வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 20ஆம் ஆண்டு விழா தமிழ் விழாவாக வட கரோலினாவின் தலைநகரான ராலே நகரில் ஜூலை 7,8,9 தேதிகளில் நடந்தேறியது. கேரொலைனா தமிழ்ச் சங்கம் இவ்விழாவை பேரவையுடன் இணைந்து நடத்தியது. வட கரோலினாவில் உள்ள ராலே (Raleigh, NC) ஒரு சிறிய நகரமே. இங்கிருக்கும் சிறிய குழுவை வைத்து ஒரு பிரம்மாண்டமான விழாவை எடுப்பது எளிதல்ல. ஆனால் செய்திருக்கிறார்கள் என்பதுதான் அருமை.
முல்லை நடவரசுவின் 'இசை இன்பத் தேனையும் வெல்லும்' என்கிற உரை, பல மறக்கப்பட்ட நல்ல தமிழ்ப் பாடல்களை நம் நினைவுக்குக் கொண்டுவந்து நிறுத்தியது. நீதியரசர் சண்முகத்தின் உரை 'இட ஒதுக்கீடு' பற்றியது. திருச்சி திருவள்ளுவர் தவச்சாலையை நடத்தும் தமிழ்ப் பெரியவர் இளங்குமரனார் அவர்களது உரையை மூன்று நாட்களும் பல தருணங்களில் கேட்க முடிந்தது. அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், $1000க்கான பணமுடிப்பும் வழங்கப்பட்டது.
திரைப்படக் கலைஞர் சிவகுமார், தானொரு நடிகர் மட்டுமல்ல என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தார். அவரது இலக்கிய ஆர்வம் வியக்கவைத்தது. ஒரு திரைப்படம் பலருக்குச் சொந்தமானது, ஆனால் என் ஓவியம் எனக்கே எனக்கானது என்றது அவருக்கு ஓவியத்திலிருந்த ஈடுபாட்டை உணர்த்தியது. இவரும் இவரது மகன் கார்த்தியும் வந்திருந்தவர்களுடன் எவ்வித அலட்டிக் கொள்ளாமல் அன்புடன் பழகியதும் அனைவரையும் கவர்ந்தது. ஏனைய திரைப்பட நட்சத்திரங்களிலிருந்து இவர்கள் திரைப்பட நட்சத்திரங்களிலிருந்து இவர்கள் தனித்துத் தெரிந்தார்கள். தமிழ் இங்குதான் ஒழுங்காகப் பேசப்படுகிறது, அதன் பெருமை போற்றப்பட்டுப் பேணி வளர்க்கப்படுகிறது என்பதைத் தமிழகத்திலிருந்து வந்திருந்த பலரும் குறிப்பிட்டார்கள்.
கணவர் ஆடுகிறார், மனைவி கை தட்டுகிறார், மனைவி ஆடுகிறார், கணவர் கைதட்டுகிறார், இருவரும் ஆடுகிறார்கள், குழந்தைகள் கை தட்டுகிறார்கள், இவ்வாறாக இருக்கிறது இந்தத் தமிழ்க் குடும்ப விழா என்று பேரவையின் குடும்பத்தைப் போற்றி, தானும் அதிலொரு சொந்தம் என்பதைத் தன் ஆதரவின் மூலம் உணர்த்தினார் மருத்துவர் என். சேதுராமன். அவர் 2007ஆம் ஆண்டு விழா மலரின் முழுச் செலவையும் ஏற்றுக் கொண்டதோடு, வரும் ஆண்டுகளின் விழா மலர் செலவையும் ஏற்பதாகக் கூறினார்.
'நிலமென்னும் நல்லாள்' என்ற தலைப்பில் நடைபெற்ற கவியரங்கத்துக்கு இரா. இளங்குமரனார் தலைமையேற்று நடத்தினார். பட்டிமன்றக் கலைஞர் முல்லை நடவரசுவின் பாட்டு மன்றம் முதல் நாளும், பட்டிமன்றம் அடுத்த நாளும் நிகழ்ந்தன. பரணி இடைக்காடரின் வீரியமான உரைவீச்சு இன்னும் அனைவரது மனங்களிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. புலம்பெயர்ந்து காண்பது இன்னலா, இன்பமா என்ற தலைப்பில் நடந்த பட்டிமன்றத்தில் இன்பமே என்ற அணியில் அவர் பேசினார். ஈழத்தில் தமிழர்களுக்கு எதிராக நிலவும் ஆட்கடத்தல் களும், கொலைகளும், ராணுவ அத்துமீறல் களும் மண்ணின் சொந்த மக்களைத் துரத்தியடிக்க, புலம்பெயர்ந்து வந்த நாங்கள் காண்பது இன்பமே என்று கூறிய போது அரங்கம் கனத்துக் கிடந்தது.
மிக நேர்த்தியாக வடிவமைத்து அரங்கேற்றப் பட்ட 9 வித நடனங்களின் அணி மிகவும் சிறப்பு. முழுக்க முழுக்க வடகரோலினா தமிழ்ச்சங்கத்தாரால் நிகழ்த்தப்பட்ட இது பாராட்டுக்குரியது. இவ்விழாவின் மிக சிறப்பான நிகழ்ச்சி என்று இதை அனைவரும் பாராட்டினர்.
கலைமாமணி நித்யஸ்ரீ மகாதேவனின் தமிழிசைக் கச்சேரி உள்ளத்தை உருக வைத்தது. 3 மணி நேரம் போனதே தெரியவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்தில் துவங்கி, சிலப்பதிகாரம், தேவாரம், திருவாசகம், பாரதியார், பாரதிதாசன், அருணகிரிநாதர், குறவஞ்சி, முத்துத் தாண்டவர் மற்றும் பல சிறந்த தமிழ்ப் பாடல்களின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். இனிமையான அவரது குரலில் நல்ல தமிழ்ப் பாடல்களை கேட்ட நிறைந்த மனத்துடன் முதல் நாள் விழா நிறைவடைந்தது.
தமிழைச் செம்மொழியாக அறிவித்ததும், அதன் பின்னர் எடுக்கப்படவேண்டிய முயற்சிகள் குறித்ததுமான கருத்தரங்கத்தில் முனைவர் ஜார்ஜ் ஹார்ட், முனைவர் மருதநாயகம், இளங்குமரனார் ஆகியோர் பேசினர். டாக்டர் வி.ஜி. தேவ் ஒழுங்கு படுத்தினார். திருக்குறளைப் பற்றிய முனைவர் பிரபாகரனின் உரையை இரு இடங்களில் கேட்கமுடிந்தது. இவரது வள்ளுவம் குறித்த ஆராய்ச்சிகள் புத்தகங்களாக வரவேண்டியது அவசியம்.
வினாடிவினாவும், jeopardy மாதிரியான கேள்வி-பதில் நிகழ்வும், சிறுவர்களுக்கான பேச்சுப்போட்டி, குறள் போட்டி இன்ன பிறவும் நம்பிக்கையூட்டின. மழலைகளின் பேச்சைக் கேட்க முடிந்தது இனிமை.
·பில் மாக்கின் உரை தமிழகத்தில் நிலவும் சாதீயக் கொடுமைகளைக் குறித்த பல புரிதல்களை ஏற்படுத்தியது. வலைப்பதிவர் கருத்தரங்குக்கு வந்திருந்த 30 பேரில் பெரும்பாலானோர் வலைப்பதிவு துவங்கியி ராதவர்கள். அவர்களுக்காக வலை பதிவது குறித்த செயல்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது. சங்கரபாண்டி, மயிலாடுதுறை சிவா, சுந்தரவடிவேலு ஆகியோர் இதனை நெறிப்படுத்தினர்.
பரத்வாஜின் திரையிசை நிகழ்ச்சி 'ஞாபகம் வருதே'வுடன் தொடங்கியது. தொடர்ந்து வந்தன அவர் இசையமைத்த 'ஒவ்வொரு பூக்களுமே', 'அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள்'. பின்னர் பாடகர் கலைமாமணி ஸ்ரீநிவாஸ் 'மின்சாரக் கண்ணா', 'ஆப்பிள் பெண்ணே', 'வெள்ளி வெள்ளி நிலவே' போன்ற பாடல்களைப் பாடினார். பாப் பாடகி ஷாலினி 'ஊ லா லா லா', 'ரண்டக்க ரண்டக்க' பாடியபோது அரங்கமே எழுந்து நடனமாடியது. இவை தவிர நியூ ஜெர்சி மற்றும் பல தமிழ்ச் சங்கங்கள் கலைநிகழ்ச்சிகளை வழங்கின.
இறுதி நாள் இலக்கியக் கருத்தரங்கம் 'சங்க இலக்கியம் காட்டும் தமிழர் பண்பாடு' என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில் இரா. இளங்குமரனார், முனைவர் ஜார்ஜ் ஹார்ட், முனைவர் மருதநாயகம், முனைவர் முருக ரத்தினம், முனைவர் சவரி முத்து, இரா. ஆண்டி போன்றோர் பல தலைப்புகளில் உரையாற்றினர்.
மூன்று நாட்கள் போனதே தெரியவில்லை என்ற முணுமுணுப்புடன் தான் எல்லோரும் பிரிய மனமின்றி அகன்றனர்.
சுந்தரவடிவேல், சிவா, தாரா |