குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழகம்
வாணியம்பாடி, அச்சிறுப்பாக்கம், சைதாப் பேட்டை உள்ளிட்ட மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. சைதாப் பேட்டை தேர்தலில் மிக மோசமான தேர்தல் முறைகேடுகள், வன்முறைகள் நடந்தது. ஆளும் தரப்பினரின் அதிகார துஷ்பிரயோகம் கட்டுக்கடங்காமல் இருந்தது.

நாட்டில் தேர்தல் ஜனநாயகம் கேலிக் குரியதாகி வருவதை சைதைத் தேர்தல் மேலும் உறுதிப்படுத்தியது. இதுவரை விதிவிலக்காக நடைபெற்ற தேர்தல் முறைகேடுகள் தற்போது முறைப்படுத்தப்பட்டு வருவதாகவே உள்ளது.

சைதையின் 58 வாக்குச் சாவடிகளுக்கு மறுவாக்குத் தேர்தல் நடைபெற்றது. இந்த மறுவாக்குத் தேர்தல் ஓர் கண்துடைப்பு நடவடிக்கை என்று திமுக, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் உள்ளிட்டவை குற்றம் சாட்டுகின்றன. தேர்தல் ஆணையம் ஆளும் தரப்புக்கு சார்பாக, ஒருதலைப் பட்சமாகவே செயற்பட்டுள்ளதென்று பகிரங்கமாகவே குற்றம் சாட்டுகின்றன. திமுகவை திருப்திப்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் நடந்துள்ளதாக அதிமுக குற்றம் சாட்டுகிறது.

நடைபெற்ற மூன்று தேர்தல் தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று தமது பெரும் பான்மையை அதிகரித்துள்ளது.

தமிழக தேர்தல் அதிகாரி சாரங்கியை மாற்றக் கோரி தமிழக அரசு தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரையை அனுப்பி இருந்தது. ஆனால் தேர்தல் ஆணையம் இக்கோரிக்கையை நிராகரித்துவிட்டது. சாரங்கியை மாற்றும் திட்டம் ஏதும் இல்லை. அவ்வாறு மாற்றுவதாக இருந்தால் தங்களுக்கு முதலில் தெரிவிக்கப்படும் என்று மாநில அரசுக்கு அனுப்பிய பதில் கடிதத்தில் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

த.மா.கா. காங்கிரஸ் இடையிலான இணைப்பு உறுதியாகிவிட்டது. பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைக்கு பின்னர் ஆகஸ்ட் மாதம் இணைப்பு விழா நடைபெறுகிறது. இந்த இணைப்பின் மூலம் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு காங்கிரஸ் வருகிறது. சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தாம் கேட்போம் என்று காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறி வருகிறார்.

ஒருவருக்கு ஒரு பதவி என்ற தமிழக அரசின் சட்டத்தை அடுத்து சென்னை மேயர் பதவியை மு.க. ஸ்டாலின் துறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஒருவருக்கு ஒரு பதவி என்ற சட்டத்துக்கு தமிழக ஆளுநரும் ஒப்புதல் அளித்தார்.

தற்போது சென்னை மேயராக துணை மேயராக இருந்த கராத்தே தியாகராஜன் பதில் மேயராக பொறுப்பேற்றுள்ளார்.

ஸ்டாலின் மேயர் பதவி பறிப்புக்கு திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த நடவடிக்கை அதிமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைதான் என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.

தமிழகத்தில் பா.ஜ.க. வுடனான திமுகவின் உறவு ஓர் முடிவுக்கு வந்துள்ளது. பா.ஜ.க. வுடன் அதிமுக உறவு துளிர்விடத் தொடங்கியுள்ளது. மத்தியில் பா.ஜ.க.-அதிமுக உறவு நெருக்கமாகி வருகிறது. மாநிலத்திலும் இந்த உறவு நெருக்கமாகி வருவதற்கான சமிக்ஞைகள் தெரிய ஆரம்பித்துள்ளன.

தமிழக அரசின் மக்கள் விரோத செயற் பாடுகளை கண்டிக்கும் வகையில் தொழிற் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆசிரியர் சங்கம் ஆகிய ஓர் கூட்டமைப்பு உருவாக்கி போராட்டம் நடத்தத் தயாராகி உள்ளன.

தமிழக அரசின் வேலைநிறுத்தத் தடை சட்டம், ஜனநாயக உரிமைகள் பறிப்பு உள்ளிட்ட தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து ஜூலை 30ந் தேதி அனைத்து மாவட்டங்களிலும் கண்டனப் பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

12வது குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் அப்துல் கலாம் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார். கலாமுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவிக்கின்றன.

இவரை எதிர்த்து இடதுசாரிக் கட்சிகள் சார்பில் கேப்டன் லட்சுமி நிறுத்தப்பட்டுள்ளார். கலாம், லட்சுமி இருவரும் தமிழகத்தைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அப்துல் கலாம் அடுத்த குடியரசுத் தலைவராக வருவது குறிப்பிடத்தக்கது.

துரைமடன்

© TamilOnline.com