'ஊறுகாயை தொட்டுக்கொண்டால் உலக்கையையே முழங்கலாம்'
என்ற பழமொழி சாப்பாட்டு ரசிகர் சொன்னதாகவும் இருக்கலாம்.
ஆபத்பாந்தவன், சமயசஞ்சீவி, யாமிருக்க பயமேன்? என்று அபயம் அளிப்பது. இவ்வளவு சிறப்புகள் பெற்ற ஊறுகாய் 'ஊறு' (கெடுதல்) செய்யாத, காளான்கள் அண்டாத, அதிக நாட்கள், மாதங்கள், வருடங்கள் ஆனாலும் சுவையுள்ளதாக இருக்க சில வழிமுறைகள்.
ஊறுகாய்களை பாதுகாக்க ஜாடி, கல்சட்டி அல்லது கண்ணாடிபாட்டில்கள் தேவை.
காற்று புகாமல் மூடவேண்டும்.
அடிக்கடி கிளறிவிட வேண்டும்.
காய்களின் புளிப்புத்தன்மைக்கு ஏற்ப உப்பு, காரம் இவற்றை கூடவோ, குறையவோ போட வேண்டும்.
உப்பு குறைவானால் ஊறுகாய் சீக்கிரம் கெட்டுவிடும்.
டேபிள் சால்ட் போடுவதை தவிர்க்கவும். கல்உப்புதான் ஊறுகாய்க்கு சிறந்தது.
கடைகளில் வாங்கிய மிளகாய்தூளை உபயோகிப்பதால் ஊறுகாயின் சுவை குறைவதுடன் காளான்கள் படியவும் வாய்ப்புண்டு. எனவே மிக்ஸியில் பொடி செய்யும் மிளகாய் பொடிதான் சிறந்தது. நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
வெந்தயப் பொடி, மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடி இவைகள் ஊறுகாய்க்கு அதிக ஆயுளை கொடுக்கக் கூடியவை.
ஈரமில்லாத, சுத்தமான ஸ்பூனை உபயோகிக்கவும்.
நல்லெண்ணெய் ஊறுகாய்களுக்கேற்றது.
இந்திரா காசிநாதன் |