பூஜா சிராலா நாட்டிய அரங்கேற்றம்.
ஜூலை 14, 2007 அன்று கேம்ப்பெல் ஹெரிடேஜ் அரங்கில் ஸ்ரீக்ருபா டான்ஸ் கம்பெனி மாணவி பூஜா சிராலாவின் நாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. ஹம்சாநந்தி ராகத்தில் புஷ்பாஞ்சலியுடன் நிகழ்ச்சி ஆரம்பித்தது. தொடர்ந்து திலங் ராகத்தில் கணேச வந்தனம்.

அடுத்து ஜதிஸ்வரம். கால்களில் நல்ல தீர்மானம், நளினமான அசைவுகள் யாவும் கன கச்சிதம். தொடர்ந்த வர்ணத்தின் ஆரம்பத்தில் 'சிவே சிருங்கார..' என்னும் சௌந்தர்யலஹரி சுலோகத்தை தேவியின் மேல் உருக்கமாகப் பாடியதற்கேற்ப மாணவியின் முகபாவம் மிக அருமை. 'மாதே மலயத்வஜ' எனும் வர்ணத்தை ஒலி பெருக்கியில் அபிநயத்துடன் விளக்கி அளித்த விதம் நன்றாக இருந்தது. 'சாமுண்டேஸ்வரி சந்திர கலாதரி தாயே' எனும் இடத்தில் வீரம், சாந்தம் ஆகிய முகபாவங்கள் மிக்க இயல்பு. 30 நிமிடம் தொடர்ந்து களைப்பைச் சமாளித்து ஆடிய விதம் ஜோர். ரசிகர்களின் கவனத்தை கமாஸ் ராக வர்ணத்தில் ஈர்த்து பலத்த கைதட்டலைப் பெற்றார் பூஜா.

அடுத்து 'ஆனந்த நடமாடுவார் தில்லை' எனும் பூர்விகல்யாணி ராகபாடலில் தில்லை நடராஜனின் ஆனந்த தாண்டவத்தை ஆடியவிதம் அற்புதம். 'மதுரா நகரிலோ' எனும் ஆனந்த பைரவி ராகப் பாடலுக்கு ஆரம்பத்தில் 'கஸ்தூரி திலகம்' சுலோகத்துக் கும், பாடலுக்கும் கோகுலத்தில் கிருஷ்ணனின் பாலலீலைகளை விவரித்து ஆடியவிதம் ரசிக்கத் தக்கது. தேஷ் ராகத் தில்லானாவை, துளியும் அசராமல் துரிதநடையிலும் முகபாவத்திலும் கவனம் செலுத்தி ஆடிய விதம் திருப்திகரம். 30 வருடங்களுக்கு முன்பாக குமாரி கமலா அவர்களால் பிரபலப்படுத்தப்பட்ட 'நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே' எனும் புன்னகவராளி ராகப் பாம்பு நடனத்தை அடுத்தாற் போல ஆடிப் புல்லரிக்க வைத்தார் பூஜா. ரசிகர்களின் கரகோஷம் அடங்கச் சில நிமிடங்கள் ஆயின.

குரு விஷால் ரமணி அவர்களின் கற்பிக்கும் திறமை, பூஜாவின் ஆர்வம், தன்னம்பிக்கை, உழைப்பு, நாட்டியத்துக்கு ஏற்ற உடல்வாகு, சிரித்த முகம் யாவும் சிறப்பானவை. முரளி பார்த்தசாரதி (வாய்ப்பாட்டு), வீரமணி (வயலின்), மதுரை முரளிதரன் (நட்டுவாங்கம்), தனஞ்செயன் (மிருதங்கம்) யாவரும் நிகழ்ச்சிக்கு மெருகூட்டினர்.

சீதா துரைராஜ்

© TamilOnline.com