வலைக்களம்: முதலாவது உலகத் தமிழ் இணைய வலைப்பக்கப் போட்டி. கலி·போர்னி யாவில் அறிவிப்பு
தமிழ் இணையம் 2002 அமைப்பாளர்கள் வலைவழிப் போட்டி மூலம் மாணவர்களிடம் தமிழ்த்தகவல் தொழில் நுட்பத்தையும், தமிழ் மரபையும் பரப்பத் திட்டம் சான் ஓசே, அமெரிக்கா: ஜூன் 10, 2002: கலி·போர்னியாவில் இவ்வாண்டு செப்டம்பர் 27 முதல் 29 வரை நடக்கவிருக்கும் தமிழ் இணைய மாநாடு மற்றும் கண்காட்சி 2002 (தமிழ் இணையம் 2002) இன் அமைப்பாளர்கள் பள்ளி மாணவர்களுக்கு உலகத் தமிழ் இணைய வலைப்பக்கப் போட்டி ஒன்றை அறிவித்துள்ளனர்.
தமிழ் இணையம் 2002, 1997ல் தொடங்கிய மாநாட்டு வரிசையில் ஐந்தாவதாகும். “எண்ணியப் பிளவின் மேல் பாலம் அமைப்போம்” எனும் கருப்பொருளை ஒட்டி நடைபெறும் இம்மாநாடு, தமிழ் இணையம் மற்றும் தமிழ்க் கணினி சார்ந்த தொழில்நுட்ப, வணிகச் சிக்கல்களில் கவனம் செலுத்தும். இவ்வாண்டு இந்த மாநாட்டைத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியைத் தலையாய பணியாய்க் கொண்ட உலக அமைப்பான உலகத் தகவல் தொழில் நுட்ப மன்றம் என்னும் உத்தமத்தின் அமெரிக்கக் கிளை ஏற்பாடு செய்கிறது.
தமிழ் இணையம் 2002 தொடர்பாக மாநாட்டு அமைப்பாளர்கள் “வலைக்களம்” என்னும் உலகப்போட்டியை அறிவித்துள்ளனர். உலகப் பள்ளிச் சிறுவர்களுக்கான இந்தப் போட்டி தமிழ் மொழி, பண்பாடு, மரபு தொடர்பான வலைப்பக்கங்களை உருவாக்க மாணவர்களை ஊக்குவிக்கிறது. “இந்தப் போட்டி மூலம் தமிழ் இணையம், தமிழ் மரபு பற்றிய ஆர்வத்தைத் தமிழ் மாணவர்களிடம் பரப்ப விரும்புகிறோம். ஆங்கிலத்தின் ஆதிக்கம் நிறைந்த இணையம் என்ற ஊடகத்தில் தமிழ்த் தகவல்களை அளிக்க இந்தச் சிறு முயற்சி உதவும்” என்றார் மாநாட்டின் அமெரிக்க ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் மணி மு. மணிவண்ணன். வலைக்களப் போட்டியில் பின் வரும் தலைப்புகளில் ஒன்றில் வலைப்பக்கங்கள் அமைக்க வேண்டும்:
1. நம் தமிழ் மரபு 2. உள்ளூர் இசை, கலை, கைவினைத் தொழில்கள் 3. என்னை/எங்களை எழுச்சியூட்டியவர்கள் 4. என்னை/எங்களை எழுச்சியூட்டிய நூல் 5. எனக்கு/எங்களுக்குப் பிடித்த இடம் 6. உலக அற்புதங்கள் 7. விண்ணின் அற்புதங்கள் 8. தமிழர்கள் உலகக்குடிமக்கள் 9. தமிழர் விளையாட்டுகள் 10. இணையம்
ஆசிரியர்களும், பெற்றோர்களும், திட்ட மேலாளர்களாகவோ, வழிகாட்டிகளாகவோ செயல்படலாம் என்றாலும், அடிப்படை ஆராய்ச்சி மற்றும் உருவாக்கத்தை மாணவர்கள் செய்ய வேண்டும். பள்ளியிறுதி வகுப்பு மாணவர்கள் வரை இந்தப் போட்டியில் பங்கேற்கலாம். ஜூன் 10 அன்று தொடங்கும் இந்தப் போட்டியின் படைப்புகள் ஏற்பாட்டாளர் களை செப்டம்பர் 1க்குள் அடைய வேண்டும்.
எல்லாப் படைப்புகளும் அனைத்துலக அறிஞர் குழுவொன்றால் ஆராயப்படும். அவர்கள் முடிவே இறுதியானது. போட்டியில் வெற்றி பெற்றவர்கள் பெயர்கள் மாநாட்டின் இறுதி நாளான செப்டம்பர் 29 ஆம் நாள் சமூக மைய விழாவில் அறிவிக்கப்படும். வென்றவர்களை மின்னஞ்சல் மூலமாக மாநாட்டு அமைப்பாளர்கள் தொடர்பு கொள்வார்கள். மாநாட்டு வலைத்தளத்திலும், செய்தி ஊடகங்கள் வழியாகவும் வெற்றி பெற்றவர்கள் பட்டியல் அறிவிக்கப்படும். ஒவ்வொரு நாட்டுக்கும் உள்ள பரிசுகள் அந்தந்த நாட்டின் உத்தமப் பேராளர் மூலமாக வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் மாநாடு அஞ்சல் வழியாகச் சான்றிதழ் வழங்கும்.
“உலகெங்கும் உள்ளவர்கள் பயனுறும் வகையில், தேர்ந்தெடுக்கப் பட்ட சில வலைக்களப் பக்கங்களை ஒரு வலைநூலில் தொகுத்து வெளியிட உத்தமம் எண்ணி யுள்ளது.” என்றார் திரு. மணிவண்ணன். “தம் மொழியையும் பண்பாட்டையும் பற்றி அறிய மற்ற தமிழ்ச் சிறுவர்களுக்கு அவை உந்துதலாக அமையும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
போட்டி பற்றிய முழு விவரங்களும் http://www.infitt.org/ti2002/competition/ என்ற வலைப்பக்கத்தில் உள்ளன.
உத்தமம் பற்றி:
உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) பொருளீட்டும் நோக்கற்ற, அரசு சாராத ஓர் அமைப்பு. உலகெங்கும் வாழும் ஏழரைக்கோடித் தமிழர்கள் பேசும் தமிழ் மொழி இரண்டாயிரம் ஆண்டுகளாய் இலக்கியத் தொடர்ச்சி பெற்றிருக்கும் தொன்மை மொழியாய் மட்டுமல்லாமல், வளர்ந்து வரும் தகவல் தொழில் நுட்பங்களூடாகத் தொடர வேண்டும் என்ற எண்ணத்தால், சிதறியிருந்த தமிழ்த் தகவல் தொழில் நுட்ப முனைவுகளை ஒருங்கிணைத்துத் தமிழுக்கான தகவல் தொழில் நுட்பத் தரப்பாடுகளை மேம்படுத்தும் நோக்குடன் இந்த அமைப்பு ஜூலை 2000இல் நிறுவப்பட்டது. உலகெங்கும் வாழும் தமிழ் இணையம், கணினித் துறை முன்னோடிகளில் பலரும், கல்வி, அரசியல், வணிகத் தலைவர்கள் பலரும், நிறுவனங்களும், உத்தமம் அமைப்பில் உறுப்பினராயுள்ளனர். உத்தமம் ஆண்டு தோறும் தமிழ் இணைய மாநாடு நடத்தியும், தன் பல்வேறு பணிக்குழுக்கள் மூலமாகவும் இணை யத்தில் தமிழ் தொழில் நுட்ப வளர்ச்சிக்கான ஆய்வுகளை மேம்படுத்துகிறது. மேற்கொண்டு உத்தமம் பற்றிய விவரங்களுக்கு என்ற அதன் வலைத்தளத்தில் காணவும். உத்தமம் அமைப்புடன் தொடர்பு கொள்ள secretariat@infitt.org என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். |