காந்தியிடம் வாழ்த்துப் பெற்றவர்!
எண்பது வயதிலும் இருபது வயதுக்குரிய சுறுசுறுப்புடன் உழைத்துக் கொண்டிருக்கிறார் பேராசிரியர் சிகாமணி. அடிப்படையில் பேராசிரியர் சிகாமணி ஆங்கிலப் பேராசிரியர். ஆனால் தமிழில் குழந்தைகளுக்கான புத்தகங்களை படு சிரத்தையுடன் எழுதிக் குவித்துக் கொண்டிருக்கிறார்.

'ஆங்கிலத்தில் சம்பாதித்த பணத்தைத் தமிழுக்காகச் செலவழித்துக் கொண்டிருக் கிறேன்' என்று சொல்லும் பேராசிரியர் சிகாமணி தற்போது என்னவிதமான பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் என்று சொல்ல ஆரம்பிப் பதற்கு முன்பாக சின்ன ஒரு இடைவெட்டு...

"இளம் வக்கீல்களும், படித்த இளைஞர்களும் அழகாக எழுதுவதைக் கண்ட போது என்னைக் குறித்து நானே வெட்கப்பட்டதோடு ஆரம்பத் தில் அசிரத்தையுடன் இருந்து விட்டதற்காக வருத்தப்படவும் செய்தேன்.

மோசமான கையெழுத்தை அரை குறையான படிப்புக்கு அறிகுறியாகக் கொள்ள வேண்டும் என்று கருதினேன். ஒவ்வொரு இளைஞரும், இளம் பெண்ணும் என்னுடைய உதாரணத்தைக் கண்டாவது எச்சரிக்கையுடன் இருக்கட்டும். கையெழுத்து நன்றாக இருக்க வேண்டியதும் படிப்பின் ஒரு பகுதி என்பதை அறியட்டும்.

குழந்தைகளுக்கு எழுத்துக்களை எழுதுவதற் குக் கற்றுக் கொடுப்பதற்கு முன்னால், சித்திரம் வரையக் கற்றுக் கொடுக்க வேண்டும்" என்று தன்னுடைய சுயசரிதையில் மகாத்மா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

இப்போது மறுபடியும் பேராசிரியர் சிகாமணி அவர்களின் செயல்பாடுகளுக்கு வரலாம்! தனது அழகான ஆங்கிலக் கையெழுத்துக்காக சிகாமணி 1946-இல் மகாத்மா காந்தியிடம் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டிருக்கிறார். "அப்போது காந்தியிடம் என்னை அறிமுகம் செய்து வைத்த போது, அதன் மதிப்பு எவ்வளவு என்பதை நான் அறிந்திருக்கவில்லை" என்று மாகாத்மா காந்தியுடனான தன்னுடைய அனுபவங்களை நினைவுகூர்கிறார்.

மாகாத்மா காந்தி சத்யசோதனையில் குறிப்பிட்டுள்ளபடி குழந்தைகளுக்கான 'சித்திரம்' என்ற புத்தகத்தைப் பேராசிரியர் சிகாமணி எழுதியிருக்கிறார். இந்த 'சித்திரம்' ஐந்து பகுதிகளாக வெளிவந்துள்ளது. குழந்தை களுக்குப் புரிகிற படியான வாக்கியங் களைக் கொடுத்து, அழகான கையெழுத்து வர துணைபுரிகிற வகையில் இந்தப் புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த புத்தகங்களின் எளிமையை உணர்த்து வதற்கு,

"சின்னஞ் சிறு குருவி போல நீ
திரிந்து பறந்து வா பாப்பா
வண்ணப் பறவைகளைக் கண்டு நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா"

என்ற ஒரு பாடலை மட்டும் உதாரணம் சொன்னால்கூட போதுமானது!

அடிப்படையில் ஆங்கிலப் பேராசிரியர் தமிழில் பணிகள் அதென்ன காரணம் என்றால், "1953 என்று நினைக்கிறேன். அப்போது நான் பச்சையப்பன் கல்லூரியில் சேர்வதற்காகச் சென்றேன். அப்போது அங்கு மு.வரதராசனார் மற்றும் அன்பழகன் போன்றோர்கள் பணி யாற்றிக் கொண்டிருந்தார்கள். அப்போது நான் அவர் களிடம் ஆங்கிலத் துறை வேண்டுமென்று கேட்டேன். 'எதற்காக ஆங்கிலத் துறையைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறாய்?' என்று என்னிடம் கேட்டார்கள்.

'தமிழுக்குச் சேவை செய்வதற்காக' என்று நான் பதில் சொன்னேன். அவர்களுக்கு நான் சொன் னதன் பொருள் விளங்கவில்லை. 'மற்ற மொழி களிலுள்ள செல்வங்களை நமது தமிழுக்குக் கொண்டு வர வேண்டுமானால் ஆங்கில அறிவு அவசியம். அதற்காகவே நான் ஆங்கிலம் படிக்க விரும்புகிறேன்' என்று நான் விளக்கிச் சொன் னேன். அவர்களுக்கு புரிந்தாலும், எனக்கு கல்லூரியில் இடமளிக்கப்படவில்லை.

அப்புறம் பிரிதொரு கல்லூரியில் நான் ஆங்கிலம் படித்து தமிழுக்காகச் சேவை செய்து கொண்டிருப்பதெல்லாம் தனிக்கதை" என்று நினைவுகூர்கிறார்.

பேராசிரியர் சிகாமணி எழுதியிருக்கும் குழந்தைகளுக்கான பாடல்கள் கொஞ்சம் வித்தியாசமானவைகள். தமிழில் உள்ள ஒவ் வொரு எழுத்திற்கும் ஒரு முழுப் பாடல் எழுதியிருக்கிறார். 'பதினோரு பாடல்கள் பத்து நிமிடத்தில் பைந்தமிழ்' என்று தன்னுடைய குழந்தைப் பாடல்கள் குறித்து விளக்குகிறார்.

உதாரணத்திற்கு ஒருபாடலைச் சொல்ல வேண்டுமெனில்,

"புள்ளி ஒன்று வைக்கலாம்
புரிந்து கொண்டு வைக்கலாம்
தள்ளித் தள்ளி வைக்கலாம்
தகுந்த இடத்தில் வைக்கலாம்"

என்று முற்றுப்புள்ளி வைப்பதை விவரிக்கும் இந்தப் பாடலைச் சொல்லலாம்.

இவருடைய புத்தகங்கள் அனைத்தும் ஆரம்ப நிலையில் தமிழ்க் கற்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைந்திருக்கின்றன. நிகண்டுகளைப் பார்த்துப் பொருள் தெரிந்து கொள்ள வேண்டிய மிக்க கடுமையான அருஞ்சொற்களைக் கூட மிக எளிமையான வகையில் குழந்தைப் பாடல்களில் பயன் படுத்துகிறார்.

தமிழைப் புதிய கோணத்தில் பார்ப்பதாகச் சொல்கிறார். உயிரெழுத்து மெய்யெழுத்துக்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு பாடல் என எழுதி யிருக்கிறார். "தமிழில் வார்த்தைகளே இல்லை என்பது போல இந்தச் சினிமாக்காரர்கள் நினைத்து அந்நிய மொழியிலிருந்து வார்த்தை களை எடுத்துப் பயன்படுத்திக் கொண்டிருக் கின்றனர். ஆனால் தமிழில் ஏகப்பட்ட வார்த்தை கள் பயன்படுத்தாமலே குவிந்து கிடக்கின்றன. இவற்றையெல்லாம் என் பாடல்களில் கொடுப் பதன் மூலம் குழந்தைகளுக்கு அந்த வார்த்தை களை அறிமுகப்படுத்துகிறேன். இதற்காக தமிழில் இருக்கும் அத்தனை அகராதிகளையும் புரட்டிப் பார்த்து விட்டேன்" என்கிறார் பேராசிரியர் சிகாமணி.

அண்ணாமலை பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக் கழகம், பாண்டிச்சேரி பல்கலைக் கழகம் போன்றவற்றில் தொலைதூரக் கல்விக் கான வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றி வரும் இவர், 'படி பாப்பா படி', 'பாடு பாப்பா பாடு', 'சித்திரம்', 'குழந்தைகளுக்கான பக்திப் பாடல் கள்' போன்ற புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

தற்போது 'ஆடு பாப்பா ஆடு' என்கிற ஒரு புத்தகத்தை எழுதி முடித்துவிட்டு 'எனக்கான சடையப்ப வள்ளலுக்காகக் காத்திருக்கிறேன்' என்கிறார்.

தமிழ்நாட்டில் சடையப்ப வள்ளல்கள் இருக் கிறார்களா என்ன?

சடையப்ப வள்ளல்களை விட்டுத் தள்ளுங்கள், புத்தகங்களை வாங்கவாவது செய்யலாமே! வாங்க விரும்புபவர்கள்,

பேராசிரியர் தங்க.சிகாமணி
6,ஜானகிராமன் காலனி,
அரும்பாக்கம்,
சென்னை-600 106
தொலைபேசி: 91-044-4756477, 4750726
என்ற முகவரியில் தொடர்பு கொள்வதற்கும் வாய்ப்புக்கள் இருக்கின்றன!

*****


பேராசிரியர் சிகாமணியின் புத்தகத்திலிருந்து சில பாடல்கள்...

ச முதல் சௌ வரை

"சமரசமாய்ப் பழக வேண்டும் பாப்பா- என்றும்
சாதியின்றி வாழ வேண்டும் பாப்பா
சிக்கனமாய்ச் சேர்க்க வேண்டும் பாப்பா-நன்றாம்
சீதனமாய்க் காக்க வேண்டும் பாப்பா
சுந்தரமாய் உடுக்க வேண்டும் பாப்பா-அந்தச்
சூரியன் போல் கொடுக்க வேண்டும் பாப்பா
செல்வத்தைச் சேர்க்க வேண்டும் பாப்பா-அப்படி
சேர்த்தவற்றைக் காக்க வேண்டும் பாப்பா
சைனயித்தில் சேர வேண்டும் பாப்பா-அங்கு
சொன்னபடி மாற வேண்டும் பாப்பா
சோர்வின்றி ஓட வேண்டும் பாப்பா எங்கும்
சௌகரியமாய்ப் பாட வேண்டும் பாப்பா"

அ முதல் ஔ வரை

"அலை மகளே ஆடியாடி வருக எங்கள்
ஆதவனைத் தேடித் தேடித் தருக
இலைமகளே ஓடியோடி வருக தங்கள்
ஈகையெல்லாம் நாடி நாடித் தருக
உமையாள் மகனே தேடித் தேடி வருக எங்கள்
ஊரைக் காக்கப் பாடிப் பாடி நிற்க
என்கணன் மகனே எட்டி எட்டி வருக உலகில்
ஏழ்மை நீங்க கொட்டித் கொட்டித் தருக
ஐங்கரனே முட்டி முட்டி வருக அகில
ஒற்றுமையைக் கட்டிக் கட்டிக் காக்க
ஓங்காரி மகனே சாடி சாடி வருக கலக
ஔவியங்கள் ஓடியோடிப் போக"


சரவணன்

© TamilOnline.com