ஆடி அழைக்கிறது
மற்ற மாதங்களைவிட ஆடிமாதத்துக்கு தனிச்சிறப்பு உண்டு. ஆடிப்பண்டிகையை தொடர்ந்து விசேஷநாட்களின் வருகையும் தொடங்கிவிடும். ''ஆடி அழைக்கும்'' என்பது பழமொழி. மேலும் பழமொழிகளைப் பெற்ற பெருமையும் ஆடிமாதத்துக்கு உண்டு.

விசேஷநாட்களை பண்டிகை, பூஜை என்று இரண்டு விதமாக பிரிக்கலாம். ஒவ்வொரு பண்டிகைக்கும் வெவ்வேறு விதமான பதார்த் தங்கள் செய்து உண்டு மகிழ்ந்து கொண் டாடுவது போல, பூஜை நாட்களுக்கும் பல விதமான நைவேத்தியங்கள் செய்து பயபக்தி யுடன் பூஜை செய்து கடவுளை வழிபடுவது நம் பாரம்பரியம் ஆகும். இளைய தலைமுறையினர் பலருக்கு இது புரியாத விஷயங்களாக இருப்பதுடன் குழப்பம் தரும்விதமாகவும் இருக்கும். முக்கியமாக அனைவராலும் விரும்பப்படும் வடை, ஆமவடை செய்வதா? ஊளுந்து வடை செய்வதா? விருந் திலே விஞ்சி நிற்பது ஆமவடையா? மெது வடையா? என்று பட்டிமன்றமே நடத்தும் அளவுக்கு புகழ் பெற்ற வடைகள்.

பண்டிகை நாட்களில் ஆமவடை. பூஜை நாட்களில் ஊளுந்து வடை, ஆடிப் பண்டிகை அன்று 'தேங்காய் பால்' செய்வதும் வழக்கம்.

இங்கு சில பதார்த்தங்கள் மட்டும்.

தேங்காய் பால்

தேவையான பொருட்கள்

துருவிய தேங்காய் தூள் - 1 ஆழாக்கு
வெல்லத்தூள் - 1/2 ஆழாக்கு
ஏலப்பொடி - 1 ஸ்பூன்
அரிசிமாவு - 1 ஸ்பூன்

செய்முறை

தேங்காய் தூளில் 3/4 டம்ளர் தண்ணீர்விட்டு மிக்ஸியில் அரைக்கவும். அரைத்த விழுதில் உள்ள பாலை பிழிந்து வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும். பிழிந்த தேங்காய் சக்கையில் 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைத்து பாலை பிழிந்து வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும். மூன்றாவது முறையும் அதேபோல் பிழிந்து வடிக்கட்டிய பாலில் அரிசி மாவை போட்டு கரைத்து அடுப்பில் வைத்து 2, 3 நிமிடங்கள் கொதிக்க விடவும். பிறகு இரண்டாவது முறையாக பிழிந்த பாலைவிட்டு சிறிது கொதிக்க விட்டு வெல்லம் போடவும். வெல்லம் கரைந்து கொதிக்கும் போது முதலில் பிழிந்த பாலைவிட்டு ஒரு நிமிடம் ஆனதும் கீழேஇறக்கி ஏலப்பொடி போட்டு கிளறவும்.

அரிசி மாவு போடுவதால் தேங்காய்பால் நீர்த்து விடாமல் இருக்கும்.

© TamilOnline.com