1985 ஜூன் 23. அந்த ஏர் இந்தியா விமானம் டொராண்டோவிலிருந்து கிளம்பி மாண்ட்ரியால் வழியாக லண்டனை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. ஹீத்ரூ விமான நிலையத்தை அடைய இன்னும் 45 நிமிடங்கள் இருக்கையில் ரடாரின் கண்களுக்குத் தப்பிய அந்த போயிங் 747 விமானம் வெடித்துச் சிதறி 30000 அடி கீழே இருந்த சமுத்திரத்தில் விழுந்தது. அதில் பயணம் 329 பேரும் இறந்து போயினர். அவர்களில் பெரும்பாலோர் இந்தியர்கள். தனிச் சீக்கிய நாடு கோரியவர்கள் வன்முறைச் செயலால் நிகழ்ந்த கோரம் இது.
ஜூன் 23, 2007 அன்று இந்த விபத்தில் தம் உறவினர்களை இழந்தவர்கள் கனடா விலுள்ள கிழக்கு ஹம்பர் பே பார்க்கில் கூடி அஞ்சலி செலுத்தினர். மறைந்தோருக்கு நினைவுச் சின்னம் எழுப்புவதற்காக அங்கே கூடி இருந்தனர் அந்த 150 குடும்பத்தாரும். பிரதம மந்திரி ஸ்டீபன் ஹார்பர், ஒண்டேரியோ முதல்வர் டால்டன் மகிண்டி, டொரோண்டோ மேயர் டேவிட் மில்லர் ஆகியோர் அங்கு வந்திருந்தனர். பிரதம மந்திரி ஹார்பர் பேசும்போது 'அது ஒரு விபத்து அல்ல, திட்டமிடப்பட்டுச் செய்யப்பட்ட பயங்கரப் படுகொலை. முதலில் இது யாருக்கோ வந்த துக்கம் போலவும், எனக்கு இதில் ஒரு சம்பந்தமும் இல்லை என்பது போலும் நாம் முகம் திருப்பிக்கொண்டோம். ஆனால் இது கனடாவின் தனிப்பட்ட குற்றமும், துயரமும் ஆகும்' என்று மனம் திறந்து கூறினார்.
22 ஆண்டுகள் கழித்தும் இதுவரை எல்லாக் குற்றவாளிகளூம் கண்டு பிடிக்கப்படாத வேத¨னையில் குமுறிக் குமுறிக் கல்லாகிப் போன இதயத்தின் ஒரு சிறு பகுதியை எடுத்துக் கட்டப்பட்டதைப்போல கருங் கற்களால் ஒரு நினைவுச் சுவர் அந்தப் பார்க்கில் எழுப்பப்பட்டுள்ளது. விமான விபத்தில் உயிர் இழந்த அனைவரது பெயர்களும் பொறிக்கப்பட்ட அச்சுவர் 'இனி இந்த நாட்டில் வன்முறைக்கும் வெறுப்புக்கும் அநியாயத்துக்கும் இடம் இல்லை என்பதை நினைவுறுத்தும்' என்று டொராண்டோ மேயர் டேவிட் மில்லர் வலியுறுத்தினார். 'மிகவும் அமைதியான, அழகான இடம் இது. இதைவிடச் சிறந்த இடம் தேர்ந்தெடுத்திருக்க முடியாது' என்று குறிப்பிட்டார் பலியானவர் கள் குடும்பத்தாரின் முன்னுரிமைப் பேச்சாளர் திருமதி ஜயஸ்ரீ தம்பி.
அங்கே ஒரு சூரிய மணிக்கடிகை நிறுவப்பட்டுள்ளது. கனடாவின் எல்லா மாவட்டங்களிருந்தும் கொண்டு வரப்பட்ட கற்களுடன் அமெரிக்கா, இந்தியா, அயர்லாந்து, ஜப்பான் என இந்த இழப்பில் பங்குபெற்ற எல்லா நாடுகளிலிருந்தும் கற்கள் கொண்டு வரப்பட்டு சேர்த்துக் கட்டப் பட்டுள்ளது அந்த மணிக்கடிகை. முடிவில் சுற்றத்தார் நினைவுச்சுவரின் முன் நின்று கொண்டு தத்தம் உறவினரின் பெயர்களைக் கையால் வருடியும், தடவிக்கொடுத்தும் முத்தமிட்டது பார்ப்போர் மனதைப் பிழிந்தது. சூரிய மணிக்கூண்டில் எழுதப்பட்டதைப்போல, இறுதியில் 'நேரம் பறக்கலாம், சூரியன் தினம் தினம் எழலாம், நிழல்கள் மாறி மாறி விழலாம். ஆனால் அன்பு ஒன்றுதான் என்றும் நிலைத்திருக்கும்.'
அலமேலு மணி, கனடா. |