அன்புள்ள சிநேகிதியே,
எனக்கு வயது 50 ஆகிறது. மாநில அரசில் சுமார் 25 வருடமாக வேலை செய்து வருகிறேன். என்னுடைய துறையில் பதவி உயர்வு மிகவும் குறைவு. ஒரு முக்கியமான பதவி உயர்விற்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அது கிடைக்கவில்லை. இனிமேல் வாய்ப்புகள் இருப்பது போல தெரியவில்லை. மனம் மிகவும் நொந்து போய்விட்டது. வேலைக்கு போகவே பிடிக்கவில்லை, அந்த ஏமாற்றத்தை மறக்க எவ்வளவோ முயற்சி செய்தேன். அந்த சம்பள உயர்வை வைத்துக் கொண்டு எதிர்கால திட்டங்கள் வேறு போட்டேன். ஒரு கண்ணாடி கேபினில் என் ஆபிஸ். இப்போது அது கருங்கல் அறையில் இருட்டில் வேலை செய்வது போல் மூச்சு முட்டுகிறது. 'Yoga meditation எல்லாம் முயன்றேன். மனதை சாந்தமாக்க இன்னும் என்ன தான் வழி?
அன்புள்ள சிநேகிதியே,
எதிர்பார்ப்புக்கள் அதிகம் இருந்தால் அவை நமக்கு சாதகமாக இருக்கும் போது மகிழ்ச்சி/ஆச்சர்யம். குறைந்ததும், பாதகமாக இருக்கும் போது அதிர்ச்சியின் வீரியம் மிகுந்தும் இருப்பது சகஜம். எதிர்பார்ப்புக்களை குறைத்துக் கொள்ளுங்கள் என்று தத்துவ போதகர்கள் சொல்லு கிறார்கள். அது மிகவும் கஷ்டம். நம் கண்கள் எதையாவது எதிரே பார்த்துக் கொண்டுதான் இருக்கும். நம் மனம் எதையாவது எதிர் பார்த்துக் கொண்டுதான் இருக்கும்.
மனம் உணர்ச்சிகளின் ஊற்று, ஆசைகளின் களஞ்சியம். மனம் ஒரு குழந்தை. மூளை ஒரு தாய்/தந்தை. மூளை ஒரு கற்பனைக் கடல்; சிந்தனை சிற்பி. அறிவுக்கூடம். கண் பார்க்கிறது. மனம் கேட்கிறது. மூளை சிந்திக்கிறது. இவை மூன்றும், எப்போதும் ஒன்றோடொன்று தொடர்புடன் செயல் படுகின்றன. சில நேரம் மூளை சிந்திக்க, மனம் ஆசைப்பட கண் பார்க்கும். இப்படி மாறி மாறி வரும்.
உங்கள் விஷயத்தில் மூளை சிந்தித்து இருக்கிறது. உங்கள் அனுபவம், சந்தர்ப்பம் ஆகியவற்றை வைத்துக் கொண்டு, அந்த பதவி உங்களுக்கு கிடைக்க வேண்டும். மனம் உடனே எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டது. கண்ணாடி பார்க்க முடியவில்லை என்ற, மனம் சுருண்டு விட்டது. (குழந்தை தானே) சிந்தித்த மூளை, கொஞ்சம் பின் விளைவு களின் செயல்பாடுகளையும் சொல்லியி ருந்தால், அதிர்ச்சியின் வலி குறைந்து இருக்கும்.
எப்போதும் எதிர்பாருங்கள். தவறில்லை. ஆனால் விளைவுகள் முரண்பட்டால் அடுத்து என்ன செய்வது என்பதையும் முதல் திட்டம், இரண்டாம் திட்டம் என்று மனதில் ஒரு கணக்கு போட்டுக் கொண்டால், ஏமாற்றங் களை ஜீரணித்து அடுத்த கட்டத்திற்க்கு நகரமுடியும்.
'கண்ணாடிக் கதவு கல்சுவர் போல தெரிந்து மூச்சு முட்டுகிறது' என்று நீங்கள் எழுதியது ஒரு அழகான உதாரணம். உங்கள் உள் மனதை சரியாக புரிந்து கொள்ள உதவுகிறது. கருங்கல் சுவரை பார்க்கும் போது தப்பிக்க வழியில்லாத உணர்வு போலத்தான் தோன்றும். ஏன் அதே சுவரை நம்முடைய பாதுகாப்பு உணர்வாகவும் மாற்றலாம் அல்லவா? கொஞ்சம் கற்பனைத் திறனை உபயோகித்தால் அந்தக் கல்லையே நாம் செதுக்கலாம். வரையலாம். எழுதலாம். அந்த சிந்தனை மார்க்கத்தில் நம் மனதை செலுத்த வைக்கும் போது அதே சுவர் பாதுகாப்பை தருவது போல உணருவோம்.
நீங்கள் நல்ல பாதுகாப்பான வேலையில் இருக்கிறீர்கள் பதவி உயர்வு இன்னும் பெரிய பொறுப்புக்களையும் கொடுத்து, உங்கள் குடும்பத்துடன் கழிக்கும் இன்ப நேரத்தை குறைத்திருக்கலாம். இல்லை உங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு கலையை தொடர முடியாமல் இருந்திருக்கலாம். 'இந்தப் பழம் புளிக்கும்' என்கிற வழியை சொல்லித் தரவில்லை. முரண்பட்ட, அடிபட்ட மனதின் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த மூளை ஏதேனும் வழிகளை சிந்தித்து கொண்டே தான் இருக்கும். அந்த சிந்தனையில் தன்னம்பிக்கையை தக்க வைக்கும் வழிகள் தோன்றும் போது மனம் பிடிவாதத்தை விட்டு செயலாற்ற தொடங்கினால் சிறிது நிம்மதி கிடைக்கும்.
கருங்கல் சுவரை மனம் ஆக்கிரமித்தால் நடந்ததை நினைத்து வருத்தப்பட நேரம் இருக்காது. உங்களுக்கு வேறு வகையில் ஆச்சர்யங்கள் காத்துக் கொண்டிருக்கலாம். யாருக்குத் தெரியும்.!
சித்ரா வைத்தீஸ்வரன் |