கடலைப் பருப்பு வெல்லபோளி
தேவையான பொருட்கள்

கடலை பருப்பு - 1 ஆழாக்கு
வெல்லம் - 2 ஆழாக்கு
துருவிய தேங்காய் - 1/2 ஆழாக்கு
மைதா மாவு - 11/4 ஆழாக்கு
எண்ணெய் - 1 கரண்டி
நெய் - 1/2 கரண்டி
கேசரி பெளடர் - 1 சிட்டிகை
ஏலப்பொடி - 1 ஸ்பூன்
உப்புபொடி - 1/2 சிட்கை

செய்முறை

மைதாமாவில் 1/2 கரண்டி எண்ணெய், உப்பு இவற்றை போடவும். கேசரி பெளடரை 2 ஸ்பூன் தண்ணீரில் கரைத்துவிடவும். பிறகு சிறிதளவு நீர் விட்டு நன்றாக பிசையவும். மிகவும் தளர இருக்க வேண்டாம். பிசைந்த மாவின் மேல் 4 ஸ்பூன் எண்ணெய் தடவி நன்றாக மூடி வைக்கவும். சுமார் 2 மணிநேரம் நன்றாக ஊற வேண்டும். கடலைபருப்பை 1 மணிநேரம் ஊற வைக்கவும். குழையவிடாமல் வேக வைக்கவும். தண்ணீரை வடிகட்டவும். வெந்தபருப்புடன் துருவிய தேங்காயை சேர்த்து மிக்ஸியில் கடலைபருப்பு மசியம் வரை அரைக்கவும். அரைக்கும் போது தேவையானால் கடலைப்பருப்பு வடிகட்டிய தண்ணீரை சேர்த்து அரைக்கலாம். வாணிலியில் 1/2 கரண்டி தண்ணீர்விட்டு வெல்லத்தை போட்டு கொதிக்கவிடவும். வெல்லம் கரைந்ததும் மிக்ஸியில் அரைத்த விழுதை போட்டு கிளறவும். அடுப்பு நிதானமாக எரிய வேண்டும். கீழே இறக்கி ஏலப்பொடியை தூவி கலந்து நன்றாக ஆற வைக்கவும். பூரணம் உருட்டும் பதத்தில் இருக்க வேண்டும்.

கனமான ப்ளாஸ்டிக் பேப்பரில் எண்ணெய் தடவி மைதா மாவில் சிறிய அளவில் எடுத்து உருட்டி பிளாஸ்டிக் பேப்பரில் வைத்து விரலால் பரப்பி அதனுள் கடலை மாவு பூரணத்தை உருட்டி வைத்து மைதா மாவால் நன்றாக மூடவும். பிறகு உள்ளங்கையில் எண்ணெய் தடவி முடிந்தவரை மெல்லியதாக தட்டவும். நிதானமாக எரியும் அடுப்பில் தோசைக் கல்லை போட்டு சூடானதும் எடுக்கவும்.

© TamilOnline.com