அட்லாண்டாவில் கேட்டவை
நாகு:ஏண்டா பாலு ஆழாக்கு மாதிரி இருந்துண்டு உழக்கு வேலை பண்றயே, ஏன் வாரா வாரம் இத்தனை டாலருக்கு லாட்டெரி டிக்கெட்ஸ் வாங்கறே? காசை கரியாக்கிறியே ஏன்?

பாலு:அட போங்க சார், எங்கப்பா நான் சின்ன வயசிலே படிக்கிறபோதே அடிக்கடி சொல்லுவார் "படவா நீ லை·பிலே லாட்டெரிதான் அடிக்கப்போறேன்னு" தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லையா?

நாகு:அடப்பாவி நீ அதை அப்படி அர்த்தம் பண்ணிட்டயா? வெரி குட் நீ உருப்பட்டாப் போலதான். உங்கப்பா உன்னை அன்னைக்கே நல்லா அண்டர்ச்டாண்ட் பண்ணிட்டார்.

******


ரமேஷ்:என்ன புது மாப்பிள்ளை எப்படி இருக்கு மாரீட் லை·ப்? ஏதாவது கோபதாபங்கள் இருக்கா தாம்பத்தியத்திலே?

கணேஷ்:அட போய்யா, என் வை·ப் ரொம்ப மரியாதை தெரிஞ்ச குடும்பத்திலிருந்து வந்தவ, அதனாலே ஒண்ணும் ·ப்ராப்ளம் இல்லை. நாந்தான் சமயத்திலே கோபம் வந்தா, வாடி, போடின்னு பேசிடரேன். அவ கோபம் வந்தாலும் ஏங்க இப்படி அறிவே இல்லாம பேசரீங்க? பிறக்கறப்பவே அறிவில்லாமல் தான் பிறந்தீங்களா? அப்படின்னு மரியாதையா தான் திட்டுவா. அது அவ அம்மா அப்பாவை சொல்றதை சின்ன வயசிலிருந்து பாத்திருக்கான்னு நினைக்கிறேன்.

ரமேஷ்:பொண்டாட்டி மரியாதையாதான் திட்டுவான்னு சொல்லி சந்தோஷப்படற முதல் ஆள் நீதான்னு நினைக்கிறேன். போடாப் போடா வெட்டிப் பயலே. ஆரம்பத்துலேயே அடக்கி வை, இல்லைன்னா அவஸ்தைப் படுவே ஜாக்கிரதை. புரியுதா?

கணேஷ்:சரி, அனுபவசாலி சொல்ற கேட்டுக்கறேன்.

******


இந்தியன் ஆர்மியிலிருந்து ரிடையர் ஆகி சென்னை வந்த பெரிய ரேங்க் ஆபிஸர் ஒரு மகா கஞ்சன். ·பிரியாக எது கிடைத்தாலும் வெளுத்துக் கட்டிவிடுவார். உடம்பும் ஹெல்த் தும் தன்னுது என்ற கவலை இல்லாமல் குடித்து கும்மாளம் போடுவார்.

அவர் ஒரு சமயம் நண்பனின் செலவில் ஒரு 5 ஸ்டார் ஹோட்டலில் தங்கினார். சொந்த செலவு என்றால் கனவில் கூட அதை நினைக்க மாட்டார். 3 நாள் ஓட்டல் வாசம்.

2வது நாள் காலையில் 7 மணிக்கு ·ப்ரண்ட் டெஸ்க்குக்கு ஒரு போன் கால் நமது ஆபிஸரிடமிருந்து "ஐயா, நீங்கள் எப்போது உங்கள் பாரைத் திறப்பீர்கள்" என்று. மிக அமைதியாக போனை எடுத்த ஆள் "சார், கவர்ண்மெண்ட் ரூல் படி 11A.M திறப்போம் தினமும்" என்று கூற, நம்ம ஆள் நன்றி சொல்லி போனைக் கட் செய்தார்.

7.15. AM மறுபடியும் ஒரு கால் ·பிரண்ட் டெஸ்க்குக்கு நமது ஆபிஸரிடமிருந்து. "ஐயா, நான் ஒரு ரிடையர்டு ஆர்மி ஆபிஸர் 32 வருடம் சின்ஸியராக நாட்டுக்கு உழைத்து இருக் கிறேன். எனது பெயர் பாரத் ரத்னா பட்டத்திற்குக் கூட சிபாரிசு செய்யப்பட்டது" என்றார். உடனே அசந்து போன ·பிரண்ட் டெஸ்க் ஆள், "சார் உங்களுக்கு என்ன வேண்டு, எதையும் செய்யக் காத்திருக்கிறோம்" என்று பணிவாக கூற, இவர் உடனே "உங்கள் பார் எப்போது திறக்கு என்று கேட்டார்". உடனே மரியாதை குறைந்து கொஞ்சம் கடுப்பாக அந்த ஆள் "ஐயா, ஏற்கனவே சொன்னபடி நாங்கள் 11A.M. திறப்போம்" என்றார். நமது எக்ஸ் ஆர்மியும் கடுப்புடன் போனை வைத்தார்.

8.30 A.M. இதற்குள் நமது ஆர்மி ஆபிஸர் 7 தடவை போன் செய்து அதே கேள்வியை திரும்பத் திரும்பக் கேட்க ·பிரண்ட் டெஸ்க் ஆள் கடைசி முறை சிறிது கோபமாக "ஐயா, திரும்பத் திரும்ப நான் பொருமையாக எங்கள் பார் 11 A.M. திறக்கும் என்று கூறிவிட்டேன் ஆனால் உங்களுக்கு அது புரியவில்லை ஆகவே இப்போது கடைசியாக சொல்கிறேன் குடிப்பதற்கு நீங்கள் எங்கள் பார் உள்ளே போகவேண்டும் என்றால் 11 A.M. தான் போகமுடியும்" என்று ஸ்டிரிக்டாக சொல்ல நமது எக்ஸ் ஆர்மி ஆபிஸரும் மிகக் கடுப்பாகி கோபமுடன் "யாருக்குயா உள்ளே போக வேண்டும்? நேற்று மாலை ஹேப்பி ஹவர்ஸ் ·ப்ரீ டிரிங்க்ஸ¤க்கு உள்ளே போன என்னை உள்ளேயெ வைத்து பூட்டிவிட்டார்கள். திறந்தால் தானே நான் வெளியே போகமுடியும்" என்று போட்டப் போடில் ·பிரண்ட் டெஸ்க் ஆள் மூர்ச்சையானார்.

© TamilOnline.com