சிங்காரவேலு (1860 - 1946)
இந்தியவிடுதலைப் போராட்ட வரலாற்றிலும் தமிழ்நாட்டில் சாதி அடிப்படையில் நிலவி வந்த சமுதாய ஏற்றத்தாழ்வுகளின் விளைவாக எழுந்த ஒரு இயக்கத்தின் வரலாற்றிலும், தொழிலாளர் இயக்கத்திலும் சிங்காரவேலுவின் வாழ்வும் சிந்தனையும் செயற்பாடும் இரண்டறக் கலந்து விட்டவை.

தமிழக வராற்றில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஏற்பட்ட சமூக மறுமலர்ச்சிக்கும், சமூகமாற்றத்துக்கும் அறிவுபூர்வமான சிந்தனைத் தளத்தை அமைத்து செயற்பாட்டுத் திறன் மிக்க சூழல் உருவாகி வருவதற்கு காரணமான சக்திகளுள் சிங்காரவேலுவுக்கு பிரதான இடமுண்டு. ஒடுக்கப்பட்ட சுரண்டப்பட்ட மக்கள் சார்ந்து வெளிப்பட்ட குரல் இவரு டையது.

சென்னையில் நடுத்தர மீனவர் குடும்பத்தில் 1860 பிப் 18ல் சிங்காரவேலு பிறந்தார். கடற்கரை அருகிலுள்ள 'குப்பங்கள்' எனப்படும் குடியிருப்பு குடிசைகளின் நடுவே சிங்கார வேலுவின் வாழ்க்கையும் தொடங்கியது. மீனவர் சமுதாயத்தில் பிறந்த ஒருவன் ஆரம்பக்கல்வி பெறுவதே அக்காலத்தில் குறிப்பிடத்தக்க ஒரு செயலாக இருந்தது.

சென்னை திருவல்லிக்கேணியிலுள்ள இந்து உயர்நிலைப்பள்ளியில் தம் பள்ளிப்படிப்பையும் 1890 ஆம் ஆண்டுகளில் சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பையும் சிங்காரவேலு முடித்தார். பிறகு அவர் சட்டப்படிப்புப் படித்து பட்டமும் பெற்றார். பயிற்சிகாலம் முடிந்தபின், சென்னை உயர்நீதிமன்றத்தில் உயர்நீதிமன்ற வழக்கறிஞராக தம்மை 1907ல் பதிவு செய்து கொண்டார். மேலும் இக்காலங்களில் பல்வேறு விஷயங்கள் குறித்து படித்தார். சிந்தித்தார். தான் சிந்தித்தவைகளை சிறுசிறு பிரசுரங் களாகவும் வெளியிட்டுள்ளார்.

1899 லேயே பெளத்தம் பற்றியும் புத்தர் பற்றியும் அதிகம் தெரிந்து வைத்திருந்தார். 1899 மே 28 தனது வீட்டில் புத்தபிரான் மறைவின் 2443ம் ஆண்டுவிழாவை கொண்டாடி யிருக்கிறார். இந்த நிகழ்ச்சியை ஸ்வாமி இராமகிருஷ்ணானந்தா துவக்கி வைத்து பேசுகின்றார். மேலும் சிங்காரவேலு பல்வேறு அறிஞர்களின் நூல்களில் இருந்து மேற கோள்கள் காட்டிப் பேசினார். தான் எழுதி தமிழில் அச்சிட்டு வெளியிட்டுள்ள சிறுபிரசுரங் களில் இருந்தும் அதிகமான செய்திகளை எடுத்துப் பேசினார். இக்கூட்டத்தில் அயோத்தி தாசப் பண்டிதர், பேராசிரியர் லக்ஷ்மி நரசு உள்ளிட்டோரும் கலந்து கொண்டு பேசியுள் ளனர்.

வர்ணாஸ்ரமத்தை எதிர்த்து புத்தர் நினைவு நாள் அனுஷ்டிப்போடுதான் இவரது பொதுவாழ்வு துவக்கம் பெறத் தொடங்கியது. ஜரோப்பிய சிந்தனையாளர் படைப்புக்களுடன் அதிக மாகவே ஈடுபாடு கொண்டிருக்கிறார். 1902 ஆம் ஆண்டிலேயே இங்கிலாந்து சென்றிருக்கிறார். லண்டனில் அவர் இருந்த போது உலக பெளத்த மாநாட்டிலும் கலந்து கொண்டிருக்கிறார். அவர் இந்தியாவிற்கு திரும்பியதும் மகாபோதி சங்கக் கூட்டங்கள் அவரது வீட்டில் தொடர்ந்து நடைபெற்றிருக்கின்றன.

சிறந்த வழக்கறிஞராகத் திகழ்ந்தமையால் பல்வேறு மக்களுடன் தொடர்பு கொண்ட வராகவே இருந்தார். சமூக நலப்பணிகளில் அதிக ஈடுபாடும் அக்கறையும் கொண்டவராகவே இருந்துள்ளார். இதனால் அக்காலத்தில் சமூக மறுமலர்ச்சிச் சிந்தனையாளர்களாகவும் செயற் பாட்டாளர்களாகவும் இருந்த சுப்பிரமணிய பாரதியார், தொழிற்சங்கம் பணியாற்றிய வி. சக்கரைச் செட்டியார், வ.உ. சிதம்பரம்பிள்ளை, பெரியார், திருவிக என பலதரப்பட்டவர் களுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டி ருந்தார்.

தேசிய இயக்கத்திலும், சுயமரியாதை இயக்கத்திலும், கம்யூனிஸ்டு இயக்கத்திலும் சிங்காரவேலு நெருங்கிய தொடர்புடைய வராகவே இருந்துள்ளார். ஏற்றத்தாழ்வற்ற சமத்துவ சமுதாயம் ஈடேற தொடர்ந்து பணியாற்றத் தொடங்கினார்.

தொழிலாளர்களின் நல்வாழ்வுக்காகவும், அவர்களது எழுச்சிமிகு போராட்டங்களிலும் தன்னையும் இணைத்துக் கொண்டார். 1914ல் வெடித்த முதல் ஏகாதிபத்திய உலகப் போரும், போர்க்காலத்தில் மேலும் மோசமாகி வந்த மக்கள் பிரச்சனைகளும் சிங்காரவேலுவை இயல்பாகவே பாதித்தன. இதனால் சமூகநலப் பணிகளில் கலந்து கொள்வதை தீவிரப் படுத்தினார். தொழிலாளி வர்க்கத்தின் வாழ்க்கை நிலைமையை உயத்தப் பாடுபட முன்வந்தார்.

தீவிர படிப்பாளியாகவும் சிந்தனையாளராகவும் இருந்தமையால் காங்கிரஸ் சுயமரியாதை இயக்கங்களில் ஏற்பட்ட முரண்பாடுகளையும் போதமைகளையும் புரிந்து வைத்திருந்தார். சாதீய அடக்குமுறைகளுக்கும், தீண்டாமைக் கும் எதிரான போராட்டத்தை வலுப்படுத்து வதற்குரிய சிந்தனைகளை வெளிப்படையாகவே முன்வைத்து வந்தார். காங்கிரஸ் கொள்கையின் போதமை மார்க்சிய சிந்தனையின்பால் சிங்காரவேலுவை அதிகம் ஈர்த்தது.

சிங்காரவேலு பின்தங்கிய சமூகம் ஒன்றில் பிறந்தமையால், பின்தங்கிய அடக்கப்பட்ட மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் கலந்து கொள்வது அவரது தார்மீக கடமை யாயிற்று. இதனால் தன் கருத்துக்களை முறைப்படுத்தி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உண்மையான விடுதலையை அளிக்கும் கோரிக்கைகளை முன்வைக்க முடிந்தது.

இந்திய அளவிலும் வெளிநாட்டு அளவிலும் இவரது ஒத்தகருத்துடன் இயங்கிய பல்வேறு நபர்களுடன் தொடர்பு கொண்டவராகவும் இருந்துள்ளார். எஸ்.ஏ. டாங்கே, எம்.என். ராய் போன்றோருடனான உறவு குறிப்பிடத்தக்கது.

1926களுக்குப் பிறகு தொழிலாளிவர்க்கப் போராட்டங்களில் நேரடியாகவும் இடை விடாமல் சுறுசுறுப்புடன் கலந்து கொண்டிருந் தார். தென்னிந்திய ரயில்வே தொழிலாளர்களை ஒன்றுபடுத்தி 1928ல் நிகழ்ந்த வரலாற்றுப் புகழ்மிக்க வேலைநிறுத்தத்திற்கு தலைமை தாங்கினார். அரசின் பழிவாங்கலுக்கு ஆளாகி பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். 1930இல் சிறையில் இருந்து விடுதலையானார்.

சிறை வாழ்க்கைக்குப் பின்னர் அவர் ஏராளமாக எழுதத் தொடங்கினார். பொருளாதாரத்துவமும் அரசியல், சமூக சீர்த்திருத்தம் ஈறாக எல்லா வற்றையும் பற்றியும் நிறையவே எழுதினார். சாதிமத சமூகக் கொடுமைகளுக்கு எதிரான சமத்துவக் கருத்துக்களை தீவிரமாகவே பிரச்சாரப்படுத்தினார். சுயமரியாதை இயக்கம் வெளியிட்ட 'குடிஅரசு' 'புரட்சி' வார எடுகளில் நிறைய கட்டுரைகள் எழுதினார்.

முற்போக்கான, சமூகச்சீர்த்திருத்தக் கருத்து களிலும், புரட்சிகரமான கருத்துகளிலும் ஈடுபாடு கொண்டவர்களுக்கு சிங்காரவேலுவின் எழுத்துக்கள் பெரும் ஆதர்ஷமாக இருந்தன. இத்தகையவர்களை ஓர் குடைக்குக் கீழ் கொண்டுவரும் திறனையும் இவரது எழுத்துக்கள் சாத்தியப்படுத்தின.

'புதுஉலகம்' என்ற தமிழ் மாத இதழை 1935ல் வெளிக்கொணரவும் காரணமாக இருந்தார். அக்காலகட்டத்தில் வேகடைந்து வந்த கம்யூனிசக் கருத்துகளின் பிரச்சாரகராகவும் திகழ்ந்துள்ளார். புதுஉலகம் எனும் இதழ் கம்யூனிசக் கருத்துக்களை பரப்புவதில் தீவிரம் காட்டியது. இந்த இதழில் பல்வேறு கட்டுரை களை எழுதி வந்தார்.

சிங்காரவேலுக்கு தமிழ்மொழி மட்டுமல்ல ஆங்கிலம், ஹிந்தி, உருது, ஜெர்மன், பிரெஞ்சு ஆகிய மொழிகளும் அவருக்குத் தெரியும். அக்காலகட்டத்தில் உருவான சமூக இயக்கங் களில் இவர் கலந்து கொள்வதை பலரும் விரும்பினர்.

பெரியார், திருவிக உள்ளிட்ட தலைவர்கள் இவர் மீது அதிக அன்பும் மரியாதையும் வைத்திருந்தவர்கள். இவரது சிந்தனையால் செயலால் தமிழகம் பெரும் மாறுதல் பெறவேண்டுமென விரும்பியவர்கள்.

இரண்டாவது போர்க்காலத்தில் (1939-1945) அவரது முதுமையும் நோயுமே கம்யூனிச இயக்கத்தில் அவர் தீவிர பங்கு கொள்வதை தடை செய்தன. அவருடைய வாழ்நாள் முழுவதிலும் வக்கீல் தொழிலில் சிறந்து விளங்கிய சி.பி. ராமசாமிஐயர், எஸ். சீனிவாச அய்யங்கார் போன்றவர்களாலும், காங்கிரசில் அவருடன் பணியாற்றிய திருவிக, சர்க்கரைச் செட்டியார், ராஜாஜி, சத்தியமூர்த்தி போன்றவர் களாலும்கூட மதிக்கப்பட்டார். அக்காலகட்ட புகழ்பெற்ற பத்திரிகையாளரான ஹிந்து ஆசிரியர் கஸ்தூரிரங்க அய்யங்கார் போன்றவர் கள்கூட இவர் மீது அன்பும் மரியாதையும் வைத்திருந்தனர்.

1919-20களிலேயே கம்யூனிஸ்டாக வெளிப்பட துவங்கிவிட்ட சிங்காரவேலு சமூகச்சீர்த்திருத்த மறுமலர்ச்சிக்கு உயர்ந்த அடித்தளம் அமைத்துக் கொடுத்துள்ளார். கம்யூனிச மரபு இயக்கச் செயற்பாடுகள் ஆழமாக வேரூன்றி வளர்வதற்கு முக்கியமான காரணமாக இருந்துள்ளார். இருபதாம் நூற்றாண்டின் தமிழக சிந்தனை மரபில் சிங்காரவேலுக்கு உரிய இடம் சிறப்பானது. அது ஆழமானது, அகலமானது. பல்வேறு முன்னோடிச் செயற்பாடுகளுக்கும் அவர் ஓர் உதாரண மனிதராகவே இருந்துள்ளார்.

சிங்காரவேலு பிப் 11, 1946ல் மறைந்தார். ஆனால் அவர் வழிவந்த சிந்தனையும் செயற் பாடும் அவருக்கு பின்னரான தமிழக சமூக அசைவியக்கத்தில் பெரும் தாக்கம் செலுத்தி யதாகவே இருந்துள்ளது.

ஆதி

© TamilOnline.com