செப்டம்பர் 11,2001ல் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலைத் தொடர்ந்து INS சில புதிய சட்டங்களை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. அதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் சட்டம் சுற்றுலா விசா சம்பந்தப்பட்டது.
தற்போது அமெரிக்கா vistor visa என்று சொல்லப்படும் B2 விசாவில் வருபவர்கள் பயணத்தின் காரணத்தை தெரிந்து கொண்டு அதற்கேற்ப 1 மாதம் முதல 6 மாதம் வரை அனுமதி அளிக்க வேண்டும் என்றும் 6 மாதத்திற்கு மேல் தங்க அனுமதி தரப்படமாட்டாது என்றும் சட்டத்தை மாற்ற INS உத்தேசித்துள்ளது.
அலுவலக சந்திப்பு, கருத்தரங்கம் இவற்றிற்கு வருபவர்கள் 1 மாதத்திற்கு மேல் தங்க தேவை இருப்பதில்லை. சுற்றிப்பார்க்க வருபவர்கள் 3 மாதம் முதல் 6 மாதத்திற்குள் பயணத்தை எளிதில் முடிக்கலாம். அதனால் 1 வருடம் யாரும் தங்குவதற்கு காரணங்கள் எதுவும் இல்லை என்பது INSன் வாதம். B2 விசா மற்ற விசாக்களை போல் இல்லாமல் மிகவும் எளிதில் வழங்கப்படுகிறது. அதை பயன்படுத்தி பலர் அமெரிக்கா வருகிறார்கள். உலகவர்த்தக நிறுவன கட்டிடத்தை விமானத்தால் தகர்த்தவர்கள் சுற்றுலா விசாவில் வந்து இங்கே பல மாதங்கள் தங்கி விமானபயிற்சி கல்லூரியில் படித்தவர்கள். எனவே இங்குள்ள வசதிகளை பயன்படுத்தி இந்த நாட்டுக்கே தீங்கு செய்வதை தடுக்க இச்சட்டம் உதவும் என்கிறது INS. ஒரு மாதம் மட்டுமே தங்க அனுமதி கிடைத்தால் சுற்றுலாதுறை பெரிதும் பாதிக்கப்படும். நொடித்து போன பொருளாதார நிலைமையை சீர்செய்ய இது உதவாது என்பது எதிர்ப்பவர்களின் வாதம்.
இச்சட்டத்தினால் பெரிதும் பாதிக்கப் படுபவர்கள் தன் பிள்ளைகள் பேரக் குழந்தைகளை பார்க்கவரும் பெற்றோர்கள் தான். வயதான காலத்தில் வெகுதூரம் பயணம் செய்து சில மாதங்கள் தங்கலாம் என்று வரும் பெற்றோரை சில நாட்கள் மட்டுமே தங்கலாம் என்று கூறுவது அநீதி என்று இந்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் கருதுகிறார்கள். விசா நாட்கள் முடிந்தும் நாட்டில் தொடர்ந்து தங்குபவர்களை கண்டுபிடித்து தடுக்கவும், விசா வழங்குவதை முறைப்படுத்தவும், மற அனுமதி மனு மறுபரிசீலனை நேரத்தை குறைக்கவும் முதலில் வழி செய்ய வேண்டும்.
தற்போது இந்தச்சட்டம் பரிசீலனை நிலையில் உள்ளது. இருகட்சி வாதங் களையும் ஆராய்ந்து முடிவு செய்ய சில மாதங்களாவது ஆகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. சில இடங்களில் எல்லோருக்கும் 6 மாத அனுமதி என்றில்லாமல் 1-6 மாதம் அனுமதி அளிப்பது தொடங்கி இருகிறது என்றாலும் அனுமதி நீடிப்பு கோரி 6 மாதங்கள் தங்குவது சாத்தியம் என்றே பல வழக்கறிஞர்கள் கருதுகிறார்கள். |