வெறுக்கத்தக்கதா ஜோதிடக்கலை?
ஜோதிடக்கலை தற்காலத்தில் படித்தவர் களால் பெரும்பாலும் வெறுக்கப்படுகிறது. அதை ஒரு மூடநம்பிக்கை என முத்திரை குத்தி விடுகிறார்கள். ஆனால் பெரும்பாலும், இவர்கள் எந்த அளவிற்கு ஜோதிடத்தை இழிவாய்ப் பேசுகிறார்களோ, அதைவிட அதிக அளவில் அவர்கள் வீட்டுப் பெண்கள் ஜோதிடப் பைத்தியமாக இருப்பார்கள்.

இந்த இரண்டுமே தவறான போக்கு. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விஷம் என்பது போல் ஜோதிடத்தில் வெறியாக இருப்பதும் தவறு. சிலர் சின்ன விஷயத்திற்கெல்லாம் ஜாதகத்தைப் பார்ப்பது உண்டு. யாராவது ஜோஸ்யம் பார்க்கிறவர்கள் என்றால், அதுவும் இலவசமாக என்றால் உடனே ஓடுகிற வழக்கம் பலரிடம் இருக்கும். பத்திரிகைக்காரர்கள் இதைப் பயன்படுத்திக்கொண்டு வாரபலன் மாதபலன் என்றெல்லாம் போடுகிறார்கள். முன்பெல்லாம் சனிப்பயிற்சி பலன் பற்றிய புத்தகங்கள் இரண்டரை வருஷத்திற்கு ஒரு முறை வெளியிடப்படும். வரவர சனி கிரகம் வக்கிர ஆரம்பம். வக்கிர நிவர்த்தி என்று அடிக்கடி வார, மாத இதழ்களில் பலன் போடுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் அவரவர் ஜாதகத்தில் கிரகங்களின் நிலை, தசா புத்தி போன்றவற்றைப் பொருத்துதான் பலன் அமையும். பொதுப்பலன் போடுவதன் மூலம் பொது மக்கள் குழம்பிப் போவதோடு அல்லாமல் உண்மையான கடவுள் பக்தி குறைந்து 'எத்தைத் தின்னால் பித்தம் தெளியும்' என்று பிராயச்சித்தம், பரிஹாரம் என்று பணத்தை வாரி இறைக்கிறார்கள்.

அடுத்ததாக போலி ஜோதிடர்களின் கொட்டம் தாங்க முடியவில்லை. யார் போலி என்பதே ஒரு பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. நாம் குறிப்பிடுவது கிளி ஜோஸயர்களையோ அல்லது குறி சொல்லும் குறத்தியரையோ அல்ல. சாமியார் போல வேடமணிந்து ஜாதகம் பார்த்து சொல்லும் சிலரைப்பற்றித்தான் சமீபத்தில் ஆந்திர பிரதேசத்தில் ஒரு கிராமத்தில் யாரோ ஒரு ஜோஸ்யர் சொன்னதற்காக சில இளம் பெண்கள் நிர்வாணமாக ஓடியதை பத்திரிகை களில் படித்தோம். ஜோஸ்யர்கள் என்று தங்களைக் கூறிக் கொள்பவர்கள் இப்படி பாமர மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறார்கள். ஆ¡னல் கெட்ட பெயர் ஜோதிடத்திற்கு அல்லவா வருகிறது?

இந்துமதத்தில் ஜோதிடம் ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறது. ஆகவே, இத்தகைய முட்டாள்தனமான செயல்கள் பத்திரிகைகளில் வரும்போது, பலருக்கு மதத்தின் மீதும், இறை நம்பிக்கை மீதும் வெறுப்பு ஏற்படுவது இயற்கையே.

இந்த விஷயத்தில் படித்தவர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் அதிகமான பொறுப்பு இருக்கிறது. முதலில் பொதுப்பலன்கள் போடுவதை எல்லா பத்திரிகைகளும் நிறுத்த வேண்டும். இந்தியாவில் மட்டும்தான் இந்த பழக்கம் இருக்கிறது என்று நினைக்க வேண்டாம். உலகெங்கிலும் உள்ள பல பத்திரிகைகள் இந்தப் பகுதியை விடாமல் பிரசுரித்துக்கொண்டு இருக்கிறார்கள். சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பே பாபிலோனியா (ஈராக்) எகிப்து, மற்றும் சீனா போன்ற நாடுகளில் கிரஹங்களைக் கொண்டு ஜோதிடம் சொல்லும் வழக்கம் இருந்தது. மெஸபடோமியாவைச் சேர்ந்த செமூரியர்கள் சூரியன், சந்திரன், சுக்கரன் போன்ற கிரஹங்களை தெய்வங்களாக வழிபட்டதாகவும் அறிகிறோம்.

ராசிபலன் பகுதியை படிப்பதால் நேரம் வீண் என்பது எல்லா வாசகர்களுக்கும் தெரியும். ஆயினும் காலையில் காபி டீ குடிப்பது போல் ராசிபலன் பார்க்கும் பழக்கத்திற்கு எல்லோரும் அடிமையாகிவிட்டார்கள். இப்பொழுது பல தொலைக்காட்சி நிறுவனங்களும் இணையதள வலைகளும் போட்டி போட்டுக்கொண்டு ராசிபலன்கள் போடுகிறார்கள். இதை தடுப்ப தற்கு உலகெங்கும் உள்ள பத்திரிகைகள் டிவிக்கள் மற்றும் இன்டர்நெட் தளங்கள் முன்வராவிட்டால் அரசாங்கங்களே தடை செய்யும் விதத்தில் சட்டம் இயற்றலாம். பொதுப்பலன்களை போடுவதற்குப் பதில் பத்திரிகைகள் ஜோதிட ஆராய்ச்சிக் கட்டுரை களைப் பிரசுரித்தால் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

ஜோதிடம் என்பது ஓர் உயர்ந்த கலை. ஒரு தத்துவம் என்றே சொல்லலாம். தெய்வீகமானது. விஞ்ஞானரீதியாக மிக நுணுக்கமானதும்கூட. ஜோதிடருக்கு கணித அறிவு இருக்க வேண்டும். மனதில் கல்மிஷம் (கெட்ட எண்ணம்) இருக்கக் கூடாது. பணத்திற்காக பேராசை உள்ளவர்கள் ஜோதிடம் சொன்னால் நிச்சயம் பலிக்காது.

அதாவது மற்ற பாடங்களைப்போல ஜோதிடத் தை கல்லூரிக்குச்சென்று மனப்பாடம் செய்து ஜோதிடர் என்ற பட்டம் பெற்றுவிட்டால் ஒருவர் உண்மையில் ஜோதிடர் ஆகிவிட முடியாது. ஜோதிட அறிவு முப்பது சதவிகிதம் என்றால் தெய்வ அருள் எழுபது சதவிகிதம் இருக்க வேண்டும் என்று பெங்களூரைச் சேர்ந்த ஜோதிட மேதை காலஞ்சென்ற திரு பி.வி. ராமன் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

தெய்வ அருள் என்பது என்ன என்ற கேள்வி எழும். இன்ட்யூஷன் என்று சொல்வார்கள் அல்லவா? அதுதான் தெய் அருள். அது எல்லோருக்கும் இருக்காது. இருப்பவர் களுக்கும் எப்பொழுதும் இருக்கும் என்றும் சொல்ல முடியாது.

ராமாயணத்தில் ஒரு காட்சி. ஒருநாள் இராவணன் சீதையிடம் தகாத வார்த்தைகளைச் சொல்லி தன் மனைவியாகும்படி வற்புறுத்து கிறான். அவன் போனதும் மற்ற அரக்கிகளும் அவளை கடுஞ் சொற்களால் தூற்றி அவதூறாகப் பேசுகிறார்கள். அப்பொழுது திரிஜடை என்ற அரக்ககுல பெண் மட்டும் தான் கண்ட ஒரு கனவை மற்ற பெண்களுக்கு எடுத்துச் சொல்கி றாள். தன் கனவில் ராம லட்சுமணர்கள் வந்து சண்டையிட்டு வெற்றி கொள்வதை விலாவாரி யாக எடுத்துச் சொல்கிறாள். அதே நேரம் சீதை வருத்தம் தாளாமல் தற்கொலை செய்து கொள்ள மரக்கிளை ஒன்றின் கீழே நிற்கிறாள். அப்போது அவளுக்கு சுப சகுனங்கள் பல தோன்றுகின்றன.

இது சுந்தர காண்டத்தில் வருகிறது. மேலே சொன்ன விஷயங்கள் நடந்து கொண்டிருக்கும் போது ஹனுமார் அதே இடத்தில் மரத்தின் மீது அமர்ந்து ராம நாமத்தை ஜபித்துக் கொண்டிருக்கிறார்.

சீதைக்கும் திரிஜடைக்கும் அப்போது மட்டும் நல்ல சகுனங்கள் ஏன் தோன்ற வேண்டும்? அதுதான் இன்ட்யூஷன் அதை நாம் தெய்வ அருள் என்கிறோம். ஏன்? அந்த நேரத்தில் அங்கு ஹனுமார் இருந்தார் அல்லவா? அவருடைய தெய்வீகக் கிரணங்கள் கீழே இருந்த எல்லோர் மீதும் பட்டன.ஆனாலும் திரிஜடை மற்றும் சீதை இருவரும் நல்ல உள்ளம் கொண்டவர்களாக இருந்ததால் அவர்களுக்கு வரப்போகும் நிகழ்ச்சிகள் திரைப்பட காட்சிகள் போல தெள்ளத் தெளிவாகத் தெரிந்தன. திரிஜடை மற்றும் சீதையை ஒப்புநோக்கும்போது இராவணன் நிரம்பப் படித்தவன். கடவுள் பக்தி மிக்கவன். ஆனால் துர்புத்தி உள்ளவனா யிருந்தான். ஆகவே அவனுக்கும் பிற அரக்கி களுக்கும், சீதை எவ்வளவு எடுத்துச் சொல்லியும் வரப்போகும் தோல்விகளும், உயிர்ச்சேதங் களும் மனத்தில் படவில்லை.

அடுத்து, பொதுவாகவே ஜாதகங்கள் மிகத் துல்லியமாகக் கணித்தால்தான் பலன் சரியாக இருக்கும். ஆனால் இப்படி மிகச்சரியாக கணிக்கப்படும் ஜாதகங்கள் மிகக்குறைவே. ஒரு குழந்தை சென்னையில் பிறக்கிறது என்று சொன்னால் என்ணூர் முதல் தாம்பரம் வரை சென்னை என்று எடுத்துக் கொள்கிறார்கள். அதாவது ஒரே அட்ச ரேகையை வைத்துக் கொண்டு ஜாதகம் கணிக்கப்படுகிறது. இப்படி இன்னும் பல வகைகளிலும் தவறுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் நிறையவே உண்டு.

இக்கட்டுரையின் தொடக்கத்தில் சில புத்திஜீவிகள் ஜோதிடக்கலையை அலட்சியப் படுத்துகிறார்கள் எனக் குறிப்பிட்டிருந்தோம். பெரும்பாலோர் ஜோதிடக்கலையை ஆழ்ந்து படிக்காமல் இது மூடநம்பிக்கை என்று ஒதுக்கிவிடுகிறார்கள். அல்லது போலி ஜோதிடர்களிடம் ஏமாந்துபோய் ருசி கண்ட பூனையாய் ஆகியிருப்பார்கள். படித்தவர்கள் ஜோதிடர்களிடம் போகாவிட்டால் பரவா யில்லை. போகாமல் இருப்பது நல்லதே. இறைவனிடம் பாரத்தைப் போட்டால் நாளென் செய்யும், கோளென் செய்யும் என இருப்பது மிகச்சிறந்தது. ஆனால் அந்தக் கலையைப் பழிக்காதீர்கள். நல்ல தரமான ஜோதிடப் புத்தகங்களைப் படியுங்கள்.

ஜோதிடம் வெறுக்கத்தக்கவல்ல. அதை வீணாகக் குறை கூறவேண்டாம். அதில் வெறியும் வேண்டாம். அது ஒளி விளக்கு (ஜோதி). நாம் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் அதன் ஒளி நமக்கு கிடைத்துக் கொண்டிருக்கும். அந்த ஒளியைப் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறுவோம்.

என்.எஸ். நடராஜன்

© TamilOnline.com