"சனியைப்போலக் கொடுப்பாருமில்லை; சனியைப் போலக் கெடுப்பாருமில்லை" என்பார்கள். இந்திராதி தேவர்கள் முதலாக ஆண்டி ஈறாக சனீச்வரனின் பிடியில் சிக்காதவர்களும் இல்லை. யாரையும் அவன் விட்டு வைத்ததுமில்லை. அவ்வாறு அவனது பிடியில் சிக்கிச் சோதனை களையும் வேதனைகளையும் அனுபவிப்பவர்கள் இறைவனிடம் கொண்டுள்ள பக்தியின் ஆழத் தினைப் பொறுத்து அத்துன்பங்களைத் தாங்கிக் கொள்ளவும் அவற்றினின்றும் மீளவும் முடியும். இதைத்தான் அருணகிரியாரும்
"நாள் என்செயும் வினைதான் என்செயும் எனை நாடிவந்த கோள் என்செயும் கொடுங்கூற்று என்செயும் குமரேசன்இரு தாளும் சிலம்பும் சலங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்கு முன்னேவந்து தோன்றிடினே"
என்று பாடியுள்ளார்.
சனியின் பிடியில் சிக்கித் தவிப்பவர்கள் சென்று வழிபடுவதற்கென்றே அமைந்த பிரசித்தி பெற்ற தலம் திருநள்ளாறு. தஞ்சை மாவட்டத்தில் காவிரிக்கரையின் தென்பால் உள்ளது இத்தலம். இது எல்லோருக்கும் தெரிந்த செய்தி... தர்ப்பாரண்யம் என்பது தான் இதன் ஆதி நாமம்.
இப்பெயர் எப்படி வந்தது?
பிரமன் தாம் படைத்த உலகங்களைப் பார்த்து மகிழப் புறப்பட்டார். தம் படைப்பின் அழகை வியந்தவண்ணம் வந்துகொண்டிருந்தவர் வழியில் தர்ப்பைக்காட்டை வந்தடைந்தார். வடமொழி யில் இது தர்ப்பாரண்யம் எனப்படும். அந்த இடம் அவருக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டதால் அங்கேயே தங்கி தவம் இயற்றத் தொடங்கி விட்டார். அவர் தவத்தை மெச்சிய இறைவன் அந்த இடத்திலேயே சிவலிங்க உருவில் எழுந்தருளிக் காட்சி தந்தார். இதனால் மகிழ்ச்சி யடைந்த பிரமன் மனத்தால் உருவங்கொடுத்து ஆகம விதிமுறைப்படி ஒரு கோயிலை நிர் மாணித்தார். அத்துடன் தமது பிரம்மதண்டத் தால் கோயிலுக்கருகில் கிழக்கில் 'பிரமதீர்த்தம்' என்ற புண்ணிய தீர்த்தம் ஒன்றையும் அமைத்தார். அதன் அருகில் சரஸ்வதி தேவியும் 'வாணி தீர்த்தம்' ஒன்றை அமைத்தார். இவரின் வாகன மாகிய அன்னம் கோயிலின் வடக்கில்' அம்சதீர்த்தம்' ஒன்றை உருவாக்கிற்று. இவை மட்டுமா? அகத்தியரால் 'அகத்தியர்தீர்த்தம்', நளமகா சக்ரவர்த்தியால் 'நள தீர்த்தமும்' மற்றும் 'நளகூபம்' என்று இவ்வாறு தீர்த்தங்கள் மலிந்த தலம் திருநள்ளாறு.
இங்கு மொத்தம் 13 தீர்த்தங்கள்உள்ளன.
பெயர் விளக்கம்:
நள்ளிரவு என்பது நடு இரவு என்ற பொருள் தருவது போல நள்ளாறு என்பது ஆறுகளுக்கு நடுவில் என்று பொருள்படும். காவிரிக் கரைக்கருகில் தெற்கே அரிசிலாறு, வடக்கே நூலாறு மற்றும் வாஞ்சியாறு ஆகியவை ஓடிக்கொண்டிருக்க நடுவே இத்தலம் அமைந் திருப்பதால் 'நள்ளாறு' என்று அழைக்கப் படுகிறது. ஒரு காலத்தில் கோயிலைச் சுற்றி ஓர் அகழி இருந்ததற்கான அடையாளம் இன்றும் இருக்கிறது. அது இன்று தூர்ந்துபோய்த் தரையாகத் தெரிந்தாலும் அகழியின் உட்புற மதில்கள் இன்றும் அங்கே காணப்படுகின்றன.
மூர்த்தி:
இக்கோயிலில் மூலவர் நள்ளாற்றீசர் எனப் படுபவர். தர்ப்பாரண்ய லிங்கமாக விளங்கும் இவர் 'சுயம்பு' லிங்கம். தர்ப்பைகளுக்கு நடுவே சுயம்புவாக லிங்க வடிவாகத் தோன்றியதால் லிங்கத்தின் மீது தர்ப்பையின் தழும்புகள் காணப்படுகின்றன என்பது வியக்கத்தக்க உண்மை. இங்குள்ள தியாகேசப்பெருமான்
சாதிப்பச்சை இரத்தினத்தால் ஆன சிவலிங்கத் திருமேனியுடன் 'மரகதவிடங்கர்' என்று அழைக்கப்படுகிறார்.
மற்றொரு புதிய செய்தி:
கோயிலில் பொதுவாக இறைவன் இறைவி மூலவர் உற்சவர் இவர்களுக்கெல்லாம் தான் சந்நிதிகள் இருக்கும். இங்கு இடையன் ஒருவனுக்குத் தனியாக சந்நிதி ஒன்று இருக்கிறது.
இடையன் வரலாறு:
ஒரு காலத்தில் இடையன் ஒருவன் அரசன் ஆணைப்படி இக்கோயிலுக்குப் பால் அள்ந்து கொடுத்துக் கொண்டிருந்தான். ஆனால் மன்னனிடம் வேலை பார்த்துக் கொண்டிருந்த கணக்கன் தன் வீட்டில் பாலைக் கொடுத்து விட்டுக் கோயில் கணக்கில் எழுதிக் கொள்ளுமாறு வற்புறுத்தியும், மறுத்தால்
மன்னனிடம் சொல்லித் தண்டனை வாங்கித் தருவதாக அச்சுறுத்தவே இடையன் பயந்து போய் நள்ளாற்றீசரிடம் சென்று முறையிட்டழு தான். இடையன்பால் இரக்கமுற்ற இறைவன் கணக்கன் தலையைக் கொய்து வருமாறு தன் சூலத்தை ஏவினான். அது செல்லும் பாதையில் தான் தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக இறைவனுக்கு நேர் எதிராக இருந்த பலிபீடம் ஒரு பக்கமாக விலகிக் கொண்டது. இன்றும் சந்நிதியில் பலிபீடம் விலகியிருக்கும் காட்சி இவ்வரலாற்று உண்மைக்குச் சாட்சியாய் விளங்குகிறது.
சைவ சமயக் குரவர் நால்வரில் அப்பர் சம்பந்தர் சுந்தரர் மூவரும் திருநள்ளாற்றின் இயற்கை அழகையும் இறைவன் பெருமையையும் சிறப்பித்துள்ளனர்.
அப்பர் இறைவன "நள்ளாறா என நம்வினை நாசமே" என்று போற்றுகிறார்.
திருஞானசம்பந்தர் "பண்ணிய நடத்தோடிசை பாடுமடியார்கள்
நண்ணிய மனத்தின் வழிபாடுசெய் நள்ளாறே" என்றும்
சுந்தரர் "செறிந்த சோலைகள் சூழ்ந்த நள்ளாறு" என்றும் போற்றிப் பாடியுள்ளனர்.
தர்ப்பண்யேசுவரர் என்றும் நள்ளாற்றீசுவரர் என்றும், பிரமன் வழிபட்டதால் ஆதிபுரீசுவரர் என்றும் நளன் வழிபட்டதால் இவ்வூர் நளேசுவரம் என்றும் தியாகேசப்பெருமான் எழுந்தருளியிருப் பதால் 'நகவிடங்கபுரம்' என்றும் பல்லாற்றானும் சிறப்புடைய இத்தலப்பெருமைக்கு 'அனுக்கிரக மூர்த்தி' என்று சிறப்பிக்கப்பெறும் சனீஸ்வர பகவான் முக்கிய பங்கு பெறுகிறார்.
இது பற்றிய செய்திகளை அடுத்த மாத இதழில் பார்க்கலாம்.
டாக்டர். அலர்மேல்ரிஷி |