வெறும் அறுபதாயிரம் முதலீட்டில் சிறிய நிறுவனமாக ஆரம்பித்த Mafoi Management Consultant Ltd. நிறுவனம் இன்று இந்தியாவின் தலைசிறந்த நிறுவனங்களுள் ஒன்றாக தலைநிமிர்ந்து நின்று கொண்டிருக்கிறது. விலாம்பட்டி என்னும் சிறு கிராமத்திலிருந்து ஒரு மனிதன் 10 வருடங்களுக்கு முன்பு இந்த நிறுவனத்தைத் துவங்கி இன்று வரை வெற்றிகரமாக அதை நடத்தியும் வருகிறார். Mafoi Management Consultant Ltd நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் K. பாண்டியராஜன்தான் அந்த மனிதர். 'Mafoi' என்றால் பிரெஞ்சு மொழியில் நம்பிக்கை என்று பொருள். பாண்டியராஜனும் அவர் நிறுவனத்தின் பெயருக்கேற்ப நம்பிக்கையுடன் பேசுகிறார். சொர்ணம்மாள் கல்வி அறக்கட்டளையொன்றை நிறுவி ஏழைக் குழந்தைகள் தரமான கல்வி கற்க உதவி புரிந்து வருகிறார். (பார்க்க; பெட்டிச் செய்தி) அவர் பிறந்து, வளர்ந்தது, நிறுவனம் தொடங்கிய கதை, நிறுவனத்தின் சேவைகள், எதிர்கால இலட்சியம்... இவைகள் குறித் தெல்லாம் 'தென்றலு'க்கு அவர் அளித்த விரிவான பேட்டியிலிருந்து...
நீங்கள் பிறந்தது, வளர்ந்தது, படித்தது இவைகள் குறித்த பின்னணி பற்றிச் சொல்லுங்களேன்?
நான் பிறந்தது விலாம்பட்டி என்கிற கிராமத்தில். இந்தக் கிராமம் சிவகாசி யிலிருந்து 5 கிமீ தூரத்தில் இருக்கிறது. என்னுடைய அப்பா கருப்பசாமி மேட்ச் பேக்டரி ஒன்றில் தினக்கூலியாகப் பணிபுரிந்து வந்தார். நான் பிறக்கும் போது என் அம்மா சிவகாமித் தாய்க்கு பதினேழு வயது. நான் பிறந்த மூன்று மாதங்களில் என்னுடைய அப்பா இறந்து விட்டார்.
அப்பா இறந்தவுடன் அவருடைய உறவினர்கள் என் அம்மாவுக்கு அடைக்கலம் தராததால், என் அம்மா என் பாட்டி வீட்டுக்கு என்னையும் தூக்கிக் கொண்டு சென்று விட்டார். வீட்டின் ஒரே குழந்தையான என்னுடைய வாழ்வு, வளர்ச்சி எல்லாமும் என்னுடைய பாட்டி வீட்டில்தான் நிகழ்ந்தது.
விலாம்பட்டி நாடார் ஸ்கூலிலிருந்து என்னுடைய தொடக்கக் கல்வி துவங்கியது. அடுத்து சிவகாசி விக்டோரியா ஸ்கூலில் மேனிலைக் கல்வி முடித்து விட்டு கோயம் புத்தூர் பி.எஸ்.டி கல்லூரியில் இன்ஜினியரிங் முடித்தவுடன் ஜாம்ஸெட்பூர் XLRI-இல் எம்.பி.ஏ சேர்ந்து படித்து முடித்தேன்.
என்னுடைய தொடக்கக் கல்வியிலிருந்து எம்.பி.ஏ வரைக்குமான படிப்புச் செலவுகளுக் கெல்லாம் 'லோன்' வாங்கித்தான் சமாளித்தோம். கனரா வங்கியில்தான் லோன் வாங்கினோம். லோன் போக ஹிந்துஸ்தான் லீவர் அவார்டு, சில ஸ்காலர்ஷிப்புகள் வாங்கி என்னுடைய படிப்புச் செலவுகளையெல்லாம் சரிக் கட்டினேன்.
நான் எம்.பி.ஏவில் மனித வள மேம்பாட்டுத் துறையைத் தேர்தெடுத்துப் படித்தேன். படிக்கும் போதே Campus intreview-இல் தேர்ந்தெடுத் தார்கள். கல்கத்தா பிரிட்டிஷ் ஆக்ஸிஜன் கம்பெனியில் 1984-இல் வேலைக்குச் சேர்ந்தேன். இந்தக் கம்பெனியில் ஆறு வருடங்கள் பணியாற்றி மேனேஜர் லெவலுக்கு உயர்ந்தேன்.
அடுத்ததாக சென்னையிலுள்ள 'Idea' என்னும் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து Exports, HRD ஆகிய துறைகளில் 3 வருடங்கள் பணி யாற்றினேன். 9 வருடங்கள் பணிபுரிந்து கிடைத்த பணத்தில் பாதிப் பணம் படிப்புச் செலவுக்காக வாங்கியிருந்த 'லோன்'களைக் கிளீயர் செய்வதற்கே சரியாகப் போய்விட்டது.
1992-ஆகஸ்ட் 15-ஆம் தேதி Mafoi நிறுவனத்தை 60,000 ரூபாய் முதலீட்டில் துவங்கினேன்.
அறுபதாயிரம் ரூபாய் முதலீட்டுடன் துவங்கிய நிறுவனத்தை எப்படி இந்த அளவுக்கு வளர்த்தெடுத் தீர்கள்?
இந்த நிறுவனத்தை நான் தொடங்கிய போது, நிறுவனத்தின் வளர்ச்சிக்குத் தேவையான மேலதிகமான செலவுகளுக்காக யாரிடமும் கடனாக எதையும் கேட்டுப் பெறவில்லை. நண்பர்கள், உறவினர்களிடம் கம்பெனியின் பங்குகளை விற்பதன் மூலம் பெற்ற 5,000, 10,000 போன்ற பல்வேறு தொகைகளைக் கொண்டே சரிக் கட்டினேன். இதனால் நிறுவனமும் வளர்ந்தது. என்னிடம் பங்குகள் வாங்கியவர் களும் பயனடைந்தார்கள். இப்போது இந்த நிறுவனத்தில் 270 பேர் பங்குதாரர்களாக இருக்கிறார்கள். இதில் அரசு ஊழியர்க ளிலிருந்து வயலில் வேலை செய்பவர்கள் வரை பலதரப்பட்டவர்களும் இருக்கிறார்கள். என் னுடைய மனைவி ஹேமலதா சார்டண்ட் அக்கவுண்டண்டாக இருந்து அந்த வேலையை உதறி விட்டு 1994-லிருந்து இந்த நிறுவனத்தின் இயக்குனர்களுள் ஒருவராகப் பணியாற்றி வருகிறார்.
1992-இல் பிரைவேட் லிமிடெட்டாக இருந்த இந்த நிறுவனம் 1996-இல் பப்ளிக் லிமிடெட்டாக மாறியது. 2001-இல் 3 நிறுவனங்கள் 8.5 கோடி ரூபாயை எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். இப்போது இந்த நிறுவனத்தின் மதிப்பு 52 கோடி.
2001-02 ஆம் ஆண்டைய மொத்த வருமானம் 23.5- கோடி.
என்னென்ன வகைகளில் இந் நிறுவனம் வாடிக்கையாளர்களுக் குச் சேவைகளை வழங்கி வருகிறது?
Recruitment, HR, HR Out Sourcing ஆகிய மூன்று வழி முறைகளில் நாங்கள் இயங்கு கிறோம்.
இன்றைக்கு இந்தியாவில் மொத்தம் 40 கோடிப் பேர் வேலை பார்க்கிறார்கள். இதில் 2.8 கோடிப் பேர் முறைசாரா வேலையிலேயே ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக் குச் சம்பளம் எவ்வளவு? சம்பளச் சீட்டு தரப்படுகிறதா? என்பதைப் பற்றியெல்லாம் இவர்களுக்கும் கவலையில்லை. இவர்களை வேலைக்கு வைத்திருக்கும் நிறுவனத்தின ருக்கும் கவலையில்லை.
ஒரு தொழிலாளி என்பவனுக்கு என்ன தேவையோ? அதை நாங்கள் நிறுவனத்தின் சார்பாக நின்று செய்து தருகிறோம்.
Fast moving consumer goods நிறுவனங் களையே இங்கு உதாரணத்துக்கு எடுத்துக் கொள்ளலாம். இந் நிறுனங்களில் மட்டும் 21/2 இலட்சம் முறைசாரா பணியாளர்கள் இருக் கிறார்கள். இவர்களுக்கெல்லாம் 400லிருந்து 650 ரூபாய்தான் ஊதியமாகத் தரப்படுகிறது. தொழிலாளர் நலச் சட்டங்களெல்லாம் பின்பற்றப்படுவதில்லை. இதை அரசாங்கமும் கண்டு கொள்வதில்லை. இந்த விசயம் மேல்மட்ட நிர்வாகிகளுக்கும் தெரியாது. எத்தனை பேர் பணிபுரிகிறார்கள் என்பதுகூட நிறுவன நிர்வாகிகளுக்குத் தெரியாது.
இங்குள்ள தொழிலாளர்கள் டீலர்கள் எனப்படும் இடைத் தரகர்களின் கீழ் பணி புரிகிறார்கள். எங்கள் மூலமாக தொழிலாளி களைப் பணியமர்த்துகிறோம். இதனால் எடுக்கும் போதே திறமையானவர்களைத் தேர்தெடுத்து எடுக்கிறோம். அவர்களுக் கெல்லாம் முறையாக அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் தருகிறோம். எல்லா சலுகைகளையும் பெற்றுத் தருகிறோம். இதனால் நிறுவனத்திற் கும் தகுதியான ஆட்கள் கிடைக்கிறார்கள். தொழிலாளர்களையும் முறைசார்ந்த பணியாளர் களாக மாற்றுகிறோம்.
வேலைக்கு ஆட்களை அமர்த்துவதோடு, எங்கள் பணி முடிந்து விடுவதில்லை. நிறுவனத் தில் பணிபுரிகிற தொழிலாளர்களின் உற்பத்தித் திறனை ஆராய்ந்து நிறுவனத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கிறோம். இதனால் நிறுவனத்தால் தன்னுடைய 'Target'ஐ திட்டமிட்டபடி எட்ட முடிகிறது.
இந்த Out sourcing முறை மூலமாக எங்களின் வழியாக 1300 பேர் பயனடைந்துள்ளனர். இந்தியாவில் 11 இடங்களில் எங்கள் நிறுவனத் தின் கிளைகள் செயல்படுகின்றன. சென்னையில் மட்டும் மூன்று கிளைகள் உள்ளன. துபாய், லண்டன் ஆகிய இடங்களிலும் கிளைகள் இருக்கின்றன.
இதுவரை பல்வேறு நிறுவனங்களில் சுமார் 10,500 பேரை நாங்கள் பணியமர்த்தியுள்ளோம். இதில் 34 பேரை நிர்வாக இயக்குனர் தகுதியில் பணியமர்த்தியுள்ளோம். மா·பா தொழில் நிர்வாக ஆலோசனை மையம் இன்று இந்தியா வில் முதலிடத்தில் இருக்கிறது. உலகத்தில் பெரிய கம்பெனிகளான 'Fortune-500' என்பதில் 122 கம்பெனிகளுக்கு நாங்கள் தொழில் ரீதியான சேவைகளை அளித்திருக்கிறோம்.
இப்படி ஒரு நிறுவனத்தைத் தொடங்க வேண்டுமென்று எப்போ திருந்து திட்டமிட்டீர்கள்?
எம்.பி.ஏ படிக்கும் போதே சொந்தமாக ஏதாவது தொடங்க வேண்டுமென்கிற எண்ணம் எனக்கிருந்தது. 9 வருடங்கள் பணியிலிருந்த போதும் அந்த எண்ணம் வலுப்பட்டது.
உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று என்னை ஒரு சம்பவம் உந்தித் தள்ளியது.
அப்போது நான் 'Idea' நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது ஆந்திராவிலுள்ள ராஜமுந்திரியில் மிகப் பெரிய எண்ணெய்க் கம்பெனி தீப்பிடித்து எரிந்தது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 'Techni skill' என்ற நிறுவனம் உலகெங்கிலும் உள்ள 35 இந்திய வல்லுனர்களைத் திரட்டி ஆந்திராவுக்கு அனுப்பித் தீயை அணைக்கும் வேலையை ஏற்றுச் செயலாற்றியது.
அந்த நேரத்தில் இந்தியாவிலிருந்த பெரிய நிறுவனமொன்று இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. இந்த நிறுவனத்தின் மொத்த வருட வருமானம் 5 கோடி. ஆனால் அந்த ஆஸ்திரேலிய நிறுவனம் ஒரே மாதத்தில் 5 கோடியைச் சம்பாதித்துக் கொண்டு போய் விட்டது. அதுவும் இந்தியர்களை வைத்தே!
இந்தச் சம்பவம் என்னை வெகுவாகப் பாதித்து விட்டது. ஏன் நாமே ஒரு நிறுவனத்தைத் தொடங்கக் கூடாது? என்று எனக்குள் கேள்வி கேட்டேன்.
அந்தக் கேள்வியின் விடைதான் Mafoi.
நிறுவனத்தின் எதிர்காலத் திட்டம்?
உலகிலேயே மரியாதைக்குரிய மனித வள மேம்பாட்டு நிறுவனம் என்ற பெயரை எடுக்க வேண்டும்.
வருகிற வருடம் அமெரிக்கா, நியூஜெர்சியில் ஒரு கிளை ஆரம்பிக்க உள்ளோம். அடுத்த வருடம் சிங்கப்பூரில் தொடங்கவுள்ளோம். இப்போது வருடத்திற்கு 82% என்கிற வளர்ச்சியில் நிறுவனம் வளர்ந்து கொண்டிருக் கிறது. அதைத் தக்க வைத்து மேலும் வளர்த் தெடுக்க வேண்டும்.
ஏழைக் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்த நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சிகள் பற்றிச் சொல்லுங்களேன்?
(இதெல்லாம் வேண்டாமே! என்பது போலத் தயங்குகிறார்) நான் பிறந்து வளர்ந்த ஊரிலுள்ள குழந்தைகளின் கல்வியை மேம்படுத்த என்னாலியன்ற உதவிகளைச் செய்து வருகிறேன். ஆண்டொன்றுக்குச் சில குழந்தைகளை சொர்ணம்மாள் கல்வி அறக்கட்டளையின் வழியாகத் தத்தெடுத்துப் படிக்க வைக்கிறோம் (பார்க்க; பெட்டிச் செய்தி). சென்னை கீழ்ப்பாக்கத்தில் Set Anne's of excellence என்ற பள்ளியொன்றையும் நடத்தி வருகிறோம் (பார்க்க; பெட்டிச் செய்தி). மாதமொரு உடல் ஊனமுற்ற தொழில் முனைவோரைத் தேர்ந்தெடுத்து அவருக்கு ரூபாய் 5000 தந்துதவுகிறோம்.
உங்களைப் போல நிறுவனம் தொடங்கிய மற்றவர்கள் இது போல் சமூக சேவைகளில் பெரும் பாலும் ஈடுபடுவதில்லை. அதுமட்டு மல்லாமல் 'இந்தியா திருந்தவே திருந் தாது' என்கிற மாதிரி ஒருவித புலம் பலையும் முன்வைக்கின்றனர். ஆனால் இவர்கள் சமூகத்தை மேம்படுத்த எந்தவித முயற்சிகளையும் மேற்கொள்வதில்லை... என்பது போன்ற குற்றச்சாட்டுகள் எழுகின் றனவே! அதைப் பற்றிய உங்களது கருத்து?
இருட்டைக் குறை சொல்லி எந்தப் பயனுமில்லை. சிறுவிளக்காவது நாம் ஏற்றி இருட்டை விலக்க முயற்சிக்க வேண்டும் என்பதுவே என்னுடைய கருத்து. எல்லோரையும் நீங்கள் குறிப்பிடுகிற மாதிரி பொதுப்படையாக எடுத்துக் கொள்ள முடியாது. இப்போது இயங்கிக் கொண்டிருக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பின்னணியில் எங்களைப் போன்ற நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பணிபுரிந்து கொண்டுதானிருக்கின்றனர். சென்னையைப் பொறுத்தவரை நிறையப் பேர் இப்படி உதவி செய்து வருகின்றனர்.
எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டு மென்கிற ஆவல் மனதிற்குள் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் எப்படிச் செய்வது என்று தான் அவர்களுக்குத் தெரிவதில்லை. என்.ஜி.ஓக் களுக்குச் செய்வதென்றால், அவர்கள் சரியான வர்கள்தானா? என்கிற கேள்வியும் எழுகிறது. நாம் கொடுக்கிற பணம் சரியான முறையில் செலவிடப்படுகிறதா என்கிற கேள்வியும் எழுகிறது. சில என்.ஜி.ஓக்கள் பாதிப் பணத்தை மட்டுமே சமூகப் பணிகளுக்காகச் செலவிடு கின்றனர். மீதிப் பணத்தைத் தங்களு டைய சொந்தச் செலவுகளுக்குப் பயன் படுத்து கின்றனர். இவர்களில் நல்லவர்களும் இருக்கி றார்கள். போலிகளும் இருக்கிறார்கள். இப்படி இருக்கையில், உதவ வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்கள்கூட பின்வாங்கி விடுகின்றனர்.
இப்போது எங்களையே எடுத்துக் கொள்ளுங் களேன், நாங்கள் எங்கள் கல்வி அறக்கட்டளை மூலம் ஒரு குழந்தைக்கு 12,000 ரூபாய் அளித்துத் தத்தெடுத்துக் கொள்ளச் சொல்கிறோம். அந்தக் குழந்தை அவர்களுடைய நேரடிப் பராமரிப்பின் கீழ் இருக்கும். இப்படி இருக்கிற போது உதவ வேண்டும் என்கிற எண்ணம் ஏற்படுகிறது. நாங்களும் எங்கள் கைப்பணத்தைத்தான் போடுகிறோமே தவிர, அதிலிருந்து சொந்தச் செலவுகளின் பொருட்டு எதையும் எடுப்ப தில்லை.
உதவுகிற மனோநிலை இருப்பவர்கள் சரி யானவர்களைத் தேர்தெடுத்து அவர்களின் வழியாக உதவிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இப்போது ரிலையன்ஸில் மேனேஜ ராக இருந்த பி.என்.தேவராஜன் இங்குள்ள தன்னார்வக் குழுக்களை ஒன்றிணைத்து ஒரு அமைப்பு தொடங்கியிருக்கிறார். ஆக இது போன்ற நம்பகமான நிறுவனங்கள் மூலமாக உதவி செய்யலாம்.
அடுத்து வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர் கள் காசாக எதையும் இங்கு தரவேண்டாம். இங்கு முதலீடு செய்வதன் மூலம் வேலை வாய்ப்பைப் பெருக்கலாம். இங்குள்ளவர்களும் வேலை வாய்ப்பைப் பெருக்குகிற மாதிரியாகத் தொழில் தொடங்க வேண்டும். அதற்காக எல்லோரும் தொழில் தொடங்க வேண்டும் என்று சொல்ல வரவில்லை. முடிந்தவர்கள் செய்ய வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம்.
வேலைவாய்ப்புக்கள் பெருகுகிற போது வறுமை இருக்கிற இடம் தெரியாமல் ஓடி ஒளிந்து கொள்ளும் என்பது என்னுடைய அசைக்க முடியாத கருத்து!
******
சொர்ணம்மாள் கல்வி அறக்கட்டளை
சொர்ணம்மாள் பாண்டியராஜனின் பாட்டி. நான்காவது வரைக்கு மட்டுமே படித்த இந்த மூதாட்டி பாண்டியராஜனை இந்த அளவுக்குப் படிக்க வைத்து உயர்த்தியவர். எனவே அந்த அம்மாளின் நினைவாக ஆரம்பிக்கப்பட்டதுதான் சொர்ணம்மாள் கல்வி அறக்கட்டளை. தான் படித்து வளர்ந்த ஊரான விலாம்பட்டியில் உள்ள குழந்தைகளுக்கு உதவும் வகையில் இந்த அறக்கட்டளையை அவர் துவக்கி நடத்தி வருகிறார்.
இதன்படி, தற்போது இரண்டாம் வகுப்பிலிருந்து ஆறாம் வகுப்பு வரையுள்ள 84 குழந்தைகளைத் தத்தெடுத்து அவர்களின் கல்விச் செலவுக்கென 12,000 ரூபாயை வங்கியில் போட்டு அதில் வரும் வட்டியை அக்குழந்தைகளுக்கு அளித்து வருகின்றனர்.
அதுபோக ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கார்டியனை நியமித்திருக்கிறார்கள். இந்த கார்டியன் அந்தக் குழந்தைகளின் எதிர்கால வளர்ச்சியில் கவனம் கொண்டு அவர்களை முன்னேற்றுவதையே நோக்கமாகக் கொண்டு செயல்படுவார். குழந்தைகளின் எதிர்காலப் படிப்பு விவரம், அவர்களது தகுதியை வளர்த்துக் கொள்வது எப்படி? என்பது போன்ற அறிவுறுத்தல்களை அந்தக் குழந்தைகளுக்கு இந்தக் கார்டியன் வழங்குவார்.
அங்குள்ள குழந்தைகளுக்கு ஐ.ஏ.எஸ் ஆவது எப்படி? பைலட் ஆவது எப்படி? டாக்டர் ஆவது எப்படி? என்று ஒவ்வொரு துறைகளைப் பற்றியும் விலாவரியாகத் தெரிந்து கொள்ள வகை செய்திருக்கிறார்கள். இதற்கென பணியாளர்கள் சிலரையும் நியமித்து தொடர்ந்து இவ்வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் பயிலும் குழந்தைகளை விட என் ஊரான விலாம்பட்டியில் பயிலும் குழந்தைகளுக்குப் பொது அறிவு அதிகம் என்று பெருமையுடன் சொல்கிறார் பாண்டியராஜன். பொது அறிவை அந்தக் குழந்தைகளுக்கு வழங்கிய ஆசானின் பெருமை அது!
******
விலாம்பட்டியில் ஆரம்பித்து...
விலாம்பட்டியில் ஆரம்பித்த பாண்டியராஜனின் கல்விப் பணி சென்னை கீழ்ப்பாக்கத்திலும் தொடர்ந்துள்ளது. கீழ்ப்பாக்கம் St Anne's school-ஐ நடத்தி வந்தவர் இறந்து விடவே 2001-இல் அந்தப் பள்ளியை மூடிவிடலாம் என்று திட்டமிட்டுள்ளனர். இந்தப் பள்ளியில் அந்நேரம் சுமார் 102 குழந்தைகள் பயின்று வந்தனர். அவர்கள் அனைவரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். இந்த விசயம் பாண்டியராஜனின் காதுகளுக்கு வர, உடனடி யாக அந்தப் பள்ளியைத் தத்தெடுத்துக் கொண்டார்.
பள்ளி இருந்த இடத்துக்கு எதிரிலேயே இன்னொரு இடத்தை விலைக்கு வாங்கி அங்கு புதிய பள்ளிக் கட்டிடத்தைக் கட்டினார்கள். அந்தப் புதிய பள்ளிக்கு Set Anne's of excellence என்று பெயரும் சூட்டினர். அதென்ன 'Set' என்று கேட்டால், Sornammal educational trust என்று சொல்கிறார்.
இப்போது இந்தப் பள்ளியில் சுமார் 250 குழந்தைகள் வரை படிப்பதற்கான வகுப்பறை வசதிகள் இருக்கின்றன. 14 திறமையான ஆசிரியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். லேப் வசதி, கம்யூட்டர் வசதி என குழந்தைகளுக்கான எல்லா வசதிகளும் இப்பள்ளியில் செய்து தரப்பட்டுள்ளன. இப்பள்ளியில் படிப்பதற்குக் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது.
"நகர்ப்புற ஏழ்மை கிராமப்புற ஏழ்மைக்குச் சற்றும் குறைந்ததில்லை. இங்குள்ள வறுமையில் வாடும் குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிடைக்க வேண்டும் என்கிற நோக்கத்திலேயே நாங்கள் இந்தப் பள்ளியை சொர்ணம்மாள் கல்வி அறக்கட்டளையின் கீழ்த் தத்தெடுத்துக் கொண்டோம். நல்ல ஆங்கிலக் கல்வி கிடைக்காததால், வேலைக்குப் போகும் போது பிரச்சனைகளுக்கு உள்ளாகின்றனர். எனவே இந்தப் பள்ளியில் வேலைவாய்ப்புக்கு உதவும் ஆங்கிலக் கல்வியைச் சிறந்த முறையில் கற்றுத்தர எல்லா ஏற்பாடுகளையும் செய்திருக்கிறோம். இந்தப் பள்ளியைச் சென்னையிலேயே மிகச் சிறந்த பள்ளியாக முன்னேற்ற வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்" என்று நம்பிக்கையுடன் பேசுகிறார் பாண்டியராஜன்.
பாண்டியராஜன் மற்றும் அவரது மனைவி லதா ராஜன், முஸ்தபா ஆகியோர் இந்தப் பள்ளி அறக்கட்டளையின் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.
சந்திப்பு: சரவணன் |