சுதா எடுத்த முடிவு
சுந்தரராமனுக்கும் மீனாட்சிக்கும் அது முதல் அமெரிக்கப் பயணம். எல்லாமே பிரமிப்பாக இருந்தது.

மகன் கிரியின் வீடு பிரம்மாண்டமாக இருந்தது. கால் ஏக்கர் தோட்டத்தில் கட்டிய நாலாயிரம் சதுர அடி வீடு. திரைச்சீலை, சரவிளக்கு, கம்பளம் எல்லாமே பணத்தைத் தண்ணீராகச் செலவழித்து வீட்டை அலங்கரித்தி ருந்தான். திரும்பிய பக்கமெல்லாம் பலத்த ஆடம்பரம். ஒவ்வொன்றுக்கும் செல வழித்த பணத்தை கிரி பட்டியல் போட்டுக் கொண்டே வர, மீனாட்சிக்குத் தாங்க முடியாத பெருமை. ஆனால் சுந்தர ராமனுக்கு இந்தக் கலை நயமில்லாத ஆடம்பரம் ரசிக்கவில்லை. அவர் முகத்தைப் பார்த்து இதைப் புரிந்து கொண்ட சுதா, நாசுக்காகப் பேச்சைத் திருப்பி, அனைவரையும் சாப்பாட்டுக்கு அழைத்துச் சென்றாள்.

பேத்தியும் பேரனும் ஆரம்பத்தில் கொஞ்சம் கூச்சப்பட்டாலும் பத்துநாளில் தாத்தா பாட்டியிடம் ஒட்டிக் கொண்டார் கள். தாத்தா சொல்லும் கதைகளும், பாட்டி செய்துதரும் விதவிதமான உணவு வகைகளும் அவர்களுக்கு நிரம்பவே பிடித்தன.

பொறுப்பான வேலையில் இருந்த சுதா, காலையில் ஏழுமணிக்கெல்லாம் ஆபிசுக் குக் கிளம்பிவிடுவாள். எட்டே முக்காலுக் குக் குழந்தைகளைப் பள்ளிப் பேருந்தில் ஏற்றிவிட்டு கிரியும் கிளம்பிவிடுவான். நாலுமணிக்குக் குழந்தைகள் வரும் நேரம் சுதாவும் வந்து சேருவாள். அரக்கப் பரக்க குழந்தைகளுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுத்துவிட்டு, இரவு சமையலுக்கு ஏற்பாடுகளைக் கவனிக்கும் மருமகளின் சிரமத்தை புரிந்து கொண்ட மீனாட்சி சமையல் அறைப்பொறுப்பை வலிய ஏற்றுக் கொண்டாள்.

வார இறுதியில் சுதா மாமனாரை அழைத்துக் கொண்டு லைப்ரரி சென்று நிறையப் புத்தகங்கள் எடுத்து வருவாள். கிரி குடும்பத்துடன் எல்லாரையும் ஊரில் பார்க்க வேண்டிய இடங்களுக்கெல்லாம் அழைத்துச் சென்று சுற்றிக் காட்டினான்.

பண்டிகைகள் உரிய காலத்தில் வந்து போயின. வீட்டில் எண்ணெய் வைத்து பட்சணங்களை செய்ய முடியாதது குறித்து மீனாட்சிக்குச் சற்று குறைதான். ஆனால் விதவிதமான இனிப்பு பட்சணங்களைச் செய்து திருப்திப்பட்டுக் கொண்டாள். தீபாவளிப் பண்டிகை பட்டாசுகளின் ஆரவாரமில்லாமல் அமைதியாக வந்து போயிற்று. பண்டிகைக்காக சென்னையி லிருந்து மருமகளுக்கு அழகிய பட்டுப் புடவையும், பேத்திக்குப் பாவாடையும் வாங்கி வந்திருந்தனர்.

தீபாவளிக்கு முன்தினம் கிரி சுதாவுக் காக ஒரு வைரநெக்லஸ் வாங்கி வந்திருந்தான். சுதாவை ஆச்சரியத்தில் ஆழ்த்த விரும்பியவன், அதை அம்மாவி டம் மட்டும் காட்டிவிட்டு ஒளித்து வைத்திருந்தான். தீபாவளியன்று அனை வரும் குளித்து ஆடை உடுத்திய பின் நெக்லசை எடுத்து வந்து கொடுத்தான். மருமகளின் முகத்தில் நிலவப் போகும் சந்தோஷம் கலந்த ஆச்சர்யத்தைக் காண ஆவலுடன் காத்திருந்தாள் மீனாட்சி. ஆனால் நகைப் பெட்டியை வாங்கிய சுதாவின் முகத்தில் காணப்பட்டது கவலையும், கோபமும்தான். பெட்டியை கிரியிடம் திரும்பிக் கொடுத்தாள்.

''ப்ளீஸ் கிரி இதை நாளைக்கே திருப்பிக் கொடுத்துவிடுங்கள். உங்களுக்கு நன்றாகத் தெரியும் நான் நகை, நட்டுக்களில் நாட்டம் இல்லாதவள் என்று...''

படபடவென்று பேசிவிட்டு திரும்பிப் பாராமல் உள்ளே சென்ற மருமகளை ஒன்றும் புரியாமல் பார்த்தார் மீனாட்சி. வாயைத் திறவாமல் குனிந்த தலையுடன் அங்கிருந்து அகன்றான்.

சிறிது நேரத்திற்குப் பிறகு வெளியே வந்த மருமகளை சற்றே வருத்தத்துடன் பார்த்தாள் மீனாட்சி.

''இது என்ன சுதா, அவன் எத்தனை ஆசையாக வாங்கிண்டு வந்தான் தெரியுமா... இப்படி அலட்சியப்படுத்திட்டயே. அவன் மனசு புண்பட்டது உனக்கு ஏன் புரியவில்லை?''

''அனாவசியச் செலவு அம்மா... எத்தனையோ முக்கியமான செலவுகள் காத்திருக்க இப்படி ஒரு செலவு அவசியமில்லை.''

தீபாவளியன்று மாலை சிநேகிதர்களை அழைத்துப் பெரிய விருந்து நடத்தினான் கிரி. வீட்டிலேயே நடத்த விரும்பினாள் சுதா. ஆனால் கிரி ஒப்பவில்லை. பெரிய ஓட்டலில் தடபுடலாக ஏகச்செலவு செய்து நடத்தினான். விருந்தில் ஏதும் சுரத்தில்லாமல் கலந்து கொண்ட சுதாவைப் பார்த்த சுந்தரராமனுக்கு ஏதோ உறுத்தியது.

கிறிஸ்துமஸ், புதுவருடப் பிறப்பு என்று நாட்கள் வந்து போயின. மிகவும் பழசாகிவிட்ட சுதாவின் காரை விற்றுவிட்டு, கிறிஸ்துமசுக்குப் புது வண்டி வாங்க விரும்பினான் கிரி. இம்முறையும் சுதா கண்டிப்பாக மறுத்துவிட்டாள். மீனாட்சிக்கு மருமகள் ஒவ்வொரு முறையும் முட்டுக்கட்டை போடுவதைப் பார்க்க எரிச்சல் வந்தது. சந்தரராமனுக்கு மகன் அளவுக்கு அதிகமாக ஊதாரிச் செலவு செய்வதும், சுதா ஓரளவு கட்டுப்படுத்த முயற்சிப்பதும் தெரிந்தது. அவருக்கு கிரியின் இளமைப் பருவம் நினைவுக்கு வந்தது.

சுந்தரராமன், மீனாட்சி தம்பதியரின் மூத்த மகன் கிரி. அவனுக்குப் பிறகு எட்டு வருஷங்கள் வேறு குழந்தைகள் பிறக்காததால் அவன் ஒரே மகன்தான் தங்களுக்குக் கொடுப்பினை என்று அவர்கள் தீர்மானம் ஆக நினைத்திருக்கும் போது மீனாட்சி மறுமுறை கருவுற்று லதாவும், ஸ்ரீராமும் இரட்டையர் களாக பிறந்தார்கள்.

வெகு காலம் ஒற்றைக் குழந்தையாக இருந்த கிரி மீனாட்சிக்கு அதீதச் செல்வம். சுந்தரராமனுக்கும் பிரியம் இருந்தாலும், எதிலும் நிதான சுபாவமும், முன்யோசனையும் உள்ளவர். மகனை கண்டிப்புக் கலந்த அன்புடனே நடத்தினார். மீனாட்சி அப்படியல்ல, கிரி எது கேட்டாலும் உடனே அவனுக்குக் கிடைக்க வேண்டும். தப்பு செய்தாலோ, மரியாதை குறைவாக நடந்தாலோ அவள் எடுத்துச் சொல்லவோ கண்டிக்கவோ மாட்டாள். சுந்தரராமன் சற்று கண்டித்தாலும், குறுக்கிட்டு அவனைப் பாதுகாப்பது அவளுக்கு வழக்கமாயிற்று. குழந்தைப் பருவத்திலேயே அவன் கேட்கும்போதெல்லாம் ஐஸ்கிரீம் சாப்பிட, மிட்டாய் வாங்கிச் சாப்பிட என்று கையில் பணம் கொடுக்க ஆரம்பித்தாள். சுந்தரராமன் தடுத்தபோது அவருக்குத் தெரியாமல் கொடுத்தாள். அவரால் எவ்வளவு முயன்றும் மனைவியை திருத்த முடியவில்லை. குழந்தையின் அருமை தெரியாதவர் என்று அவரையே சாடினாள்.

வீட்டில் மற்ற குழந்தைகள் பிறந்தபோதும் மீனாட்சியின் இந்த குணம் மாறவில்லை. லதாவையும், ஸ்ரீராமையும் சாதாரணமாக வளர்த்த அவளுக்கு, ஏனோ கிரியிடம் மட்டும் அசட்டுத்தனமான செல்லம். மனைவியின் ஒத்துழைப்பில்லாமல் சுந்தரராமனுக்கு எதும் செய்ய முடியவில்லை. தம்பி, தங்கையின் பிறப்புக்குப் பிறகு தாய்தந்தையரின் அன்பைப் பங்கிடத் தயாரில்லாத கிரி மேலும் பிடிவாதக் காரனாக வளர்ந்தான்.

வளர்ந்து கல்லூரியில் சேர்ந்த பின்பும் அவன் மாறவில்லை. மாறாக அவனது ஊதாரித்தனம் அதிகமாயிற்று. நண்பர் களுடன் ஹோட்டலுக்குப் போய்விட்டு பில் கட்டாமல் வருவான், கல்லூரி பீஸ் பணத்தைக் கொண்டு சீட்டாடிவிட்டு வருவான். தந்தை போய்ப் பணம் கட்டிவிட்டு வருவார். படிப்பில் சூட்டிகையாக இருந்ததால் ஒருவாறாக கிரி படிப்பை முடித்து வேலையில் சேர்ந்தான். மறுவருஷமே கம்பெனியில் ஏதோ அசைன்மெண்ட் என்று அமெரிக்கா அனுப்ப அமெரிக்கப் பிரஜையான சுதாவை அவன் சந்திக்க இருதரப்புப் பெற்றோரின் சம்மதத் துடன் அவர்கள் திருமணம் இந்தியாவில் நடந்தேறியது. சுதாவின் தந்தைக்கு மட்டும் கிரி மீது முழுநம்பிக்கை வரவில்லை. சுதாவின் வற்புறுத்தலுக் காகச் சம்மதித்தார்.

சுதா அமெரிக்கப் பிரஜையானதால் கிரிக்கு கிரீன்கார்ட் சுலபமாகக் கிடைத்தது. சில வருடங்களில் அவனும் அமெரிக்கப் பிரஜையானான். இந்தப் பதினாறு வருடங்களில் அவன் தம்பி, தங்கை கல்யாணங்களுக்கு பத்து, பத்து நாள் வந்தது தவிர இந்தியா பக்கம் வரவில்லை. அவன் பெற்றோருக்கும் வீட்டில் மற்ற பொறுப்புகளை விட்டு வர இயலவில்லை. இம்முறை சுதா மிகவும் வற்புறுத்தி டிக்கெட்டும் வாங்கி அனுப்பிவிட்டாள். மறுக்க முடியாமல் இருவரும் கிளம்பி வந்து சேர்ந்தார்கள்.

சுந்தரராமனுக்கு இன்னமும் கிரி பக்குவப் படவில்லை. முன்போலவே பொறுப்பில்லாத வனாகவே இருக்கிறான் என்று தோன்ற ஆரம்பித்தது. ஆயிற்று, மார்ச் மாதக் கடைசியில் இந்தியா திரும்ப வேண்டும். பிப்ரவரி பிறந்துவிட்டது. ஊர் திரும்புமுன் மகனிடம் பொறுப்புடன் செலவு செய்வது பற்றிப் பேசுவது உசிதமா இல்லையா என்ற மனப்போரட்டத்தில் இருந்தார் அவர். அந்த சமயத்தில் ஒருநாள் காலை ஏழரை மணியாகியும் கிரி எழுந்து வராதது கண்ட மீனாட்சி மகனை எழுப்ப மாடிக்குப் போனாள்.

கிரி வெறுமனே படுத்திப்பதைப் பார்த்தவள் அவனுக்கு உடல்நிலை சரியில்லையோ என்று பதறிப்போனாள். விசாரித்தவளிடம் இன்று ஆபீஸ் போகவில்லை, லீவு என்று மட்டும் சொன்னான். மெல்ல பத்து மணிக்கு மேல் எழுந்து பல்தேய்த்து காப்பி குடிக்க வந்த கிரியிடம் அவன் அப்பாதான் விசாரித்தார், எதனால் விடுமுறை என்று. கிரியின் பதில் படு அலட்சியமாக வந்தது.

''எல்லாம் சுத்த மடையன்கள் அப்பா... இந்த வருஷம் என் ப்ராஜக்ட் ஒன்று கைநழுவிப் போய்விட்டது. நான்தான் பொறுப்பு என்று பழிபோட ஆரம்பித்தார் என்னுடை பாஸ். போடாபோ என்று வேலையை அவன் முகத்திலேயே தூக்கிப் போட்டுவிட்டு வந்துவிட்டேன். என் அருமை அப்பத்தான் தெரியும் அவன் களுக்கு...'' என்றவனை வியப்புடன் பார்த்தார் சுந்தரராமன்.

இரண்டு வருட பொருளாதாரச் சரிவில், அவரவர்கள் வேலையைக் காப்பாற்றிக் கொள்ள படாதபாடு படும்போது, நல்ல வேலையை அலட்சியமாக விட்டுவிட்டு வந்த மகனை என்ன சொல்வதென்று அவருக்குப் புரியவில்லை.

சாயாங்காலம் வழக்கமான நேரத்தில் ஆபிஸிலிருந்து திரும்பி வந்த சுதாவின் முகத்தில் ஈயாடவில்லை ஆபிஸீக்கே போன் செய்து கிரி சொல்லியிருந்தான் போலும். இரவு சாப்பாடுவரை எதுவும் பேசாமலிருந் தவள் சாப்பாடானதும் கிரி மாடிக்கு போய்விட, சுந்தரராமனையும், மீனாட்சியை யும் தேடி வந்தாள்.

''இது முதல் தடவை இல்லையப்பா... இதுவரை ஐந்து முறை வேலையைக் காரணமில்லாமல் விட்டு வந்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் வேலை கிடைத்த வுடன் பணத்தை தண்ணீராக வாரி இறைப்பதும், சின்னச்சின்ன காரணம் காட்டி வேலையை விட்டுவிடுவதும் கடன் பளுவைச் சமாளிக்க முடியாமல் வீடு, கார் என்று போன விலைக்கு விற்பதும், வேறு வேலை கிடைக்கும் வரை சுதாவின் சம்பளத்தில் சமாளிப்பதும், மறுபடி வேலை கிடைத்தால் வரவுக்கு மேல் கடன் வாங்கிச் செலவினங்களை பெருக்கி கொள்வதும் அவருக்கு வழக்கமாகி விட்டது அப்பா. அவர் திருந்துவார், பொறுப்புள்ள தகப்பனாக மாறுவார் என்று நம்பியிருந்தேன். இந்தமுறை நான் நம்பிக்கையைச் சுத்தமாக இழந்து விட்டேன் அப்பா... என்னால் முடிய வில்லை'' என்றவள் தேம்பி அழ, மீனாட்சியும் சுந்தரராமனும் அவளைத் தேற்ற வழி யறியாமல் திகைத்தார்கள்.

சற்று சமாதனமடைந்த சுதா சுதாரித்துக் கொண்டு எழுந்தாள்.

''அப்பா... அம்மா இம்முறை நான் இதைப் பொறுத்துக் போனால் நான் பெரிய முட்டாள். ஏதாவது செய்தே ஆகவேண்டும்... ஐ ஹாவ் டு டூ சம்திங் ட்ராஸ்டிக்...'' என்று தீர்மானமாகச் சொன்னவள் ஏதும் நடக்காதது போல் வீட்டுவேலைகளை கவனிக்கச் சென்றாள். மறுநாள் வழக்கம் போல் அலுவலகம் சென்றாள்.

அப்போதிருந்த பொருளாதாரச் சரிவில், வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக இருந்தது. வேலை கிடைக்கலாம் எனத் தோன்றிய ஒன்றிரண்டு இடங்களிலும் கிரி அடிக்கடி வேலை மாற்றக் காரணம் என்னவென்று விசாரித்தார்கள். அவன் சொல்லிய காரணங்கள் அவர்களுக்குத் திருப்தி அளிக்காததால் வேலை கை நழுவியது. கடைசியாக ஒரு புதுக்கம்பெனியில் மிகக் குறைவான சம்பளத்தில் வேலைக்கு அமர்ந்தான் கிரி.

''எல்லாம் கொஞ்சநாள்தான் அப்பா... கூடிய சீக்கிரம் இதைப் போல் இரண்டு மடங்கு சம்பாதிக்கிற வேலை கிடைக்கும். இந்த சுதாவுக்கு வீண்பயம், தானும் ஜாலியாக இருக்கமாட்டாள், என்னையும் இருக்க விடமாட்டாள்'' என்றவன் மறுபடி யும் செலவுகளை பெருக்க ஆரம்பித்தான்.

மார்ச் மாதம் மூன்று வாரங்கள் ஓடிவிட்டன. மீனாட்சியும், சுந்தரராமனும் இன்னும் ஆறுநாளில் ஊருக்கு கிளம்ப வேண்டும். சுதா அவர்களிடம் பேச விரும்புவதாகச் சொன்னாள்.

''அம்மா, அப்பா நான் சில தீர்மானமான முடிவுகள் எடுக்க வேண்டிய நிலைமையில் இருக்கிறேன். என் முடிவு உங்களுக்கு வருத்தத்தை தரலாம். ஆனால் நான் ஏதும் செய்யாமல் போனால் உங்கள் மகன் திருந்துவார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. நாளைக்கு என் அப்பா அம்மாவை வரச்சொல்லியிருக்கிறேன். எல்லோரும் சேர்ந்து முடிவெடுப்போம். நீங்கள் என் முடிவை மன்னித்து ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்...'' என்று சொல்லி முடித்தவள் கண்ணைத் துடைத்துக் கொண்டு அகன்றாள்.

மறுநாள் சனிக்கிழமை கிரியும் வீட்டில் இருந்தான். பக்கத்து ஊரிலேயே கல்லூரி ஆசிரியராக இருந்த அவள் தந்தை, தாயுடன் வந்து சேர்ந்தார். மதிய சாப்பாடு ஆனதும் சுதா குழந்தைகளை ஒரு சிநேகிதியின் வீட்டில் விளையாட விட்டு வந்தாள்.

சுதாவின் அப்பா பேச்சை ஆரம்பித்தார்.

''அப்பா கிரி... உன்னிடம் நிறையவே நம்பிக்கை வைத்து உன்னை கல்யாணம் செய்து கொண்டாள் என் பெண். எங்கள் பெண்ணின் மனதை மதித்து உனக்கு கல்யாணம் செய்து கொடுத்தோம். ஆனால் நீ அவளுக்குப் பாதுகாப்பாக, நல்ல புருஷனாக நடந்து கொள்ளவில்லை என்பது உன் மனசாட்சிக்கே தெரிந்திருக்க வேண்டும். உன் பொறுப்பில்லாமையால் குழந்தைகளின் எதிர்காலம் பெருமளவில் பாதிக்கப்படும், தவிர நீ ஒரு நல்ல முன்னுதாரணமாக இல்லை என்று சுதா அபிப்பிராயப்படுகிறாள். அதனால் அவள் சில முடிவுகள் எடுத்திருக்கிறாள். என்ன என்று அவள் வாயாலேயே சொல்லட்டும்...'' என்று சொல்லி ஒதுங்கிக் கொண்டார்.

''நான் உங்களிடமிருந்து பிரிந்து வாழ விரும்புகிறேன் கிரி...'' என்று சுதா சொல்ல கிரி திடுக்கிட்டுத்தான் போனான். ஏதோ பொறுப்பாக நடப்பது பற்றி லெக்சர் என்பதாக அலட்சியமாக இருந்தவனுக்கு இது பெரிய இடியாக இருந்தது.

''விவாகரத்தா, என்ன சுதா விளை யாடுகிறாயா...'' என்றவனை இடைமறித்தாள் சுதா.

"ப்ளீஸ் கிரி, என்னை முழுதும் பேசவிடுங்க...'' என்றவள் தொடர்ந்தாள்.

''விவாகரத்து பற்றி நான் இன்னும் யோசிக்கவில்லை. நான் இங்கேயே வளர்ந்தாலும் இந்தியப் பெண். ஆனால் என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. இப்போதைக்கு நாம் பிரிவதுதான் ஒரே முடிவாக எனக்குத் தோன்றுகிறது. இப்போதும் நான் உங்களுக்குத் திருந்த வாய்ப்பு கொடுக்கிறேன். ஆனால் நீங்கள் உங்களிடம் உள்ள குற்றம், குறைகளைப் புரிந்து கொள்ள வேண்டும், மாற நீங்களே முயற்சிக்க வேண்டும். அதற்கான பக்குவம் உங்களிடம் இருக்கிறதா என்பது எனக்குத் தெரிய வில்லை.

"அப்படி நீங்கள் மாறினால், பொறுப்புடன் நடந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கை என் மனதில் ஏற்பட்டால் நான் மறுபடியும் குழந்தைகளுடன், உங்களுடன் சேர்ந்து வாழ வருவேன். இப்போதும் நீங்கள் குழந்தைகளை வந்து பார்க்க விரும்பினால் நான் தடுக்க மாட்டேன். ஆனால் என் முடிவை மாற்ற தயவு செய்து முயற்சிக்காதீர்கள். இனிமேல் நாம் மறுபடி சேருவதும், சேராமலேயே பிரிவதும் உங்கள் கையில்தான் இருக்கிறது'' என்று முடித்தாள்.

யாரும் வெகுநேரம் எதுவுமே பேசவில்லை.

கடைசியாக கிரிதான் அங்கு நிலவிய மெளனத்தைக் கலைத்தான்.

''அப்பா... அம்மா உங்க மாட்டுப் பொண் சொன்னதைக் கேட்டீங்களா? உங்களால் பொறுமையாக இதை ஏற்றுக் கொள்ள முடிகிறதா... உங்கள் மகனைத் தலை குனிய வைத்திருக்கிறாள் உங்க மருமகள்'' என்றான் சற்றே கோபத்துடன்.

''அவள் சொல்வதில் எனக்குத் தப்பேதும் தெரியவில்லை கிரி. நன்றாக யோசித்து குழந்தைகள் நலன் கருதி நல்ல முடிவுதான் எடுத்திருக்கிறாள் என் மருமகள். அவளைப் பற்றி நான் பெருமைப் படுகிறேன்'' என்ற சுந்தரராமனைத் தொடர்ந்து மீனாட்சியும், ''எனக்கும் அப்பா சொல்கிற அபிப்பிராயம் தான் சரியாகத் தோன்றுகிறது கிரி. நீ உன் அகம்பாவத்தையும் ஊதாரி குணத்தையும் விட்டுத் திருந்த முயற்சிப்பதுதான் ஒரே வழி'' என்றாள்.

"அம்மா நீ கூடவா'' என்றவனை நோக்கி, ''ஆமாம் கிரி, நான்கூடத்தான். அப்பா அந்த நாளில் சொன்னபோது எனக்குப் புரிய வில்லை. என் மருமகள்தான் எனக்குத் தெளிவைக் கொடுத்தாள். நன்றாக யோசித்துப் பார். நீ புத்திசாலி தான். உனக்கே புரியும்'' என்று சொல்லி எழுந்து கொண்டாள்.

ஒவ்வொருவராக எழுந்து போய் விட்டனர்.

கிரி யோசிக்கத் தொடங்கினான்.

உமா

© TamilOnline.com