எழில் அரசி 'டாஹோ'
அழகு அன்னை அன்றொரு நாள் ஆனந்த நடம் புரிய, கழல் கழன்ற சிறு துகள்கள் சிதறித்தெறித்திடவே, பொழில்களாய், மலைகளாய் புவியெங்கும் படிந்தவற்றுள் எழிலரசி 'டாஹோ'வைக் கண்ணுற்றேன்; கருத்தழிந்தேன் !

வெண்நீரில் குளித்தாற் போல் வெண்பனி முகடுகளும், விண் நீரில் நீந்துகின்ற வெள்ளிமேக ஓடங்களும், வெண்ணெய் பணியாரத்தின் துண்டமன்ன பிறைமதியும் என்னையுமே எழுதத்தூண்ட எடுத்திட்டேன் ஏட்டினையே!

அயரா உழைப்பின் பயன்போல நீண்டிருக்கும்
'ஸியெரா'வின் தொடருக்கு சிகரமாய் விளங்கி நின்று
உயராமல் உயர்ந்து விட்ட உன்னழகை 'டாஹோ' எனும்
பெயராலே மாந்தரெலாம் பெருமை படப்பேசுகின்றார் !
கொட்டிக்குவித்திருக்கும் பனிமணற்குவையதகும். வானை
முட்டி முத்தமிடும் ஊசிஇலை மரத்தழகும் - நீலப்
பட்டினையே விரித்ததன்ன 'டாஹோ' வின் நீரழகும்
மட்டிலா மகிழ்ச்சி தரும் பேரழகின் பிரதியழகோ !
தெள்ளு தமிழ்ப் பாட்டரசன் பாரதி சொன்னதே போல
கொள்ளையழகு வெள்ளிமலை கோலமிட்டு என்னுள்ளே
பிள்ளைப் பிராயத்திலே பீரிட்டுடெழும் ஆசைகளாய்
துள்ளி விளையடிடவே தூண்டுதம்மா இவ்வேளை !
பருவத்துக்குமரிகளும், பச்சிளம் பிள்ளைகளும் -தம்
உருவத்தின் பேதம் நீங்கி, பனியிலே சருக்கல் கண்டு
அறுபத்தில் ஆடி அயர்ந்து விட்ட என்னுள்ளம்
இருபத்துக்கிறங்கி வந்து இவர்களோடு ஆடுதம்மா !
வானத்தில் தொட்டில் கட்டி, வாட்டமற ஏற்றிச்சென்று,
மோனத்தில் தாலாட்டும் 'கோண்டோலா' சவாரியும்,
சீனத்துப்பட்டனன பனித்தரையில் ஸ்கேட்டிங்கும்
காணத்துடிக்கும் இதயம்; கண்டாலோ களி கொள்ளும்
பனிமலையின் பேரழகை பார்வையிலே தேக்கிவைத்து,
பாட்டெழுதப் புறப்பட்டேன்; பாதியிலே நிறுத்திவிட்டேன்;
நனிசுவைக் கவிஞரெல்லாம் நயம்படவே பாடியதை
ஏட்டிலே வடித்தெடுக்க என்னிடமோ வார்த்தை இல்லை

மடிப்பாக்கம் அலுமேலு ராமமூர்த்தி

© TamilOnline.com