தன்னார்வ குழுக்கள் - TEAM (டீம்) ஒரு கண்ணோட்டம்
அமெரிக்காவில்லே நண்பர்களைச் சந்திக்கும் பொழுதெல்லாம் மன்மோஹன் சிங்கைப் பற்றியோ, அப்துல் கலாமைப் பற்றியோ என்றாவது ஒருநாள் தான் பேசுகிறோம். மற்ற சில பேர்களைப் பற்றி எப்பொழுதும் பேசுகிறோம், அடுத்தவர்கள் கடமை தவறுவதைத் திட்டித்திட்டியே பல பேர் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறோம். இந்தப் படுகுழியிலிருந்து மீள ஒரேவழி, ஆக்கப்பூர்வமாய் ஏதாவது செய்ய வேண்டும். இப்படி எங்கேயோ வெளிப்பட்ட ஒரு பொறி, டீம் (TEAM) என்ற ஒரு அமைப்பாய், ஒரு தீபமாய் ஒளிவிட்டுக் கொண்டிருக்கிறது.

Team for Educational Activities in Motherland (தாயகக் கல்வியுதவிச் செயல்பாட்டுக் குழு) நமது தாயகத்தில் கல்வி மேம்பாட்டிற்கான உதவிகளைச் செய்வதை அடிப்படையாகக் கொண்ட ஒரு அமைப்பு.

நமது தாயகத்தில் இருக்கும் பல்லாயிரக் கணக்கான அடிப்படை வசதிகளற்ற ஆரம்பப் பள்ளிகளில், அடிப்படை வசதிகளைச் செய்து தருவதன் மூலம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு உற்சாகமூட்டி, கிராமப் புறங்களிலே நல்ல கல்வி கிடைப்பதற்கான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

கி.பி.2000 வருடம் சிலர் மனதிலே அரும்பி, தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும் விவாதமாய் வளர்ந்து, எதையாவது செய்ய வேண்டும் என்ற இந்தக் கருத்துக்கு ஏப்ரல் மாதம் விதையிடப்பட்டது.

100 இளைஞர்களின் கரங்களால் ஏற்றப்பட்ட இந்தத் தீபம், இன்று ஏழைக்குழந்தைகளின் கல்விக்கண் திறக்க பாடுபட்டுக் கொண்டிருக் கிறது. இந்த வெற்றியின் மூலம் டீம் மும்மடங்கினும் மேலாய் உறுப்பினர்களைரைக் கொண்டு எளிமையாய் இயங்கி வருகிறது. இன்று இந்த அமைப்பு, வரிவிலக்கு பெற்ற ஒரு பொதுத்தொண்டு நிறுவனமாய் பதிவு செய்யப்பட்டு, இதுவரை 108 பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீடு நடந்து, அவற்றிலே 50 க்கும் மேற்பட்ட திட்டங்கள் முடிக்கப்பட்டும், மற்றவை முடிவடையும் தறுவாயிலும் இருக்கின்றன. ஏன்?

உடல் உறுதி பெற உடற்பயிற்சி செய்கிறோம். அதுபோல் மனம் உறுதி பெற நல்ல எண்ணங்கள் வேண்டும். நல்லவற்றை நினைத்தல், செய்தல் ஆகியவை மனம் வலிவுபெற உதவுகிறது. வாக்கிங் எப்படி உடல்நலத்திற்கு உதவுகிறதோ, அதுபோல் நல்ல செயல்களுக்கு சிறிய அளவிலாவது நம் நேரத்தை செலவிடுவதிலே மனம் உறுதிப்படுகிறது. நாலு பேருடன் அதைச் சேர்ந்து செய்யும் போது, நட்புணர்வும், மகிழ்ச்சியும் உண்டாகிறது.

நம்மில் பலர் குடும்பச்சுமையினாலே நல்ல எண்ணங்கள் இருந்தும், செயல்களாய் அவற்றை மாற்ற முடியாமல் விட்டுவிடுகிறோம். சில மணித்துளிகளைச் செலவிடுதல் மூலமாய் ஒரு நற்செயல் செய்ய முடியுமெனில், அதைச் செய்ய பலர் தயாராகவே இருக்கிறோம். இந்த அடிப்படையில் ஒரு திட்டம், ஒரு அமைப்பு செயல்பட முடியுமென்றால், அதற்கு பலம் சேர்க்க பல கரங்கள் தயாராய் உள்ளன. அவர்களுக்கு ஒரு நல்ல அடிப்படை அமைக்க வேண்டும் என்னும் நோக்கமே டீம் உருவானதின் முக்கிய காரணம்.

யாருக்கு?

சமூகத்திலே எத்தனையோ நற்பணிகள் தேவைப்படுகின்றன. டீம் ஏழைக் குழந்தைகளின் நலத்தை தன் முக்கியக் குறிக்கோளாய் கொண்டது. அதிலும் அவர்களின் கல்வியை முக்கியக் கோட்பாடாய் கொள்ளக் காரணம், நல்ல கல்வி, நல்ல குடிமக்களை உருவாக்கும் என்ற கருத்தில் கொண்ட நம்பிக்கைதான். இன்று நம்மில் பலர் நல்ல வாழ்க்கை அடைய முடிந்தது என்றால், அதற்குக் காரணம் கல்விதான். அந்தக் கல்வி அமைப்பு இன்று பலவிதங்களிலும் சேதப்பட்டுக் கிடக்கிறது. பல தனியார் பள்ளிகள் முளைத்து, பணத்திற்குக் கல்வி என்று வியாபாரம் செய்து கொண்டு இருக்கின்றன. மற்றொரு புறம் பல கிராமப்புற அரசுப்பள்ளிகளும், எளிய பள்ளிகளும் மூச்சுத் திணறி வருகின்றன.

திண்ணைப் பள்ளிகளிலும், தெருவிளக் கடியிலும், பல அப்துல் கலாம்களும், சர்.சி.வி. இராமன்களும், ஜகதீஸ் சந்திர போஸ்களும் உருவாகினர். அத்தகைய அறிஞர்களை உருவாக்கிய ஆசிரியச் சமுதாயம் இன்று உற்சாகம் குன்றி இருக்கின்றது.

அந்தப் பள்ளிகளுக்குச் சிறிது உதவி செய்வதின் மூலம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மனதிலே உற்சாகத்தை ஊட்டி, கல்வித்தரத்தை உயர்த்தலாம் என அறிவோம்.

உழவோ, நெசவோ, தொழில் எதுவானாலும், கல்வி முன்னேற்றத்தைப் பெருக்கும். ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது, அங்கு உள்ள மக்கள் பெறும் கல்வியின் தரத்தைப் பொறுத்தது. கல்வியின் தரம் உயர கல்விச்சாலைகள் மேம்படவேண்டும்.

ஒரு சில நல்ல பள்ளிகள் இருப்பதால் நாடு உயர்ந்து விடாது. அனைத்துப் பள்ளிகளும் குறிப்பிட்ட அளவு தரத்தை எட்ட வேண்டும்.

நம் நாட்டுப் பள்ளிகளை எல்லாம் ஒரு குறிப்பிட்ட தரத்துக்கு உயர்த்துவது என்பது மிகப்பெரிய காரியம். காரியத்தின் பரிமாணத்தைக் கண்டு மயங்காமல், முடிந்தவரை செய்வோம் என்று கடமையைச் செய்தல் வேண்டும். எதற்குமே ஒரு தொடக்கம் உண்டு. திட்டங்கள் ஒவ்வொன்றாய் நிறைவேற ஆரம்பித்து மக்களின் நம்பிக்கையை பெறும்பொழுது, இதன் வளர்ச்சி நமது நாட்டிற்கே ஒரு திருப்பு முனையாய் வளரும்.

டீம் செயல்முறைகள்

இதன் கருத்து எளிமைதான்.

மாதம் ஒரு குறுந்தொகையை (10 டாலர்) உறுப்பினர் செலுத்துவர். நான்கு மாதங்களுக்கு ஒருமுறை பொதுக்கூட்டம்.

பொதுக்கூட்டத்திலே உதவிச் செயல் செய்பவர்களின் பெயர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும். தேர்ந்தெடுக்கப் பட்டவர்களுக்கு பணம் சமமாய் பிரித்துத் தரப்படும். இனி அவர்கள் தங்களுடைய பகுதியிலே உதவி தேவைப்படும் ஒரு பள்ளிக்கு, அதன் தேவைகளை அறிந்து வசதிகள் செய்து தர வேண்டும்.

உதாரணமாக 100 பேர். ஆளுக்கு 10 டாலர். 4 மாதங்களில் மொத்தம் 4000 டாலர். 8 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு 500 டாலர் வீதம் பிரித்துக் கொடுத்து, 8 பள்ளிகள் பயன டைந்தன. 50 மாதங்களில் ஒவ்வொரு உறுப்பினரும் ஒவ்வொரு நற்செயல் புரிந்திருப் பார்கள்.

பொதுக் கூட்டத்திற்கு ஆகும் செலவு உண்டியல் வசூல் மூலம் சமாளிக்கப்படுகிறது.. கூட்டுணவும்(Pot-luck), பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் உண்டு.

அனைத்து நற்பணி நிறுவனங்களையும் டீம் மதிக்கிறது. டீமின் உறுப்பினர்கள், பல்வேறு தொண்டு நிறுவனங்களில் தொண்டாற்றி வருகின்றனர். டீம் அனைத்து தொண்டு நிறுவனங்களுடனும் ஆரோக்கியமான உறவு கொண்டுள்ளது. எனினும் டீம் யாரிடமும் விளம்பரம் தேடுவதில்லை. யாரையும் விளம்பரப்படுத்துவதும் இல்லை.

மற்ற தொண்டு நிறுவனங்களுக்கும் டீமுக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம், டீமில் அனைவரும் சமம். அனைவரும் அவரவருக்குப் பிடித்த ஒரு நற்பணியை செய்யலாம். அனைவருக்கும் திட்ட அமலாக்கத்தில் உரிமை.

இதற்கும் மேலாய் ஒன்று இருக்கிறது. நன்கொடை கொடுத்தபின், அந்தப்பணம் உரியவருக்கு போய் சேர்ந்ததா என்று எண்ணி வருத்தமடைபவர்கள் பலர். டீமில் உறுப்பினர் கள் தமது முழுச்சந்தாவையும், தம் மனதிற்கேற்ற வகையிலே செலவிட முடிகிறது. மேலும் பல நற்பணி அமைப்புகளில் மொத்த நிர்வாகச் செலவு என்பதே ஒரு பெரும்தொகையாய் அமைந்து விடுகிறது. டீமில் நிர்வாகச் செலவுகள் பெரும்பாலும் தவிர்க்கப் படுகிறது.

உறுப்பினர்கள் அமெரிக்காவில் இருக்க, திட்டப்பணிகளோ இந்தியாவில். இதற்கு நம் கலாச்சாரம்தான் கைகொடுக்கிறது. உறுப்பினர் கள் திட்டங்களை, இந்தியாவில் உள்ள தத்தமது குடும்பப் பெரியவர்கள் மூலம் செயல்படுத்துகிறார்கள். இதனால், குடும்பத் தினருக்கு மதிப்பும், மன மகிழ்ச்சியும் கிடைக்கிறது. பல பெற்றோர்களுக்குத் தன் குழந்தை, தன்மூலம் நற்செயல் செய்கிறார் என்பது எவ்வளவு இன்பத்தை அளிக்கும் என்பது நம் அனைவருக்குமே தெரியும்.

டீம் ஒரு குழந்தையாய் தளிர் நடை போட்டுக்கொண்டு இருக்கிறது. பணி தடங்க லில்லாமல் நீரோட்டம் போல நடைபெறத் தேவையான அளவிற்கு முன்கூட்டியே சிந்தித்ததனால் இன்று உறுப்பினர்களிடையே அடுத்து என்ன என்ற அளவிற்கு ஒரு சிந்தனை வளர்ந்து வருகிறது.

சிறு முயற்சியென்றாலும் கட்டுக்கோப்பும், திட்டமிடலும் டீமின் மிகப்பெரிய சொத்துகள். ஒரு பொழுதுபோக்கு போல தொண்டு நிறுவனத்தின் பணிகளில் பங்கு கொள்வ தென்பது நமக்குச் சாதாரணமாகத் தோன்று கிறது. நிறுவனத்தின் நிழலை விட்டு வெளியே வந்து அமர்ந்து சிந்திக்கும்போது, இன்று நீரோடை போல நமது செயல்பாடுகள் அமைய வகை செய்த ஆலோசனைகள் எவ்வளவு அபாரமானது என்று புரிகிறது

இந்தச் சேவைத் திட்டத்தின் இன்னொரு முக்கியமான அம்சம் என்னவெனில் இத்திட்டத்தில் சேருமாறு எவரும் கட்டாயப்படுத்தப் படுவதில்லை. அங்கத்தினர்கள் தாங்களாகவே முன்வந்து சேவை செய்வதில் மிகுந்த ஆர்வமும் அக்கறையும் கொண்டு செயலாற்றுவது உண்மையிலேயே மிக்க மகிழ்ச்சியடையத் தக்கதாகும்.

டீமைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள அல்லது டீமில் இணைய அணுகவும் :

http://www.indiateam.org/

அடுத்து என்ன?

ஏதோ தானம் செய்வது நமது நோக்கமல்ல. அடிப்படைக் கல்வி வசதி சீர்திருத்தப்பட வேண்டும் என்பது நமது கொள்கை. 600 கைகள் அதற்கு போதாது. நமது இந்த சிந்தனை நமது மக்களுக்கு சென்று சேரவேண்டும். சிந்தனைகள் மக்களை சேரும்போதுதான் சீர்திருத்தங்கள் நடைபெறுகின்றன. அரசாங்கம் கவனிக்க வில்லையே என்று ஒஓராசிரியர் பள்ளியிலே ஓய்ந்து கிடக்கும் ஒரு ஜீவனுக்கு இது நம்பிக்கை தரும்.

டீம் வளர, அதை மக்கள் உணரவேண்டும். அதன் நோக்கங்களும் செயல்பாடுகளும் மக்களை அடைய வேண்டும். அடையும் என்று நம்புவோம்.

மொத்த உறுப்பினர்கள்: 324

2000 ஆண்டு உறுப்பினர்கள்: 109

2001 ஆண்டு உறுப்பினர்கள்: 110

2002 ஆண்டு உறுப்பினர்கள்: 105

திட்டமிடப்பட்ட நற்பணிகள்: 108

2000 ஆண்டுக் குழு: 56

2001 ஆண்டுக் குழு: 37

2002 ஆண்டுக் குழு : 15

தாயகத்துக்கு டீம் - ன் பங்களிப்பு!!!

108 நற்பணிகள் x 100 மாணவர்கள் = 10,800 குழந்தைகள் (தோராயமாக பள்ளிக்கு 100 மாணவர்கள்)

108 நற்பணிகள் x 500$ = 54,000 அமெரிக்க டாலர்கள்

******


டீம் விதிமுறைகள்

டீமின் நிர்வாக, மற்றும் விளம்பரச்செலவு 0 பைசாக்கள்!

டீமின் சொத்து - உறுப்பினர்கள் மட்டுமே!

எந்த பள்ளி பயனடைய வேண்டும் என்பதை உறுப்பினரே தேர்ந்தெடுப்பார். !

எவ்வகை உதவி தேவை என்பதை ஆராய்ந்து உறுப்பினரே முடிவெடுத்து திட்டத்தை நிறைவேற்றுவார்.!

டீம் குழுப்பணியில் நம்பிக்கை கொண்டது!

டீமில் அனைவரும் சமம். யாருக்கும் அதிக அதிகாரமோ உரிமையோ கிடையாது!

டீம் எந்த உறுதி மொழியும் தருவதில்லை. உறுப்பினர்கள் தமக்குத்தாமே உறுதியெடுத்துக் கொள்கிறார்கள்!

டீம் நிதிதிரட்டும் எந்த நிகழ்ச்சிகளையும் நடத்தாது. நன்கொடைகள் உறுப்பினர்களிடமிருந்தோ அல்லது மனமுவந்து சுயமாய் கொடுப்பவர்களிடமிருந்தோ மட்டுமே பெறப்படும்!

நிதிக்காக டீம் யாருக்கும் விளம்பரம் செய்யாது!

டீம் பிரபலமான நிறுவனம் என்பதை விட பலமான நிறுவனம் என்று பெயரெடுக்கவே விரும்பும்.!

டீமில் இணைய அடிப்படைத் தகுதி : நற்பணி செய்ய வேண்டும் என்ற எண்ணம்!

© TamilOnline.com