H2O - திரைப்பட விமர்சனம் மற்றும் சர்ச்சை
அண்மையில் கர்நாடகா மாநிலத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய H2O படத்தைப் பற்றிய செய்திகளுக்கு முன், கன்னடத் திரைஉலகம் பற்றித் தெரிந்து கொள்வது அவசியம்.

கர்நாடக மாநில எல்லைக்குள் படப்பிடிப்பு நடத்தப்படும் கன்னடப் படங்களுக்கு, மானிய மாக கர்நாடக அரசு ரூ. 5 லட்சம் கொடுக்கிறது.

வேற்று மொழிகளில் தயாரித்து வெற்றி யடைந்த எந்த ஒரு திரைப்படத்தையும் அப்படியே மொழி மாற்றம் செய்து வெளியிடக் கூடாது.

டெக்னிக் விஷயங்கள் மட்டும் (எடிட்டிங், இசை, பிரதியெடுத்தல்) வெளிமாநிலத்தில் செய்து கொள்ளலாம்.

கன்னடப் படங்களில் ஒரு பாடலுக்காக ஊட்டியோ, கொடைக்கானலோ வராது. வந்தால் அந்தப்படம் அரசின் ரூ. 5 லட்சம் பெறும் தகுதியை இழந்துவிடும். அதனால் பெரும் பான்மையாக கர்நாடகத்தில் சுற்றுலாத் தலங்களையும், பிக்னிக் பகுதிகளையும் கன்னடப் படங்களில் கண்டுகளிக்கின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் கன்னட இயக்குநர்கள் பலர் பல முன்னணி நடிகர், நடிகைகளை வைத்துத் தமிழில் வெற்றியடைந்த சுமார் 30 படங்களை கன்னடத்தில் திரும்பவும் தயாரித்து வெற்றியடைந்தனர். கன்னடக் கதையை வைத்துத் தயாரிக்கப்பட்ட பல படங்கள் தோல்வியடைந்தன. இதனால், கடந்த 1.4.02 முதல் கர்நாடக அரசு புதிய சட்டம் பிறப்பித்துள்ளது. வேற்று மொழிகளில் வெளி யான படங்களை கன்னடத்தில் தயாரித்தால் கர்நாடக அரசின் மானியத் தொகை இல்லை என்பதே. இந்த செய்தி கன்னடத் தயாரிப்பாளர் களுக்கு மிகப்பெரிய அடி.

வண்ணத் திரைகளுக்கு மட்டுமல்ல சின்னத் திரைகளுக்கும் இதே கொள்கையைக் கடைப் பிடிக்கிறது கர்நாடக அரசு. தென்னிந்திய மொழிகளில் ஒளிபரப்புச் சேனல்களை வைத்தி ருக்கும் சன் நெட் ஒர்க் நிறுவனம், தமிழில் வெற்றியடையும் மெகாத் தொடர் களைத் தெலுங்கில் மொழி மாற்றம் செய்து ஜெமினி யிலும், மலையாளத்தில் மொழி மாற்றம் செய்து சூர்யாவிலும் ஒளிபரப்புகின்றனர். ஆனால் கன்னடத் தில் மொழி மாற்றம் செய்து உதயா வில் ஒளிபரப்பக்கூடாது. எந்தத் தொடராக இருந்தாலும் மீண்டும் கன்னட மொழியில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுத்தான் ஒளிபரப்ப முடியும்.

கர்நாடகத்தில் கன்னடத் திரைப்படம் வெளியிடும் திரையரங்குகளில் முதல் வகுப்பு நுழைவுக் கட்டணம் ரூ 20 என இருந்தால், கன்னடத்தைத் தவிர மற்ற மொழிப் படங் களுக்கு அதே வகுப்பு கிட்டத்தட்ட ரூ. 35 நுழைவுக் கட்டணமிருக்கும். இது போதுமென நினைக்கிறேன். மீண்டும் H2O க்குவரலாம்.

H2Oவின் கதை இதுதான்:

சென்னூர் என்றொரு கிராமம் - இவர்கள் பேசுவது தமிழ். ஹொன்னூர் என்றொரு கிராமம். இவர்கள் பேசுவது கன்னடம். இரண்டு ஊரையும் பிரிப்பது ஒரு நதி. இரண்டு ஊர் மக்களும் மிகவும் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். சென்னூரைச் சேர்ந்த தமிழ் பேசும் (சிங்கப்பூராக சென்னூரை மாற்ற நினைக்கும்) இளைஞன் வைரமுத்து! (பிரபுதேவா). ஹொன்னூரைச் சேர்ந்த முற்போக்குவாதி. அனைவரும் வேலை செய்ய வேண்டும், ஒருவர் கஷ்டத்தை மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கும் (பிச்சைக் காரனுக்கு அவன் சிரமத்தை எண்ணி வண்டி வாங்கிக் கொடுத்திருக்கும்) கன்னடம் பேசும் இளைஞன் உதயசங்கர் கெளட (உபேந்திரா). இவர்கள் இருவரினிடையே நுழைபவள் காவேரி (பிரியங்கா). இரு இளைஞர்களுமே காவேரி யின் மீது காதல் வயப்பட, காவேரிக்காக இருவரும் சண்டையிட, இரு ஊர்களிலும் காவேரிக்காகத் தகராறு ஏற்படுகிறது. இவளை இரு இளைஞர்களும் மாறி மாறிக் காதலித்து... காவிரி யாருக்குச் சொந்தம்? இதுதான்.

காவேரி என்ற பெண்ணின் பெயரை வைத்துக் கொண்டு பல இடங்களில் நேரடியாகவும், சில இடங்களில் மறைமுகமாகவும் காவேரி நதிப் பிரச்னையை வசனங்களால் கலக்கியிருக்கிறார் இயக்குநர் உபேந்திரா.

இரண்டு கிராமங்களிலும் இரு அரசியல் வாதிகள் காவேரிப் பிரச்னையைத் தூண்ட நதியா? பெண்ணா என பட்டிமன்றம் நடக்கும் அளவிற்கு கதைப்படி காவேரிப் பெண், பொதுவாக காவேரி நதியென படம் முழுவதும் வசனங்கள். இரண்டு பக்கமும் உள்ள நியாய மான காரணங்களைக் கன்னடத்திலும் தமிழிலும் வசனம் பேசி நியாயப்படுத்துகின்றனர். இதனால் தமிழ்த் தெரியாத ஒரு கன்னடருக்கு, இந்தக் கன்னடப்படம் புரியாது. படத்தைத் தடை செய்யக்கோரியதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். 40 சதவிகிதம் தமிழ் வசனங்கள். கர்நாடக அரசின் திரைப்படக் கொள்கைக்கும், காவேரி நதிப் பிரச்சினை விஷயத்திலும் பல சங்கடங்களை இந்தக் கன்னடப்படம் தோற்று வித்துள்ளது.

காவேரி நதிப் பிரச்னையில், தமிழக கட்சி களைவிட கர்நாடகத்தைச் சேர்ந்த இந்தியக் கட்சிகள் ஒற்றுமையாக செயல்பட்டு வரு கின்றன. தனியாக எவ்விதக் குரலும் ஒலித்த தில்லை. ஒளித்ததுமில்லை. H2O தைரியமாக இப்பிரச்சினையை அலசியிருக்கிறது. அதுவும் கர்நாடகத்தில் - கன்னடத்தில்.

H2O திரைக்கதைப்படி காவேரி என்ற பெண் யார்? என்று உபக்கதை. தமிழ் இளைஞருக்கும், கன்னடப் பெண்ணிற்கும் பிறந்தவர் காவேரி. (பிரியங்கா) இதையறிந்த சிலர் இவளின் சரித்திரத்தைக்கூட தமிழிலும், கன்னடத்திலும் மாற்றிக் கூறுகின்றனர். குழப்புகின்றனர். பூர்வ ஜன்மக் கதையைக் கூறியும் எதிரியாக்கு கின்றனர். காவேரி நான் உன்னை விட மாட்டேன் என பிரபுதேவா தமிழில் பாட, காவேரி நா நின்ன பிடலாரே என கன்னடத்தில் உபேந்திரா பாட, ரசிகர்களுக்கு வித்தியாசமான விருந்து. தமிழில் ஒரு முழுப்பாடலும் உண்டு.

இந்த வகையில், தமிழர்-கன்னடர் ஒற்றுமைக் காக ஒரு கன்னடத் திரைப்படம் வந்துள்ளதே ஒரு மிகப் பெரிய ஆச்சர்யம். இதற்காக இயக்குநர் உபேந்திராவைப் பாராட்டியே ஆக வேண்டும். தமிழ் வசனங்களுடன் வெளியிட்டால் பிரச்சனைகள் வரும் எனத் தெரிந்திருந்தும் ஒரு முழுத் திரைப்படத்தையே தமிழ் வசனங்களுடன் எடுத்து வெளியிட்டிருக்கும் உபேந்திரா மிக மிக பாராட்டுக்குரியவர்.

இந்து - முஸ்லிம் பிரச்னையை மையமாக வைத்து பம்பாய், காஷ்மீர் பிரச்னையை மையமாக வைத்து ரோஜா, இலங்கைத் தமிழர்ப் பிரச்னையை மையமாக வைத்து கன்னத்தில் முத்தமிட்டால். காவேரிப் பிரச்னையை மைய மாக வைத்து ஒரு H2O. இம்முறை மணி ரத்னத்தை முந்திக் கொண்டார் உபேந்திரா.

பெங்களூரிலுள்ள கன்னட ரக்ஷனா வேதிகெ போன்ற அமைப்புகளால் எதிர்ப்புத் தெரிவிக்கப் பட்டு, கர்நாடக மக்களால் பெரிதும் ரசிக்கப் பட்ட இந்தத் திரைப்படத்தின் தமிழ் வசனங்களை நீக்கி, கன்னட வசனங்களால் நிரப்பப் பட்டு, 15 நாட்களுக்குள் மீண்டும் வெளியிட இருப்பதாக இப்படத்தின் தயாரிப்பாளர்களான தன்ராஜ் பிலிம்ஸார் தெரிவித்துள்ளனர்.

படத்தின் முடிவு?

சிம்பாலிக்காக முடித்துள்ளார் இயக்குநர் உபேந்திரா. வெகுவிரைவில் தமிழில் (தமிழ்த் திரைப்படத்தில் கன்னட வசனங்கள் இருக்காதாம்) வெளிவரவிருக்கும் இப்படத்தின் முடிவை வெளியிடுவது சரியல்ல. தமிழின் சாரம் போய்விடும். முடிவை வெள்ளித்திரையில் காண்க.

கு. புகழேந்தி

© TamilOnline.com