ராசிபலன்
''நீங்களா இந்த ராசிபலன் பேப்பரை வாங்கி வந்தீங்க?'' அன்பு மனைவி கேட்டதும் ''பூம் பூம்'' மாடுபோல் தலையசைத்தேன்.

''கொண்டாங்க, உங்க ராசிக்கு என்ன பலன்னு பாக்கறேன்.''

''எனக்கு என்ன பலன் போட்டிருக்குனு நானே பாத்துட்டேன். மீனு, ஹ¤ம்... என்மேல அதிகமான அன்பும் பாசமும் கொண்டவங் களுக்கு விபத்து ஏற்படுமாமே''

''நான் எதுக்கும் ஜாக்கிரதையாகவே இருக்கேங்க'' என்று சொன்னாள்.

கொஞ்ச நாளில் நானும் இதை மறந்து போனேன். அந்த மாத ராசிபலன் பேப்பரில் மாவு சலித்து, சப்பாத்தி இட்டு போட்டு எண்ணெய் பிசுக்கு துடைத்து உருமாறிய பிறகு குப்பை தொட்டிக்கும் போய்விட்டது.

ஒருநாள்... நான் ஆபீஸ் விட்டு வீடு வந்த போது மீனு புர் முகத்துடன் உட்கார்ந்திருந்தாள்.

''என்னம்மா மீனு? உடம்பு சரியில்லையா?'' உடம்பு தெம்பாக சண்டைக்கு தயாராக இருக்கிறாள் என்று நிச்சயமாக தெரிந்தும் ஒரு அசட்டு(!) தைரியத்தில் கேட்டேன்.

''கரெக்டா பதில் வரணும். பொய் சொல்லக் கூடாது சரியா?'' இருபத்தாறு வயது மனைவி இருபத்தெட்டு வயது இளைஞனை பார்த்து எல்.கே.ஜி. பையனை மிரட்டுவது போல் கேட்டதும் பயத்தில் என்னை அறியாமல் ''ம்..'' என்றேன்.

''உங்க ராசிக்கு என்ன பலன் போட்டிருந்தது.''

யோசித்து சரியாய் சொன்னேன்.

ஓ வென்று அழுதாள். ''மீனு என்னாச்சு?'' பதறினேன்.

''அந்த கோடிவீட்டு பத்மா தெரியுமா?''

''ஓ... மாநிறமா சுருட்டைமுடியோடு... துரு துருவென்று இருப்பாளே. இருபதாவது பிறந்த நாளுக்கு ஸ்வீட்கூட கொடுத் தாளே''... வேறு சில தெரிந்த விவரங்களை சொல்ல துவங்கிய போது மீனுவின் முகம 'இடிஅமீன்' போலானதை பார்த்து லேட்டாக உஷாரானேன்.

''சொல்லுங்க... ஏன் நிறுத்திட்டீங்க'' ஆவேச மாய் கொட்டினாள்.

சே... அபாய எச்சரிக்கை எண் ஒன்பது ஏற்றப்பட்டது தெரியாமல் மீன் பிடிக்க போன மாதிரி நானே வாயை கொடுத்து மாட்டிண் டேனா?... நாக்கு குழறியது.

''அவளுக்கு... என்ன இப்ப...''

''அந்த சக்களத்தி 'டிவிஎஸ்' பிப்டில போகும் போது ஆக்ஸிடெண்ட் ஆகி கையில பயங்கர அடியாம். கட்டு போட்டிருக்கா... சே... இந்த ஆம்பிளைங்களே இப்படித்தான்... நான் உங்களுக்கு என்ன குறை வெச்சேன்?'' என்பதை தொடர்ந்து ஒப்பாரி.

ராசிபலன் பார்த்தது தப்பு. அதை மனைவி யிடம் சொன்னது அதைவிட தப்பு என்று நொந்து கொண்டாலும் இப்படி ஒரு சான்சை இத்தனை நாள் மிஸ் பண்ணிட் டோமே என்ற எண்ணம் முதல்முறையா உதித்தது.

மீரா சிவகுமார்

© TamilOnline.com