்திரம், குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரம், தமிழ்நாடு உள்ளன. இவற்றுக்கு அடுத்தபடியாக ஹரியானா, ஒரிஸ்ஸா, மேற்குவங்கம் ஆகியன உள்ளன.

இந்தியா முழுவதிலும் ஏற்றுமதிக்காக பொருட் களை தயாரிக்கும் ஆலைகளும் தொழிற்கூடங்களும் 3281 உள்ளன. (1998ம் மதிப்பு) இதில் 2228 (68%) மேற்சொன்ன 5 மாநிலங்களில் உள்ளன. 1998இல் ஒப்புதலளிக்கப்பட்ட முதலீட்டுத் திட்டங்களில் 34% தென்மாநிலங்களில் உள்ளன. வெளிநாட்டு, உள்நாட்டு பெரு முதலாளிகளின் மூலதனத்தை ஈர்ப்பதில் தமிழ்நாடு முனைப்பாக உள்ளது. 1991 முதல் 1997 ஜனவரி வரையிலான காலகட்டத்தில் வெளிநாட்டு மூலதனத்தை ஈர்ப்பதில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தை எட்டியது.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய மக்களின் உழைப்பாலும் அவர்கள் செலுத்தும் வரிப்பணத்தாலும் உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் மிக வேகமாகத் தனியார் துறையிடம் விற்கப்படுகின்றன. மிக அண்மையில் இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான பாரத் அலுமினியக் கார்ப்பரேஷனின் ரூ. 5000 கோடி மதிப்புள்ள பங்குகள் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு வெறும் ரூ. 500 கோடிக்கு விற்கப்பட்டுள்ளன. மிக இலாபகரமாக இயங்கி வந்ததுதான் இந்தக் கார்ப்பரேஷன்.

ஸ்டெர்லைட் நிறுவனம் தூத்துக்குடியில் வைத் துள்ள ஆலை, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதில் உலகப்புகழ் பெற்றதாகும். கனிச்சுரங்கங்கள், மின்உற்பத்தி ஆற்றல்கள், சேலம் உருக்காலை, இன்சூரன்ஸ், வங்கிகள் முதலியவற்றிலுள்ள அரசாங்கப் பங்குகளும் தனியார் துறைக்கு மிக மலிவாக விற்கப்படுகின்றன. இந்த விற்பனை பல்வேறு தொழிற்துறைகளுக்கும் விரிவு பெற்று வருகின்றன.

உலக வர்த்தக நிறுவனத்தின் கட்டளைக்கிணைங்க நூற்றுக்கணக்கான உற்பத்திப் பொருட்களைத் தடையின்றியும் வரம்பின்றியும் இறக்குமதி செய்ய அனுமதி தரப்படுகிறது. வளமிக்க நாடுகளுக்கு இந்தியா தனது பொருட்களை ஏற்றுமதி செய்து உலகச் சந்தையில் வலுமிக்க நாடாக மாறும் என ஆட்சியாளர்கள் நம்புகின்றனர்.

ஆனால் பிரிட்டிஷ் காலனியாதிக்கக் காலத்தில் இருந்ததைப் போலவே இப்போதும் இந்தியாவி லிருந்து வளர்ச்சி பெற்ற நாடுகளுக்கு அனுப்புவதற்கு தொழில்நுட்ப இயந்திரங்களோ தொழில்நுட்ப உத்திகளோ இல்லை. மாறாக தோல், பருத்தி, அரிசி, கோதுமை, மீன் போன்ற உணவுப் பொருட்கள், பூவகைகள், இரும்பு போன்றவைகள்தான் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவாக மூன்றாம் உலக நாடுகளே ஒன்றேடொன்று உலகச் சந்தையில் போட்டி போட்டுக் கொள்ளும்நிலை மேலும் ஆழப்பட்டுள்ளது.

நலிவடைந்த ஆலைகளை மூடுதல் பொதுத்துறைப் பங்குகளைத் தனியார்துறைக்கு விற்பனை செய்தல், பொதுத்துறைக்கு மட்டுமே சிறப்புரிமையாக இருந்த பல தொழில்களைத் தனியார்துறை நடத்த அனுமதித்தல், அரசாங்க செலவுகளைக் குறைத்தல் என்ற பெயரால் பல லட்சக்கணக்கான தொழிலாளர் களும், நடுத்தரவர்க்க ஊழியர்களும் வீட்டுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

மத்திய அரசாங்கம் அமைத்த 5வது ஊதியக்குழு 1997ஆம் ஆண்டிலேயே 3,50,000 மத்திய அரசாங்க வேலையிடங்களை நீக்குமாறு பரிந்துரைத்தது. இவற்றில் பெரும்பாலானவை முந்திய ஆண்டுகளில் நிரப்பப்படாமல் காலியாக வைக்கப்பட்டிருந்தவை ஆகும்.

இந்திய அரசாங்கத்தின் சமீபகால செயற்பாடுகள் 'இரண்டாம்கட்ட பொருளாதார சீர்திருத்தம்' என்று அழைக்கும் வகையில் வேகப்படுத்தப்பட்டு வருகிறது. நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை மட்டுமே தனியார்மயமாக்கும் என்ற நிலையில் இருந்து இலாபத்தில் இயங்கும் நிறுவனங்களையும் தனியாரிடம் விற்கும் போக்கு உருவாகிவிட்டது.

''நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை யார் வாங்குவார்கள்? இலாபத்தில் இயங்கும் போது நல்லவிலைக்கு விற்க முடியும்'' என்று நியாயம் பேசக்கூடியளவிற்கு இந்திய அரசாங்கம் வெளிப் படையாக இயங்கத் தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டுகளில் தனியார்மயத்தை ஆதரித்த நடுத்தர வர்க்கத்தினர்கூட இரண்டாம் கட்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையைக் கண்டு அச்ச முற்றுள்ளனர். தமக்கு ஏற்படக் கூடிய ஆபத்தின் பாரதூரத்தை உணர்ந்து போராட்டத்தில் குதிக்கத் தொடங்கியுள்ளனர்.

தமிழகத்தில் இரண்டு மூன்று மாதங்களாக தனியார்மயமாக்கலுக்கு எதிராக போராட்டம் முனைப்படைந்து வருகிறது. பெரும்பாலான தொழிலாளர்களுக்கு இதனால் ஆபத்து ஏற்படப்போகிறது. நெய்வேலி நிலக்கரி நிறுவனத் தொழிலாளர்கள் போராட்டம் இதற்கு நல்ல உதாரணம்.

உலகமயமாதல் என்பதனை தொடர்நிகழ்வாக புரிந்து கொள்ள வேண்டும். இதனால் ஏற்படக் கூடிய விளைவுகளையும் புரிந்து கொண்டு உலகமயமாதலை எதிர்கொள்ள வேண்டும். பெரும் ஏற்றத்தாழ்வுகள் மிக்க ஒரு நாட்டில் உலகமயமாதல் தனியார் மயமாக்கல் எத்தகைய நன்மைகளை ஏற்படுத்தும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பற்றிய விரிவான உரையாடல் விவாதங்கள் வேண்டும்.

******


புதிய பொருளாதாரக் கொள்கையின் முக்கிய கூறுகள்

1. தொழில்களுக்கான உரிமம் வழங்கும் கொள்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்:
சிறுதொழில்கள், நிலக்கரி, சர்க்கரை போன்ற 18 முக்கிய தொழில்கள் தவிர மற்ற எல்லா தொழில்களுக்குமான உரிமம் வழங்கும் நடைமுறை ஒழித்து கட்டப்பட்டுள்ளது. 1998 ஆகஸ்ட் மாதம் பாஜக அரசாங்கம்தான் சர்க்கரைத் தொழிலுக்கான உரிமம் வழங்கும் நடைமுறையை ரத்து செய்தது.

2. வெளிநாட்டு முதலீடுகள்:
மிகுந்த முன்னுரிமை கொடுக்கப்படும் 34 தொழில்களில் வெளிநாட்டவரின் பங்குகள் 51% வரை இருக்க எளிதில் ஒப்புதல் தரப்படுகிறது. அந்நிய செலாவணி முறைப்படுத்துதல் சட்டவிதிகள் திருத்தப்பட்டுள்ளன.

3. வெளிநாட்டுத் தொழில்நுட்ப ஒப்பந்தங்கள்:
வெளிநாட்டு தொழில் நுட்ப ஒப்பந்தங்களுக்கான அனுமதி கேட்டாலே கிடைத்துவிடும். வெளிநாட்டவரின் தொழில்நுட்ப சேவைகளை அமர்த்திக் கொள்ள அனுமதி ஏதும் தேவையில்லை.

4. பொதுத்துறைக் கொள்கை:
சில தொழில்களை பொதுத்துறைக்கு மட்டுமே ஒதுக்குவது என்ற கொள்கை நீடித்த போதிலும் பொதுத்துறைக்கு மட்டுமே சிறப்பாக உள்ளவற்றைத் தனியார் துறைக்கு திறந்துவிடுவதற்குத் தடை ஏதும் இல்லை.

5. ஏகபோக மூலதனம்:
தொழில்களிலும், வர்த்தகத்திலும் ஏகபோக மூலதனம் கட்டுப்பாடு செலுத்துவதைத் தவிர்க்கும் சட்டம் திருத்தப்பட்டுள்ளது.

6. சிறு மற்றும் குறுந்தொழில் முனைப்புகள்:
குறுந்தொழில் முதலிடுகள் வரம்புகள் ரூ. 2 லட்சத்திலிருந்து ரு.5 லட்சமாக உயர்ததப்பட்டுள்ளது.

7. சிறு மற்றும் குறுந்தொழில்கள் தொடர்பான சேவைகள்:
சிறு தொழில்கள் தொடர்பான பல்வேறு வகை சேவைகள் வகைப்படுத்துவதில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பயோ கெமிக்கல், மீன், இறால் குஞ்சுகள் பொறிப்பு, திசு வளர்ப்பு முதலியன சிறுதொழில்கள் பட்டியலில் இருந்து அகற்றப்பட்டுள்ளன.

தெ.மதுசூதனன்

© TamilOnline.com