வாழ்த்துக்கள்!
குடியரசுத் தலைவர் பதவிக்கு அப்துல் கலாம் பரிந்துரைக்கப் பட்டிருக்கிறார். தனது துறையில் உலகப்புகழ் பெற்றவர்; மிகவும் எளிய குடும்பத்தில் பிறந்து முன்னேறியவர். உண்மையான சமூகசேவை மனப்பான்மை கொண்டவர். தனது எண்ணங்களை நடைமுறையில் கொண்டு வரும் செயல்வீரர். நாட்டுக்குப் பெரும் சேவை செய்தவர். இவ்வாறு பலவகையில் பொருத்தமானவர். எண்ணிப் பார்க்கையில் சர்வதேச அளவில் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனுக்குப் பிறகு இதுபோன்ற stature பெற்றவர் யாரும் இந்தியக் குடியரசுத் தலைவர் பதவி வகித்தாக நினைவில்லை அவருக்கு தென்றலின் வாழ்த்துக்கள்.

இந்திய பாகிஸ்தான் போர் அபாயம் சற்றே குறைந்திருக்கிறது. முடிந்த அளவு விரைவாக பிரச்சினைகளுக்கு நீண்டகாலத் தீர்வு காணும் கட்டமைப்பு ஒன்று உருவாக அனைவரும் முயற்சிக்க வேண்டும். முயல்வார்கள் என்றுதான் தோன்றுகிறது.

இதனிடையில் கராச்சியில் நடந்த அமெரிக்க தூதரகத்தின் மீதான தாக்குதல், பிரச்னையின் சிக்கலான நிலைமையை அடிக் கோடிட்டிருக்கிறது. அமெரிக்காவும், இங்கிலாந்தும் பயங்கரவாதத்தை எவ்வகையிலும் விடுதலைப் போராட்டமாகக் கருத இயலாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளது மிகவும் தேவையான ஒன்று. பொறுத்திருந்து பார்ப்போம்; நம்பிக்கையுடன்.

FETNA சிகாகோ - தமிழர் விழா 2002 சிறப்பாய் நடைபெற தென்றல் வாசகர்கள் சார்பாகவும் வாழ்த்துகிறது.

மீண்டும் சந்திப்போம்,

பி.அசோகன்
ஜூலை - 2002

© TamilOnline.com