கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய் என்ற கருத்தில் பல ஆண்டுகளுக்கு முன் ஒரு தமிழ்ப் படம் வந்தது நினைவிருக்கலாம். இந்தப் பழமொழிக்கு ராமாயணத்தையே உதாரண மாகச் சொல்லலாம்.
தசரதன் வேட்டையாட காட்டிற்குச் செல் கிறான். அங்கு ஓர் இளைஞர் பார்வையற்ற தன் பெற்றோரின் தாகத்தைப் போக்குவதற்காக ஆற்றில் இறங்கி பானையில் நீரை மொண்டு கொண்டிருக்கிறான். மரங்கள் அடர்ந்த காட்டில் தசரதனுக்கு இந்த இளைஞன் தென் படவில்லை. ஆனால் நீரை மொள்ளும் சத்தம் மட்டும் கேட்கிறது. அந்த மாமன்னனோ காதால் கேட்ட சத்தத்தை ஏதோ ஒரு யானை ஆற்றில் தண்ணீர் குடிக்கிறதாக எண்ணுகிறான். சத்தம் வந்த திக்கில் அம்பை எய்ய இளைஞன் பரிதாபமாக செத்துப்போகிறான். இதனால் காதால் கேட்பதெல்லாம் மெய்யல்ல என்பது புலனாகிறது.
சீதை, லட்சுமணன் மற்றும் ராமன் ஆகி யோரின் வனவாசத்தில் பதிமூன்று ஆண்டுகள் கழிந்தன. அப்போது ஒரு நாள் அவர்கள் தங்கியிருந்த குடிலின் முன்னால் மாரீசன் என்ற அரக்கன் பொன்மானைப்போல உருவமெடுத்து அங்குமிங்குமாகத் திரிந்து கொண்டிருந்தான். அந்த மானைப்பார்த்ததும் சீதைக்கு பிடித்து விட்டது. அதைக் கொண்டுவருமாறு ராமனிடம் விண்ணப்பித்தாள். ராமனும் அந்த மானைத் துரத்திக் கொண்டு வெகுதூரம் சென்று பின் உண்மை தெரிந்து மாரீசனைக் கொன்றான். ஆனால் அதற்குள் விபரீதம் நடந்துவிட்டது. ராவணன் மாறுவேடத்தில் அங்கு வந்து சீதையை கடத்திக் கொண்டு போய்விட்டான். ஆக காதால் கேட்பதும் பொய், கண்ணால் பார்ப்பதும் பொய் என்று தெரிகிறது.
ஒரு பெரிய ராஜ்யத்தை ஆண்ட மாமன்னனா லும் புருஷோத்தமனாய் விளங்கிய ராமனாலும் தீர்க்கமாய் யோசித்து சரியான முடிவை எடுக்கமுடியாமல் போய் தீய விளைவுகள் ஏற்பட்டன என்பதைப் பார்த்தோம்.
மனிதப் பிறவியையே சாராத அனுமானின் புத்திசாலித்தனத்தைப் பார்ப்போம். லங்கா நகரத்தில் பிரவேசித்ததும் பல அழகிய பெண்களைப் பார்க்கிறான். ஒவ்வொரு பெண்ணையும் பார்க்கும் போதும் இவள் சீதையாக இருப்பாளோ என்ற சந்தேகம் வருகிறது. அனுமன் சீதையை இதற்கு முன்னர் பார்த்ததில்லை அல்லவா? ராமன் சொன்ன அடையாளங்களை வைத்துதானே கண்டுபிடிக்க வேண்டும்.
பட்டுடை உடுத்தி பஞ்சணையில் படுத்துறங் கும் பட்டதரசியை பல்கணி வழியாகப் பார்த்ததும் ஒரு கணம் இவள் தான் சீதையோ என்று திகைக்கிறான். சீதையைக் கண்டுவிட்ட மகிழ்ச்சியில் எம்பிக் குதிக்கிறான். ஆனால் அடுத்த கணம் பளிச்சென்று அவனுக்கு ஒரு யோசனை. எம்பெருமான் ராமன் சீதையின் குணங்களைச் சொன்னவற்றைப் பார்க்கும் போது இது நிச்சயம் சீதையாக இருக்க முடியாது. மாலன் மீது மாறாக் காதல் கொண்ட மைதிலி மாற்றான் வீட்டு மஞ்சத்தில் மயங்கிக்கிடப்பாளா? தூக்கம்தான் அவளை தவழுமா? சீதையை இப்படி அந்தபுரத்தில் தேடுவதே பாவம் அல்லவா என்று தன்னைத் தானே கடிந்து கொண்டு வேறு இடங்களுக்குச் செல்கிறான்.
அசோகவனத்தில் சிம்சுக மரத்தின் கீழ் ஓர் அபலைப் பெண்ணைப் பார்க்கிறான். பலவிதமாக யோசித்து இவள் சீதையாகத்தான் இருக்க வேண்டும் என்று தீர்மானமாக முடிவிற்கு வருகிறான். உடனே அவளிடம் பேசிவிட வில்லை. சீதையை நன்றாகக் கவனித்து அங்குள்ள அரக்கிகள் பேசுவது மற்றும் ராவணன் வந்து சீதையைப் பலவாறு பேசி பணியவைக்க முயற்சிப்பது போன்றவற்றை கவனித்த பின்னரும் அவளிடம் அவசரப்பட்டு நேரிடையாகப் பேசிவிடவில்லை. பேச்சை எப்படித் தொடங் கலாம் என யோசித்து ராம ராம என்று ராமன் புகழ் பாடி மெல்ல அவள் கவனத்தை தன்பால் ஈர்க்கிறான். காரியம் வெற்றி என்று சொல்லவும் வேண்டுமா?
சக்கரவர்த்தி தசரதன் எல்லா பரிவாரங் களுடன் காட்டிற்குச் சென்றாலும் தவறான முடிவெடுக்கிறான். காரணம் என்ன? தன் சுய நலத்திற்காக ஓர் அல்ப சந்தோஷத்திற்காக ஜீவஹிம்சை செய்யத்துணிந்தான். அது யானையின் சத்தம்தானா அல்லது வேறு ஏதா வது இருக்குமோ என்று எண்ணக்கூட அவனுக்குத் தோன்றவில்லை. இதைத் தமோ குணம் என்று சொல்லலாம்.
ராமன் பொன்மான் விஷயத்தில் ஏதோ சூது இருக்கலாம் என்று யுகித்தாலும் மனைவியின் பால் உள்ள அன்பினால் உந்தப்பட்டும், ஒரு பெண் தன்னைக் கையாலாகதவன் என்று சொல்லிவிடுவாளோ என்ற பயத்தாலும் மாயமானைப் பின் தொடர்ந்து சென்றான். அந்த நேரத்தில் ராமனிடம் ரஜோ குணம் மட்டுமே வெளிப்பட்டது.
ஆனால் அனுமன் சென்றது தெய்வ காரியத்திற்காக. உயர்ந்த நோக்கத்திற்காக. ஆகவே அவனால் நன்றாக யோசிக்க முடிந்தது. இதை சாத்விக குணம் எனலாம். ஆகவேதான் ராமாயண காவியத்தில் ராமனை புருஷோத்த மனாகக் காட்டினாலும் ஹனுமான் நம் எல்லோர் உள்ளத்திலும் உயர்ந்து நிற்கிறான்.
என்.எஸ். நடராஜன் |