மறக்க முடியாத தினம்
நல்லதொரு முறையில் துவக்கப்பட்ட ஒரு நிறுவனம் வளர்வதை மிக அருகில் இருந்து பார்ப்பது என்பது அரிதான விஷயம். ஆனால் இந்த விஷயத்தில் நான் அதிர்ஷ்டமானவன் என்றுதான் சொல்ல வேண்டும். ஏப்ரல் 20-ஆம் நாள். மாலை 4 மணி. தமிழர்களுக்கிடையே நியு யார்க் மாநிலத்தின் வாட்டர்வ்லிட் (Watervliet) நகரம் VFW அரங்கத்தில் நான்.

அரங்கத்திற்கு முன்புறம் 70 வயதுகளில் ஓய்வு பெற்ற அமெரிக்கப் படை வீரர்கள், சிகார் புகைத்துக் கொண்டிருந்தனர். பின் பகுதியில் ஒரு பெரிய அரங்கம். அங்குதான் நாதஸ்வர இசை வரவேற்க தமிழர்கள் கூடினர். நிகழ்ச்சி எப்படி இருக்கப் போகிறதோ? என் மனதிற்குள் சந்தேகத்துடன் ஒரு கேள்வி. இந்த சந்தேகம் தேவை இல்லாதது என்பது அன்றைய மாலையின் நிகழ்ச்சிகள் அரங்கேறிய போது எனக்கு புரிந்தது.

இந்த விழா தென்றல் திருவிழா. தென்றல்.காம் வழியாக அமெரிக்க இல்லங்களில் இரண்டு வருடங்கள் தவழ்ந்த வெற்றியினை கொண் டாடும் தென்றல் வானொலியின் இரண்டாம் ஆண்டு விழா. தென்றல் வானொலியின் தலைவி/தலைமை தொழில்நுட்ப அதிகாரியான சிவகாமி இராமையா மற்றும் இவரது கணவர் முணைவர் சொக்கலிங்கம் கருப்பையா நிகழ்ச்சிகளை அரங்கேற்ற, ஒன்று விடாமல் மிக அழகாகத் திட்டமிட்டிருந்தனர்.

நிகழ்ச்சிகள் 3 மணி நேரம் நடந்தன. மக்கள் அரங்கத்தில் கூடி சிற்றுண்டி உண்டு மகிழ்ந்து நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பாடல் களை விரும்பி கேட்க, மகிழ்ச்சி ஆரவாரத்தில் நிகழ்ச்சிகள் துவங்கின. வந்திருந்த மக்கள் வாழ்த்துக்கள் வழங்க, நடனம், கவியரங்கம் என்று நாம் ரசிக்கும் வண்ணம் நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. அமெரிக்க மண்ணில் ஆங்கிலத்தை தத்தெடுத்தாலும் தடுமாறாமல் தமிழில் பேச முடியுமா என்று சவால் விடுத்தார் சிவகாமி, மிக நேர்த்தியாக நடத்தப்பட்ட 'ஒரு நிமிடம்' நிகழ்ச்சியின் மூலம்.

மற்ற கலை நிகழ்ச்சிகள் போல் இருந்தாலும் தென்றல் திருவிழாவின் நிகழ்ச்சிகள், தொழில் நுட்பத்தின் உதவி கொண்டு நேரடியாக தென்றல் வானொலியின் மூலம் உலகெங்கும் ஒலிபரப்பபட்டது. ஆம்! பாரெங்கும் இருக்கும் ரசிகர்களும் பங்கெடுத் தால்தானே தென்றல் திருவிழா நிறைவுபெறும்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட தென்றல் வானொலியில் சனிக்கிழமை தவிர வாரத்தின் ஆறு நாட்களும் நேரடி நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. இறை இசை, கர்நாடக சங்கீதத்தை வழங்கும் நாதமழை, நேயர் விருப்பம், திரைப்பட பாடல்கள், அறிவுப் பசியாற்ற ‘உங்களுக்குத் தெரியுமா?’ மற்றும் இன்றைய தினம் நிகழ்ச்சிகள், கவியரங்கம், மகளிர் மட்டும், நலம் விசாரிக்கும் ‘நலம் தானா?’, சிறுவர்கள் பங்கேற்கும் கதை நேரம் என்று அனைத்து சாராரும் ரசிக்கும் வண்ணம் தென்றல் வானொலியில் நிகழ்ச்சிகள் அமைந்துள்ளன.

விழாவில் வாழ்த்து வழங்கிய திரு. க.பாலா அவர்கள் “சிவகாமி மற்றும் சொக்கலிங்கத்திற்கு 2 குழந்தைகள் - ஒன்று ஷ்ருதி, மற்றொன்று தென்றல்” என்று கூறினார். உண்மை, முற்றிலும் உண்மை!

பாஸ்கர் சோம்பள்ளி

© TamilOnline.com