ஜூலை 2002 : வாசகர் கடிதம்
தென்றல் வந்தவுடன் சுவாச புத்துணர்ச்சி பெறும் அனேக வாசர்களில் நானும் ஒருவன். முழுதிரைக் கதையை முழு பாட்டில் வடித்திடும் கவிஞனின் திறமை உங்கள் அட்டைப் படத்தில் அமைந்திருப்பது தென்றலின் தனிச்சிறப்பு.

நல்ல பல விஷயங்களை கொண்ட பன்முகம் கொண்ட தென்றல் அருமை. பாராட்டப்பட வேண்டிய பக்கம்; - குறுக்கெழுத்துப் புதிர் - திரு. வாஞ்சிநாதன் எங்கிருந்து அவ்வளவு விஷயம் திரட்டி எழுதுகிறார்? வாழ்த்துக்கள்!

தென்றல் பூவின் இதழை வருடிச் செல்வது போல், தென்றல் இதழ் எங்கள் இதயங்களை வருடி செல்கிறது. நாளும் பணி தொடர செய்தீடுவீர். வாழ்க உங்கள் தமிழ்ப் பணி.

அதிரை, முகமது தஸ்தகீர்

******


சென்ற ஜூன் மாத இதழில் 'காந்தியிடம் வாழ்த்துப் பெற்ற பேராசிரியர் தங்க.சிகாமணி அவர்கள்' குழந்தைகளுக்கான பாடல்கள் எழுதி தமிழுக்குச் சேவை செய்வதற்காகப் பல புத்தகங்கள் வெளி யிட்டிருப்பதாக அறிந்தேன். 'புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?' என்பது போல அவருடைய மைந்தன் திரு.கணேஷ்பாபு அவர்கள் தமிழ் பாடசாலை நடாத்தி ,வளைகுடாவில் தமிழ் வளர்க்கும் பணியில் ஈடு பட்டிருப்பது மிகவும் பாராட்டக் கூடிய அம்சமாகும்.

சமையல் பகுதியில் வெளிவந்த பல 'ருசிக்கும் ரசங்கள்' எனக்கு மிகவும் பயனளிப்பதாக அமைந்தன. இது நாள்வரை நான் தயாரித்த ரசம் ஏன் சுவையாக இல்லை என்ற என் தவறை நன்கு உணர்ந்து கொண்டேன்.

கனடாவில் வாழும் எனக்கு தென்றல் இதழ் கையில் கிடைத்தவுடன் என் பிள்ளையை நேரில் கண்டதுபோல் மகிழ்ச்சியடைந்து இதழுக்கு ஒரு அன்பு முத்தம் கொடுத்து வாசித்து ஆனந்தம் அடைவேன். மிகவும் நன்றி.

திருமதி.லக்ஷ்மி.சிவசுப்பிரமணியம். கனடா.

******


தென் இந்தியாவைச்சேர்ந்த திரு.அப்துல் கலாம் அவர்கள் அடுத்த குடியரசுத் தலைவர் ஆவதற்கு வாய்ப்புக்கள் அதிகமாகி வருகின்ற இந்த நேரத்தில் தென்றலின் தீர்க்கதரிசனத்தை பாராட்ட விரும்பு கிறேன். ஏப்ரல் இதழில் அவரைப்பற்றிய கட்டுரையை வெளியிட்டு வரப்போகும் நிகழ்ச்சிகளை சூசகமாக எங்களுக்கு தெரிவித்து விட்டீர்களே! வளர்க உங்கள் பணி.

உமா நடராஜன்

******


உங்களது உயர்வான பணி மேன்மேலும் சிறக்கட்டும்!

அனைத்துப் பகுதிகளையும் நான் மிகவும் விரும்பு கிறேன். பல தரப்பட்ட subjects, குறிப்பாக நேர் காணல் பகுதியை நான் மிகவும் ரசிக்கிறேன். (பேராசிரியர் ஹார்ட்ஸ் நேர்காணல் மிகச் சிறப்பாக இருந்தது). கட்டுரைகளின் தரமும், படைக்கப்படும் விதமும் சிறப்பாக இருக்கிறது.

ரவி

******


வணக்கம். கானாடாவின் இமிக்ரெண்ட்டான நான் தற்சமயம் அமெரிக்காவிற்கு வந்துள்ளேன். நீங்கள் வெளியிடும் தென்றல் பத்திரிகையைப் படித்தேன். நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. தமிழ்நாட்டில் வெளியிடப்படம் மாத வாரப் பத்திரிகைகளைப் போலவே எல்லாப் பகுதிகளையும் கொண்டதாக மிகச் சிறப்பாக இருக்கிறது. இந்திய மக்கள் முக்கியமாகத் தமிழர்கள் நம் நாட்டு மணத்தை உணரச் செய்யும் ஓர் உன்னதமான இதழாக இருக்கும் தென்றலின் பணி தொடர்ந்து வீசட்டும். தங்களின் சீரிய பணி ஓங்கட்டும்.

திருமதி. தங்கம் ராமசாமி

******


தி. ஜானகிராமனையும், லா.ச.ராவையும் பிரசுரித்த தென்றலின் சென்ற இதழில் வெளியிடப்பங்டட ''கார் காலம்'' சிறுகதைகளைப் படித்து அதிர்ச்சி. இது என்ன ஆணைக்கும் அடி சறுக்கிய கதையா (தற்காலிக கோளாறு) அல்லது ஆணை தேய்ந்து ஆட்டுக்குட்டி சறுக்கிய கதையா (நிரந்தர கோளாறு)?

Recycle பற்றிய கட்டுரை மிக அருமை. Recycle பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்பும் கலி போர்னியா வாசிகள் BFI - The Recyclery என்ற உலகத்திலேயே மிகப் பெரிய கழிவு பதப்படுத்தும் தொழிற்சாலையை 408-262-1401 என்ற தொலை பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தொழிற் சாலையை காண செல்லலாம் (இலவசம்)

மீரா சிவகுமார்

******


நான் இந்நாடு வந்த சில மாதங்கள் கழித்துதான் தென்றலைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அன்று முதல் இன்று தாய்நாடு திரும்பும் நேரம் வரை ஈடுபாடு சிறிதும் குறையாமல் தென்றலை ரசித்து வருகிறேன். இந்தியா சென்ற பிறகும் இது தொடரும்.

மக்களுக்கு பயனுள்ள பல விஷயங்களை தொடர்ந்து அளித்து வரும் தென்றல் மேலும் மேலும் வளர்ச்சி யடைய என்னுடைய வாழ்த்துக்கள்.

இந்திரா காசிநாதன்

******


நான் சென்ற மாதம்தான் ஸானோஸெ வந்தேன். தற்செயலாக தங்களுடைய 'தென்றல்' மாத இதழ் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தென்றல் மாத இதழ் தென்றல் காற்றாக தமிழ் மணம் வீச வெளியிடப் பட்டுள்ளது என்று கூறினால் அது மிகையாது.

மே மாத இதழில் ஒரு முதிய தமிழக எழுத்தாளரைப் பற்றி விவரித்து அவருடைய 'நீலக்கடல்' சிறுகதை யைப் பிரசுரித்து அவரைக கெளரவித்துள்ள 'தென்றல்' ஆசிரியர் குழுவிற்கு எனது பாராட்டுக்கள்.

பேராசிரியர் வித்வான் திரு. T.V.G. அவர்கள் தாளம், வயலின், பாட்டு மூன்றும் நன்கு கற்ற இசைவல்லுனர். அவர் ஒரு அஷ்டாவதானி. அவர் எழுதும் இசைப்பயணம் ரசிகர்களுக்கு வாசகர் களுக்கு ஒரு தேனிசை விருந்துப் பயணமாக இருக்கும் என்று கூறினால் அதுமிகையாகாது.

டாக்டர் அலர்மேல்ரிஷி அவர்களின் 'வழிபாடு' தலைப்பில் புனிதகோயில் ஸ்தலங்களைப் பற்றி வெளியாகும் கட்டுரைகள் வாசகர்களுக்கு ஒரு புனித பயணமாகும் என்பதில் ஐயமில்லை.

விஸ்வம் பரத்வாஜ்

© TamilOnline.com