'கோனார் தமிழுரை' இந்தப் பெயர் தமிழர்கள் எல்லோருக்கும் நன்கு பரிச்சயமானது. கோனார் தமிழுரை பயன்படுத்தாமல் தமிழ்ப் பாடம் படித்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்தளவிற்கு கோனார் தமிழுரை இன்றளவும் மாணவர்கள் மத்தியில் இரண்டறக் கலந்து விட்ட ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. கோனார் தமிழுரையைத் தமிழர்களுக்கு உருவாக்கித் தந்த 'பழனியப்பா பிரதர்ஸ் பப்ளிகேஷன்ஸ்' நிறுவனத்தின் இயக்குனர் ப. செல்லப்பன் கணித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார். ப.செல்லப்பன் அமெரிக்கா வில் உள்ள 'Iowa' பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ படித்தவர். கோனார் தமிழுரையின் தோற்றம்- வளர்ச்சி, கணித் தமிழ்ச் சங்கத்தின் செயல்பாடுகள் இவைகள் குறித்தெல்லாம் ப.செல்லப்பன் 'தென்றலு'க்கு அளித்த பேட்டியிலிருந்து...
கோனார் தமிழுரையின் தோற்றம் பற்றிச் சொல்லுங்களேன்?
என்னுடைய அப்பா திரு.பழனியப்பன்தான் கோனார் தமிழுரையைப் பதிப்பித்தார். எங்களுடைய சொந்த ஊர் புதுக்கோட்டை பக்கத்திலுள்ள ராயவரம். என் அப்பாவுக்கு 19 வயதான போது என் தாத்தா இறந்து விட்டார். எனவே குடும்பச் சூழ்நிலைகளின் காரணமாக என் அப்பா தொழில் பார்க்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. எனவே என் அப்பா ஆரம்பத்தில் 'மை' வியாபாரம் ஆரம்பித்தார். அப்போது அய்யம் பெருமாள் கோனார் அவர்கள் என் அப்பாவிடம் நான் ஒரு புத்தகம் எழுதித் தருகிறேன். அதைப் பதிப்பிக்கிறீர்களா? என்று கேட்டுள்ளார். என் அப்பாவும் உடனடியாகச் சம்மதம் தெரிவித்து அந்தப் புத்தகத்தைப் பதிப்பித்தார். அதுதான் கோனார் தமிழுரை. இது நடந்தது 1945-இல். ஆரம்பத்தில் 'கோனார் டெக்ஸ் எக்ஸாமினர்' என்ற பெயரில்தான் வெளிவந்து கொண்டிருந்தது. தமிழுரைதான். ஆனால் பெயர் மட்டும் ஆங்கிலத்தில் இருந்தது. அப்புறம் 1965-இல் கோனார் தமிழுரை என்று பெயர் மாற்றினார்கள்.
கோனார் தமிழுரைக்கு நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது. இப்போது 3-ஆம் வகுப்பிலிருந்து 12-ஆம் வகுப்பு வரைக்கும் உள்ள மாணவர்களுக்கு கோனார் தமிழுரையைப் பதிப்பிக்கிறோம். வருடத்திற்கு 20 இலட்சத்திலிருந்து 25 இலட்சம் பிரதிகள் பதிப்பாகின்றன.
கோனார் தமிழ் உரை இந்த அளவிற்கு வெற்றியடைந்ததற்கான காரணம் என்னவென்று உங்கள் பார்வையில் சொல்ல முடியுமா?
அடிப்படையில் தமிழ் சிலபஸ் கொஞ்சம் கஷ்டமானது. அது போக அதைப் புரிந்து கொண்டு மாணவர்களுக்கு விளக்குவதற்கும் ஆசிரியர்கள் அதிகமாக இல்லை. இப்போது கிராமப்புறங்களை எடுத்துக் கொண்டீர் களானால், ஆசிரியர்கள் குறைவாகவும் மாணவர்கள் அதிகமாகவும் இருக்கின்றனர். அதனால் ஒவ்வொருவருக்கும் விளக்கிச் சொல்வது என்பது இயலாத காரியம். ஆசிரியர்கள் செய்ய வேண்டிய பணியை கோனார் தமிழ் உரை செய்து தந்தது என்று நினைக்கிறேன். இன்னொன்றையும் சொல்ல வேண்டும். கோனார் தமிழ் உரை இந்த அளவு வெற்றி பெற்றதன் பின்னணியில் நிறையச் சிரமங்களைச் சந்தித்துக் கடந்து வந்துள்ளது.
ஆரம்பத்தில் எங்கள் விளம்பரங்களை ரேடியோவில் ஒளிபரப்ப மாட்டார்கள். அதேமாதிரி கோனார் தமிழுரையை பள்ளிக்கு எடுத்து வரக்கூடாது என்று ஆசிரியர்களும் சொல்வார்கள். ஆனால் இந்த எதிர்ப்பு களையெல்லாம் மீறி கோனார் வெற்றி பெற்றது என்றால், அதற்கான தேவை மாணவர்கள் மத்தியில் இன்னும் இருக்கிறது என்றுதானே அர்த்தம்!
இப்போது நாவல் என்ற பாடப் பகுதியையே எடுத்துக் கொள்ளுங் களேன். முழு நாவலை மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதே, அந்தப் பகுதி வைக்கப்பட்டதன் நோக்கம். ஆனால் கோனார் தமிழுரையில் நாவலைச் சுருக்கி கேள்விபதில் வடிவில் தந்துவிடுவதால், மாணவர்கள் முழு நாவலைப் படிப்ப தில்லை. மாணவர்களின் அறிவை கோனார் தமிழுரை வளர விடாமல் செய்கிறது என்று சிலரும் குற்றச்சாட்டுகளை முன்வைக் கின்றனரே! அதைப் பற்றி...?
இல்லை. இதை ஏற்றுக் கொள்ள முடியாது. நாவல் படிக்க வேண்டும் என்ற தூண்டுதல் இருக்கிற ஒருவனை கோனார் தமிழுரை யானாலும் சரி; வேறு தமிழுரையானாலும் சரி; தடுக்க முடியாது. அதுவுமில்லாமல் இது தமிழுக்கு மட்டும் உள்ள குறைபாடு கிடையாது. எல்லா மொழிகளிலும் இது போன்ற உரை நூல்கள் வரத்தான் செய்கின்றன.
அதுவுமில்லாமல் நம்முடைய கல்வி முறையே அப்படித்தான் உள்ளது. எல்லா கேள்விகளையுமா ஆசிரியர்கள் தேர்வுக்குப் படிக்கச் சொல் கிறார்கள். நாலைந்து வருட பழைய கேள்வித் தாள்களை எடுத்து வைத்துக் கொண்டு, அதிலிருந்து சில கேள்விகளைத் தேர்ந் தெடுத்துக் கொடுத்துத்தான் படிக்கச் சொல்கிறோம். இங்கு மதிப்பெண் பெறுவது மட்டுமே முக்கியமாக இருந்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில் மாணவர்கள் அதிகமான மதிப்பெண்கள் வாங்கத்தான் முயற்சி செய்வார்கள். அவர்களுக்கு கோனார் தமிழுரை உதவிசெய்வதால் அதை ஆதரிக்கிறார்கள். நாங்கள் மாணவர்களுக்கு உணவைச் சமைத்துத் தருகிறோம். அவ்வளவுதான்!
கணித்தமிழ்ச் சங்கம் குறித்து...?
இது ஒரு தமிழ் மென்பொருள் விற்பனை யாளர்கள் சங்கம். 1984-85-களில் தமிழில் கணிப்பொறியின் பயன்பாடு வந்த போது அதை முதன்முதலில் பயன்படுத்தியவர்கள் அச்சகத் துறையினர்தான். ஏனெனில் அப்போது அவர் களுக்குத்தான் தேவையிருந்தது. ஆப்செட் பிரஸ், லெட்டர் பிரஸ் போன்ற தொழில் நுட்பங்களைப் பயன்படுத்திக் கொண்டிருந்த போது, தமிழ் எழுத்துருக்களின் வருகை அச்சகத்துறைக்கு மிகுந்த பயன்பாடு உடை யதாக இருந்தது.
அப்போது ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு Encoding பயன்படுத்தி வந்தார்கள். உதாரணம் ஒன்று சொல்ல வேண்டுமெனில், கணிப் பொறியில் எழுத்துக்களை உள்ளீடு செய்யும் போது எண்களாகத்தான் உள்ளீடு செய்வார்கள். ஆ-60, க-70 என்று வைத்துக் கொள்ளுங்கள். இன்னொருத்தர் ஆ-என்பதற்கு 80 என்று உள்ளீடு செய்து வைத்திருப்பார். இதனால் ஒருத்தர் பயன்படுத்தியதை இன்னொருத்தர் படிக்க முடியாத நிலையிருந்தது.
எனவே எழுத்துருக்களைத் தரப்படுத்த வேண்டும் என்று நாங்கள் கோரிக்கைகள் வைத்தோம். இதைப் பற்றி சிங்கப்பூர் தமிழிணைய மாநாட்டில் பேசினார்கள். அடுத்து சென்னையில் நடந்த மாநாட்டில் மோனோ லிங்குவல், பைலிங்குவல் என்ற இரு வடிவங்களை அறிமுகப்படுத்தினார்கள். இந்த இரு வடிவங்களில் அச்சுத் துறைக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதைப் பற்றி நாங்கள் எடுத்துச் சொன்னோம். பைலிங்குவல் என்பது அச்சுத் துறைக்குப் பயன்படாது. மோனோலிங்குவல்தான் பயன்படும் என்பதை நாங்கள் வலியுறுத்தினோம்.
எங்களுக்கு நூறு நாள்கள் அவகாசம் கொடுத்து அதன் நிறை, குறைகளைப் பற்றி ஆராய்ந்து சொல்லச் சொன்னார்கள். நாங்களும் ஆராய்ந்து அறிக்கை கொடுத்தோம். இந்தச் சூழ்நிலையில்தான் அச்சுத் துறையினர் மற்றும் தமிழ் மென்பொருள் தயாரிப்பாளர்கள் எல்லோரும் கூடிப் பணிபுரிய ஒரு அமைப்பு தேவை என்பதை உணர்ந்து கணித்தமிழ் சங்கத்தைத் தொடங்கினோம். கணனி தமிழ் எழுத்துருச் சீர்திருத்தத்தில் கணித்தமிழ்ச் சங்கத்திற்கும் ஒரு முக்கியமான பங்கிருக்கிறது.
இந்தத் துறையில் உங்களுக்கு எப்படி ஆர்வம் வந்தது?
1986-இல் இருந்து நான் அச்சுத் துறையில் பணியாற்றி வருகிறேன். அதுவுமில்லாமல் அமெரிக்காவில் நான் எம்.பி.ஏ படித்த போது இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் வேறு படித்திருப் பதால் இயல்பாகவே இந்தத் துறையில் ஆர்வம் வந்து விட்டது. என் முதல் மனைவி கம்யூட்டர் தான் என்று என் வீட்டில்கூட என்னை கிண்டலடிப்பார்கள்.
கணித்தமிழ் சங்கம் வேறெதுவாது நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறதா?
ஆமாம். நாங்கள் மென்பொருள்களைத் தயாரிப்பது மட்டும் எங்களுடைய பணியென்று சுருக்கிக் கொள்ளவில்லை. தமிழ் கணிப்பொறி உபயோகத்தைப் பெருக்க வேண்டும் என்று திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். இப்போது ஆங்கிலம் தெரிந்தவர் களால் மட்டுமே கணிப்பொறியை உபயோ கிக்க முடியும் என்று நினைத்துக் கொண்டிருப் பவர்களை மாற்றி, தமிழிலும் பயன்படுத்த முடியும் என்று நாங்கள் உணர வைக்கிறோம். கிராமத்தில் இருப்பவர்கள்கூட கணிப் பொறியை உபயோகிக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு, 'கணித்தமிழ்த் திருவிழா' நடத்துகிறோம்.
முதல் திருவிழாவை மதுரையில் நடத்தினோம். பலத்த வரவேற்பு எங்களுக்குக் கிடைத்தது. தமிழிலேயே பயன்படுத்த முடியுமா என்று மக்கள் பலர் ஆச்சர்யமடைந்தனர். குழந்தை களோடு வந்திருந்து தமிழ் மென்பொருட்களை வாங்கிச் சென்றனர். இந்தத் திருவிழாவில் கடைப் பெயர்கள் வரை எல்லாவற்றையும் தமிழ்மயப் படுத்தியிருந்தோம். பாட்டுப் போட்டி, கவிதைப் போட்டி, லைட் மியூசிக் போன்ற வைகளையும் நடத்தி கூட்டம் சேர்த்து, தமிழ் மென் பொருள்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினோம்.
இரண்டாவது மாநாட்டை சென்னையில் நடத்தினோம். இதுவும் வெற்றி பெற்றது. இந்த மாநாடு வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்றது. அடுத்த மாநாட்டை சேலத்தில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். தொடர்ந்து பல இடங் களில் நடத்தச் சொல்லி எங்களுக்கு அழைப் புக்கள் வருகின்றன. எல்லா இடங்களிலும் நடத்தத் திட்டமிட்டு அதற்கான முன்தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.
ஆங்கில இலக்கியம் படித்த, அமெரிக்காவில் படித்த உங்களுக் குத் தமிழ் ஆர்வம் எப்படி வந்தது?
(இதென்ன கேள்வி என்பது போல பார்த்து விட்டு) இயல்பாகவே இருந்தது. நான் தமிழர்களிடம் தமிழில்தான் பேசுகிறேன். தேவையான போது மட்டுமே ஆங்கிலத்தில் பேசுகிறேன். இப்போது பாதி ஆங்கிலம், பாதி தமிழ் கலந்து ஏதோவொரு புதுவிதமாகப் பேசுகிறார்கள். தொலைக்காட்சிகளும் தமிழைக் கொலை செய்யும் சீரிய பணியைச் செவ்வனே செய்து கொண்டிருக்கின்றன. கேட், பஸ் போன்ற வார்த்தைகளெல்லாம் தமிழாக மாறிவிட்டன. எனவே எல்லோரும் தங்களுக்குள் சுய கட்டுப்பாடு வைத்துக் கொண்டு தாய்மொழியான தமிழை வளர்க்கப் பாடுபட வேண்டும்.
நான் என்னளவில் என் நண்பர்களுடன் தமிழில்தான் உரையாடுகிறேன். எங்களுடைய பதிப்பகமும் தமிழில்தான் புத்தகங்களை வெளியிடுகிறது (பார்க்க: இளந்தென்றல் பகுதி). தமிழர்கள் எல்லோரும் சேர்ந்து தமிழைப் பாதுகாக்க வேண்டும். மற்றவர்களைச் சொல்வதைவிட்டு விட்டு உங்களிடமிருந்தே நீங்கள் ஆரம்பியுங்கள் என்பதே என்னுடைய வேண்டுகோள்!
சந்திப்பு: சரவணன் |