மூன்று தலைமுறைகளுடன் தொடரும் இசைப் பயணம் - T.V. கோபாலகிருஷ்ணன்
அன்புள்ள தென்றல் வாசகர்களே,

என்னை விட வயது குறைந்தவர்களுக்கு வாழ்த்துக்களும் ஆசிகளும். என்னை விட வயதில் மூத்தோர்களுக்கு எனது பணிவான வணக்கம்.

இசையைப் பற்றி, குறிப்பாக இசை மற்றும் இது சார்ந்த துறைகளில் எனது அனுபவத்தை இனிவரும் தென்றல் இதழ்களில் எழுத கேட்டுக்கொண்ட திரு. வெங்கட்ராமன் அவர்களுக்கு எனது நன்றி.

எங்கிருந்து துவங்குவது என்று ஆச்சரியப் படுகிறேன். 1930களில் எனது குழந்தைப் பருவத்திலிருந்து துவக்குகிறேன். இந்தப் பயணத்தின் போது, Musicology, இந்த மாபெரும் இசையின் சரித்திரம், கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் இனிவரும் காலங்களைப் பற்றி எழுத எண்ணியுள்ளேன். சமகால இசைக் கலைஞர்களில் வாழும் மேதைகளைத் தவிர மற்றவர்களைப் பற்றி மட்டும் எழுத முடிவு செய்துள்ளேன். இதன் மூலம் இவர்களை நேரில் கண்டோ அல்லது கேட்டோ இல்லாத பலரும் தெரிந்துகொள்ள முடியும். எனது பாட்டி (திருமதி. தைலாம்பா) நான் முதலில் பாடினேன் பின்னர் தான் பேசத் தொடங்கினேன் என்று அடிக்கடி கூறுவார்கள். நான்கு வயதில் ஒரு பத்து பனிரெண்டு பாடல்களை பாடவும், மிருதங்கத்தை ஒரளவு தேர்ச்சியுடன் வாசிக்கவும் செய்தேன். பாடகர்களுக்கு எனது குரு அளித்த பரிசாகிய "வாதாபி", "இந்த பரகா" (அன்னைய்யா இயற்றி, நாடனமக்ரியா ராகம், ரூபக தாளத்தில் அமைந்த பாடல் - இசை மேதை Dr. செம்மங்குடி அவர்களால் இந்தப் பாடல் மிகவும் பிரசித்திப் பெற்றதை பின்னாளில் அறிந்தேன்), "சாந்தமுலேகா", "விடுலகு", "வரநாரதா", "மரிவேரே" போன்ற பாடல்கள் இன்னமும் பசுமையாக நினைவில் உள்ளன. இப்பாடல்களின் ராகமோ தாளமோ அறிந்திருக் கவில்லை; ஒருவரும் அவற்றைக் கற்றுக் கொடுக்கவும் இல்லை. இதில் மிக முக்கிய மானது இசை தான் - வேற்றுமொழிப் பாடல்களாயின் வரிகளை மாற்றிப்பாடுவது - "கிருஷ்ணா நீ பேகனே" தான் பிரபலம் - "தாயே யசோதா", "நடமாடித் திரிந்த", "பன்சீவாலே", "சலியே" (சுவாதி திருநாளின் இந்தி பஜன்) போன்றவையும் தான்.

எனது நான்காம் வயதில், கொச்சின் அரச குடும்ப கல்யாணத்தில் நடந்த பெரிய கச்சேரிகள் தான் எனது முதல் அனுபவம். கர்நாடக இசை மாமேதைகள் அரியக்குடி, செம்பை, மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர், முசிறி மற்றும் சிலர் - இவர்களது கம்பீரமான மேடைத் தோற்றம் மற்றும் அவர்கள் கண்களில் மின்னிய ஈடுபாடு, பாடும்போது தோன்றும் நளினம், சுற்றிலும் புன்னகை - இவைகளை நான் என்றென்றும் மறக்கவில்லை. இவற்றைக் கண்டு தான் நான் அன்றே அக்கணமே இசை தான் எனது வாழ்க்கை என்று தீர்மானித்துவிட்டேன் போலிருக்கிறது. பொன்னுக்கு வீங்கி (Mumps), காது வலி இவற்றால் நான் இடைவிடாது அழுததும், மாலை நேரங்களில் கச்சேரிக ளுக்குச் சென்ற போது மட்டும் இசையில் மூழ்கித்திளைத்து இந்த வலிகளை மறந்ததும் எனது நினைவில் உள்ளது.

நமது இசையைப் பற்றி பேசுகையில், நான் துவக்கத்திலேயே உங்களுக்கு ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன் - இந்திய இசை என்று எந்த ஒரு வேறுபாடும் கிடையாது. இந்திய இசை என்றால் இப்போது ஹிந்துஸ்தானி இசை என்று மேற்கத்திய மற்றும் ஆசிய பத்திரிகை களின் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக நடந்துவருகின்ற மாயையான பிரசாரத்தினால் அடையாளம் கண்டு கொள்ளப்படுகிறது. 'இந்திய இசை'யை மேலை நாடுகளுக்கு 1940களில் இட்டுச் சென்ற பண்டிட் ரவிசங்கரின் தொய்வு இல்லாத மற்றும் தன்னலமில்லாத தொண்டும் கூட இதற்கு ஓரளவிற்கு துணை நின்றது. அறுபதுகளின் பின்பகுதியில் எங்களைப் போன்ற சிலரின் எழுச்சியும், Dr. T விஸ்வநாதன் மற்றும் அவரது சிஷ்யர்கள், மேன்மை மிகு பாலசரஸ்வதி (பரத நாட்டியம்), Dr. S. ராமநாதன், வீணை மேதை S. பாலசந்தர், Dr. M.S. சுப்புலஷ்மி மற்றும் பலரால தான் அமெரிக்கர்கள் கர்நாடக இசை (அல்லது தென்னிந்திய இசை) பற்றி அறிந்தார்கள்.

இவ்வாறு இருக்கையில், எப்படி வெவ்வேறு இசை வடிவங்கள் தென் இந்தியாவில் தொன்று தொட்டு இருந்துவந்தன என்பது பற்றி விவாதிப்பதில் நாம் நேரத்தை செலவிட வேண்டாம்.

வேறு எந்த இசை முறையும் இவ்வளவு வகை களை (பல இசை வடிவங்களில் இயற்றப்பட்ட பாடல்கள், இசையின் இலக்கியம், நடனம் மற்றும் நாடகம்) பெற்றுள்ளதாக மார் தட்டிக்கொள்ள முடியாது. இவற்றிற்கு இணையானதே இக்கலைகளை வழங்கும் மாமேதைகளும் அவர்களது படைப்புத்திறனும், சுதந்திரமும்.

கடந்து விட்ட நூற்றாண்டுகளில் எண்ணில டங்கா மேதைகள் அவரவர் சிறப்புகளைக் கொண்டு அழைக்கப் பட்டுள்ளனர் - தோடி சீதாராமைய்யா, சக்ரதனம் சுப்பையர், சத்கால கோவிந்தராமர் (சக்ரதனம் சுப்பையரின் சீடர் இவர்). ஆறு காலங்களிலும் தானம் மற்றும் பல்லவி பாடும் சத்கால கோவிந்தராமரின் திறமையை மெச்சும் விதமாக "எந்தரோ மகானுபாவுலு" என்ற ஒப்பற்ற பஞ்சரத்ன கீர்த்தனையை தியாகராஜர் பாடினார் என்ற கதையும் உண்டு.

எனது குரு செம்பை வைத்தியநாத பாகவதர் தானத்தையும் ஸ்வரத்தையும் நான்கு காலங் களில் பாடுவதில் வல்லமை பெற்றிருந்தார். பக்கவாத்தியமாக மைசூர் செளடைய்யா வயலினிலும், மிருதங்கத்தில் நானும், ஆலங்குடி திரு. ராமச்சந்திரன் கடத்திலும் அவரை பின் தொடர்வோம். எனது குருவின் கொள்ளுத் தாத்தா சக்ரதனம் சுப்பையர் தானம், கானம் பல்லவி பாடுவதில் நடமாடும் களஞ்சியமாகத் திகழ்ந்தார் என்று அவர் பின்னர் என்னிடத்தில் கூறினார். மேலும் அவர் (சக்ரதனம் சுப்பையர்) தனது சீடர் கோவிந்தனை தியாகராஜ சுவாமிகளிடம் அனுப்பி அவரின் கருத்துக் களைக் கேட்டுவரச் சொன்னார். அந்நாட்களில் இசை வல்லுநர்கள் தங்கள் வாழ்நாளில் தங்கள் இடத்தை விட்டு அதிக பட்சம் 100 மைல் களுக்கு மேல் சென்றது கிடையாது. இதன் சாரம் என்னவென்றால், இசைப் புலமையும் இசையும் வாய் வழியாகவும் தங்கள் அனுபவங் களை எழுதிவைத்துச் சென்ற சிலரின் முயற்சிகளாலும் தான் பரவின.

தமிழ் பாடல்களைக் கச்சேரிகள் மூலமாகவும் சினிமா மூலமாகவும் பிரபலப் படுத்தி, கர்நாடக இசைக்கு ஓர் உன்னத சேவை புரிந்த பேராசிரியர் P. சாம்பமூர்த்தி, பாபநாசம் சிவன், Dr. S. ராமநாதன், M.M. தண்டபாணி தேசிகர் போன்ற மேதைகளுக்கு நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். அந்தக் காலத்தில் "நந்தனார்"ல் இடம் பெற்ற தண்டபாணி தேசிகரின் பாடல்கள் எங்களுக்கு பெரிதும் ஊக்கம் ஊட்டுபவையாக அமைந்திருந்தன. இந்தப் பாடல்களை நாங்கள் அதே தொனியில் உணர்ச்சிபூர்வமாக கச்சேரிகளில் பாடுவோம்!

தொடரும்....

உங்கள்
TVG

© TamilOnline.com