ராஜம் கிருஷ்ணன்
''வெற்றி பெற்ற தமிழ் நாவல்கள் என்று கட்டுரை எழுது வாங்க. அதில் என்னுடைய நாவல் பற்றியோ, என் பெயரோ இருக்காது. பகவத் கீதையில், ஒரு வாசகம் வரும் பலனை எதிர்பார்க்காமல் இரு என்று" இப்படித்தான் ராஜம் கிருஷ்ணன் ஒரு நேர்காணலில் தன்னைப் பற்றிக் குறிப்பிட்டார். அவர் சொன்ன மாதிரியே தான் இப்போதும் இருந்து கொண் டிருக்கிறார்.இன்றுகூட படிப்பு, எழுத்து என்று தீவிரமாகி இயங்கி வருபவர் ராஜம் கிருஷ்ணன்.

1950களுக்குப் பின்னர் தமிழ் இலக்கியச் சூழலில் பிரவேசித்து சிறுகதை, நாவல், ஆய்வு என்று பல தளங்களிலும் முழு மூச்சுடன் இயங்கி வருபவர். இதுவரை 75க்கு மேற்பட்ட நூல்களை தமிழுக்கு வழங்கி யுள்ளார். எழுத்துலகம் என்பது ஆண் மையம் சார்ந்ததாகத்தான் உள்ளது. இந்த உலகில் ஒரு பெண்ணாக இருந்து செயற் படுவது என்பது இலகுவானதல்ல. ராஜம் கிருஷ்ணனின் ஆளுமை, சமூகநோக்கு, கருத்துநிலைத் தெளிவு ஆகியவை அவரை சக எழுத்தாளர்களிடமிருந்து தனித்தன்மை யுடன் இனங்காட்டும்.

திருச்சி முசிறியில் 5.11.1925 இல் பிறந்தார். வீட்டுச்சூழல் ஆங்கிலம் சார்ந்த தாகவே இருந்தது. தமிழில் எழுதி ஓர் எழுத்தாளராக தன்னை நிறுத்தக்கூடிய சூழல் அங்கு இருக்கவில்லை. அவரது விடாமுயற்சிதான் தமிழ் எழுத்தாளராக பரிணமிக்க முடிந்தது.

ஆங்கிலம், சமஸ்கிருதம் மொழிகளில் நன்குபுலமை உள்ளவர். ஆங்கில இலக்கியங் களை அதிகமாக படித்து வந்தவர். இசை ஞானமும் வயலினை நன்கு வாசிக்கும் திறனும் பெற்றிருந்தவர். ஆனாலும் அந்தக் கால வாழ்க்கை முறை, குடும்ப சூழ்நிலை ஆகியவற்றையெல்லாம் உடைத்து கொண்டு தான் அவர் வெளியே வந்தார்.

கணவரின் பணிஇடமாற்றம் காரணமாக வாழ்க்கையின் பெரும் பகுதியை பல்வேறு மாநிலங்களிலும் ஊர்களிலும் கழித்தவர். இந்த அனுபவ விரிதளம் ராஜம் கிருஷ்ணனின் படைப்புக் களங்களாக நீட்சி பெற்றன. பல்வேறுபட்ட மக்களது வாழ்க்கை அனுபவம், அவர்களது வழக்காறுகள் இவரது படைப்பின் ஆதாரத்தளமாயின.

படைப்புக்களம் தேர்ந்தெடுக்கப்பட்டு அதற் குரிய தனித்துவம் துலங்குவதற்கு முழுமூச்சு டன் இயங்குவார். அந்தக் கதைக்களம், கதை மாந்தர்களுடன் தன்னையும் ஐக்கியப்படுத்தி, அவர்களில் ஒருவராக வாழ்ந்து ஆத்மத் துடிப்புடன் எழுதி வருபவர். அவரது அலைவாய் கரையில், கரிப்பு மணிகள், கூட்டுக்குரல்கள், குறிஞ்சித் தேன் போன்ற படைப்புக்கள் இதனை மெய்ப்பிக்கும்.

மலைவாழ்மக்கள், கடற்கரை வாழ் மக்கள், மீனவப் பெண்கள், உப்பளத் தொழிலாளர்கள், விவசாயக் கிராமம், குழந்தைத் தொழிலாளர்கள் என கதைக் களன்கள் விரிவு பெற்றன. இவர் காலத்தில் இருந்து இன்றுவரை எந்தவொரு எழுத்தாளருக்கும் இல்லாத துணிவும் நேர்மையும் தனித்தன்மையும், சமூகநோக்கும் தான் ராஜம் கிருஷ்ணனை தமிழ் இலக்கியச் சூழலில் வேறுபடுத்துகிறது.

ஒடுக்கப்பட்ட சுரண்டப்பட்ட மக்கள் சார்ந்து சிந்திப்பதும் எழுதுவதும் தனது சமூகப் பொறுப்புமிக்க செயற்பாடாகவே கருதி வருகின்றார். பெண்கள் பிரச்சனைகள் குறித்து பல்வேறு ஆய்வு நூல்களையும் தனித்து எழுதி யுள்ளார்.

தமிழ் இலக்கியம் சுட்டும் இதிகாச புராண பாத்திரங்கள் மீது அறிவுபூர்வமான உரை யாடலும் செய்கின்றார். வேதமரபு பற்றிய புதிய பொருள்கோடல் செய்யும் பாங்கை வளர்த்துச் செல்கின்றார்.

அவர் காலத்து எழுத்தாளர்களில் இருந்து தனித்துவமாக செயற்படுவதற்கான தனித் தன்மைகள் நிரம்பப் பெற்றவர். சாகித்ய அகாதமி உள்ளிட்ட பல்வேறு பரிசுகளையும் கெளரவங் களையும் பெற்றுள்ளார். ஆயினும் இவரது திறமை தகுதிகள் உள்ள ஓரு ஆண் படைப்பாளிக்கு கிடைக்கக்கூடிய கணிப்பு, கெளரவம் இவருக்கு கிடைக்க வில்லை என்ற நடைமுறையையும் சுட்டிக்காட்டத்தான் வேண்டும். ஒரு பெண் படைப்பாளியாக இருப்பதனால் ராஜம் கிருஷ்ணன் பல்வேறு போராட்டங்களுக்கு ஆட்பட்டுத் தான் இந்த எழுத்துலகில் நிற்க முடிகிறதெனில் மிகையல்ல.

எங்க வீட்டில் யாரும் என் கையில் பேனாவைக் கொடுத்து எழுதச் சொல்லவில்லை. ''மாமி யார் வீட்டில் யாரோட மனசும் நோகாமல் நடக்க வேண்டும். முதல்நாள் அன்றே கரண்டியைக் கையில் கொடுத்து சமையல் கட்டிற்கு அனுப்பி விடுவார்கள். நீ முகம் சுளிக்ககூடாது. அது பெரிய குடும்பம். அது வேணும் இது வேணும் என்று ஆசைப்படக் கூடாது'' .இந்த மாதிரியாக உபதேசங்கள்தான் ராஜம் கிருஷ்ணனுக்கு சொல்லப்பட்டது.

இந்த உபதேசங்களையும் மீறி சமூக அக்கறையும் சமூகநோக்கமும் உள்ள படைப்பாளியாக அவர் உயர்வதற்கு வளர் வதற்கு தக்க பின்புலங்களை உருவாக் கினார். தமிழ் இலக்கிய உலகில் தனக்கான தனித்தன்மையுடன் இயங்கும் பாங்கை வளர்த்துக் கொண்டார்.

ராஜம் கிருஷ்ணன் படைப்புக்களை தவிர்த்து தமிழ் இலக்கிய வரலாறு எழுதப் படுவது மிக மோசமான வரலாற்றுத் தவறாகும். அவர் எண்ணிக்கை அடிப் படையில் மட்டுமல்ல தரத்தின் அடிப் படையிலும் நமக்கு அதிகமாகவே வழங்கி யுள்ளார்.

ஆசிரியரின் சில நூல்கள்

நாவல்

மயிலம் பட்டு பள்ளி
பாதையில் பதிந்த அடிகள்
ஊமை அரண்கள்
மண்ணகத்துப்பூந்துளிகள்
சுழலில் மிதக்கும் தீபங்கள்(தமிழ் நாடு அரசு பரிசு பெற்றது)
ஆண்களோடு பெண்களும்
யாதுமாகி நின்றாய்
கரிப்பு மணிகள் (இலக்கிய சிந்தன பரிசு பெற்றது.
புதிய சிறகுகள்
வேருக்கு நீர் ( சாகித்ய அகடமி பரிசு பெற்றது.)

சிறுகதை தொகுப்பு

களம்
அவள்

கட்டுரை

காலந்தோறும் பெண்
இந்திய சமுதாய வரலாற்றில் பெண்கள்
காந்தி தரிசனம்

மது

© TamilOnline.com