நானும் எனது கணவரும், சன்னிவேலிலுள்ள எங்களது பெண்ணின் பிரசவத்திற்காக அங்காயப்பொடி, பிரசவலேகியம் இத்யாதி களுடன் சான்பிரான்ஸிஸ்கோவில் வந்திறங்கிய போது எங்களுக்கிருந்த கவலைகள் இரண்டு. ஒன்று பிரசவம் நல்லபடியாக நடக்க வேண்டும். இரண்டாவது வாஷிங்டனில் திருமணம் படித்திருக்கிறோம். அதுபோல சன்னிவேலில் சஷ்டியப்தபூர்த்தி செய்ய முடியுமா?! - எனக்கோ சாஸ்திர ரீதியாக நவக்கிரக ஹோமம், மிருத்ஞ்சய ஹோமம் எல்லாம் செய்து கொண்டாட வேண்டும் என்று ஆசை. அம்மா கொடுத்த ஒன்பது கஜப்புடவையையும், திருமாங்கல்யத்தையும் கையோடு கொண்டு வந்திருந்தேன். என் கணவரோ ''அமெரிக்கா விலெல்லாம் நீ நினச்சபடி கொண்டாட முடியாது. வேணும்னா உனக்காக கோயில்ல போய் அர்ச்சனை செய்து தாலி கட்டிக்கலாம். அடுத்தவருடம் சென்னையில் நீ ஆசைப்பட்ட மாதிரி செய்யலாம்'' என்றார்.
இதே யோசனையில் வீட்டிலிருந்த 'தென்றல்' பத்திரிகையைப் புரட்டியபோது, பார்த்த விளம்பரம், நம்பிக்கையை ஊட்டியது. ''ஓ இந்த ஊரிலே இவ்வளவு சாஸ்திரிகள் இருக்கிறார் களா? அதுவும் நம் வீட்டிற்கு அருகிலேயே பாலு சாஸ்திரிகள். விளம்பரத்தை இவரிடமும், பெண்ணிடமும் காண்பித்தேன்.
செல்போன், ஈமெயில் சகிதமாக ஹைடெக் சாஸ்திரிகள். காரில் வீட்டிற்கு வந்த சாஸ்திரி களை கேள்வி மேல் கேள்வி கேட்டுத் துளைத்து எடுத்தேன்.
''கார்பெட் போடப்பட்ட மரத்தளமாயிற்றே. ஹோமம் வளர்க்கமுடியுமா ஒன்றும் ஆபத்திருக் காதா? புகை ஏராளமாக வருமே - வீட்டிலே செய்யமுடியுமா'' என்றேன்.
நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க. ஊதுவத்திப் புகைகூட வராமல் நான் ஹோமம் செஞ்சு தர்றேன். அதுக்கெல்லாம் வழியிருக்கு... விரட்டி. சுள்ளி எல்லாம் இல்லாமல், ''அவன் சாமக்ரி'' என்ற பொடி பாக்கெட்டில் வருகிறது. அதை உபயோகப்படுத்தினால் புகையே இருக்காது. செங்கல்லை வைத்துவிட்டு, மேலே அலு மினியம் ·பாயில் டிரேயில் ஹோமம் செய்தால் கார்ப்பெட் ஒன்றும் ஆகாது என்று உத்தரவாதம் கொடுத்தார்.
பின்னர் ஹோமம் மற்றும் விழாவிற்கான லிஸ்ட் நீண்டு கொண்டே போனது. செம்பு, குடம், பருப்புத்தேங்காய், நவதான்யம், ரவிக்கைத் துண்டுகள்,வெற்றிலை, வாழையிலை மாலை என்று... மலைப்பாக இருந்தது - இவை யெல்லாம், அமெரிக்காவில் கிடைக்குமா - குறிப்பாக நவதான்யம். பருப்புதேங்காய் - வாழையிலை?
சன்னிவேலிலுள்ள இந்தியக்கடைகளுக் கெல்லாம் என் பெண்ணும் மாப்பிள்ளையும் படையெடுத்தார்கள். ஆச்சர்யம்!! நவதான்யத்தி லிருந்து தேவையானவை எல்லாம் அநேகமாக கிடைத்தது. வாழையிலைகூட. உறைய வைக்கப்பட்டு பஞ்சமில்லாமல் கிடைத்தது. பருப்பு தேங்காய் 'கோமளவிலாஸ்' செய்து தருகிறோம் என்றது. மாலைதான் மலையான பிரச்சனையாக இருந்தது. 'இன்டர்நெட்டில் வலைவிரித்து எனது பெண் ஒவ்வொரு கடையாக விசாரித்தாள். நான் ஆசைப்பட்டப்படி மாலை எங்கும் கிடைக்கும் என்று தோன்ற வில்லை. கடைசியில் எனது பெண் ஓரளவு திருப்திபடும்படியான ஒரு கடையைக் கண்டு பிடித்து அங்கு தனது கல்யாண போட்டோவை காட்டி மாலை செய்யக் கொடுத்தாள். காரனேஷன் பூக்களாலான மாலை. (ஆனாலும் நம்மூரைப் போல, ரோஜாப்பூவில் ஜரிகை வைத்துக் கட்டிய மாலை கிடைக்கவில்லையே என்று ஒரு சின்ன ஏக்கம்தான்.
மார்ச் இருபத்தைந்தாம்தேதி சஷ்டியப்த பூர்த்தி. இரண்டு நாள் முன்னரே டென்வரி லிருந்து எனது இரண்டாவது பெண்ணும் மாப்பிள்ளையும் வந்து விட்டார்கள்.
பாலிதீன் உறையைக் கீழே போட்டு - அதன்மேல் செங்கற்களையும், அலுமினியம் ·பாய்ல் ட்ரேயையும் வைத்து சுற்றி ஹோம சாமான்கள், பருப்புத் தேங்காய் குத்துவிளக்கு என்று எல்லாவற்றையும் எடுத்துவைத்து - வாசலிலும் -மற்றும் ஹோமம் நடக்கும் இடத்திலும்.இழைகோலமும் போட்டு பார்க்கும் போது நாம் இருப்பது சென்னையா, சன்னி வேலா என்று கிள்ளிப்பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது.
'கேசட்டில் மங்களவாத்தியம் முழங்க, பாலு சாஸ்திரிகளின் கணீர் குரலில் மந்திரங்கள் ஒலிக்க, ஹோமம் வளர்த்து. அபிஷேகம் - நலுங்கிடுதல் - பாலும் பழமும் மாங்கல்யதாரணம் என்று ஒவ்வொன்றாக நடந்தபோது - எனது கண்களில் ஆனந்தக்கண்ணீர்.
முத்தாய்ப்பாக கோமளவிலாஸிலிருந்து வரவழைக்கப்பட்ட சிறப்பு விருந்து பால்பாயசம், வடை, பச்சடி என்று (சும்மா சொல்லக்கூடாது பிரமாதமாகவே இருந்தது) வாழையிலையில் சாப்பாடு.
சஷ்டியப்த பூர்த்தி என்ன? கல்யாணமே ஜமாய்த்துவிடலாம் ஓய், இந்த அமெரிக் காவில்...
சாந்தா பத்மநாபன் |