அருண் மகிழ்நன் முத்து நெடுமாறன்
நேர்முக உரையாடல்

தமிழ் இணையம் 2002 மாநாடு செப்டம்பர் மாதம் 27, 28, 29 தேதிகளில் சான் ·பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதிக்கு வருகிறது. ·பாஸ்டர் சிடியில் இருக்கும் கிரௌன் பிளாசாவில் நடக்கவிருக்கும் இம்மாநாடு ஐந்தாவது தமிழ் இணைய மாநாடு. ஆங்கிலத்தில் INFITT (International Forum for Information Technology in Tamil) என்று அழைக்கப்படும் உத்தமம் (உலகத் தமிழ் தகவல் தொழில் நுட்ப மன்றம்) அமைப்பும், பெர்க்கலியின் கலி·போர்னியா பல்கலைக் கழகத்தின் தெற்காசியக் கல்வி மையமும் மற்றும் தமிழ்த் துறைத் தலைவரும் (Center for South Asia Studies and the Chair in Tamil Studies of University of California, Berkeley) இணைந்து இம்மாநாட்டை வழங்குகிறார்கள்.

மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தொடர்பாக சிங்கப்பூரிலிருந்து அருண் மகிழ்நன், முத்து நெடுமாறன் இருவரும் சான்·பிரான்சிஸ்கோ வந்திருந்த போது அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு தென்றலுக்குக் கிடைத்தது.

அருண் மகிழ்நன்

சிங்கப்பூர் கொள்கை ஆய்வுக் கழகத்தின் துணை இயக்குனர் (Deputy Director of the Institute of Policy Studies, Singapore). மேலும் சிங்கப்பூர் நன்யாங் பல்கலைக் கழகத்தில் பகுதி நேர இணைப் பேராசிரியர் (Adjunct Associate Professor in the School of Communication Studies in the Nunyang Technological University, Singapore). சிங்கப்பூர் தமிழ் இணைய ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக இருந்திருக்கிறார் (Co-chair, Tamil Internet Steering Committee). உத்தமம் அமைப்பின் நிர்வாக இயக்குனராகவும் (Executive Director of INFITT), நிர்வாகக் குழுவில் ஓர் உறுப்பினராகவும் (Executive Committee member) இருக்கிறார்.

முத்து நெடுமாறன்

முரசு அஞ்சல் மென்பொருள் மூலமாகப் பலருக்கும் அறிமுகமானவர். இவர் கணினியியல் பொறியாளராக (computer engineer) 1993 வரை மலேசியாவில் பணியாற்றியவர். தற்போது சிங்கப்பூரில் வசித்து வருகிறார். முரசு அஞ்சல் தமிழ் ஆர்வத்தினாலும், எழுத்துக்களை உருவாக்குவதில் (typography) உள்ள ஆர்வத் தினாலேயும் ஏற்பட்ட முயற்சி என்று கூறுகிறார். இவர் உத்தமம் அமைப்பின் துணைத் தலைவராகவும் (Vice-Chair, INFITT), உத்தமம் நிர்வாகக் குழுவில் ஓர் உறுப்பினராகவும் (Executive Committee member) இருக்கிறார்.

உத்தமம் அமைப்பின் குறிக்கோள் என்ன?

அருண்: உத்தமம் அமைப்பின் அடிப்படை நோக்கம் தமிழ்க் கணினி, தமிழ் இணையம் என்ற இரண்டு தொழில் நுட்பச் சாதனங் களையும் தமிழ் மக்களுக்குப் பயனளிக்கக் கூடிய வகையில் சிறப்படையச் செய்ய வேண்டும் என்பது. நாங்கள் குறிப்பாக மூன்று துறைகளில் கவனம் செலுத்த விரும்புகிறோம். ஒன்று தொழில் நுட்பம் - தமிழில் தகவல் தொழில் நுட்பம் வளர்க்கப்பட வேண்டும், அதற்கு வேண்டிய உதவிகளைச் செய்ய வேண்டும், அந்த முயற்சிகளை ஒருமுகப்படுத்த வேண்டும் என்பது ஒரு குறிக்கோள். இரண்டாவது, தமிழ் தகவல் தொழில் நுட்பம் e-commerce அல்லது மின்வர்த்தகத்தில் வளர்ச்சி காண வேண்டும் என்பது. மூன்றாவது, தமிழ் நாட்டுக்கு வெளியே வாழ்கின்ற தமிழ் மக்களிடையே பண்பாட்டு உறவு, பண்பாட்டு வளர்ச்சிக்கு ஆதரவு தரும் வகையில் இணையத்தின் மூலமாகவும், கணினியின் மூலமாகவும் எவ்வாறு உதவி செய்யலாம் என்று ஆராய்ந்து அந்த முயற்சிகளை ஒருமுகப்படுத்துவது.

எந்த முறைகளில் நீங்கள் உங்கள் குறிக் கோள்களைச் செயல் படுத்துகிறீர்கள்?

அருண்: ஒன்று, ஆண்டு தோறும் நடக்கின்ற தமிழ் இணைய மாநாடுகள் மூலம் எந்தத் துறைகளில் என்ன வளர்ச்சிகள் காணப்பட்டு இருக்கின்றன என்று பட்டியல் இடுவதோடு, புது முயற்சிகளுக்கு வழிகோலுமாறு கட்டுரைத் தலைப்புகளையும், விவாதங்களையும் நடத்தி வருகின்றோம். இரண்டாவது, செயற்குழுக்களை (working groups) ஏற்படுத்தி தரக்கட்டுப் பாடுகளை (standards) வலியுறுத்தி வருகிறோம். ஏழு செயற்குழுக்கள் இப்போது செயல் பட்டு வருகின்றன. மூன்றாவது, ஒவ்வொரு நாட்டிலும் அரசாங்கத்தின் மூலமாகவோ, தனியார் துறையின் மூலமாகவோ, தமிழ்க் கணினி, தமிழ் இணையம் வளர்ச்சிக்கு நாங்கள் வழிவகைகள் செய்கின்றோம். உதாரணத்திற்கு, சிங்கப்பூரில், தமிழ் இணைய ஒருங்கிணைப்புக்குழு (Tamil Internet Steering Committee) என்ற குழுவை அரசாங்கம் நிறுவியிருக்கிறது. உத்தமம் உலகளாவிய முயற்சிகள் மேற்கொள்ளும்போது அந்தந்த நாடுகளில் உள்ள அமைப்புகளின் மூலம் செயல் படுகின்றோம். அந்த வகையில், சிங்கப்பூர், ஸ்ரீலங்கா, வட அமெரிக்கா, ஐரோப்பா, மற்றும் தமிழகத்திலும் உத்தமத்தின் கிளைகள் அல்லது அந்த நாட்டின் ஒருங்கிணைப்புக் குழுக்கள் செயல் படுகின்றன.

முத்து: தொழில் நுட்பத்துறையில் இரண்டு பிரிவாக நாம் இந்த செயற்குழுக்களைப் பிரிக்கலாம். முதலாவது தரக்கட்டுப்பாடு, மற்றொன்று புதிய தொழில் நுட்பங்கள் (emerging technologies). தமிழ் இணைய, தமிழ்க் கணினி முயற்சிகள் தொடங்கும்போது பலர் அவரவரது வசதிக்கு ஏற்றவாறு பல அமைப்புகளை (formats) வைத்துக்கொண்டு செயல்பட்டார்கள். இந்த அமைப்புகளை ஒருமுகப்படுத்துவது சில குழுக்களின் குறிக் கோள். இதில் சில குழுக்கள் தங்கள் பணியையும் செய்து முடித்திருக்கின்றன. புதிய தொழில் நுட்பங்களில் தமிழின் புழக்கத்தை அதிகரிப்பதற்காக நாம் என்ன செய்யவேண்டும் என்று விவாதிப்பது, அதற்கான நடவடிக்கை களில் ஈடுபடுவது சில குழுக்களின் குறிக்கோள். Open Source இயக்கத்தின் மூலம் அறிமுகப் படுத்தப்பட்ட லினக்ஸ் (Linux) போன்ற கணினி இயக்குகளில் (operating system) தமிழைச் சேர்ப்பதற்கு ஒரு குழு மிகவும் தீவிரமாக செயல் பட்டு வருகிறது. Voice Recognition, Image, Hand-writing Recognition போன்ற துறைகளிலே கூடச் செயற்குழுக்களை ஆரம்பித்து முடுக்கி விடவும் நாங்கள் எண்ணம் கொண்டுள்ளோம்.

அருண்: தொழில் நுட்பம் சார்ந்த கலைச் சொற்களை ஒரே மாதிரியாக எல்லோரும் பயன் படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு செயற்குழு ஆயிரம் சொற்களையாவது தரப்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் இப்போது ஈடுபட்டிருக்கிறார்கள். தமிழிலேயே domain names ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்தில் ஒரு செயற்குழு சில பெயர்ச் சுருக்கங்களை வெளியிட்டார்கள். அவை “.org”க்கு “.அமை”, “.com”க்கு “.வணி”, “.gov”க்கு “.அரசு”. இது போன்று சில செயற்குழுக்களின் தீர்மானங்கள் வருகின்ற கலிபோர்னியா மாநாட்டில் வெளியிடப்படும்.

உத்தமம் அமைப்பு இதுவரை கண்ட சோதனைகள் என்ன? சாதனைகள் என்ன?

அருண்: 1997ல் சிங்கப்பூரில் முதல் மாநாடு கூடிய போது தமிழ் சார்ந்த தொழில் நுட்பப் பிரச்சினைகளை அலசி ஆராய்ந்தார்கள். அதில் மிக முக்கியமாகக் கருதப்பட்டது இரண்டு. ஒன்று விசைப்பலகை (keyboard) - தமிழ் விசைப்பலகை பல வேறு வடிவங்களில் இருந்தன. இரண்டாவது பிரச்சினை குறியீட்டு முறை - அதாவது எழுத்து உருக்களுக்குப் பலரும் பல முறைகளில் அவர்களே குறியீட்டு முறைகள் தயாரித்துக்கொண்டிருந்தனர். 1999-ல் தமிழ்நாட்டில் நடந்த மாநாட்டில் Tamil99 என்ற விசைப்பலகையை முன்மொழிந்து அதை எல்லோரும் ஏற்றுக்கொண்டு விட்டனர். ஆனால் குறியீட்டுமுறைப் பிரச்சினையை சுலபமாகத் தீர்க்க முடியவில்லை. 1997-ல் unicode என்ற குறியீட்டு முறைக்கு நாம் உடனடியாகப் போக முடியாது என்ற முடிவை எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள். unicode இல்லாத பட்சத்தில் எந்தக் குறியீட்டு முறையை ஏற்றுக்கொள்ளலாம் என்பது பற்றித்தான் சர்ச்சை இருந்தது. 1997-ல் தரக்கட்டுப்பாடு வேண்டும் என்ற முடிவு ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1999-ல் தமிழ்நாட்டில் நடந்த மாநாட்டில் பெருமுயற்சி செய்தும் குறியீட்டு முறைகளை ஒருமுகப்படுத்த முடியவில்லை. உலகின் பல இடங்களில் உள்ள 10 வல்லுனர்களை குழுவாக அமர்த்தி இதற்கு ஒரு முடிவு காண தமிழகத்தில் உள்ளவர்களிடம் பொறுப்பு விடப்பட்டது. அவர்கள் TAB, TAM என்ற இரு குறியீட்டு முறைகளை முன்வைத்தார்கள். ஆனால் சில வெளிநாட்டு வல்லுனர்களின் மதிப்பீட்டில் இந்த குறியீட்டு முறைகளில் குறை இருப்பதாகக் கருதப்பட்டது. அதை மாற்றுவதற்கான வழி முறைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 2000-ம் ஆண்டு சிங்கப்பூரில் நடந்த மாநாட்டிலும் ஒரு தெளிவான முடிவுக்கு வரமுடியவில்லை. அடுத்து 2001-ம் ஆண்டு மலேசியாவில் நடந்த மாநாட்டில் எவ்வளவோ முயற்சிகள் செய்தும் ஒரு குறியீட்டு முறையை ஒருமனதாக எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் ஏற்படவில்லை. இரண்டு குறியீடுகளை உத்தமம் தேர்ந்தெடுத்தது - ஒன்று தகுதரம் (TSCII) இது தமிழ் நாட்டுக்கு வெளியே பரவலாகப் பயன் படுத்தப்படும் குறியீட்டு முறை; மற்றொன்று TAB/TAM தமிழ் நாட்டில் அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்ட குறியீட்டு முறை. இதைச் சாதனை என்று சொல்வதை சிலரால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கலாம்; ஆனால் 20, 30 குறியீட்டு முறைகளைத் தவிர்த்து 2 குறியீட்டு முறைகளுக்கு வந்தது பெரிய முன்னேற்றம் என்றுதான் சொல்ல வேண்டும். முத்து நெடுமாறன் தலைமையில் நடக்கும் unicode சம்பந்தப்பட்டச் செயற்குழுவில் சில பிரச்சினைகளை இப்போது ஆராய்ந்து வருகின்றனர்.

முத்து: மின்னியல் முறையிலே ஆவணத்தைப் பாதுகாப்பதை விட அதைப் பதிப்பிப்பதுதான் தங்களுடைய முக்கியப் பணி என்று பல பதிப்பாளர்கள் கருத்துரைத்தார்கள், குறிப்பாக தமிழ் நாட்டிலே. ஆவணங்களைப் பாதுகாக்க வேண்டும், தமிழோடு சேர்ந்து ஆங்கிலமும் புழக்கப்பட வேண்டும் என்ற சூழ்நிலையில் உருவாக்கப்பட்ட குறியீட்டு முறை அவர்களுக்கு பொருத்தமாக அமையவில்லை. எனவே, TAM குறியீட்டு முறையை உத்தமம் அங்கீகரித்தது. குறியீட்டு முறைகளுக்கிடையே மாற பயன்படும் செயலிகளை வைத்துக்கொண்டு TAM அமைப்பில் தரமான பதிப்புக்கு அமைக்கப்பட்ட எழுத்துக்களை, ஆவணங்களை TAB அல்லது TSCII முறையில் மாற்றி மின்னியல் பாதுகாப்பு முறையிலே (archives) அவைகளை பாதுகாத்து வைத்துக்கொள்ளலாம். குறியீட்டு முறைகளை ஒன்று படுத்திய ஒருசில மாதங்களில் உத்தமம் அமைப்பு ஒரு குறியீட்டு முறைக்கும் இன்னொரு குறியீட்டு முறைக்கும் மாற்றங்களைச் செய்யக்கூடிய செயலிகளை, கருவிகளை (software tools) இலவசமாக வழங்க ஒரு இணையத்தளத்தை அமைத்தது. சிலர் அதற்கான source code முயற்சிகளை எங்களிடம் வழங்கினார்கள். இரண்டு குறியீட்டு முறையில் ஏதாவது ஒரு குறியீட்டு முறையை ஏற்றுக்கொண்டு அதில் செயலிகளை உருவாக்கும் வல்லுனர்கள் இன்னொரு குறியீட்டு முறைக்கு அவர்களது செயலிகளை எந்தவிதப் பிரச்சினையுமின்றி மாற்றிக்கொள்ள முடியும்.

Unicode முயற்சி பற்றி உங்களுக்குத் தெரியும். உலகத்தில் இருக்கும் எல்லா மொழி எழுத்துகளுக்கும் பொதுவான ஒரு குறியீட்டு முறை அமைப்பதற்கு unicode என்ற அமைப்பு பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது. அதில் வெற்றியும் கண்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். காரணம், இப்போது வரும் கணினி அமைப்புகள் புதிய வெளியீடுகள் எல்லாமே unicode முறையை ஏற்றுக்கொண்டு அதற்கான செயல்பாட்டு அமைப்புகளையும் வழங்குகின்றன. அதில் தமிழும் இடம் பெற்று இருக்கின்றது என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். பொதுவாக இந்திய மொழிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற அமைப்பில்தான் தமிழும் இருக்கின்றது. அதனால் தமிழுக்கென்று சிறப்பு அம்சங்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்ற கருத்து ஒரு குழுவினரிடையே இருக்கிறது. இதில் இருக்கின்ற அமைப்புதான் சிறந்த அமைப்பு, இந்த அமைப்பை வைத்துதான் தமிழைக் கணினியில் ஏற்க வேண்டும் என்று எண்ணம் கொண்டுள்ளோர் இன்னொரு குழுவினராக இருக்கிறார்கள். இந்தக் கருத்தைத்தான் unicode தமிழ்ச் செயற்குழு விவாதித்து வருகிறது. கலி·போர்னியா மாநாட்டில் இதைப்பற்றி சற்று விரிவாக பேசவேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ளோம். Unicode அமைப்பில் தமிழ் மொழியை வழங்கும் Microsoft
போன்ற நிறுவனங்களை அழைத்து தமிழை எவ்வாறு அவர்கள் சேர்த்திருக்கிறார்கள், மேலும் பல செயலிகளை, மென்பொருள்களை unicode அமைப்பில் தமிழில் எவ்வாறு உருவாக்கலாம் என்ற கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள ஏற்பாடு செய்ய இருக்கிறோம். இது சிறந்த அமைப்பல்ல, இதை விட சிறந்த அமைப்பு இருக்கின்றது என்று சொல்கின்ற வல்லுனர்கள் அவர்களுடைய கருத்துக்களை அங்கு வந்து தெரிவிப்பார்கள்.

தமிழ் இணைய மாநாடு எவ்வாறு தொடங்கிற்று? இதுவரை எவ்வளவு மாநாடுகள் நடந்திருக்கின்றன?

அருண்: தமிழ் இணைய மாநாடு கூட்ட வேண்டும் என்ற கருத்து சிங்கப்பூரிலே அப்போது தமிழ் இணைய முன்னோடியாக இருந்த நா. கோவிந்தசாமி, முத்து நெடுமாறன், Dr. Tan Tin Wee போன்றவர்களிடையேதான் தோன்றியது. Dr. Tan Tin Wee அப்போது சிங்கப்பூர் பல்கலைக் கழகத்தில் இணைய வளர்ச்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு இருந்தார்கள். அவருடைய உதவியின் மூலமாக பல்கலைக்கழகத்தில் ஒரு சிறிய அளவில் 100, 200 பேர் வந்து கலந்துகொள்கின்ற வகையில் அந்த மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டிற்கு வருகை தந்த அப்போதைய தமிழ் நாட்டு அமைச்சர் தமிழ்க்குடிமகன் ஏற்றுக் கொண்டதால் 1999-ல் 2வது அனைத்துலகத் தமிழ் இணைய மாநாடு சென்னையில் கூடியது. 2000-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தன்று சிங்கப்பூர் தமிழ் இணைய ஒருங்கிணைப்புக் குழுவை நிறுவியிருந்தோம். அதே நேரத்தில் மூன்றாவது தமிழ் மாநாட்டிற்கான பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு அந்த மாநாட்டை சிறப்பாக நடத்தினோம். அடுத்த வருடம், மலேஷியாவில் இதே போன்று பெரிய அளவில் நான்காவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது.

2000-ம் ஆண்டு சிங்கப்பூரில் நடந்த மாநாட்டின் சிறப்பு என்ன?

அருண்: இந்த மாநாடுகளில் தொழில் நுட்பப் பிரச்சினைகளை விவாதிப்பதோடு, அந்தந்த நாட்டிற்குரிய சில பிரச்சினைகளுக்கும் தீர்வு காணலாம் என்று எண்ணினோம். அதன் விளைவுதான் பின்னால் மாநாடு பெரிய அளவில் விரிவடைந்தது. சிங்கப்பூரில் வாழும் தமிழ் மக்களுக்கு இந்த மாநாட்டினால் என்ன அனுகூலம் என்ற கேள்வி எழுந்தது. அதன் காரணமாக பொது மக்கள் பங்கு எடுத்துக் கொள்ளக்கூடிய சமூக மையம் (community hub) என்று சில நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்தோம். சிங்கப்பூரில் பள்ளிக்குச் செல்லும் ஒவ்வொரு மாணவ மாணவியும் இணையம் பற்றி தெரிந்து கொண்டு விடுவார்கள். தகவல் தொழில் நுட்பத்தைப் பற்றி தீவிரமாக அவர்களுக்குக் கற்பிக்கப் படுகிறது. ஆனால் தமிழை இரண்டாவது மொழியாக கற்றுக் கொள்வதால் அதில் பல பிரச்சினைகள் இருந்தன. 50, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆங்கிலம் தெரியாததால் இணையத்தை பயன்படுத்த முடியாத சூழ்நிலை. மாநாட்டின் சமூக மையம் மூலமாக இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அடிபோட்டுக்கொடுக்க முடிந்தது. முதல் அடியை எடுத்து வைப்பதற்கு இது போன்ற மாநாடுகள் ஒரு மிக மிக அருமையான வாய்ப்பு என்று சிங்கப்பூரில் புரிந்து கொண்ட பிறகு அதற்கு அடுத்த ஆண்டு மலேசியாவில் இதே போன்று ஒரு பெரிய அளவு மாநாட்டை ஏற்பாடு செய்தார்கள்.

கோலாலம்பூரில் நடந்த மாநாட்டின் சிறப்பு அம்சம் என்ன?

முத்து: சிங்கப்பூர், மலேசியா பக்கத்து நாடுகளாக இருந்தாலும் கூட, இரண்டு நாடுகளுக்குமிடையே பெரிய வேறுபாடுகள் இருக்கின்றன. தொழில் நுட்பத்தைத் தமிழ்ச் சமுதாயத்திற்கு எடுத்துச் செல்லும் எண்ணத் தில் “என்றென்றும் இணையம்” என்ற தேசிய இயக்கத்தைத் தொடங்கினோம். முதலாவது “எட்டு வயதில் இணையம்” என்ற கருப் பொருளில் மலேசியாவில் இருக்கின்ற 523 தமிழ் பள்ளிகளிலும் பயில்கின்ற மாணவர்களுக்கு 45 நிமிடத்திலிருந்து 1 மணி நேரம் ஒரு இணைய அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த முயற்சி யிலே இறங்கினோம். மலேசியாவில் முதன் முறையாக தமிழ் இணைய வாரம் என்ற வாரத்தைப் பிரகடனப் படுத்தினோம். 15,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த இயக்கத்திலே பங்கு கொண்டார்கள். இரண்டாவது இயக்கம் “15 வயதில் மின் திறன்” என்ற கருப்பொருள் - பதின்ம வயது மாணவர்களுக்கு - அதாவது இடை நிலைப் பள்ளி மாணவர்களுக்கு - இணைய அனுபத்தை மட்டும் அல்லாமல், இணையத்திறன்களை அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு நாள் பயிற்சியை வழங்கு வதற்காக கருத்தரங்குகள் ஏற்பாடு செய்தோம். இதிலும் அனைத்து மாநிலங்களும் பங்கு கொண்டன. தொழில் நுட்பப் பள்ளி வல்லுனர் களை அழைத்து, ஒரு நாள் பயிற்சி வழங்குவதற்கான பாடத்திட்டத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று கோரி, அவர் களுடைய பள்ளிகளிலேயே கருத்தரங்குகள் ஏற்பாடு செய்தோம். 2000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதிலே கலந்து கொண்டார்கள். இது மிகப்பெரிய வெற்றி. மூன்றாவது இயக்கம் “மின்னுலகம் காண்போம்” என்ற 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான இயக்கம். இது பிரச்சார இயக்கம் – awareness campaign. ஒன்று அல்லது இரண்டு மணி நேர கருத்தரங்குகளை ஏற்பாடு செய்து, அந்த கருத்தரங்குகளை நடத்துவதற்காக சிலருக்கு பயிற்சிகளும், கருவிகள் (tools, presentation materials) கொடுத்தோம். இந்தக் கருத்தரங் குகளும் மிகவும் வெற்றிகரமாக நடந்தன. மேலும் வானொலி, தொலைக்காட்சி மூலமாகவும் என்றென்றும் இணையம் நிகழ்ச்சி யை ஏற்பாடு செய்தோம்.

தமிழ் இணையம் 2002 நடத்த கலி·போர்னியாவை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?

அருண்: கலிபோர்னியாவில் மாநாடு நடத்துவதற்கு பல சரியான காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம் தகவல் தொழில் நுட்பத்தின் உறைவிடம் என்று சொன்னால் அது சிலிகான் வேலியாகத்தான் இருக்க முடியும். உலகத்திலேயே மிகச்சிறந்த, அதிலும் தமிழ் தெரிந்த, தகவல் தொழில் நுட்ப வல்லுனர்கள் இங்கே அதிகம். அவர்களுடைய முயற்சி, அவர்களுடைய தலைமை மிக மிக முக்கியமானது. இரண்டாவது, தொழில் நுட்பத் துறையில் தமிழை எப்படி மற்ற மொழிகள் போல் பயன் படுத்துவது என்பது பற்றி மற்ற மொழி பேசும் வல்லுனர்கள் இங்கு இருப்பதினால் அவர்கள் மூலம் நமக்கு வழி காட்டலாம். மூன்றாவது தமிழகத்திற்கு வெளியே உலகத்தில் பல இடங்களில் பரவியிருந்தாலும், இங்கு கணிசமான அளவில் தமிழர்கள் இருக்கிறார்கள். நான்காவது ஒவ்வொரு கண்டத்திலும் தமிழ் இணைய மாநாடு நடக்க வேண்டும் என்பது ஆரம்பத்திலிருந்தே எங்கள் விருப்பம். இப்போது வட அமெரிக்கக் கண்டத்திற்கு வந்திருக்கிறோம். இனிமேல்தான் ஐரோப்பாவிற்கு போக வேண்டும்.

எதைச் சாதித்தால் இந்த மாநாடு வெற்றி பெற்றதாகக் கருதுவீர்கள்?

அருண்: இந்த மாநாடு 5-வது முறை நடப்பதே ஒரு வெற்றிதான். இது போன்ற மாநாடுகளை ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து நடத்துவது என்பது எளிதான காரியம் அல்ல. இந்த மாநாட்டில் பல பேர் கட்டுரைகள் படைக்கப் போகிறார்கள். இருந்தாலும், தகவல் தொழில் நுட்பத்தில் இந்த மாநாடு நடக்கும்போது சில முயற்சிகளை இங்கே உள்ள கலிபோர்னியா தமிழர்கள் முன்னின்று நடத்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அது ஒரு வேண்டுகோள். இரண்டாவது பொது மக்கள் கலந்து கொள்ளும் நிகழ்சிகளில் 2000, 3000 மக்கள் கலந்து கொண்டால் அது ஒரு பெரிய வெற்றி. மூன்றாவது, மின் வர்த்தகம் தொடர்பாக இங்கே உள்ள மின் வர்த்தகத் தொழில் அதிபர்கள் வெளி நாட்டிலிருந்த்து வரும் தொழிலதிபர்களை சந்திக்க நேர்ந்தால் அதுவும் ஒரு வெற்றி. இறுதியாக, தகவல் தொழில் நுட்பத்தில் பல புதிய தொடக்கங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கலாம். 4, 5 தொடக்கங்கள் ஏற்படுத்த முடிந்தால் அதுதான் மிகப் பெரிய வெற்றி.

முத்து: இந்தத் தொடக்கங்கள் மிக மிக முக்கியம். ஒன்று இங்கு இருக்கின்ற தமிழர்கள் அவர்களுடைய சுய முயற்சியினாலே ஏற்படுத்து கின்ற தொடக்கங்கள். அவை கூட தமிழ் இணைய செயல்பாடுகளிலே எங்கெங்கு நமக்கு பள்ளங்கள் விழுகின்றனவோ அந்தப் பள்ளங்களை நிரப்புவதற்கான தொடக்கங் களாக இருக்க வேண்டும். மற்றொன்று, பெரும்பாலான தொழில் நுட்பக் கழகங்கள் இங்குதான் இயங்கிக் கொண்டு இருக்கின்றன. பெரும்பாலான முடிவுகளும் கூட இங்குதான் எடுக்கப்படுகின்றன. முடிவுகள் எடுக்கும் பலர் இந்த மாநாட்டிலே கலந்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் தங்கள் தொழில் நுட்பங்களில், அவர்களுடைய platforms-ல் தமிழின் செயலாக்கத்தை செய்கின்றோம் என்று சொல்வதற்கு இந்த மாநாடு ஒரு வாய்ப்பாக அமையும் என்றும் நாங்கள் எதிர்பார்க் கின்றோம்.

அருண்: உதாரணமாக இயந்திர மொழி பெயர்ப்பு என்னும் துறை (machine translation) மிக முக்கியமாக கருதப்படுகிறது. அந்தத் துறையில் வல்லுனர்கள் இங்கே இருக் கிறார்கள். அவர்கள் இம்மாநாட்டில் பங்கு கொண்டு வெளி நாடுகளிலிருந்து வரும் வல்லுனர்களுடன் கூடிப்பேசி தங்கள் அனுபவத்தைப் பரிமாறிக்கொண்டால் அது உதவியாக இருக்கும்.

முத்து: அமெரிக்காவில் தமிழ் இரண்டாம் மொழியாகத்தான் பயிற்றுவிக்கப் படுகின்றது. இது மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. தகவல் தொழில் நுட்பக் கருவிகளை உபயோகித்துத் தமிழை எவ்வாறு சிறப்பாகக் கற்பிப்பது என்பதை அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் அறிய இது ஒரு வாய்ப்பு.

இம்மாநாட்டின் கரு “எண்ணியப் பிளவின் மேல் பாலம் அமைப்போம்” (Bridging the digital divide) என்பது. அதைச் சற்று விளக்கவும்.

அருண்: எண்ணியப்பிளவு என்பது பல கோணங்களிலிருந்து பார்க்க வேண்டிய ஒன்று. வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளுக்கு இடையே உள்ள இடைவெளி ஒரு கோணம். அந்த வகையில் அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகள், வளரும் நாடுகளின் தேவைகளைப் புரிந்து கொண்டு அதற்கான சில உதவிகளைச் செய்யலாம். அது ஒருவித எண்ணியப் பிளவு. இன்னொரு எண்ணியப் பிளவு வயது காரணமானது. வளர்ச்சியடைந்த நாடுகளிலே கூட 50, 60 வயதை எட்டிய மக்களுக்குத் தகவல் தொழில் நுட்பம் புதுமையாகத்தான் இருக்கிறது. ஆனால் இளைஞர்களுக்கு அந்தப் பிரச்சினை இல்லை. இந்த இடைவெளியையும் நாம் தீர்க்க வேண்டும். மொழியை மீறி வயது ஒரு காரணமாக இருக்கிறது. மற்றொரு இடைவெளி, தொழில் நுட்பச் சாதனங்கள் - உதாரணமாக, வளர்ச்சியடைந்த நாடுகளிலே கூட சில நாடுகளிலேதான் மின் கருவூலங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கோணத்திலிருந்து பார்க்கும் போதும் இடைவெளிகளைக் காண முடிகிறது. எந்தெந்த இடைவெளிகளை இணைக்க முடியுமோ அல்லது குறைந்த பட்சம் குறைக்க முடியுமோ அந்த அளவிற்கு இந்த மாநாடு உதவினால் அது பெரிய சாதனைதான்.

கலி·போர்னியாத் தமிழ் மாநாட்டைப் பற்றி http://www.infitt.org/ti2002 என்ற வலைத் தளத்தில் மேலும் விவரங்கள் அறியலாம்.

இம்மாநாட்டில் பங்கெடுத்துக் கொள்ள விரும்புவோர், மற்றும் மாநாடு நடைபெற உதவி செய்ய விரும்புவோர் ti2002@infitt.org என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

சிவா சேஷப்பன் அவர்களை seshappan@ hotmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், குமார் குமரப்பன் அவர்களை kkumar80@hotmail.com என்ற முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

நிகழ்த்தியவர்/தொகுப்பு: குமார் குமரப்பன், சிவா சேஷப்பன்

******


அமெரிக்காவில் வாழும் தமிழ் பேசும் கணினித் தொழில் நுட்ப வல்லுனர்கள் உடனடியாகச் செய்யக் கூடிய திட்டங்களை முத்து நெடுமாறன் விவரித்தார். இவற்றை தமிழ் இணையம் 2002 மாநாட்டிற்கு முன் செய்து முடித்து, மாநாட்டில் அறிவித்தால் அது ஒரு பெரிய வெற்றி.

1. A simple mail client, preferably written in Java, that can be used by people who don’t even know English to send emails to their loved ones. (say your பாட்டி from பட்டி வீரன்பட்டி writing an email to you in Tamil)

2. Tamil Unicode support in free database servers such as MySQL. This would involve including some sophisticated searches. Such support would greatly benefit in storing information about all the literatures (from சிலப்பதிகாரம் to ஆனந்த விகடன்), songs, etc. in database and provide an easy to use and powerful search mechanism.

3. Multimedia feature to some of the existing tutorials, Tamil teaching software, stories that would help the children to learn Tamil with some multimedia effect.

******


குமார் குமரப்பன்

சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி யில் வெகு நாட்களாக வசித்து வரும் ஒரு தமிழ் ஆர்வலர். இவர் கணினி மென்பொருள் சார்ந்த தொழில்நுட்பத் துறையில் வேலை செய்து வருகிறார். சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்றத்தைத் தோற்றுவிக்க உதவிய உறுப்பினர்களில் இவரும் ஒருவர். பெர்க்கலி பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பீடம் (UCB - Tamil Chair) உருவாகக் காரணமாயிருந்து நிதி திரட்டிய குழுவிற்கு தலைமை வகித்தவர்.

******

© TamilOnline.com