ஜூன் 2002: வாசகர் கடிதம்
சகலகலா வல்லவர் T.V. கோபாலகிருஷ்ணன் அவர்கள் தன்னுடைய அனுபவங்களையும், எண்ணங் களையும் பகிர்ந்து கொள்ள விருப்பம் தெரிவித்து வாசகர்களின் கருத்திற்காகக் காத்திருப்பதாக எழுதியுள்ளார். கரும்புச் சாறு குடிக்க வாசகர்களுக்கு கசக்குமா என்ன?

சங்கீதத்தை ரசிக்கும்(?!) மக்களை ரசிப்பது என்பதும் நல்ல ரசனைதான் என்று நகைச்சுவையுடன் கீதா பென்னட் எழுதியிருப்பது ரசிக்கத்தக்கது. 'விஞ்ஞானிக்கு விளைந்த விபரீதத்தை' கண்டு பிடிக்கப் போகும் (கண்டு பிடிக்காமல் இருக்க விடுவாரா கதிரவன் எழில் மன்னன்?) துப்பறியும் சூர்யாவுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

'டயலாக்' என்ற பெயரில் வாசகர்களை அவ்வப் போது 'கிச்சுகிச்சு' மூட்டும் ஸ்ரீகோண்டு இம்மாதம் அழவிட்டுள்ளார். 'லட்சியமென்னும் பொய்' சிறுகதை யின் கருத்து நெஞ்சத்தை தொட்டது மட்டு மல்லாமல் சுட்டது. சபாஷ் ஜெயராமன்!

'குறுக்கெழுத்து புதிர்' என்னும் அசாதாரண விஷயத்தை விடா முயற்சியுடன் எழுதி வரும் வாஞ்சிநாதன் அவர்களுக்கு பாராட்டுகள். மாயா பஜார் பகுதியை பாராட்டி எழுதியுள்ள வாசக நண்பர் முகமது தஸ்தகீர் அவர்களின் கடிதம் கிராமிய மனம் வீசும் பழங்கால சமையல் பக்குவ முறைகளுக்கு மவுசு குறையவில்லை என்பதை உணர்த்தும் விதமாக உள்ளது. தமிழக அரசியல் களம் - பெயரைச் சொல்லலாமா? தாராளமாகச் சொல்லலாம். தரமான தென்றலின் பெயரை!

இந்திரா காசிநாதன்

*****


சென்ற இதழ் மாயாபஜார் பகுதி குறித்து சில விமர்சனம். பன்னீர் டிக்காவில் பன்னீர் உபயோகிக் கவில்லை! வெண்மையாய் வறுவலில் மசாலா வைக்க ஓட்டை வெட்டியாச்சு, மசாலா வைப்பது எப்போது? உப்பு சேர்ப்பது எப்போது? குறிப்பை படித்துப் பார்த்து பிரசுரித்தால் புத்தகத்தைப் பார்த்து சமைக்கும் என்னைப் போன்றவர்கள் குழம்பாமல் இருப்பார்கள்!

Photo Corner சொல்ல வருவது என்ன என்று புரியவில்லை. டயலாக் தமிங்லீஷில் ஒரே குழப்பமாய், படித்தவர் 'பே' என்று விழிக்கும்படியாய் இருக்கிறது. இசை விழா விமர்சனம் ரொம்ப அருமை!

மீரா சிவகுமார்

*****


இந்தியாவிலிருந்து பாஸ்டன் நகர் வந்ததும் முதல் செய்தியாக தென்றல் மாத இதழ் பற்றி அறிந்து உடனே தென்றல் ஏப்ரல் இதழ் வாங்கிப் படித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம். அரிய செய்திகளை நல்ல தமிழில் உயர்ந்த காகிதத்தில் தரமான அச்சில் படித்ததில் பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் மகனை பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும்போது கிடைத்ததை விட அதிகமான மகிழ்ச்சியை அடைந்தோம்.

எங்கள் ஊரான தஞ்சையைப் பற்றி வந்த கட்டுரை மிக பயனுள்ளதாக இருந்தது. அந்த ஊரில் பிறந்து வளர்ந்த எங்களுக்கு சொந்த ஊரைப் பற்றிய பல விஷயங்கள் தெரியாமல் இருப்பது குறித்து வெட்கப்பட நேர்ந்தது.

திரு. சி.சு. செல்லப்பா அவர்களின் 'மூடி இருந்தது' சிறுகதை அருமை. இத்தனை சிறப்பான கதையை அவரால் எழுதுவதற்கு சிறைவாசம் உதவிற்று என்றால் அந்தச் சிறைவாசம் கொடுத்த வெள்ளையருக்கு நன்றி கூறலாம் போலிருக்கிறது.

'தித்திக்கும் தென்றல் திக்கெட்டும் வீசட்டும்' என வாழ்த்துகிறோம்.

உமா நடராஜன், நடராஜன்

*****


ஏப்ரல் மத்தியில் கலிபோர்னியாவிலிருந்து சென்னைக்கு எங்களைக் காணவந்திருந்த எங்களது மகள் என்னைத் 'தென்றலுக்கு அறிமுகப்படுத்தினாள். எப்பொழுதும் படிக்கும் ஆர்வம் கொண்ட எனக்கு அது ஒரு நல்ல வரவாக அமைந்து மிக மகிழ்வூட்டியது. உண்மையிலேயே தென்றலைப் படித்து, தெரிந்து அசந்துவிட்டேன்.

என் மகளுடன் நானும், எனது மனைவியும் மூன்று மாத பயணமாக கலிபோர்னியாவுக்கு வந்திருக் கிறோம். இந்த 10 நாளில் என் மகள், மாப்பிள்ளை சேர்த்து வைத்திருந்த, இதுவரை வந்த எல்லாத் தென்றல் இதழ்களையும் புதையல் கண்டதைப் போல் ஆழ்ந்து, சுவைத்துப் படித்து வருகிறேன். இவ்வளவு சிறப்பாக அமெரிக்காவிலிருந்து இந்த மாதிரி பத்திரிக்கை நடத்தி அழகாக வெளியிடுவது எனக்கு மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. பாராட்டுக்கள். தொடரட்டும் இந்நற்பணி. This hardwork is commerdable. compliments.

ஆர். கிருஷ்ணன், Santa Clara
rkrish2000@hotmail.com

*****


நான் USக்கு நான்காவது முறையாக வருகிறேன். இந்த நான்காவது முறைதான் ஸான்ஹோஸே வந்துள்ளேன். இதுநாள் வரை எனக்கு US வருவதென்றாலே கொஞ்சம் மனக் கஷ்டம்தான். பொழுது போகாது. இந்த முறை 'தென்றல்' வீசி என்னை குளிர வைத்தது. கலை, இசை, பண்பு, இந்தியாவின் அரசியல் நிலவரம் யாவற்றையும் நம் தமிழருக்குத் தென்றலாக வீசி பயனடைய செய்கிறது தங்கள் இலவச மாத இதழ். தங்களுக்கும் தங்களின் இந்நற்பணியில் கைகொடுத்திருக்கும் அன்பு சகோதரர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பொருளுதவியையும் நீண்ட ஆயுளையும் தர பகவானை ப்ரார்த்திக்கிறேன்.

வைதேகி

*****


நான் தென்றலை சில காலங்களாக ரசித்து வருகிறேன். விரிவான மற்றும் ஆழமான கவரேஜ், தூயத் தமிழின் அழகு என எல்லாமே மிகச் சிறப்பாக உள்ளன. கீதா பென்னட் பக்கங்கள் வழக்கம் போல் ஆர்வமாக உள்ளது.

சிறந்த இசைக் கலைஞர் திரு. பாலக்காடு K.V. நாராயணசுவாமி (திரு. KVN) அவர்களின் மறைவு (ஏப்ரல் 1, 2002) குறித்து ஒன்றுமே குறிப்பிடப்படாமல் இருந்தது எனக்கு ஏமாற்றத்தை அளித்தது. இச்செய்தி அனைத்துப் பத்திரிக்கை களிலும் வெளியானது. எனக்குப் பிடித்த இதழான தென்றல், இந்த உயர்ந்த இசை மேதை பற்றி ஒரு சில பக்கங்களிலாவது செய்தி வெளியிடும் என்று நிச்சயம் நம்பியிருந்தேன். சிவாஜி கணேசனின் (எனக்குப் பிடித்த மற்றொரு சிறந்த தமிழன்) மறைவிற்குப் பின் தென்றலில் மிக நன்றாக எழுதப்பட்டிருந்த கட்டுரையை இப்பொழுதும் நான் மறக்கவில்லை.

கீதா பென்னட் போன்ற இசை வல்லுனர்கள் உங்களுக்கு உதவி புரிகையில், இது எவ்வாறு விடுபட்டுவிட்டது என்பதை என்னால் எனக்காக விளக்கமுடியவில்லை.

Professor P.P. Vaidyanathan, Pasadena, CA

© TamilOnline.com