இருபதாம் நூற்றாண்டு தொடங்குவதற்கு முன்பே திரைப்படம் தமிழ் நாட்டில் தொடங்கிவிட்டது. 1897ஆம் ஆண்டு எட்வர்டு என்ற ஆங்கிலேயர் சென்னையில் முதல் சலனப்படக் காட்சியைத் திரையிட்டார். அன்று தொடக்கம் சில நிமிடங்கள் ஓடக்கூடிய துண்டுச் சலனப்படங்கள் திரையிடப்பட்டன.
திரைப்படக் காட்சிகளுக்கு மக்கள் மத்தியில் பரவலான வரவேற்பு இருந்தது. திரைப் படங்கள் தயாரிப்பதற்கான உத்வேகம் வளர்ந்தது. சுதேசிகள் படத்தயாரிப்பில் ஈடுபாடு காட்டத் தொடங்கினர். 1961-ல் நடராஜ முதலியார் என்பவர் 'கீசகவதம்' எனும் மௌனப் படத்தைத் தயாரித்தார். இதுவே தென்னிந்தியாவின் முதல் திரைப்படம். 1931 ஆம் ஆண்டு முதல் பேசும் படம் திரையிடப்பட்டதுடன் ஒரு புதிய சகாப்தம் உருவானது. 'காளிதாஸ்' என்ற முதல் முழுநீள தமிழ்ப்படம் வெளிவந்தது.
பேசும் படங்களின் வரவு நாடக கம்பெனி களை நலிவுறச் செய்தது. மேடையில் இருந்து சினிமா நோக்கிய படையெடுப்புத் தொடங்கியது. சென்னையில் பேசும்பட ஸ்டுடியோ நிறுவப்பட்டதும் இந்தப் படையெடுப்பில் வேகம் கூடியது. இவ்வாறு சினிமாவுக்குள் வந்தவர்கள் நாடக வடிவத்தை அதன் இசை மற்றும் நடிப்பு முறைமைகளை கொண்டுவந்தன. அக்காலத் தமிழ்த் திரைப் படங்கள் நாடகங்களின் மறுபதிப்பாகவே அமைந்திருந்தன. இதனால் அன்றைய சினிமா படமாக்கப்பட்ட நாடகமாகத்தான் இருந்தது.
சினிமா ஒரு கட்புல ஊடகம். இதன் தனித்தன்மையை முழுமையாகப் புரிந்து கொள்வதற்கான சாத்தியப்பாடுகள் நோக்கி கவனம் குவிக்கப்படவில்லை. சினிமாவின் மொழி தமிழ்சார்ந்த பின்புலத்தில் வளர்ச்சி யடையவில்லை. 1931-ல் வெளிவந்த முதல் தமிழ் பேசும் படம் தொடக்கம் 1970களின் இடைப்பகுதி வரை நாடகக் கம்பெனிகளில் பயிற்சி பெற்ற கலைஞர்களே தமிழ் சினிமாவை ஆக்கிரமித்துள்ளனர்.
ஆரம்ப நடிகர்களான கே.பி. கேசவன் மற்றும் பி.யு. சின்னப்பா, எம்.கே. தியாகராஜ பாகவதர், டி.ஆர். ராஜகுமாரி, கே.பி.சுந்தராம் பாள் போன்றோர் நாடகத்திலிருந்து வந்தவர்கள். ஐம்பதுகளில் நுழைந்த எம்.ஜி. ராமச்சந்திரன், சிவாஜி கணேசன் ஆகியோரின் பெருவளர்ச்சி எழுபதுகளின் இறுதிவரை நீடித்தது. இந்த இரு நடிகர்களும் நாடகத்திலிருந்து வந்தவர்கள் தாம். இவ்விருவரது நடிப்புப்பாணி பாய்ஸ் கம்பெனிகளில் அவர்கள் கற்றுக் கொண்ட தொடக்ககால மேடைப் பயிற்சிகளில் உருவானது. பின்னர் இவர்கள் தத்தமக்கான தனித்துவ முத்திரைகளுடன் வெளிப்பட்டனர்.
இத்தகைய வரலாற்றுப் பின்புலத்தில் இருந்துதான் சிவாஜி கணேசன் எம்.ஜி.ஆர் குறித்த பார்வைகள் மதிப்பீடுகள் விளைய வேண்டும். நாடகப் பின்புலத்தில் உருவாகி வளர்ந்து வந்த ஒரு கலைஞர், பின்னர் எப்படி சினிமாவில் ஆளுமைமிக்க கலைஞராகப் பட்டை தீட்டப்பட்டார், 'நடிகர் திலகம்' என்ற அடைமொழிக்கு உரியவரானார் என்பதைக் கூர்ந்து நோக்கினால்தான் சிவாஜியின் ஆளுமை உருவாக்கம் புரியக் கூடியதாக இருக்கும்.
கணேசன் விழுப்புரத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் அக்டோபர் 1, 1928ல் பிறந்தார். கணேசனுக்குச் சிறுவயது முதலே பாட்டு என்றால் உயிர். தன் பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து பாடிக்கொண்டே இருப்பார். சுமார் 15 மாதப் பள்ளி வாழ்க்கைக்குப் பிறகு கணேசனின் பள்ளிப்படிப்பு முடிவுக்கு வந்தது. இவரது தந்தையார் வேலை நிறுத்தம் காரணமாக சிறைசென்றார். இதனால் வீட்டில் வறுமை குடிகொண்டது.
அந்த நாள் கணேசனின் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். கூத்து என்றும் கூறமுடியாத நாடகம் என்றும் சொல்ல முடியாத இரண்டும் கலந்த கட்டப்பொம்மன் ஆட்டம் கணேசன் வீட்டுத் தெருவில் நடந்தது. அக்கூத்துப் பார்க்கப் போன கணேசனுக்கு வெள்ளைக்கார சிப்பாய்களில் ஒருவராக வீறுநடைபோட்டு நடக்கும் வாய்ப்பு கிடைத்தது. கணேசன் கலைக்காகப் போட்ட முதல் நடை அது தான்.
கணேசனுக்கு நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. அத்துடன் வீட்டின் வறுமையைப் போக்கவும் விரும்பிய வராக வீட்டில் யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போனார். 'அப்பா, அம்மா இல்லாத அநாதை நான்' என்று பொய் சொல்லி யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளையின் நாடகக் கம்பனியில் சேர்ந்தார் கணேசன்.
ஏழு வயதில் பாலசீதையாக 'யாரென இந்தப் புருஷனை அறிகிலேன்' என்று பாடி நடித்து, 'நன்றாக நடித்தாய்' என்று குருவின் பாராட்டைப் பெற்றார். நாடகக் கம்பனியில் ஏனையவர்களை விட இவருக்குப் பேரும் புகழும் கிடைத்தது. பல்வேறு கலைஞர்களின் அறிமுகமும் கிடைத்தது. அப்பொழுது ராஜபார்ட் வேடம் ஏற்பதுதான் ஒரு நாடக நடிகாரின் வெற்றி. கணேசன் சின்னச் சின்ன வேடங்களில் நடித்து பிரபலமான ஸ்த்ரீபார்ட் வேடம் போடுமளவுக்கு உயர்ந்தார், வளர்ந்தார்.
சி.என். அண்ணாத்துரை, நடிகர் எம்.ஜி.ஆருக்காக 'சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்' எனும் நாடகத்தை எழுதியிருந்தார். இதில் சத்ரபதி சிவாஜி வேடத்தை எம்.ஜி.ஆர். ஏற்று நடிக்க இருந்தார். ஆனால் பின்னர் எம்.ஜி.ஆர். இந்த நாடகத்தில் இருந்து விலகிக்கொள்ள நேரிட்டது. அப்பொழுது சிவாஜி வேடத்தில் கணேசன் ஏற்று நடித்தார். இந்த நாடகத்தைப் பார்க்க வந்திருந்த ஈ.வெ.ரா. பெரியார் 'கணேசன், சிவாஜி கணேசன், நல்லா நடிச்சாரு; சிவாஜி மாதிரியே இருந்தாரு' என்று பாராட்டிப் பேசினார். அன்று முதல் கணேசன், 'சிவாஜி கணேசன்' ஆனார்.
திரைப்படங்களில் சிறுசிறு வேடங்கள் ஏற்றுத் திரைப்பட நடிகராகும் சூழ்நிலை இருந்த பொழுது, 'பராசக்தி' (1952) படம் மூலம் சிவாஜி கதாநாயகனாக அறிமுகம் ஆனார். பகுத்தறிவை வலியுறுத்தும் இந்தப் படம் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுக் கொடுத்தது பட்டிதொட்டி எங்கும் சிவாஜி என்ற நடிகர் அறிமுகமானார். அன்று தொடங்கிய மவுசு தமிழ்த் திரைப்பட வரலாற்றில் சிவாஜிக்கு தனியான அடையாளத்தைப் பெற்றுக் கொடுத்தது. நட்சத்திர அந்தஸ்து மிக்க கதாநாயகனாக தொடர்ந்து வலம் வந்தார். ஆதிக்கம் செலுத்தினார். நடிப்பில் தனக்கென்று ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டார். புராண சமூக வரலாற்றுப் பாத்திரங்களில் சிவாஜி தனித்து ஒளிர்ந்தார். தொடர்ந்து பல்வேறுபட்ட பாத்திரங்களை ஏற்று நடித்தார். இந்த அம்சங்கள் சிவாஜியின் ஆளுமை விகசிப்பின் பரிமாணமாகவும் பரிணாமமாகவும் அமைந்திருந்தன.
தனக்குள் உள்வாங்கப்பட்ட நடிப்பு முறைமையின் பல்வேறு மேல்கிளம்புகையின் உச்சங்களைத் தமிழ்ப் பண்பாட்டு அசை வியக்கத்தின் மனிதாயப்பாடுகளாக வெளிப் படுத்தினார். இதன் ஓர் முதிர்ச்சியாகவே சிவாஜி விளங்கினார். சொல்லிலும் அங்க அசைவிலும் (உடல் மொழியிலும்) பல்வேறு கோலங்களை வெளிப்படுத்தினார். தமிழ்ச் சினிமாவின் நடிப்பு முறைமைக்கான நுண்திறன்கள் தன்மைகள் இதுதான் என்று பாடம் புகட்டும் சமாந்தரமான நகர்வாகவும் சிவாஜி விளங்கி வந்துள்ளார். இதன் பிடியில் இருந்து கலைஞர்கள் யாரும் இலகுவாக விடுபடமுடியாத நிலைமையும் ஏற்பட்டது. இது இன்றுவரை தொடர்கிறது.
தமிழ் சினிமாவில் 1952 முதல் 1982 வரையிலான காலகட்டம் 'சிவாஜி கணேசன்' காலம் எனக் காட்டியதை யாரும் மறுக்க முடியாது. அவரது அயராத உழைப்பு இந்த இடத்தைப் பெற்றுக்கொடுத்தது. 'திரும்பிப்பார்' என்ற படத்தில் சிவாஜி முழுக்க முழுக்க வில்லன் பாகத்தையே ஏற்றார். பல பெண்களைக் கெடுத்து பொய் சொல்லும் பாத்திரம் அது. அந்த பாத்திரத்தில் சிவாஜி பல்வேறு தன்மைகளை வெளிப்படுத்தி இருப்பார். 'ஆங்கில பாணி' என்று உயர்த்திச் சொல்லப்படும் தகுதியோடு நடித்துப் புகழ் பெற்றார்.
'இன்று வேறு கோணங்களில் நின்று பார்ப்பவர்கள் சிலர், ஆங்கிலப்படங்களைப் பார்த்து அந்தப் பாத்திரங்களை போலவே அந்தப் பாணியிலே நடிக்கிறார் என்று கூறுவார்கள். ஆனால் திரும்பிப்பார் எடுத்த காலத்தில் அதிக ஆங்கிலப் படங்களை சிவாஜி கணேசன் எப்படிப் பார்த்திருக்க முடியும்? ஏற்று நடிக்கும் பாத்திரங்களுக்கு அவர் அற்புத மெருகேற்றி நடிக்கும் போது, அந்த நடிப்புக்குப் பிறப்பிடமான பயிற்சி யையும், தேர்ச்சியையும் அல்லவா நாம் போற்ற வேண்டும். ஆங்கிலப்பாணியின் சாயல் அங்கங்கே இருக்குமானால், கடுமையான பயிற்சியாலும் உழைப்பாலும் இப்படிப் போற்றத்தக்க திறமை உண்டானது என்று உணர்வது தானே முறையும் பண்பும் ஆகும். ஆக, சிவாஜி கணேசனின் நடிப்பை மேலெழுந்த வாரியாக விமர்சிப்பது தவறு' என்று எம்.ஜி.ஆர். குறிப்பிட்டுள்ளார். எம்.ஜி.ஆரின் இந்த வார்த்தைகள் அறிவார்ந்த அனுபவ வெளிப்பாடு. இதனைக் கூறுமளவுக்கு எம்.ஜி.ஆர். சினிமாவின் பல்வேறு நுணுக்கங்களையும் அறிந்து தெளிந்து கொண்டவர். இயக்குனர், எடிட்டர் எனப் பல நுட்பங்களைக் கொண்டிருந்தவர்.
முந்நூறு படங்களுக்கும் அதிகமாகவே சிவாஜி நடித்துள்ளார். இருப்பினும் அவர் மிகைநடிப்பு (ஓவர் ஆக்டிங்) செய்கிறவர் என்ற விமர்சனம் உண்டு. ஆரம்பத்தில் எஸ்.எஸ். வாசன், எல்.வி. பிரசாத், சி.எச். நாராயணமூர்த்தி போன்ற மூத்த இயக்குனர் கள் தவிர வேறு இயக்குனர்களால் சிவாஜியை மிகைநடிப்பிலிருந்து திசைதிருப்ப முடியவில்லை. அவ்வாறு முயற்சித்தபோது சிவாஜியின் இயக்குநர்களாக அவர்களால் நீடிக்க முடியவில்லை. சிவாஜியின் இந்த மிகைநடிப்புக்கு ஒத்துப் போகிறவர்களுக்கே அவரது ஒத்துழைப்பு, கால்ஷீட் கிடைத்தது.
இந்த மிகைநடிப்பு குறித்த விமர்சனத்துக்கு சிவாஜி அளித்த விளக்கம் மேலும் அவரை விளங்க, விளக்க உதவும். 'நடிப்பு என்பதே இயற்கைக்கு மாறுபட்டதுதானே. மனைவி இறந்துவிட்டால் 'அய்யோ போயிட்டியேம்மா' என்று உரக்கக் கத்திக் குலுங்கிக் குலுங்கித் தானே ஒருவன் அழுவான்? 'போய்ட்டியா?' என்று கேட்டுவிட்டு முகத்தைத் திருப்பிக் கொள்வதுதான் நல்ல நடிப்பா? நடிப்பு என்பதே பார்வையிலேயும், வசனத்திலேயும் தான் இருக்கிறது' என்றார்.
கம்பெனி நாடக நடிகராக இருந்து சினிமாவுக்கு வந்தவர் சிவாஜி கணேசன். அந்த நடிப்பு முறையில் இருந்து விடுபட முடியாது சினிமாவின் மொழிக்கு இயல்பாகி வரக்கூடிய பக்குவத்தையும் அவரால் அடையமுடியவில்லை. அதனால் தனது இந்தக் கருத்தில் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தார்.
'நடிப்பு என்றாலே மிகைப்படுத்திக் காட்டும் உணர்ச்சிதான் இதில் ஓவர், அண்டர், நேச்சுரல், அன்நேச்சுரல் என்பதெல்லாம் வெறும் விதண்டாவாதம். உயிரைக் கொடுத்து நடித்தால் ஓவர் ஆக்டிங் என்கிறார்கள். கொஞ்சம் சாதுபோல் நடித்தால் நடிக்கவே இல்லை என்கிறார்கள் இதற்கெல்லாம் முடிவே கிடையாது. எனவே நமக்கு நமது வாத்தியார் என்ன சொல்லிக் கொடுத்திருக் கிறாரோ, நம்முடைய கற்பனைக்கும் திறமைக்கும் என்ன வருகிறதோ, மக்கள் எதை நம்மிடம் எதிர்பார்க்கிறார்களோ அதுபோல் நடிக்க வேண்டும் அதுதான் எனக்குத் தெரியும்.'
சிவாஜி இவ்வாறு தனது மிகைநடிப்பு குறித்த விமர்சனத்துக்கு பதில் வைத்திருந்தார். 'நமது வாத்தியார் என்ன சொல்லிக் கொடுத்திருக் கிறரோ' என்று கூறும்போதே சிவாஜி எந்த மனநிலையில் இருந்தார் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. மேலும், நாடகத்தில் இருந்து சினிமாவில் வந்த சிறு கூறுகள், மரபுகள் குறித்து நாம் விரிவான உரையாடல் களை தமிழில் வளர்க்கவில்லை; இதனால் தான் சிவாஜி கணேசன் குறித்த மதிப்பீடு தெளிவாக முன்வைக்கப்படாமல் போய் விட்டது. சினிமாவை தீர்க்கமாக அணுக வேண்டும் என்ற ரீதியில் நாம் பேசியிருந்தால் ஊடகங்களில் நல்ல சினிமா ரசனையும் தமிழ் சினிமா குறித்த உரையாடல்களும் விரிந்திருக் கும், ஆழப்பட்டிருக்கும். நல்ல திரைப்படம் ஒன்றை எதிர்கொள்ளும் திறனை நாம் வளர்த்துக்கொண்டிருப்போம். எழுபதுகளின் நடுப்பகுதியின் பின்னர் தமிழ் சினிமாவில் புதிய அலை உருவானது. இக் காலத்திற்குப் பின் சிவாஜியும் எம்.ஜி.ஆரும் பரவலான வரவேற்பை பெறத் தவறிவிடு கின்றனர். இந்த மாற்றத்தின் பின்னணியில் தான் பாரதிராஜா இயக்கிய 'முதல் மரியாதை'யில் சிவாஜியின் நடிப்பு அமைந்ததையும் காணலாம்.
குறிப்பாக, காட்சி ஊடகத்தைத் தன்வயப் படுத்துகின்ற நுண்திறன்கள் வெளிப்படும் பொழுது பழகிப்போன நடிப்பு முறைமையை கைவிட்டு, படிப்படியாக காட்சி ஊடகத்தின் சினிமா மொழியின் சாத்தியங்களுக்குள் இயல்பாக வரமுடியும். 'முதல் மரியாதை' படத்தில் தொடங்கி 'தேவர்மகன்', 'ஒரு யாத்திர மொழி' (மலையாளம்) போன்ற படங்களில் நாம் கண்ட சிவாஜி வேறு. முன்னைய திரைப்படங்களில் இருந்து மாறுபட்ட சிவாஜியை நாம் மேற்கூறிய படங்களில் தரிசித்தோம்.
பல்வேறு சிறப்புக் கூறுகளும் மேதைமையும் கொண்ட கலைஞர் சிவாஜி முழுமையாக கலையாக்கம் பெறாமல் வீணடிக்கப் பட்டுள்ளார் என்ற விமர்சனமும் சில மட்டங்களில் உள்ளது. இதில் நியாயம் இல்லாமல் இல்லை.
எவ்வாறாயினும் தமிழ் சினிமா வரலாற்றில் சிவாஜியின் திரைப்படங்கள் ஒரு சகாப்த மாகவே இருக்கும். திரைப்பட மாணவர்கள் சினிமா கற்கை சார்ந்து சிவாஜியை இன்னும் பல்வேறு கோணங்களில் அணுக முடியும். அப்பொழுது தமிழ் பண்பாட்டு அசைவியக் கத்தின் கலைத்துவப் பெறுமானமாக, ஆளுமையாக சிவாஜிகணேசன் மேற்கிளம்பு வதை நாம் காணலாம்.
தெ. மதுசூதனன் |