இந்தியாவெங்கும் ஆதிவாசி, ஊரக மற்றும் பிற்பட்ட குழந்தைகளுக்கு ஒற்றை ஆசிரியர் பள்ளிகள் மூலம் முறைசாராக் கல்வி வழங்கவெனத் தொடங்கப்பட்டது அரசுசாராக் கல்வித் திட்டமான ஏகல் இயக்கம். எண், எழுத்து, படைப்பாற்றல், பண்பாடு, அடிப்படை சுகாதாரம் போன்றவற்றை மாணவர்களின் வாழ்முறையை பாதிக்காமல் அவர்கள் வாயிலிலேயே கொண்டு போதிக்கின்றன ஏகல் பள்ளிகள். அவர்கள் சார்ந்திருக்கும் சமுதாயத்தின் மேம்பாட்டுக்கு உதவி செய்கிறது. மொத்தம் 20,142 பள்ளிகள் வழியே 604,260 மாணவர்களைப் பயிற்று விக்கிறது. ஏகல் வித்யாலயா அறக்கட்டளை யின் பணிகளை விரிவாக்கம் செய்வதற்கென நிதி திரட்டுவதற்காக அமெரிக்காவில் 'Path to Peace' என்ற பல்லூடக (multimedia) நடன நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
ஸ்ரீதர் ஷண்முகம் டான்ஸ் அல்லயன்ஸ் குழுவால் இந்நிகழ்ச்சி தயாரித்து வழங்கப் படுகிறது. பல்வேறு நாடுகளின் கலைஞர்கள் இதில் பங்கேற்கிறார்கள். கார்னகி அரங்கம், லிங்கன் சென்டர் போன்றவற்றில் இக்குழு நிகழ்ச்சிகளை மேடையேற்றியுள்ளது. சந்திரலேகாவின் பிரசித்தி பெற்ற நவீன நடனக் குழுவின் முக்கிய நர்த்தகராக ஷண்முகம் இருந்துள்ளார். இந்தியாவின் 'சங்கீத நாடக அகாடமி' விருது, பிரிட்டனின் 'டைம் அவுட் டான்ஸ் அம்ப்ரெல்லா' விருது, இத்தாலிய அரசின் 'GIAI' விருது போன்ற வற்றை இவர் பெற்றுள்ளார். 'அமைதிக்கு வழி'யின் இசையை சாக்ஸ·போன் மேதை ஆண்ட்ரூ ஷெர்மன் வடித்துள்ளார்.
கல்வியறிவே அமைதிக்கு வழியை அமைக்கிறது என்ற காந்தியடிகளின் அனுபவத்தை ஆதாரமாகக் கொண்டது 'Path to peace'. 'குழந்தையின் உடல், மனம், ஆன்மா ஆகியவற்றிலிருந்து சிறந்ததை வெளிக் கொண்டு வருவதே கல்வி' என்பது காந்தியடிகளின் கருத்து. சுதந்திர இந்தியாவில் ஒவ்வொருவரும் இலவச அடிப்படைக் கல்வியைப் பெற வேண்டும் என்பது அவரது விருப்பமாக இருந்தது. எழுத்தறிவு தன்னளவிலே முழுக் கல்வி ஆகிவிடாது, அது அறிவின் விளக்கத்துக்கு ஒரு வழி. ஒரு மனிதனின் ஒழுக்கத்தை வளர்த்து, அவனுக்கு ஆற்றல் கொடுத்து நல்லதொரு குடிமகனாக்கி, சமுதாயத்தின் வளர்ச்சிக்கு வித்திட வேண்டும். இந்த நோக்கத்தை ஏகல் இயக்கம், தன்னார்வத் தொண்டர்களின் சேவை மூலம் 'இருளிலிருந்து ஒளியை நோக்கி' என்ற கண்ணோட்டத்தோடு முழுமை பெறச் செய்கிறது. 2011ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் 100,000 ஏகல் வித்யாலயங்களை எட்டும் நோக்கத்தில் உங்களையும் பங்களிக்க USAவின் ஏகல் வித்யாலயா அறக்கட்டளை அழைக்கிறது.
அதிக விவரங்களுக்கு: www.ekal.org
நிகழ்ச்சி: 'அமைதிக்கு வழி' பல்லூடக நாட்டியம் நாள்: செப்டம்பர் 9, 2007; பதிவு தொடக்கம்: மாலை 4.00 மணி; நிகழ்ச்சி தொடக்கம் 5.00 மணி. இடம்: Smith Center (Ohlone College), 43600 Mission Blvd, Fremont, CA 94539
கட்டணம்: பொது - $25, $35. விருப்ப இருக்கை - $50 தகவலுக்கும் முன்பதிவுக்கும்: 510.490.4620, 408.480.7309. |