உசிலியம் (பருப்பு உசிலியல் கறி)
பெரும்பாலோர் மைக்ரோவேப் அடுப்பை பால் மற்றும் ஏற்கனவே சமைத்த பதார்த்தங்களை சுட வைப்பதற்கு மட்டுமே பயன்படுத்து கிறார்கள். வழக்கமாக நாம் அடுப்பில் சமைப்பதை மைக்ரோவேவிலும் எளிதாய் செய்யலாம்.

பருப்பு உசிலியல் கறி தஞ்சை மாவட்டத்தில் பிரபலமானது.

தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு - 50 கிராம்
கடலை பருப்பு - 50 கிராம்
மிளகாய் வற்றல் - 4 அல்லது 5
உப்பு - அரை டீஸ்பூன் (தேவைக்கேற்ப)
மஞ்சள் பொடி - கால் டீஸ்பூன்
பீன்ஸ் நறுக்கியது - 2 (கொத்தவரங்காய், புடலாங்காய் போன்ற காய்கறிகளிலும் பருப்பு உசிலி செய்யலாம்)

தாளிக்க தேவையான சாமான்கள்

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு,உளுத்தம் பருப்பு - சிறிது
பெருங்காயம் - ஒரு பிஞ்ச்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை

துவரம்பருப்பு மற்றும் கடலைப்பருப்பு இவற்றை தண்ணீரில் நன்கு களைந்து சுமார் முக்கால் மணி நேரம் ஊற வைக்கவும். முக்கால் மணி ஊறினால்தான் மாவு நன்றாகக் காணும். (அதிகம் கிடைக்கும்).

பிறகு தண்ணீரை வடிகட்டி விட்டு மற்ற சாமான்களுடன் சேர்த்து (மிளகாய் வற்றல், மஞ்சள் பொடி மற்றும் உப்பு) மிக்ஸியில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு அரைக்கவும். (விழுது போன்ற பதத்தில்).

இந்த விழுதை மைக்ரோவேவில் அதற்குரிய டப்பா அல்லது பாத்திரத்தில் வைத்து 'ஹை' யில் இரண்டு நிமிடங்கள் வேகவைக்கவேண்டும். பிறகு வெளியில் எடுத்து நன்றாகக் கிளறவும். தேவைப்பட்டால் மேலும் அரை நிமிடம் மைக்ரோவேவில் வேக விடவும். பிறகு ஒரு தட்டில் கொட்டி நன்றாக உதிர்த்து ஆறவைக்க வேண்டும். (உசிலியல் தயார்)

நறுக்கி வைத்த பீன்ஸ் துண்டங்களை தனியாக வேகவைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.

ஒரு கடாயில் சிறிது எண்ணெய்விட்டு கடுகு உளுத்தம்பருப்பு பெருங்காயம் ஆகியவற்றை தாளித்து, ஆறிய விழுதை (உசிலியல்) அதில் சேர்த்து நன்றாகக் கிளறவும். வெந்த பீன்ஸையும் சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாகக் கிளறி எடுக்கவும். உசிலியல் கறி தயார்.

பீன்ஸிற்குப் பதில் உங்கள் விருப்பப்படி புடலங்காய், முட்டைகோஸ் போன்ற ஏதாவது காயை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம். கீரை வகைகளையும் பயன் படுத்தலாம். காய் எதுவும் இல்லாவிட்டாலும் உசிலியல் நன்றாகவே இருக்கும். காய் சேர்த்தால் உசிலியல் கறி. இல்லாவிட்டால் உசிலியல்.

உசிலியல் கறி மற்றும் உசிலியலை சாதத் துடன் கலந்தும், தொட்டுக்கொள்ள கறியாகவும் சாப்பிடலாம்.

இதில் எண்ணெய் அதிகம் சேர்வதில்லை. குறைந்த நேரத்தில் ருசியான சமையல் தயார். உசிலியலுடன் மோர்க்குழம்பு அல்லது அவியல் மற்றும் பொறித்த அப்பளம், வடாம் போன்றவை சேர்த்தால் சுவையோ சுவை!


உமா நடராஜன்

© TamilOnline.com