கீதாபென்னெட் பக்கம்
இந்த மாதம் தென்றல் வாசகர்களுக்கு உபயோகமாக ஏதாவது விஷயம் எழுதித்தான் ஆவது என்று தீர்மானித்துவிட்டேன்.

என்னை சந்திக்கும் போது சிலர் பொதுவாக கேட்கும் கேள்வி இது. ''எப்படி உங்களால் வீணை, வகுப்பு, கதை, கட்டுரை, சமையல், சாப்பாடு, வீடு என்று பலதையும் கவனித்துக் கொள்ளமுடிகிறது?'' என்பார்கள். அது ஒன்றம் பிரமாதம் இல்லை. நம்மில் பலரும் கடைப் பிடிப்பதுதான். சின்ன சின்ன விஷயங்களிலும் கவனம் செலுத்தினால் போதும். அது எப்படி என்ற ரகசியத்தையும் சொல்லி விடுகிறேன்.

காலையில் எழுந்தவுடனே முதல்வேலையாக அன்றைக்கு செய்யவேண்டிய வேலைகளை வரிசைப்படுத்தி எழுதிவிடுவேன். அன்றே கட்டாயமாக செய்து முடிக்க வேண்டியது முதலில் இருக்கும். அடுத்த வாரத்திற்குத் தள்ளிப்போடலாம் என்பது கடைசியில் வரலாம். சின்ன வேலையாக இருந்தால் சீக்கிரமாக முடித்துவிட்டு பட்டியலில் டிக் செய்யும் போது ஏதோ பெரியதாக சாதித்துவிட்ட பெருமிதம் வந்து விடும். மற்ற எல்லாவற்றையும் செய்யவும் தூண்டும்.

மின் அஞ்சல் அல்லது தபாலில் வரும் கடிதங்களுக்கு அன்றே பதில் எழுதி விடும் பழக்கம் எனக்கு உண்டு. யோசித்து பதில் சொல்ல வேண்டியவற்றையும் இரண்டு நாட்களுக்கு மேல் ஒத்திப் போடமாட்டேன். ஆனால் ஓரிரு வரிகளுக்கு மேல் என் கடிதங்கள் இருக்காது. விஷயம் மட்டும்தான் எழுதுவேன். அதனால் படிப்பவருக்கும் நேரம் மிச்சம் தானே.

வங்கி, மளிகை, க்ளீனர்ஸ் என்று வெளியே போக வேண்டியவற்றை ஒரே முறையில் வாரத்திற்கு ஒருநாள் செய்துவிடுவேன். என்ன வேண்டும், என்ன செய்யவேண்டும் என்பதற்கு லிஸ்ட் இல்லாமல் வெளியே கிளம்ப மாட்டேன்.

டிவி பார்க்கும் வழக்கம்தான் நமக்கு உண்டே! அதைப் பார்த்துக் கொண்டே துணி மடித்து வைப்பது, காய்கறி நறுக்குவது போன்றவை நடக்கும்.

தினம் வீணை சாதகம் செய்வேன். ஏதாவது பத்திரிகைக் கட்டுரை, கதை என்று தினம் கம்ப்யூட்டரில் எழுதுவேன். இவை ஒவ்வொன் றிற்கும் நான் ஒதுக்கும் நேரம் நாற்பத்தி ஐந்து நிமிடங்கள்தான். ஆனால் அந்த சமயத்தில் டெலிபோன் கிடையாது. நடுவில் எழுந்திருக்க மாட்டேன். முக்கால் மணிநேரம் தினம் வீணை வாசித்தால் அதுவும் முழு மனதுடன் செய்தால் போதும். அதற்குப் பலன் நிச்சயம் தெரியும். அதற்கு மேல் வாசிக்க ஆசையிருந்தால் தொடருவேன். இல்லா விட்டாலும் அன்றைக்கு கட்டாயமாக முக்கால் மணிநேரம் பயிற்சி செய்த சந்தோஷம் இருக்கும். ஒருநாளைக்கு எட்டுமணிநேரம் வீணை சாதகம் செய்ய வேண்டும் என்று நான் விரும்பலாம். ஆனால் அது யதார்த்தத்தில் நடக்காது. என்ன வாசிக்கப் போகிறேன்; என்ன எழுதப் போகிறேன் என்பதும் மனதில் திட்டவட்டமாக இருக்கும். இது மாதிரி கொஞ்ச நேரமே ஆனாலும் மனது ஒட்டி செய்தால் நிறைய நேரம் கிடைக்கும் என்பது நிச்சயம்.

எங்கோ படித்தது .. யாரைப் பார்த்தாலும் அவர் உங்கள் கண்களுக்கு வேறு ஒருவருடைய சாயலில் இருப்பதாக தோன்றினால் நீங்கள் நடுவயதுக்கு வந்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.

© TamilOnline.com