அட்லாண்டா பக்கம்
அட்லாண்டாவில் என்ன இல்லை? எல்லாம் இருக்கிறது மிகவும் அழகான நகரம், எங்குப் பார்த்தாலும் ஜார்ஜியா மாநிலத்தில் (அட்லாண்டா நகரம் இருக்கும் மாநிலம்) கண்ணுக்கு குளுமையாக பச்சை பசேல் என்று செடி கொடிகள். இது அட்லாண்டாவிற்கே உள்ள தனிச்சிறப்பு. டிராவல் செய்யும் போது அது ஒரு தனி அழகு தான். ஆபிஸ் நாட்களில் ஒரே கார் மயம் தான் படு பயங்கர டிரா·பிக்.

வருடத்தில் ஒன்பது மாதம் மிதமான தட்ப வெட்பம். என்ன வருடத்தில் ஒரு மாதம் கொஞ்சம் சூடு அதிகம் 95 டிகிரி வரைப் போகும், இரண்டு மாதம் குளிர் 35 டிகிரிக்குக் கீழே போகும். பாக்கி 9 மாதங்கள் இங்கே இருக்க கொடுத்து வைத்து இருக்கவேண்டும். இந்த 9 மாதங்களும் 60லிருந்து 75 டிகிரியில் இருக்கும். கொஞ்சம் வெயில் வந்தால் நகரம் இன்னும் பச்சை அதிகம் ஆகிவிடும். ஏனெனில் இங்குள்ள பெண்களும் பச்சை பச்சையாய் உடை உடுத்த ஆரம்பித்துவிடுவார்கள். (அவர்கள் அப்படித்தான் - ஹை ஜாலி)

அட்லாண்டாவில் தமிழர்களுக்கு என்ன இருக்கிறது? என்ன இல்லை?

நல்ல கோவில்கள் இருக்கிறது. நிம்மதியைத் தேடி வாரம் தவறாமல் பலர் கோயிலுக்கு வருகிறார்கள். தனக்காகவும் உலகத்திற்காகவும் வேண்டிக்கொள்கிறார்கள். கர்நாடக சங்கீதம் மாதம் தவறாமல் இருக்கிறது. காமனா என்ற அமைப்பு இதை பெரிய பெரிய பாடகர்களை அழைத்துவந்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ரசிகர்கள் கொடுக்கும் டொனேஷன் வைத்து அழகாக, அமைதியாக, ஆர்பாட்டம் இல்லாமல் நடத்துகிறார்கள்.

மாதம் மும்மாரி மழைப் பொழிகிறதோ இல்லையோ இருமுறை தமிழ் சினிமா புதிய படங்கள் வருகிறது. விருப்பம் உள்ளவர்கள் ரசிக்கிறார்கள். டிக்கெட் $7; பெரிய பட்ஜெட் படம் என்றால் $9. எந்த பெரிய குழு நாடகமோ, நடனமோ வந்தால் கண்டிப்பாக அட்லாண்டா விற்கு வருகிறார்கள்.

வேதம் கிளாஸ், பாட்டுக் கிளாஸ், நாட்டியப் பள்ளிகள், யோகா கிளாஸ், தமிழ் கிளாஸ் எல்லாம் வெகு நன்றாக நடக்கிறது சனி, ஞாயிறுகளில். வியாழன் தோறும் சாய் பாபா பஜன்கள் உண்டு. நவராத்திரி கொலு, தீபாவளி, பொங்கல், புது வருடம், ஆவணி அவிட்டம், நோன்புகள், சிவராத்திரி எல்லாம் கோலாகலமாக நடக்கிறது.

வருடம் ஒரு முறை தியாகராஜ உத்ஸவம் விமரிசையாக 14 வருடங்களாக நடந்து வருகிறது. இதை ஆரம்பித்து வைத்தவர் காலம் சென்ற திருமதி. ஜெயலஷ்மி ராமஸ்வாமி அவர்கள் (எனது தாயார்). சங்கராச்சாரியார் பாத பூஜை வருடம் ஒரு முறை உண்டு.

IACA என்று Indo American Cultural Association பெரிய அளவில் இயங்குகிறது. நிறைய தமிழர்கள் அதில் உறுப்பினர்கள். காந்தி ஜெயந்தியை மார்டின் லூதர் கிங் ஆடிடோரியத்தில் பிரமாதமாக நடத்துவார்கள். அங்கு காந்தி தாத்தா சிலையும் உண்டு. மற்றும் எத்தனையோ விழாக்களை அழகுப் போட்டி யிலிருந்து எல்லாம் கொண்டு வருவார்கள் IACA.

அழகான ஜார்ஜியா தமிழ் சங்கம் உள்ளது. திறமையான நிர்வாகிகள் வருடா வருடம் பொறுப்பு ஏற்று நன்றாக நடத்துகிறார்கள். இந்த சங்கம் 1981ல் ஆரம்பிக்கப்பட்டு 2002 வரை ராஜ நடை போடுகிறது. இங்கே இத்தனை திறமையா என்று குழந்தைகளும், பெரியவர் களும் அருமையான நிகழ்ச்சிகளை கொடுக்கிறார்கள். வருடம் ஒரு முறை முத்தமிழ் விழா, இயல், இசை, நாடகம் உண்டு. வருடா வருடம் நல்ல டைரெக்டெரி எல்லோர் விலாசம் மற்றும் போன் நம்பருடன் (இப்போது இ-மெயில் ஐடியுடன்) வெளியிடுகிறார்கள். பார்ப்பதற்கே கண்ணைப் பறிக் கிறது. உள்ளே பல விளம்பரங்கள்.

நான் வந்த வருடம் 1987 அப்போது 70 தமிழ்க் குடும்பங்கள் இருந்ததாக ஞாபகம். இப்போது நிச்சயமாக 700 குடும்பங்களாவது இருக்கும். அட்லாண்டா தமிழர் கள் நல்லவர்கள்; வல்லவர்கள். பலர் பிசினெஸில் புகுந்து நல்ல முறையில் அதை செய்து பெயர் வாங்கி உள்ளார்கள். நல்ல பெரிய வேலையிலும் பலர் இருக்கிறார்கள். நல்ல அருமையான டாக்டர்கள் உண்டு. வக்கீல்களும் உண்டு. எல்லா தமிழ் நிகழ்ச்சிகளுக்கும் ஆதரவு கொடுக்கிறார்கள். அனாவசிய பாலிடிக்ஸ் கிடையாது. எல்லோரும் ஒற்றுமையாக மற்றவர்களுக்கு முடிந்த அளவில் உதவி செய்து சந்தோஷமாக வாழ்கிறார்கள். (யார் கண்ணும் படாமல் இருக்க வேண்டும்).

இப்படி தமிழர்களுக்கு வாராவாரம் எத்தனை யோ நிகழ்ச்சிகள் எதைப் பார்ப்பது எதை விடுவது என்பது சிரமமான விஷயம். நமக்கு நேரம் இருந்தால் உடம்பும் ஒழிந்தால் எப்பவும் பிசியாக இருக்கலாம் வாரக் கடைசியில்.

சரி சரி, மறுபடியும் உன் அட்லாண்டா புராணத்தை ஆரம்பித்துவிட்டாயா என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது, அதனால் இப்போதைக்கு இதை முடித்து ஒரு நான்கு வாரம் இடைவெளி விட்டு அடுத்த இதழில் அட்லாண்டா வந்தால் கிஸ் பண்ணாதீர்கள், சாரி, மிஸ் பண்ணாதீர்கள் என்ற தலைப்பில் பார்க்க வேண்டிய பல இடங்களைப் பற்றிச் சொல்கிறேன்.

அன்புடன்

அட்லாண்டா கணேஷ்

© TamilOnline.com