'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று ஒற்றுமை பாடிய நம் பாரதம் இன்று மதத்தின் பெயரால் மதம் பிடித்தோரின் கையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. அண்ணல் காந்தியடிகள் பிறந்த குஜராத், நிலம் நடுங்கி உயிர்களை இழந்து தவித்து எழுந்த மறு கணமே மக்களைப் பறிகொடுத்து ரத்தபூமியாய் மாறி நிற்கிறது” என்று மனம் நெகிழ்ந்து பேசிய அறிவிப் பாளருக்குப் பின் இந்து, கிறித்தவ, இஸ்லாமிய இறை வணக்கப் பாடல்கள் தொடர, அரங்கத்தில் அமைதி; பின் சிறு சலசலப்பு. இஸ்லாமியப் பாடலில் “கருப்பில்லே வெளுப்புமில்லே” என்று மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வரிகளைக் கேட்டவுடன் மெய் சிலிர்த்த பார்வையாளர்களின் கைதட்டல்களால் அரங்கம் அதிர, யாவரும் கேளிர் என்ற ஒற்றுமை உணர்வு “எல்லோரும் கொண்டாடு வோம்” என்று ஓங்கி நின்றது.
இது நடந்தது வேறெங்குமில்லை. லாஸ் ஆல் டோஸ் ·புட் ஹில்ஸ் கல்லூரி ஸ்மித்விக் அரங்கில் தான். ஏப்ரல் 28, ஞாயிறு மாலை சான் ·பிரான் சிஸ்கோ குடாப்பகுதித் தமிழர்கள் வேண்டுதலுக் காகப் பழனி மலை ஏறுவது போல நூறுபடி, ஆயிரம் படி ஏறி, அரங்கை நிரப்ப அவர்களை ஈர்த்தது எது?
அமெரிக்காவிலோ செப்டம்பர் 11 கொடுமை, பொருளாதாரத் தேக்கம், வேலை இழப்புகள். காந்தி பிறந்த மண்ணிலோ மத பயங்கரவாதிகளின் வெறியாட்டம். படிக்க வேண்டிய பிள்ளைகள் புதிய நூற்றாண்டிலும் பத்துப் பாத்திரம் தேய்த்துப் பிழைக்க வேண்டிய ஏழ்மைச் சுமை. மக்களைக் காக்க வேண்டிய அரசுகளின் கையாலாகாத்தனம். ஒளிமய மான எதிர்காலம் எங்கே என்று ஏங்கியிருந்தபோது, வாராது வந்த மாமணி போல் வந்தது எது?
வேறு எது? எல்லோர் வாழ்விலும் வசந்தம் வர வேண்டும் என்று வாழ்த்தி இந்தியா வளர்ச்சிச் சங்கம் (Association for India’s Development http://www.aidindia.org ) என்ற 'எய்ட்' அமைப்புடன் தில்லானா இசைக்குழு இணைந்து வழங்கிய ‘வாராயோ வசந்தமே!’ இசைவிழாவேதான்! தில்லானாவின் விசிறிகள் மட்டுமல்லாமல், கண்ணைக் கவரும் சுவரொட் டிகள், துடிதுடிப்பான வானொலி விளம்பரங் களால் ஈர்க்கப்பட்ட பலரும் ஆவலோடு இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.
தில்லானாவின் நிகழ்ச்சிகள் மக்களை மகிழ வைப்பது மட்டுமல்லாமல், தொண்டாற்றும் நல்ல அமைப்புகளுக்கு நிதி திரட்டிக் கொடுப்பதற்கும் பெயர் பெற்றவைகள். 'வாராயோ வசந்தமே!' நிகழ்ச்சியும் அதற்கு விதி விலக்கல்ல. பொருளா தார மந்தநிலையிலும், வாரிக்கொடுக்கும் வள்ளல்கள் தமிழர்கள் என்பதை நிறுவும் வகையில், இந்தியா வளர்ச்சிச் சங்கத்துக்கு ஏறத்தாழ 30,000 டாலர்கள் திரட்டிய இந்த நிகழ்ச்சி நம்பிக்கை துளிர்க்கும் வகையில் அமைந்திருந்தது! தன்முனைப்புப் பணி களால் இந்தியாவின் பல பகுதிகளில் சிற்றூர்களில் ஏழைகளுக்குத் தொண்டாற்ற எய்ட் அமைப் புக்கு இந்த நிதி மேலும் உதவும். நிதி வழங்கிய பரந்த நெஞ்சங்களுக்கு நம் பாராட்டுகள்.
தொழில்முறைக் கலைஞர்களையும் விஞ்சும் வகை யில் நுணுக்கமான நிகழ்ச்சிகளைத் தருவதில் வல்லவர்கள் என்று பெயர் வாங்கிய தில்லானா, சியாமளா குழுவின் தயாரிப்பு நேர்த்தியில் இம்முறை மேலும் ஒரு படி கூடினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
நிகழ்ச்சியை வழங்குவதிலும் புதுமை வேண்டும் என்று எண்ணினார்கள் ரேவதியும் அலெக்சும். தமிழ்த் திரைப்படங்களில் கதைக்கு நடுவே பாடல்களும் நகைச்சுவையும் பின்னிப் பிணைந்து சுவை கூட்டுவது போலவே, ஒரு காதல் கதையை நகைச்சுவை இழை யோட நாடகம் போல் அமைத்து பாடல்களை ஒன்றோடு ஒன்று பிணைத்து அறிமுகம் செய்தது நன்றாகவே இருந்தது.
'தில்லானா' என்ற பெயருக்குப் பொருத்தமாக சம்பத் குழுவினரின் நளினமான நடனமும், பிரவீன் குழுவினரின் துடிப்பான ஆட்டமும், பின்னணி அறிவிப் பாளர் ரேவதியின் வெடிப்பான குரலும் இசை நிகழ்ச்சியின் பரபரப்பான வேகமும், பல பார்வை யாளர்களையும் எழுந்து ஓடி ஆடிப்பாட வைத்தது!
சிறப்பு விருந்தினராக வந்திருந்த கருநாடக இசை விற்பன்னரும், இளையராஜா, ஏ. ஆர். ரகுமானின் குருவுமான டி. வி. கோபாலகிருஷ்ணன் அவர்களை மேடையேற்றிப் போற்றினார் ராகவன் மணியன். பின்னர், ஏசுதாசின் 'பிரம தவனம் வேண்டும்' என்ற மலையாளப் பாட்டைப்பாடி அவருக்குச் சமர்ப்பித்தார்.
கலாட்டாவான நிகழ்ச்சிக்கு நடுவே, மறைந்த ‘நடிகர் திலகம்’ சிவாஜியின் ஒப்பற்ற பல வேடங்களைத் திரையில் காட்டி நெகிழ்ச்சியான அஞ்சலி செய்தபோது அரங்கில் பலர் கண்கள் கலங்கின.
அரங்க மேற்பார்வை, கலை, ஒலி, ஒளி, இசைக் கலப்பு எல்லாமே சிறப்பாக அமைந்திருந்தது குறிப் பிடத்தக்கது. மொத்தத்தில் இசை என்ற இன்ப வெள்ளத்தில் நீந்துவதற்குப் படியேறி வந்த தமிழர் களை ஒரு கனவுலகத்திற்கு மூன்று மணிநேரம் போனதே தெரியாமல் அழைத்துச் சென்ற தில்லானா குழுவைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.
நிகழ்ச்சியைப் பார்க்க முடியாதவர்கள் கேட்டு மகிழ www.thillana.net என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
மணி. மு. மணிவண்ணன் |