வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு என்று ஸ்பான்ஷர்ஷிப் எதுவும் இங்கே கிடையாது. ஆனாலும் செலவு செய்து இங்கே வந்து ஆடுகிறார்கள். கச்சேரியில் ஆர்வத்துடன் பாடுகிறார்கள். அதை ஒரு பெரிய அங்கீகாரமாகவே கருதுகிறார்கள்' என்று குறிப்பிட்டு, NRIக்களின் கலைக்கனவை நிறைவேற்றுதில் பெரும் பங்கு வகித்த 'ஹம்சத்வனி' ராமச்சந்திரன் தனது எண்பத்து மூன்றாம் வயதில் மே 24, 2007 அன்று காலமானார்.
சென்னையில் பிரபல ஹம்சத்வனி சபாவின் நிறுவனரும், செயலாளரும் ஆர்.ஆர்.சி. (RRC) என்று இசை ஆர்வலர் களால் செல்லமாக அழைக்கப்பட்ட வருமான ராமச்சந்திரன், ஜனவரி 1, 1924 அன்று பிறந்தவர். சிறந்த கிரிக்கெட் விளையாட்டுக்காரராகவும், பத்திரிகை யாளராகவும், சமூக ஆர்வலராகவும் விளங்கினார். சுதந்திரப்போராட்டத்தில் பங்கு கொண்டு, காங்கிரஸ் பேரியக்கத் துடன் இணைந்து கதர்த்துணி பயன் படுத்தலின் தேவையை வலியுறுத்தியவர் களில் இவர் மிக முக்கியமானவர். இந்தியன் எக்ஸ்பிரஸ், எகனாமிக் டைம்ஸ் போன்ற பத்திரிக்கைகளில் பணியாற்றிய பின் தி ஹிந்து பத்திரிகையில் உதவியாசிரியராகச் சேர்ந்து பொறுப்பாசிரியராக உயர்ந்தார். எக்ஸ்னோரா அமைப்பில் முக்கியப் பங்கு வகித்து அதன்மூலம் பல்வேறு சமூகப் பணிகளைச் செய்தார். அதீத இசை ஆர்வத்தின் காரணமாக ஹம்சத்வனி சபாவை 1990ஆம் ஆண்டு தோற்று வித்தார். இரண்டாயிரத்துக்கு மேல் உறுப்பினர்களைக் கொண்ட அந்த சபா, சென்னையின் சிறந்த சபாக்களில் ஒன்று.
டிசம்பர் மாத இசை விழாக்களில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் கச்சேரிகளுக்கும் பரத நாட்டியங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து ஊக்குவித்தவர் ராமச்சந்திரன். அவர்களுக்கு சபாக்களில் அதிகம் இடம் கிடைக்காதபோது, அவர்களுக்கு உற்ற நண்பனாய் இருந்து, வழிகாட்டினார். அவருக்கு 'சங்கீத சேவா நிரதா', 'கலா சேவக்' போன்ற பட்டங்களை வழங்கி சபாக்கள் கௌரவித்துள்ளன. தமிழக அரசு 'கலைமாமணி' விருது வழங்கியது.
ராமச்சந்திரன் கர்நாடக சங்கீதத்தை மட்டுமல்லாமல் ஹிந்துஸ்தானி இசை யையும் ஊக்குவித்தார். சென்னை இசைவிழாவில் பல ஹிந்துஸ்தானிக் கச்சேரிகள் நடப்பதற்கு முக்கிய காரணம் இவர்தான். 'கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ் தானி இசை இரண்டுமே நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றவை. அவற்றில் உயர்வு தாழ்வு கருதக்கூடாது' என்று குறிப்பிட்டிருக்கிறார்.
சென்னையில் புரந்தரதாசருக்கான தனி இசை நிகழ்ச்சிகளை எட்டாண்டுக் காலமாக நடத்தியுள்ள ராமச்சந்திரன், இசை மேதை எம்.எஸ். சுப்புலட்சுமியின் மீது மிகுந்த அன்பும் மரியாதையையும் வைத்திருந்தார். எம்.எஸ். மறைவின் போது, அவர் நினைவாக மாதம்தோறும் பல இசை நிகழ்ச்சிகளை நடத்தி அஞ்சலி செய்தார். நகைச்சுவையாகப் பேசுவதிலும் வல்லவர்.
இவரது மகள் சாந்தி லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள சான் கேபிரியேலில் பரத நாட்டிய ஆசிரியராக இருக்கிறார்.
'ஹம்சத்வனி' என்ற பெயர் ஒலிக்கும் போதெல்லாம் ராமச்சந்திரன் என்ற பெயரும் கூடவே ஒலித்துக் கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.
அரவிந்த் சுவாமிநாதன் |